POST: 2022-07-11T12:50:33+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 61

ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

பூக்களைச் சொரியும் புலமைத் தமிழ் !

தமிழ் இலக்கியங்கள் பூக்களுக்கு வழங்கிய இடம் மிகப்பெரிது.

முல்லை ,மருதம், நெய்தல் எனும் திணைப் பாகுபாடுகளுக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் ஒவ்வொரு திணைக்குரிய கருப் பொருள்களிலும் மரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் காணலாம் .

செடி – கொடி – மரங்களின் அழகையும் நறுமணத்தையும் போற்றிப் பேசும் பாடல்களும் அவற்றை உவமைகளாகவும் உருவகங்களாகவும் ,
படிமங்களாகவும் பயன்படுத்திக் கொள்ளும் கவிதைகளும் சங்க காலம் முதல் இன்றுவரை ஏராளமாக இடம் பெற்றுள்ளன .

மலருக்கு இவ்வளவு பெருமை தரும் இலக்கியம் வேறில்லை.

ஆயினும் மலர்க்குறியீடு எல்லா இலக்கிய மரபுகளிலும் இடம்பெறும் ஒன்றே.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டிலுள்ள மலர்ப்பகுதியை முன்னிறுத்தித் தமிழ் மரபை ஒன்றிரண்டு மேலை இலக்கிய மரபுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது சில உண்மைகள் புலப்படும்.

இதனை ஆராயும் வல்லமை வாய்ந்த பேராசிரியர் மருதநாயகம் எழுதிய குறிப்பைக் காணலாம் .

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றின் தொடக்கத்திலேயே மலர்க்குறியீடு ( Flower Symbolism ) நுட்பமாகவும் விரிவாகவும் கையாளப்பட்டதென்பதற்கு முல்லையும் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும் தக்க சான்றுகளாகும்.

இதுதவிர, சங்க காலத்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய தொகை நூல்களில் உள்ள பாடல்களில்
மலர்கள் பெறும் சிறப்பிடத்தைப் பரக்கக் காணலாம்.

மலர்களுக்குள்ள பொதுத்தன்மைகளையும் சிறப்புக் கூறுகளையும் நுண்ணறிவும் பட்டறிவும் கொண்டு அறிந்த சங்கச்சான்றோர் அவற்றை உரிய முறையில் தம் பாடல்களில் பதித்துப் பெரு வெற்றி பெற்றனர்.

இடைக்காலத்து வங்கக்கவிஞரான கிறித்திபாஸ் ஓஜா எழுதிய இராமாயணத்தில் ஒரு மலர்ப்பட்டியல் வரக்காணலாம்.

இராவணனுடன் இறுதிப்போர் நிகழ்த்துதற்கு முன் துர்க்கையை இராமன் பல மலர்களை அளித்துத் தொழுகிறான்.

அசாக், காஞ்சன், ஜபா, மல்கா, மாலதீ, பாடலி, பகுல், கந்தராஜ், ஸ்தலபத்ம, கதம், பாருல், ரக்தோபல், சதபத்ர, குமுத், கஹ்லார், நல், ஆம்லபத்ர, பாரிஜாத், செஃபாலி, கரபீ, களக்-சம்பக், கோகனத், அதசீ, அபாராஜிதா, சாமெலி, சம்பக், நாக கேஸர், காத்த மல்லிகா, துபாடீ, ஜாதீ, யூதி, துரோண்புஷா, மாதபீ, தகர், துள்சீ, திசி, தாதகி, பூமிசம்பக், கெதரீ, பத்ம, கிருஷ்ண கலி ஸ்வர்ணயூதிகா, பாந்துலி, ஆதூலி , குருசி, கோலாப், புஷ்பசார், கிருஷ்ணசூரா என்று நாற்பத்தெட்டு மலர்களின் வங்க மொழிப் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

இவற்றுள் ஒரே மலரைக் குறிக்கும் இரண்டு மூன்று பெயர்களும் இடம் பெறுகின்றன என்றும் சில மலர்கள் அடையாளங்காணப்பட முடியாதவை என்றும் மார்டின் ஹிரிபெக் என்பார் தமது “ கிறித்திபாசி இராமாயணத்தில் துர்க்கை வழிபாட்டில் இராமன் அர்ச்சித்த மலர்களின் பட்டியல் ” எனும் கட்டுரையில் எடுத்துரைப்பார்.

துர்க்கை வழிபாடு பற்றிப் பழம் புராணங்கள் கூறும் சடங்கினை உள்ளவாறு வருணிப்பது கவிஞர் நோக்கம் அன்றென்றும் துர்க்கை வழிபாட்டில் இம்மலர்கள் யாவும் பயன்பட்டிருக்க முடியாதென்றும் துர்க்கைக்குப் பூசை நடைபெறும் இலையுதிர் காலத்தில் இம்மலர்கள் யாவும் கிடைக்கா வென்றும் வங்க மொழியில் பேச்சு வழக்கில் உள்ள சொற்களும் வடமொழிப் பெயர்களும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அத்திறனாய்வாளர் தெரிவிக்க அறியலாம்.

குறிஞ்சிப்பாட்டின் ஒரு சிறப்புக்கூறு 99 மலர்கள் பற்றிய அதன் வருணனைப் பகுதியாகும்.

ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்
எரிபுரை எழுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங்குடசம்
எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிஐ வகுளம் பல்லிணர்க் காயா
விரிமலர் ஆவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளைகுறு நறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கம் திலகம் தேங்கமழ் பாதிரி
செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்
கரந்தை குளுவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்இவர் முல்லை
குல்லை பிடவம் சிறு மாரோடம்
வாழை வள்ளி நீள்நறு நெய்தல்
தாழை தளவம் முள் தாள் தாமரை
ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங்குரலி
கோடல் கைதை கொங்கு முதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல் பூந் தணக்கம்
ஈங்கை இலவம் தூங்கு இணர்க் கொன்றை
அடும்பு அமர் ஆத்தி நெடுங்கொடி அவரை
பகன்றை பலாசம் பல்பம்பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்துவாரம்
தும்பை துழைஅய் சுடர்ப்பூந்தோன்றி
நந்தி நறவம் நறும் புன்னாகம்
பாரம் பீரம் பைங்குருக்கத்தி
ஆரம் காழ்வை கடியிரும் புன்னை
நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்
மால் அங்குடைய மலிவனம் மறுகி
வான் கண் கழீஇய அகல் அறைக்குவைஇ

( 61 – 98 )

குறிஞ்சிப்பாட்டைத் தந்துள்ள கபிலர் அகம்பாடுதலில் ஆற்றல் மிக்கவர்.

நற்றிணையில் இருபது பாடல்களும் குறுந்தொகையில் இருபத்தொன்பதும் ஐங்குறுநூற்றில் ஒரு நூறும் அகநானூற்றில்
பதினேழும் கலித்தொகையில் குறிஞ்சிக்கலியும் இவர் பாடியவை.

கபிலரின் அகப்புறப் பாடல்கள் யாவுமே சிறப்புடையனவாயினும் குறிஞ்சித் திணையைப் பாடுதலில் இவர் வல்லுநர் என்பதும் அதில் தனி ஈடுபாடு கொண்டவர் என்பதும் தெளிவு.

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு இவர் குறிஞ்சிப்பாட்டினைத் தெரிந்தெடுத்துள்ள மையும் ” காதல்கூர் பனுவல் பாடும் கபிலனார் ” என்று திருவிளையாடல் புராணத்தில் அழைக்கப்பட்டிருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கன.

குறிஞ்சிப்பாட்டு முழுக்க முழுக்கக் காதல் பற்றியதாகலின் அதற்கேற்ற சூழலை உருவாக்க மலர்ப்பட்டியலை இணைக்கிறார்.

இம்மலர்களெல்லாம் ஓரிடத்தில் ஒரு காலத்தில் கிடைப்பன அல்ல என்பதை அறிந்தவராயினும், தம்முடைய பாடுபொருளின் தாக்கத்திற் கேற்ற பின்னணிக்கு இந்நீண்ட தொகுப்பு தேவையென்று கருதியே இவ்வுத்தியைக் கையாள்கிறார் என்பதில் ஐயமில்லை.

இவ்வடிகளில் ” வரையின்றிப் பூ மயங்கியவாறு ” குறிஞ்சி நிலத்திற்கும் கூதிர்காலத் திற்கும் யாமத்திற்கும் உரிய பூக்கள் எல்லாம் ஒருங்கு சேர்க்கப் பட்டிருந்தாலும் நச்சினார்க்கினியரால் சுட்டப்பட்டு, அதற்கு அமைதி கூறும் ” எந்நில மருங்கில் பூவும் புள்ளும் அந்நிலம் பொழு தோடு வாராவா யினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும் ” ( தொல். அகத். சூ.19 ) எனும் நூற்பாவும் காட்டப்பட்டுள்ளது.

பூமாலை என்றே மகளிரையும் – பூக்களின் வரிசையாகப் பெண்ணின் அழகைப் புனைவதும் தமிழில் தான் சிறப்பாக இடம்பெற்றுள்ளது .

தமிழ் மொழிபெயர்ப்பாக வடமொழியில் கமலம் ,சரோஜம் ,பங்கஜம் ,மல்லிகா ,குமுதம் , மாலிகா என்ற பெயர்கள் பெருகின .

அல்லி என்ற பெயரில் அழகிய நெடுங்கதையை அறிஞர் மு வ புனைந்தார் .

செந்தாமரை என்று பெயரிடுவது
என் வழக்கம் .

எனக்கு பொன்மாலையை விட பூமாலை தான் பிடிக்கும் பூமாலை நீயேன் புழுதிமண் மேல் தவழ்ந்தாய் என்று பராசக்திப்பாடலை நான் மறப்பதுண்டா என்று முத்தமிழறிஞர் கலைஞர் பலநிலைகளில் குறிப்பிட்டுப் பேசினார் .

தொடர்புக்கு : thamizhavvai@gmail .com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *