தினமலர் – வேலூர் பதிப்பு – 11 7 2022
பக்கம் எண் : 9
புத்தகங்களை இணையத்தில் தேடி படிக்கும் வசதி
சென்னை,
ஜூலை 11
தரமணியில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் கல்வெட்டியல் தொடர்பான கருத்தரங்கம் கடந்த மாதம் 20 ம் தேதி முதல் நேற்று
முன்தினம் ( ஜூலை 9 ) வரை நடந்தது.
இந்த கருத்தரங்களில், தமிழ் ஆய்வு மாணவர்கள் உட்பட பல அறிஞர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் பேசியதாவது :
கல்வெட்டு மற்றும் சுவடிகளில் காணப்படும் எழுத்துக்களை தெளிவாக படித்து, அதன் பொருளை
மற்றவர்களுக்கு விளக்குவது மேலும் விரிவடைய வேண்டும். ஆண்டுதோறும் சுவடிகளும், கல்வெட்டுக்களும் புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் உ.வே. சாமிநாத ஐயருக்கு பிறகு, புதிய சுவடிகளை நுால்களாக வெளியிடுகிற வாய்ப்பு பலருக்கு கிடைக்கவில்லை.
எனவே இதுபற்றிய அறிவியல் கண்ணோட்டம் உருவாகவேண்டும். மலேசியாவில் உள்ள கணினி அறிஞர் திரு. முத்து நெடுமாறன் அவர்கள் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்களை கணினியில் செதுக்கியுள்ளதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கலை, அறிவியலும் இணைந்தால் பல புதிய உத்திகள் உருவாகும். நுாலகங்களில் உள்ள அனைத்து நூல்களும் பன்னாட்டு தர நிலைகளின் அடிப்படையில் சரிசெய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் வாயிலாக புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தும் ஆயத்த பணி மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Add a Comment