படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடும்
பக்கம் எண் 366,367,368 ..
நூலைப்பற்றி ……
– பெருமதிப்புக்குரிய ஔவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை
படிமுறைத்தமிழ் மொழியியலும் பயன்பாடும்
கருத்துரை
புலம் பெயர்தல் என்ற நிகழ்வு உலகெங்கும் அமைந்தது.
கல்வி, வணிகம், வாழ்வியல், அரசியல், அல்லல் எனப் பல நிலைகளில் இப்போக்கு மக்களுக்கு இயல்பாகி விட்டது. ‘
திரைகடல் ஓடித் திரவியம் தேடு ‘ என்று ஔவையார் அறிவுறுத்திய கொன்றை வேந்தன், கல்வியில் முதற்பாடமாகும் என்பது நாடறிந்தது.
ஏதோ திரைகடலுக்கு அப்பால் பொருட்செல்வம் குவித்தது போல மக்கள் ஏங்கி அலைந்தனர்.
‘ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘
என்ற பாரதியார் நெறியுரை தான் நினைக்கத்தக்கது.
புலம் பெயர்ந்தோர் தாம் சென்ற நோக்கத்துக்கு மாறாகத் தாம் பெற்ற மக்கட் செல்வங்கட்குத் தமிழ் கற்பிக்க முயல்வது மருட்சியைத் தருகிறது.
பண்பாடு, மரபு, பாட்டன் – பாட்டியார் பரிவு, உறவுமுறை இவையெல்லாம் இளம் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாமா என்று வினவுகின்றனர்.
இந்நிலையில் திருமுறை வகுப்பு, பரதக்கலை, தமிழ்ப்பள்ளி முதலிய மன்றங்கள் புலம் பெயர்ந்தோர் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றன.
இப்பயிற்சிகள் ஒரு பருவம் கடந்த பின்னர் இளையோருக்குக் கசந்து விடுகின்றன.
இந்நிலையில் ஐம்பாதாண்டுகளுக்குப் பின்னர் தமிழர் கட்டிய திருக்கோயில்கள் என்ன பயன்பாட்டைப் பெறும் என்று அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,
வாழ்வில் நூற்றுக்கு மூவர் கோயிற் பணிக்காக வருவார்கள், வழிபாடு அருகி விடும் என ஆய்வேடு வந்துள்ளது.
பெருந்தகை இராசரத்தினம் எழுதிய படிமுறைத் தமிழ் நூல் இளையோர் நெஞ்சில் இலக்கணத்தின் இயல்பை, உணர்வை உணர்த்தும் சீரிய நூலாகும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொற்செறிவும். பொருட்பொலிவுடனும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணப் பெருமித்ததையும் தன்னகத்தே ஒருங்கே பெற்றதோடு, நாளும் மாறிவரும் இன்றைய அறிவியல் புதுமை வாழ்வில் இளமை மாறாது – இயல்பு திரியாது பொலிவுடன் மிளிரும் பெருமை பெற்றது நம் தமிழ்மொழி.
” இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன் ”
என்னும் தமிழ் விடு தூது காட்டும் தொடர்கள் அமிழ்தைவிடச் சிறந்தது நம் தமிழ் மொழி என்றுரைக்கிறது.
உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழி எனத் தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் போதிலும், தமிழர்களிடையே தமிழகத்தில் தொடங்கி அயல் நாடுகளிலும் பல்வேறு சூழலால் தமிழ்ப் பயன்பாடு குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் மொழி இலக்கணத்தைக் கற்பது மிகவும் அருமை என்று பலர் கருதத்தொடங்கியுள்ளனர்.
தொன்மையில் மட்டும் இல்லை. அதன் தொடர்ச்சியிலுமே தமிழ் வளர்ச்சி உள்ளது என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டிய காலம் இது.
பெருந்தகை. சு. இராசரத்தினம் அவர்களால் இயற்றப்பட்ட ” படிமுறைத்தமிழ் – மொழியியலும் பயன்பாடும் ” எனும் இந்நூல் ஒலியின் தோற்றம் குறித்து மிகத் தெளிவாகவும் சுருக்காமாகவும் படத்துடன் வெளியிட்டுள்ளது சிறப்பு.
இது இந்நூலைக் கற்கும் மாணவர்களுக்கு ஒலிப் பிறப்புக்குறித்து மிக எளிதாகப் புரிய வைக்கும் என்பதில் ஐயமில்லை .
ஆசிரியரின் இந்த அறிவு முயற்சி பாராட்டுதற்குரியது.
மேலும் ஒலியன்கள், மயக்கங்கள், தமிழ்ச் சொற்களின் அமைப்பு, சொல்வகைப்பாடு, ஒட்டுக்கள், வேற்றுமை, புணர்ச்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடனும் தெளிவான படங்களுடனும் பல இயல்களாகப் பிரிக்கப்பட்டு மிக அழகாக எழுதப்பட்டுள்ளன.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு இயலும் ஆசிரியரின் புலமை முயற்சியின் தேர்ந்த வெளிப்பாடாகும்.
பயனாக்கக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் மிகச் சரியான முறையில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவர் என்றே துணியலாம்.
தமிழ்மொழி இலக்கணம் குறித்த அச்சத்தை விலக்குவதற்கான கலங்கரை விளக்கு இந்நூல் என்றால் மிகையாகாது.
தமிழ்மொழியைக் கற்கும் ஒவ்வொரு மாணவரிடமும், தமிழ் மொழியைக் கற்பிக்கும் ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்க வேண்டிய தமிழ் இலக்கணக் களஞ்சியம் இது.
இந்த நூல் எடுத்தவர்க்கு ஆர்வமூட்டும் திறம் கொண்டது.
பெருந்தகை திரு. சு. இராசரத்தினம் அவர்கள், தொடர்ந்து மொழியியல் நூல்களைத் தமிழுலகிற்கு வழங்க வேண்டுமெனவும் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய இவர்தம் தொண்டு மேலும் பல ஆண்டுகள் வெற்றி வாகை பெற்றுத் தொடர்ந்து பல்லாயிரம் மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
கானல் நீர் போலக் காட்சியளித்தாலும்,
கால ஓட்டத்தில் நீரூற்றுக்கள் இருக்கும்
என்று நாம் விழையலாம்.
வாழ்த்துக்களோடு,
ஔவை நடராசன்

Add a Comment