POST: 2022-07-12T10:07:46+05:30

தினமணி – 10 7 2022

பக்கம் எண் : 2

சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை
அதிக பதிப்புகளைக் கொண்டுள்ளது .

சென்னை, ஜூலை 9 :

சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை அதிகபதிப்புகளைக் கண்டுள்ளது என ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் கூறினார்.

சென்னை , தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் தமிழக அரசின் நிதியுதவியுடன் கல்வெட்டியல் குறித்த கோடை கால பயிற்சி முகாம் கடந்த ஜூன் 20 – ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து இருபது நாள்கள் நிறுவனத்தில் பயிலும் முதுநிலை, முதுநிலை ஆய்வு, ஆய்வு மாணவ, மாண விகளுக்கு தொல்லியல் துறை அறிஞர்கள் வாயிலாக நாள்தோறும் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

மேலும், ஒரு நாள் கல்விக் கள ஆய்வுப் பயணமாக கடந்த ஜூன் 29 – ஆம் தேதி மாமல்லபுரத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்று பல்லவர் காலத்துக் குடைவரைக் கோயில்களில் உள்ள சிற்பங்களின் நுட்பங்கள் விளக்கப்பட்டன.

இந்த நிலையில் பயிற்சியின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக
பங்கேற்ற சுந்தர் கணேசன் பேசுகையில்,

கடந்த 1579 – ஆம் ஆண்டு முதல் தமிழ் நூல் அச்சிடப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஏறக்குறைய இரண்டு இலட்சம் நூல்கள் தமிழில் வெளிவந்திருக்கும்.

திருக்குறள் 1812 – ஆம் ஆண்டில் அச்சேறியது.

தற்போது இந்த நூலின் 5 பிரதிகளே உலகில் உள்ளன.

அவற்றில் ஒன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், ஒன்று காரைக்குடியிலும் உள்ளன.

சங்க இலக்கியப் பதிப்புகளில் திருமுருகாற்றுப்படையே அதிக பதிப்புகளைக் கண்டுள்ளது.

இது 70 – க்கும் மேற்பட்ட பதிப்புகளில் வெளிவந்துள்ளது என்றார் அவர்.

முன்னதாக விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தலைமை வகித்துப் பேசுகையில்,
ஆண்டுதோறும் சுவடிகளும் – கல்வெட்டுக்களும் புதிது புதிதாக கண்டறியப்படுகின்றன.

எந்த நிலையிலும் உ.வே.சா. வுக்கு பிறகு புதிய சுவடிகளை நூல்களாக வெளியிடுகிற வாய்ப்பு ஏற்படவே யில்லை.

ஐந்திரம் போன்ற கற்பனை நூல்களைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது.

எனவே இதுபற்றிய அறிவியல் கண்ணோட்டம் உருவாகவேண்டும் ‘ என்றார்.

தினசெய்தி – 10 7 2022

பக்கம் எண் : 8

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியியல் இருபது நாள் கோடைகாலப் பயிற்சி நிறைவு விழா !

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந அருள் தலைமையில் நடந்தது

சென்னை – ஜூலை 10

சென்னை , தரமணியில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் கல்வெட்டியல் குறித்து 20.06.2022 திங்கட் கிழமை முதல் 08.07.2022 சனிக்கிழமை வரை இருபது நாள்கள் நிறுவன முதுநிலை, முதுநிலை ஆய்வு, ஆய்வு மாணவ / மாணவிகள் என மொத்தம் நாற்பது பேருக்கு தொல்லியல் துறை அறிஞர்கள் வாயிலாக நாள்தோறும் பயிலரங்குகள் நடத்தப்பட்டது.

மேலும், ஒரு நாள் கல்விக்கள ஆய்வுப் பயணமாக 29.06.2022 புதன் கிழமை அன்று மாமல்லபுரத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பல்லவர் காலத்துக் குடைவரைக் கோயில்களில் உள்ள சிற்பங்களின் நுட்பங்கள் விளக்கப்பட்டன.

தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் நடைபெற்ற இந்த கோடைக் கால இருபது நாள் பயிற்சியின் நிறைவு விழாவான நேற்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் தனது தலைமையுரையில் பேசியதாவது:

“உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பாடநிலைகளில் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

தொல்லியலோடு தொடர்புடைய கல்வெட்டு, சுவடிப்படிப்பு அரங்கு நிறைவு பெற்றது.

கல்வெட்டு, சுவடியியலில் காணப்படும் எழுத்துக்களை தெளிவாகப் படித்து அவற்றில் காணப்படும் பொருள்களை
விளக்குவது மேலும் விரிவடைய வேண்டும்.

ஆண்டுதோறும் சுவடிகளும் கல்வெட்டுக்களும் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன.

எந்த நிலையிலும் டாக்டர் உ. வே. சா. அவர்களுக்குப் பிறகு புதிய சுவடிகளை நூல்களாக வெளியிடுகிற வாய்ப்பு
ஏற்படவேயில்லை .

ஐந்திரம் போன்ற கற்பனை நூல்களைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது.

எனவே இதுபற்றிய அறிவியல்
கண்ணோட்டம் உருவாகவேண்டும்.

நாடி சோதிடம் – சித்த மருத்துவம், விலங்கு, பறவைகள் பற்றிய சுவடிகள் பலவாக உள்ளன.

எனினும் இத்தகைய முயற்சியை வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த அரங்கு நடைபெறுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள கணினி அறிஞர் முத்து நெடுமாறன், கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்களை கணினியில் செதுக்கியுள்ளதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கலையும் அறிவியலும் இணைந்தால் பல புதிய உத்திகள் மலரும்.

தமிழ் நாடு முழுவதும் உள்ள 32 மாவட்ட மைய நூலகங்கள், கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பிற அரசு உதவிபெறும் நூலகங்களிலுள்ள புத்தகங்களின் விவரங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பொது நூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூல் பட்டியலை நமது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையமும் அண்ணா நூற்றாண்டு நூலகமும் இணைந்து உருவாக்கி வருகின்றன.

நூலகங்களில் உள்ள அனைத்து நூல்களும் பன்னாட்டுத் தர நிலைகளின் அடிப்படையில் சரிசெய்யப் பட்டு ஒரே இணையதளத்தின் மூலம் புத்தகங்களை தேடும் வசதியும் ஏற்படுத்துவதற்கு ஆயத்தம் செய்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

இப்பணியில் தம்மைத் தோய்த்து திறமையுடன் செயற்பட்டுவரும் நூலகத் திலகம் சுந்தர் கணேசன் இன்றைய விழாவிற்கு வருகை புரிந்து நிறைவுரையாற்றவிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த இருபது நாள்கள் நடத்தப் பெற்ற கோடைப் பயிற்சியை செவ்வனே நிறைவேற்றி சீர்மையுடன் செயலாற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள் சதீஷ், தாமரைப்பாண்டியன், பன்னீர் செல்வம் மற்றும் கலந்து கொண்ட மாணவர்கள், சிறப்புப் பேச்சாளர்கள் ஆகியோரை வாழ்த்தி மகிழ்கிறேன்.”

இவ்வாறு அருள் பேசினார்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் நிறைவுரையாற்றினார்.

தினமலர் – வேலூர் பதிப்பு – 11 7 2022
பக்கம் எண் : 9

புத்தகங்களை இணையத்தில் தேடி படிக்கும் வசதி

சென்னை,

ஜூலை 11

தரமணியில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் கல்வெட்டியல் தொடர்பான கருத்தரங்கம் கடந்த மாதம் 20 ம் தேதி முதல் நேற்று
முன்தினம் ( ஜூலை 9 ) வரை நடந்தது.

இந்த கருத்தரங்களில், தமிழ் ஆய்வு மாணவர்கள் உட்பட பல அறிஞர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் பேசியதாவது :

கல்வெட்டு மற்றும் சுவடிகளில் காணப்படும் எழுத்துக்களை தெளிவாக படித்து, அதன் பொருளை
மற்றவர்களுக்கு விளக்குவது மேலும் விரிவடைய வேண்டும். ஆண்டுதோறும் சுவடிகளும், கல்வெட்டுக்களும் புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் உ.வே. சாமிநாத ஐயருக்கு பிறகு, புதிய சுவடிகளை நுால்களாக வெளியிடுகிற வாய்ப்பு பலருக்கு கிடைக்கவில்லை.

எனவே இதுபற்றிய அறிவியல் கண்ணோட்டம் உருவாகவேண்டும். மலேசியாவில் உள்ள கணினி அறிஞர் திரு. முத்து நெடுமாறன் அவர்கள் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்களை கணினியில் செதுக்கியுள்ளதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கலை, அறிவியலும் இணைந்தால் பல புதிய உத்திகள் உருவாகும். நுாலகங்களில் உள்ள அனைத்து நூல்களும் பன்னாட்டு தர நிலைகளின் அடிப்படையில் சரிசெய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் வாயிலாக புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தும் ஆயத்த பணி மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *