செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 60
ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
எங்கே சொர்க்கம் ?
எங்கே சொர்க்கம் ?
சங்கவிலக்கியப்பாடல்கள் இவ்வுலக வாழ்க்கை பற்றியும் காதல், போர், ஈகை, புகழ் பற்றியும் பேசுபவை.
பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்குப் பின்னும் நிகழ்பவை பற்றிய ஊகங்களில் சங்கப்பாடல்கள் பேசுவதில்லை .
கோப்பெருஞ்சோழனின் பாடல் ஏன் அறச்செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று எடுத்துச் சொல்கிறது.
`செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,
உள்ளத்தில் தெளிவில்லாதவர்களே நம்மால் நற்செயல்கள் செய்யமுடியுமா என்று ஐயம் கொண்டு உலகச் சழக்கிலிருந்து நீங்க இயலாது தடுமாறுவர்.
யானை வேட்டைக்குச் செல்வோன் யானையை வென்று வரலாம், சிறு பறவை வேட்டைக்குப் போவோன் அது கிடைக்கப் பெறாமல் வெறுங்கையோடு திரும்பலாம்.
அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோராக வாழவேண்டும்.
விண்ணுலகம் உண்டென்றால் அது உங்களுக்கக் கிடைக்கலாம் .
விண்ணுலகம் இல்லையென்றால் பிறவித்தளையிலிருந்து விடுபடலாம் .
இவ்வுலகில் உயர்ந்த புகழ் நிலைத்து நிற்கும்.
எனவே புகழை நாட்டிப்பழியில்லாத உடம்போடு இறத்தலே தலையாயது என்றால், இவ்வுலகில் இமயம் போன்ற உயர்ந்து புகழ் நிலைத்து நிற்கும்.
எனவே, நல்வினைகளைச் செய்து புகழை நாட்டிப் பழியில்லாத உடம்போடு கூடி நின்று இறத்தலே தலையாயது என்பது கோப்பெருஞ்சொழன் சொல்லும் அரிய கருத்தாகும் .
நல்வினை செய்வார்க்கு வீடுபேறு உண்டா, இல்லையா ?
மறுபிறப்பு இல்லையா ? பிறப்பிலிருந்து விடுதலை உண்டா, இல்லையா ?
மறுபிறவி உண்டா ,
இத்தகைய பேறுகள் கிடைக்குமா , எத்தகைய எதிர்காலம் காத்திருக்கிறது என்பன போன்ற கவலைகள் தேவையற்றவை.
அவைபற்றிய உண்மை தெரிந்த பின்தான் நல்லறம் செய்வேன் என்று முடிவு செய்வது அறிவுடைமை ஆகாது.
ஏனெனில் அவை பற்றி இன்னும் உறுதியான முடிவுகள் அறிஞர்களுக்குக் கிடைக்கவில்லை.
அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.
ஆனால் நற்செயல்களுக்கு இறப்பிற்குப்பின் பரிசுகள் ஏதும் இல்லையெனினும் இவ்வாழ்க்கையில் புகழ்பெறுவது கண்கூடாகக் காணும் நிலையாகும்.
எனவே தவறான நம்பிக்கைகளால் மதியிழந்து வாழ்வு வாழாது, முடிவில்லாத தத்துவ விசாரத்தில் ஈடுபட்டு வாழ்நாளை வீணாக்காது நல்ல செயல் களைச் செய்ய வேண்டும் என்று கவிஞர் சொல்லும் கருத்தின் ஆழத்தை நாம் காண வேண்டும்.
அவர் காலத்திருந்த அத்துணைச் சமயங்களும் துறக்கம், நரகம் பற்றியும் பலபிறவிகள் பற்றியும் பலவிதமான முடிவு களை முன்வைத்திருந்தன.
அவையெல்லாம் வெறும் ஊகங்களே என்றும் இக்கேள்விகளுக்கெல்லாம் தம் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விடை காணலால் பயனேதும் இல்லை யென்பதையும் கவிஞர் தெளிவுப்படுத்துவார்.
திருக்குறளும் இத்தகைய வீண் விவாதங்களில் ஈடுபட்டு ஏதேனும் ஒரு சமயச்சார்புடைய விடைகளைத் தராமல் இம்மண்ணுலக வாழ்வை நன்கு வாழ்ந்து ஈகையால் புகழடைதலையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்.
தமிழ் இலக்கியம் கட்டும் வாழ்க்கை முடிவின் தலைமைக் கூறாகக் கருதத்தக்கது அதன் ஓர் உலகக் கோட்பாடு ஆகும்.
மாந்தர் யாவரும் இனத்தால் ஒன்றுபட்டவர் என்பதைச் சங்கச் சான்றோர் உணர்ந்து வலியுறுத்தினார் என்பதற்கு ” யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்ற புறநானூற்று வரி மட்டும் சான்று பகர்வதாக நினைத்தல் தவறு.
அவர்கள் படைத்த இலக்கியங்களில் பல, ‘ உலகம் ‘ எனும் சொல்லொடு தொடங்குவது தற்செயலாய் விளைந்த நிகழ்வன்று.
முல்லைப்பாட்டு ” நனந்தலை உலகம் ” என்றும், நெடுநல் வாடை ‘ வையகம் பனிப்ப ” என்றும், பெரும்பாணாற்றுப்படை ” அகல் இரு விசும்பில் ” என்றும், ‘சிறுபாணாற்றுப்படை ” மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை ” என்றும், திருமுருகாற்றுப்படை ” உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு ” என்றும், கம்பராமாயணம் ” உலகம் யாவையும் தாமுளவாக்கலும் ‘ என்றும், பெரியபுராணம் ” உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் ” என்றும் முதல் தொடர்களைக் கொண்டிருத்தலை யாவரும் அறிவர்.
எளிய அறநூலாகிய முதுமொழிக்காஞ்சி தான் கூறும் அறக்கருத்துகள் யாவும் ” ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் பொதுவானவை என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கும் .
சங்க காலம் அறிந்த உலகம் சிறிய தன்று; அக்காலத்தமிழர் எகிப்தியரோடும் கிரேக்கரோடும் ரோமானியரோடும் வணிக உறவு வைத்திருந்ததால் உலகின் மக்கள் பலதிறத்தவர், பல இனத்தவர், பல பண்பாட்டினர் என்பதை அறிந்திருந்தனர்.
மனித இனம் ஒன்றென்னும் உண்மையைக் கண்டு கொள்ளும் அறிவாற்றலும் பரந்த மனப்பான்மையும் அவர்களுக்கிருந்தது.
இவ்வுலகளாவிய நோக்கு சங்க இலக்கியங்களோடு முற்றுப்பெற்றுவிட இல்லை.
அறநூலாகிய திருக்குறள், பத்துப் பாட்டிற்கும் எட்டுத்தொகைக்கும் ஒருபடி மேலே சென்று தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு ஆகியவற்றைப் புறக்கணித்து எவ்விடத்தும் எக்காலத்தும் யாவர்க்கும் பொதுவான வாழ்க்கை நெறியை வரையறுத்துக் கொடுத்தது.
– சைவமும் வைணவமும் சமண, பௌத்த, சமயங்களும் தமிழக மெங்கும் பரவித் தத்தம் கோட்பாடுகளை வற்புறுத்தி வந்த நிலையிலும் திருக்குறள் யாவர்க்கும் பொதுவான ஒரு கடவுட் கோட்பாட்டையே பேசியது.
பக்தி இயக்கத்தின் மூலமென்று கருதப்பெறும் திருமந்திரத் தின் ” ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் ” எனும் கூற்று தமிழர்களின் மூலமந்திரமாகியது.
தென்னாடுடைய சிவனைப் போற்றிய மணி வாசகர் ‘ ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்ட உலகத்தார்க்கு அழைப்பு விடுத்தார்.
இறைவன் ” ஆண் அலன், பெண் அலன், அலியும் அலன் ” என்று கூறி முழுமுதற் கடவுளின் பொதுமையைத் தெளிவுப்படுத்தினார்.
வைணவக் கடவுளாகிய திருமாலின் அவதாரமென்று கருதப்பெற்ற இராமனின் கதையைக் கூறிய கம்பர் கடவுள் வாழ்த்தில் திருமாலைப் பாடாமல், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்குரிய கடவுளர் மூவர் என்ற சமய நம்பிக்கையையும் ஒதுக்கி, ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலுமாகிய தொழில்களைச் செய்கின்ற ஒருவரே எமக்குத் தலைவர், அவரையே அடிபணிகின்றோம் என்று பாடுவார்.
இத்தகைய சமயம் கடந்த பொது நிலையின் உச்சவெளிப்பாடே வள்ளல் இராமலிங்கனாரின் சமரச சுத்தசன்மார்க்க நெறியாகும்.
” சாதி சமய சழக்கை விட்டேன், அருள் ஜோதியைக் கண்டேனடி ” என்று பாடி மகிழ்ந்த அடிகளார் தமிழ் இலக்கிய மரபு சொல்லாமற் சொல்லிய பொதுமை நெறியின் தன்மையை விளக்கி அதற்கு உருவம் அளித்தார்.
தமது சமரசச்சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில், எல்லாமானவராயும் ஒன்றுமல்லாதவராயும் எல்லா அண்ட பரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தவத்தலைமைக் கடவுளே !….
எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ் உண்மைக் கடவுள் ஒருவரேஉள்ளார் என்றறிகின்ற மெய விளக்குவித்தருளினீர்…
சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங் களும் கதிகளும் தத்துவ சிக்கி விகற்பங்களென்றும் அச்சமயங்களில் பலபடவிரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர்….
எல்லாவுயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி யொன்றையே ( 663 – 64 ) பற்றுமாறு செய்தீர் என்று இறைவனுக்கு நன்றி தெரிவிக்கக் காணலாம். இப்பெருநெறி உருப்பெறுதற்கு சங்கச் சான்றோரும் திருவள்ளுவரும் அடித்தளமிட்டனர்.
பின்னால் வந்த பெருங்கவிஞர்கள் தம் பங்களிப்பைச் செய்தனர் என்பதை மறுக்கமுடியாது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய கருத்துரை இங்கே நினைக்கற்பாலது .
சங்க இலக்கிய உண்மையின் சாரமாக இது அமைந்தது .
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment