கருணீகர் நல்வாழ்வு
தமிழ்நாடு கருணீகர் சங்கம்
மாத வெளியீடு
வைகாசி – ஆணி
ஜூன் – 2022
மாத இதழ்
ஔவை அருளுக்குப் பாராட்டும் – தமிழுக்குச் செய்ய வேண்டியனவும் !
மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஔவை அருள் நடராசன், தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டுப் பணிப் பொறுப்பேற்றுள்ளார்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாட்டத்து
அதனை அவள்கண் விடல்
( திருக்குறள் 517 )
என்பதற்கிணங்க முதல்வர், தக்கவர்களைத் தக்க பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார்.
அவர் பணிப்பொறுப்பேற்றதுமே அவரது நியமனங்கள் இதனை மெய்ப்பித்தன.
அவற்றின் தொடர்ச்சியாக இந்நியமனமும் அதனை உணர்த்துகிறது.
அந்த வகையில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பதவிக்குப் பொருத்தமானவராக ஔவை ந. அருள் திகழ்கிறார்.
இப்போதைய ஆட்சியில் கேளாமலே இப்பொறுப்பு வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் பெயரன், நாவரசர் ஔவை து. நடராசன் மகன் என்ற முறையில் வழிவழியாகத் தமிழ்க் குடும்ப மரபில் வந்தவர் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
இயக்குநர் பொறுப்புடன் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பணியிடத்தைக் கூடுதல் பொறுப்பிலும் முந்தைய மொழிபெயர்ப்பு இயக்குநர் பதவியையும் கூடுதல் பொறுப்பிலும் பார்க்கிறார்.
சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் ” அன்றாட வழக்கில் அயல்மொழிச்சொற்கள் ” என்ற தலைப்பில் இளநிலை ஆய்வியல் பட்டமும் பெற்றவர்.
புதுத்தில்லிப் பல்கலைக் கழகத்தில் ” சேக்சுபியர் நாடகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் பற்றிய ஆய்வு ” குறித்து ( Study on translations and adaptations of Shakespeare ‘s plays in Tamil ) முனைவர் பட்டம் பெற்றுத் தன் இருமொழித் தேர்ச்சியையும் வெளிப்படுத்தியவர்.
முனைவர் பட்டம் பெற்றதும் தில்லிப் பல்கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் துறையில் ( Modern Indian languages Dept., Delhi university ) சில காலம் பணியாற்றினார்.
அடுத்துக், கிளீயா விளம்பரம் – சந்தைப்படுத்தல் (வ-து) நிறுவனத்தில் கிளை மேலாளர் (Branch manager. Clea Advertising and Marketing Ltd) ஆகப் பணியாற்றினார்.
தொடர்ந்து , செய்தியாளர் (பிரசுமேன்) விளம்பரம் – சந்தைப்படுத்தல் (வ-து.) நிறுவனத்தில் Pressman Advertising and Marketing துணைத் தலைவராகப் (Vice president, Pressman Adv Ltd) பணியாற்றினார்.
இப்பணிகளில் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களைக் திறம்படப் பயன்படுத்தும் வல்லமை எய்தினார். !
கணிணியியலிலும் வல்லமையும் ஆர்வமும் மிக்கவர்.
எனவே தான், 2010 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழித்தமிழ் மாநாட்டில், தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. அதையும் செம்மையாக முடித்தார்.
எவ்வாறு முத்தமிழறிஞர் கலைஞர் அறிஞர் ஔவை நடராசன் அவர்களை நேரடியாகச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்திப் பின்னர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகப் பணியமர்த்தினாரோ, எவ்வாறு கலைஞர் மொழிபெயர்ப்பு இயக்குநர் பணியை அருளுக்கு நேரடியாக அளித்தாரோ அதேபோல், அவரின் திருமகனார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஔவை அருளுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பொறுப்பினை அளித்துள்ளார்.
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைச் சிறப்பாகச் செய்யும் கனவுடன் இயக்குநர் பொறுப்பேற்றிருக்கும் முனைவர் ஔவை அருளுக்குப் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்களும் தமிழ் வளர்ச்சித் துறைக்குரிய அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தமிழ்நலச் சிந்தனையுடன் செயல்படுவதால் அவர் எண்ணம் ஈடேறும் என எதிர்பார்க்கலாம்.
‘ தமிழ் ஆட்சிமொழிச்சட்டம் 2022 ‘ எனப்புதிய சட்டத்தை நிறைவேற்றச் செய்யுங்கள்.
இப்பொழுது தமிழ்ப் படித்தவர்கள் துறையில் சேர்ந்து விட்டனர்.
எனினும் பதவிக்காக மட்டுமே போராடியவர்கள் துறைத்தேர்வில் தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு போன்ற தேர்வுகளை வைக்கச் செய்து தமிழறிவை வளர்க்கச் செய்யவில்லை.
எனவே, துறை அலுவலர்கள் அனைவருக்கும் தமிழ்த்தகுதியை மேம்படுத்துங்கள்.
“ பிறரும் துறையின் நலன் கருதிக் கூறுவனவற்றைச் செவி மடுத்து நல்லனவற்றை விரைந்து ஆற்றுங்கள்.
உங்களால் இயலும் என்பதால், எண்ணிய எண்ணியாங்கு எய்துமாறு செயல்பட்டுத் தமிழ் வளர்ச்சித் துறையைப் பொலிவும் வலிவும் மிக்கதாக மாற்ற ” வாழ்த்துகிறோம்.
ஔவை முனைவர் ந.அருள் செயல்களில் நிறைவெய்தி நீடு வாழ்க !
வெல்க அவர் பணிகள் !
நன்றி
– முனைவர் இலக்குவனார் திருவள்ளுவன்

Add a Comment