POST: 2022-08-01T10:19:03+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 64

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

மானங்காத்த மறவன் !

சேரமான்
கணைக்காலிரும்பொறையாகிய இச்சேரமான், சான்றோர்களால் கோச் சேரமானென்றும், சேரமான் என்ற பொதுப்பெயராலும் வழங்கப்படுவான்.

இதனால் இவன் காலத்தே, இவன் மிக்க சிறப்புடன்
வாழ்ந்தவனென்பது புலனாகும்.

இவன் பெரும் படையும் மிக்க போர்வன்மையு முடையவன்.

இவனுடைய தலைநகர் தொண்டி யென்பது. மேனாட்டு யவனர்களான பிளினி முதலியோர் இதனை டிண்டிஸ் என்று வழங்கினர்.

இந்நகர்க்கண் பெரிய கோட்டையிருந்தது.

இவன் தன்னொடு பகைத்துப் போருடற்றிய மூவன் என்பவனைக் கொன்று அவன் வாயிற் பல்லைப் பிடுங்கிக் கோட்டை வாயிற் கதவில் வைத்து இழைத்திருந்தா னெனப் பொய்கையார் கூறியுள்ளார்.

இவன் காலத்தை யடுத்தே சேரமான் கோக்கோதை மார்பன் தோன்றினான்.

சோழநாட்டை யாண்டு வந்த செங்கணானுக்கும் இக் கணைக்காலிரும்பொறைக்கும் யாது காரணத்தாலோ பெரும் பகையுண்டாக, இருவரும் பெரும் படையுடன் கழுமலம் என்னுமிடத்தே பொரத் தொடங்கினர்.

போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ்நாவலர் சரிதையும், வெண்ணிப்பறந்தலையென நற்றிணை முன்னுரையும், திருப்போர்ப்புறமென இப்புறநானூற்றுக் குறிப்பும் கூறுகின்றன.

இவன் பாசறைக்கண் தங்கியிருக்கையில் ஒருநாள் இரவு யானைப்படையிலிருந்த களிறொன்று மதஞ் செறிந்து தீங்கு செய்யலுற்றது.

அதனால் பலரும் அஞ்சியலமந்தனர்.

அதனை யறிந்த சேரமான் சென்று அடக்கி வீரர் பலரும் ” திரைதபு கடலின் இனிது கண்படுப்பச் செய்தான்.

பின்னர்ப் போர் முடிவில் சேரமான் படையுடைந்து கெட்டது; அவனும் சோழன் கையகப் பட்டுக் கால்யாப் புற்றுச் சிறையிடப் பெற்றான்.

அவ்வாறிருக்கையில் ஒருநாள் சேரமான் நீர் வேட்கையுற்றுக் காவலர்களை நீர்கொணருமாறு பணித்தான்.

அவர் அவன் பணியை யவமதித்துச் சில நாழிகை கழித்துக் கொணர்ந்து கொடுத்தனர்.

அந்த மானத்தைப் பொறாத சேரமான் “அரசராயினார், குழவியிறப்பினும், ஊன்தடி பிறப்பினும், இவை வாள் வாய்ப்பட்டு இறந்தாலன்றி நலமின் றெனக் கருதி அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர்; அக் குடியிற் பிறந்த யான் சிறைப் பட்டுக் கிடந்து உயிர் நீத்தல் தீது; இத்தகைய மறக்குடியினரான எம் பெற்றோர் பகைவர்பால் உணவிரந்துண்டு உயிர் வாழுமாறு மக்களைப் பெறார்காண்” என்று நினைந்து, இதனை ஒரு பாட்டாக எழுதி வைத்து உயிர் நீத்தான்.

அப் பாட்டே ஈண்டு வந்துள்ள பாட்டு.

புறநாநூற்றுக்குப் புகழ்சூட்டும் இப்பாடல் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடியது –

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கைபட்டு வீரம் ததும்பும் பாடலாக விளக்கம் பெற்றது அது வருமாறு :

மயிர் நீப்பின் வாழாத கவரிமான் போல் மானம் வரின் உயிர்நீப்பர் எனும் திருக்குறளுக்குத் ,
தயிர் கடைந்தால் தலைகாட்டும் வெண்ணெய் போன்று தமிழ்ச்சங்கக் காலத்து வீரன் வாழ்வே உண்மைச் சான்று.

தவழ்ந்து வரும் தன் மகவை முத்தமிடுவதற்கும் குனிந்திடாமல்
தலைக்கு மேலே தூக்கச் சொல்லிக் கொஞ்சுகின்ற தன்மானத் தமிழ்ச்சிங்கம் அவன் !

தாமரை மொட்டிரண்டை ஏந்தி வரும் தன் பட்டத்து ராணியையும்
நெளியாமல் நிமிர்ந்து நின்றே நெஞ்சகத்தில் அணைத்துக் கொள்வான்.

நிலம் நோக்கும் வழக்கமின்றி நேர்ப்பார்வை செலுத்தித்தான்

நிலவு முகத்தரசி நெற்றியிலே இதழ் பதிப்பான்.

படுத்திருக்கும்போது பஞ்சணையில் வினாக்குறிபோல் வளைய மாட்டான் – வில்லில் தொடுத்திருக்கும் கணையைப்போல் கால்நீட்டித் துயில் கொள்வான்!

‘வளையாத முதுகெலும்பு பெற்றவனோ?

வணக்கம் எனும் பொருள் விளையாத வயற்காடோ அவன் இதயம்?’

என வியந்து, வாய் பிளந்து மூக்கின்மேல் விரல் வைத்து – அவனை வாழ்த்தியவர் பலருண்டு!

‘இரும்பொறை’ மரபில் வந்த இணையிலா வீரனவன்.

இரும்பொத்த கணையமரம் போலக் கால் படைத்த சேரனவன்;

சேரமான் கணைக்கால் இரும்பொறை யென்னும் செந்தமிழ்ப் பெயருடன் செங்கோல் ஏந்தினான்.

தொண்டித் துறைமுகம் அவன் ஆட்சித் தலைநகர் – அதனை “டிண்டிஸ்’ என்று யவனர்கள் அழைத்தனர் !

மூவன் என்னும் முடியுடை வேந்தனை வீழ்த்தி – அவன் முகவாய் நொறுக்கிப் பற்களைப் பெயர்த்துத் – தனது
கோட்டை வாயிற் கதவின் பெரிய பூட்டின் மீது பொருத்தி வைத்தான் என்று
‘ களவழி நாற்பது ‘ பாடிய பொய்கையார் எனும்புலவர் – அவனது களப்புகழ் பலபடக் கூறிக் களித்திடுவாரே !

தமிழரிடையே ஒற்றுமை என்பது அத்திப்பூ – ஆடிப்பிறை – அதனா தமக்கிடையே போர் தொடுத்துத் தமிழ் இனம் பிளவுபட்ட சேதி கூறு வரலாற்று ஏடுகளின் வரிகளாக ஆகிவிட்டார் –

தமிழர் வாளாற்றல் காட்டுதற்கு வரிந்து கட்டி இனத்துக்குள் இரண்டுபட்டா !

செங்கணான் எனும் சோழன். செருமுனையில் சிறுத்தை போன்றான்!

எங்கணும் வெற்றி கண்டு புகழ்வானில் பறக்க விட்டான் புலிக் கொடியை !

அது கேட்டுச் சேரமன்னன் ஆர்த்தெழுந்தான் !

அணி தேர்ப்புரவி ஆட்பெரும்படை அவன் ஆணை கேட்டுப் பின்தொடர்,

“ மங்குமோ என்றன் வீரம் ?

என் மாவலித் தோளின் முன்னே தங்குமோ சோழன் பெற்ற வெற்றி ”யென்று கணைக்கால் இரும்பொறை கர்ச்சித்துக் கங்குல் கிழித்தெழும் ஒளியாக எதிர்ப்பட்டான் !

முரசுகள் போலே மத்தகம் படைத்த முரட்டு யானைகள் மோதிடவே அரசுத் தேர்களின் அச்சாணி கழன்று ஆயிரம் சுக்கல்கள் ஆயினவே !

குளத்து நீரில் செத்து மிதக்கும் குறுங்கெண்டைமீன் போலே குதிரைகள் குளம்படி குருதிச் சேற்றில் அழுந்திப் பதிந்தனவே !

கட்கம் ஏந்திய காலாட் படையினில் காயம் ஒருசிலர் முதுகில் பட்டிடவே வெட்கம் துரத்த – அவர்கள் வீழ்ந்து மடிந்தனரே !

உறுதி முழக்கமும் குருதிப் புனலும் இறுதிப் பயணமும் எங்கும் நிறைந்த களம்! பொருதிடும் இருவரில் வெல்வது யாரென அறுதியிட முடியாமல் அமைந்த களம் !

எப்படிப்பட்டோர் இருந்தார் மறைந்தார் என்பது – அவரவா எச்சத்தாற் காணப்படும் என்பதற்கொப்ப
சேரமான் கணைக்கால் இரும்பொறை வீரவாளினை ஓலையாய்க் கொண்டு
தீட்டிய புறப்பாடலை நீட்டுகின்றேன் உம்மிடையே –
படித்துப் பாரீர் ! – உணர்ச்சியால் துடித்துப் போவீர் !

“ குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்:
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத் தானே.”

( புறநானூறு : பாடல் : 74 பாடியவர் : சேரமான் கணைக்கால் இரும்பொறை)

விளக்கம்:

ஊன்தடி = சதைப்பிண்டம்.

ஆள் அன்று என்று வாளின் தப்பார் = ஆளல்ல என்று கருதாமல் வாளால் வெட்டிடத்
தவறமாட்டார்.

ஞமலி = நாய். கேளல் கேளிர் – பகைவர்.
மதுகை – மனவலிமை.

தொடர்புக்கு :thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *