POST: 2022-07-18T13:36:31+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 62

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

மருந்தாகும் மணிமொழி

காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும்.

கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும்.

திரிகடுகம் என்ற மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார்.

ஆதனார் என்பது இயற்பெயர்.

‘நல்’ என்பது அடைமொழி.

காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.என்பர் .

திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது.

முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார்.

திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது.

கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற அருள்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.

இது மனித சமுதாயத்திற்கு நல்ல வழியினைக் காட்டும் நூலாகும்.

ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது.

இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது.

இது இல்லறத்தின் உயர்வை உணர்த்தும் வகையில் விளங்குகிறது. ‘

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி. பெய் எனப் பெய்யும் மழை’ என்று இல்லறத்தில் மனையாள் பெருமை பேசப்படுகிறது.

பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்து அதைப் பாதுகாக்கவும் முற்படுகின்றனர் மக்கள்.

தம்மையே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது.

அதனால் அவர்தம் செல்வம் குறையும்.

காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும்.

தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும் என்பதைச் ‘செல்வம் உடைக்கும் படை’ எனக் குறிப்பிடுகிறார்.

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை

அரசர் இயல்பு, அமைச்சர் இயல்பு, இளவரசன், ஒற்றர் ஆகியோர் செய்ய வேண்டுவன என்றெல்லாம் கூறப்படும் கருத்துகள் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நோய் நீக்கும் மருந்துகளாகும்.

தக்க வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ள நினைப்பதும், மக்கட் பேற்றை விரும்புவதும் மனித இயல்பு.

ஆனால் எல்லோருக்கும் இப்பேறு கிடைப்பதில்லை அல்லவா!

மக்கட் பேற்றினைப் பெறவும் மனிதன் நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும் என்று கூறி அறத்தை வலியுறுத்தும் பாடலும் திரிகடுகத்தில் உண்டு .

காப்பாற்ற வேண்டியன பெண்டிர், பொருள், உணவு ஆகியவை இவை உரிய முறையில் காப்பாற்றப்படாமல் போனால் கெட்டுப்போகும் என்று காட்டுகிறது ஒரு பாடல் .

நட்புக் கொள்ளத் தகுதியற்றவர், நட்புக்கொள்ள ஏற்றமுடையவர் யாரென்பதை எடுத்துச் சொல்கிறார் நல்லாதனார் .

கல்வியின் பயன்கள் கூறப்படுவதால் கல்வியின் வலிமையும் பயனும் நமக்கு உணர்த்தப்படுகிறது.

வாழ்வியல் உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படுவதைத் திரிகடுகத்தில் காணலாம்.

எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் பயன்தராத செயல்கள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றன.பிறப்பு நீக்குவது வாழ்வின் முடிந்த நோக்கமாகும் என்பதையும் திரிகடுகம் எடுத்துரைக்கிறது.

இளமையில் கல்வி கற்பதும், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும், சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும்.

நல்லவருள் நல்லவர் எனப்படுதல், நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும்.

உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும்.

வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும்.

அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும்.

குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுடைய நாட்டில் மழை பெய்யாது.

பொய் பேசுபவர் நாட்டில் மழை பெய்யாது.

வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது திரிகடுகம்.

• அறத்திற்கு வழி வகுப்பன

அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம்.

கடன்படாது வாழ்பவன், வந்த விருந்தினரைப் போற்றுபவன், ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும்.

அது அறம் செய்ய வழிவகுப்பதாகும்.

நல்ல குடும்பப் பண்பு

கணவன், மனைவி, மக்கள் அடங்கியது குடும்பம். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன்.

குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘

ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்கு.

பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும். அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள்.

ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர். இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன்.

செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும்.

வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார் .

தனி மனித நலம் – குடும்ப நலமாய் – சமுதாய நலமாய் விரிகிறது.

எனவே, நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே.

அவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் குடும்ப உறுப்பினர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லி விளக்கும் பாடலைப் பாருங்கள்.

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக் குறுதியில் லார்

(இளம்கிளை = மக்கள்; தலைமகன் = கணவன்; வைது = ஏசி; எள்ளி = இகழ்ந்து)

கல்வியின் பயன்கள்

சிறந்த கல்வியின் பயன்கள் என்னவென்று பார்ப்போமா?

கற்றதன் பயன் கற்றதற்கேற்ப நடந்து கொள்ளும் போதுதான் கிடைக்கிறது.

அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் கல்வியறிவைக் கைவிட்டவராவர்.

காலம் பொன்னை விட மேலானது.

காலத்தை நாம் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் அல்லவா?

அரிய பகைவனுடன் போரிடும் முயற்சி வீண்.

அறிஞர் அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் யார்க்கும் பயன்படாது வழக்கைத் தீர்க்கும் திறம் இல்லாதவர் சபையில் இருப்பதும் பயனற்றதே என்று காட்டுகிறது திரிகடுகம்.

ஒரு சிலர் மற்றவர் கல்வித் தகுதியை ஆராயாது குறை கூறிக் கொண்டே இருப்பர்.

இது போன்ற வீண் செயல் வேறெதுவும் இல்லை என்பதை மிக எளிய உவமையினால் விளக்குகிறது திரிகடுகம்.

ஒருவன் கல்வித் தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் உமியைக் குத்துவது போலப் பயனற்றது என்கிறது.

சிலர் வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லலாம் என்று நினைப்பார்கள்.

ஆனால் அது பயன் தராது என்கிறது .

தமக்கு வரும் துன்பம் கண்டு அஞ்சாதவரோடு கொண்ட நட்பு, விருந்தோம்பாத குணமுடைய மனைவியோடிருப்பது, நற்குணமில்லாதவர் அருகில் குடியிருப்பது ஆகியவை பயனற்றவை என்றும் காட்டுகிறது .

இந்தத் திரிகடுகக் கருத்துரையை நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய சுருக்கம் அருமையாக அமைந்தது .

நான் விடிவதற்குள்ளாக எழுந்துவிடும் பழக்கமுள்ள வனல்லவா, அதனால் அருகிலிருந்த புத்தகங்களின் முகத்தில்தான் முதலில் விழிக்க நேரிட்டது.

அவற்றில் மேலாக இருந்தது, நேற்றைய தினம் சின்னக்குத்தூசி அவர்கள் கொடுத்த ‘திரிகடுகம்’ என்ற நூறு வெண்பாக்களைக் கொண்ட சிறிய நூல்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று கேள்விப்பட்டோரும் உண்டு.

பலமுறை அவற்றைப் படித்தோரும் உண்டு .

பதினெண்கீழ்க்கணக்கு என்பது பதினெட்டு நூல்கள்.

அந்தப் பதினெட்டு நூல்களுள் ஒன்றுதான் “திரிகடுகம்” என்பதாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் எப்படி நோய் தீர்ப்பதற்கும் – வருமுன் தடுப்பதற்கும் பயன்படக் கூடியவை என்று கூறப்படுகிறதோ; அதுபோல “திரிகடுகம் ” நூலில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்கள் அமையப்பெற்று அவை உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆக்கம் தரக் கூடியவை என்று கூறப்படுகிறது.

இந்நூலில் வரும் நூறு பாடல்களையும் இயற்றியவர் நல்லாதனார் எனும் புலவர்.

நற்குணங்களைப் பரிந்துரைப்பதாகவும் – நன்னெறிகளை போதிப்பவைகளாகவும் – பாடல்களின் நோக்கம் இருப்பினும்; பழைய கால கருத்துக்களின் பின்னணியும் சில பாடல்களில் தலைகாட்டத் தவறவில்லை இந்த நூலில் !

இருப்பினும் மேகங்களுக்கிடையே மின்னிடும் விண்மீன்களென விழுமிய கருத்துக்களும் நம்மை ஈர்த்திடத் தவறவில்லை .

இதோ; இன்றைய தமிழகத்தின் நிலைப்பாட்டைக் குத்திக் காட்டுவது போல ஒரு பாட்டு

:”கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும் தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.”

இதன் பொருள் வருமாறு :

கல்வி கற்றுத் தரும் ஆசிரியர் இல்லாத ஊரும், சிக்கலைத் தீர்க்கக்கூடிய மூத்தவரே அறிவு முதிர்ச்சியில்லாதவராக உள்ள அவையும், பகுத்தளித்து உண்பவர் பக்கத்தில் அமர்ந்திட அமையாத நிலையும் – நலன் விளைவிக்காமல்; தீமை விளைவிக்கக் கூடியவைகளேயாகும்.

ஊரும், உணவருந்தும் போது பக்கத்திலிருப்போரின் குணமும், ஊரார் கூடும் அவையும் எவ்வாறு அமைதல் நன்மை பயக்கும் என்பதையும் – அவ்வாறு அமையாவிடின் தீமையே பயக்கும் என்பதையும் நல்லாதனார் விளக்கும் விதம் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிட்டால் மாத்திரம் போதுமா ?

ஊர் மக்கள் கல்வியாளர்களாக – குறைந்த பட்சம் கற்றவர்களாகவாவது இருந்திடப் பாடுபட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு ஊரிலும் எழுத்தறிவில்லாதவரே இல்லை என்ற நிலை ஏற்பட எழுத்தறிவிக்கும் இறைவன்களாம் .

கணக்காயர்கள் எனப்படும் ஆசிரியர்கள் போதுமான அளவுக்கு இருக்க வேண்டுமல்லவா ?

அதைப் போலவே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாடு பற்றி நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையான கருத்தைத் தந்த அய்யன் வள்ளுவரின் அடியொற்றி; நம் வாயிலாக வழங்கப்படும் உணவு, உடை மற்றும் பொருள்களைப் பகுத்தளித்து விட்டு நாம் நமக்குரியதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர; எல்லாம் தமக்கேயென்று எடுத்தொளித்துக் கொள்ளக் கூடாதன்றோ ?

மேலும் ஒரு கருத்தாக; இந்தப் பாடலில் அவைக்களத்தில் “பிணக்கறுக்கும் மூத்தோர் இருக்க வேண்டும்” என்பதை நல்லாதனார் அத்தகைய முதிர்ச்சியுற்றோர் இல்லா அவைக்களம் நன்மை பயக்கக் கூடியதாக அமையாது என்று அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

இதற்கான சான்று தேடி நாம் அலைய வேண்டியதில்லை; அயல் நாடுகளில் அவைக் களங்களில் எப்போதோ; என்றோ ஒரு நாள் நடக்கின்ற அமளிதுமளி; நமது நாட்டில் உள்ள பாராளுமன்ற மாயினும்; சட்டப் பேரவையாயினும்; மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்றங்களிலாயினும் அன்றாடம் நடப்பதைக் காணும் பொழுது;

அறிவு முதிர்ச்சியுற்றோர் இல்லாத அவைக்களம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீமையே விளைவிக்கும் என்று நல்லாதனார் ‘திரிகடுக’த்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகத்தானே இருக்கிறது.

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *