செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 65
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தொல்காப்பியப் பூங்கா !
இந்த இதழ் படிக்கும் போது நம் கண்கள் ஈரமாகிறது .
நம் கலைஞர் பெம்மானின் நான்காண்டு நினைவு நம் முன் நிற்கிறது – நம் முதலமைச்சர் உள்ளம் உருகி நெகிழ்ந்து எழுதிய கண்ணீர் மடல் நம்மை நெக்குருகச் செய்கிறது .
நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின்
முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயற்படுத்துவதற்கும் முழுப்பேராற்றலாக விளங்கும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள்.
நம்மை அவர் விட்டுச் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என நினைத்தபோது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது.
அவரா ? நம்மை விட்டுப் பிரிவதா ? கணப் போதும் அகலாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து, நம்மை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருப்பவரே முத்தமிழறிஞர் கலைஞர் தானே என்று நினைத்ததும், நின்றுபோன இதயம் அடுத்த நொடியிலிருந்து மீண்டும் துடித்தது.
ஆம்… தலைவர் கலைஞர்தான் ஒவ்வொரு நொடியும் நம் நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார்.
நமக்கு நிழல் தரும் பசுஞ்சோலையாக விரிந்து நிற்கிறார்.
உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது ஆட்சியின் மகத்தான சக்தியாக எப்போதும் விளங்குகிறார் .
அணுகுவதற்கும் – தொடுவதற்கும் பயந்து விலகிய தொல்காப்பியத்தைப் பூங்காவாகப் படைத்து மெல்லிய தென்றலாகக் காட்சிகளைக் காட்டுவதை இன்று நினைத்தால் நம் நெஞ்சம் பாகாய் உருகுகிறது .
காலவெள்ளத்தால் கரையாது கலங்கரை விளக்கென நிமிர்ந்து நிற்கும் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் என்னும் தமிழிலக்கண நூலுக்கு உரை வரைந்தோர் பலர்; விரிவும் விளக்கமும் தோன்ற அந்நூலை ஆய்ந்தோர் பலர்.
இப்பெருநூலை எளிய கல்வியினரும் விளங்கிக் கொள்ளும்
வகையில் எடுத்துரைக்க இயலுமா ?
இலக்கியச் சுவைகளை எடுத்தியம்புதல் போல் இவ்விலக்கண நூற்கருத்துகளைக் கேளாரும் வேட்ப மொழிதல் கூடுமா ? என்ற வினாக்கள் அறிஞர்களிடையே நிலவின.
மேனிலை வகுப்புகளிற் பாடம் சொல்லலாம். எளியவர்க்குப் படம் போல் எடுத்துக் காட்ட முடியுமா ? ஆய்வு நிகழ்த்தலாம்.
அனைவரையும் தோய்வு கொள்ளுமாறு கூறமுடியுமா என எண்ணி மயங்கியது புலமை
உலகம்.
ஆனால் தொல்காப்பியப் பூங்கா என்னும் இந்த அரிய இலக்கணத் திறனாய்வு வழியாக இவ்வரும் பணியைச் செய்ய முடியும் என்று காட்டியுள்ளார் தமிழவேள் முத்தமிழ் அறிஞர் நம் கலைஞர். ‘
இதனைப் படிப்பார்க்கு இனி இலக்கணம் வேம்பெனக் கசக்காது: கரும்பு தந்த தீஞ்சாறாய் இனிக்கும்.
இனி எதிர்காலக் கல்வி உலகம் இலக்கணத்தைக் கலைஞர் போல் எளிமையும் சுவையும் பொருந்த எடுத்துரையுங்கள் ! ‘ என்று நமக்குக் கூறப் போகிறது.
ஆய்தத்தை நிழல் என்று கூறும் நுட்பம், முப்பது முதல் எழுத்துகளை நினைவிற்கொள்ளும் உத்தியின் அழகு, மெய் உயிரோடும் இயங்கும் பெற்றிக்கான உவமையின் வளம், தமிழ் என்னும் பெயரே இன ஒற்றுமை காட்டுவது என உரைக்கும் நயம், அகத்தெழு வளியிசை பற்றிய கருத்துரைத்தோர் அறிவுசால் தமிழ்ப் பெரியார் என்று காட்டும் புலமைத் திறம், வாணிகப் பேச்சினர் இடமறிந்து எதிர்பாரா முத்தத்தையும் தமிழச்சியின் கத்தியையும் எடுத்தாள்வது காட்டும் நகை நமை, உவமையின் சிறப்பையும் உள்ளுறையின் நுட்பத்தையும் உணர்த்தும் பாங்கு என இந்தத் தொல்காப்பியப் பூங்காவில் கலைஞர் வரைந்த முதற் காட்சியை இனிக் காணலாம் .
தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும் பொருட்சிறப்பும் கருத்துப் புலப்பாட்டுத்திறனும் நம் நெஞ்சை அள்ளுமின்றன,
பெரும்புகழ்த் தொல்காப்பியர். ‘ எழுத்து ‘ என ஓலையில் தலைப்பு எழுதிவிட்டுச் சிந்தனை உறக்கத்தில் ஆழ்ந்தார்.
அவர் எழுதப்போகும் இலக்கண இலக்கியக் கருவூலத்திற்கான கனவில் மிதக்கத் தொடங்கினார்.
இமைகள் மூடியிருந்தன எனினும், நெடுநேரம் மழை நீரில் ஊறிய நெல்லுக்குள்ளிருந்து அரிசி தலை காட்டுவது போல, வெள்ளை விழிகள் இமைகளின் இடுக்குகளில் ஒளி காட்டிய வண்ணமிருந்தன.
ஏட்டில் பதிந்து உழவு செய்வதற்கு முன்பு கையிலிருந்த எழுத்தாணியைக் காத்திருக்கச் செய்துவிட்டு அவர் இதயத்தில் ஆழ உழுதிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
செதுக்கிச் சிலை வடிக்க உளியும், ஓவியம் தீட்டத் தூரிகையும் போல எழுத்துத் தேவையன்றோ நூல் படைக்க !
எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதாலும், இஃது எழுத்ததிகாரம் என்பதாலும், முதல் நூற்பா எழுத்து எனத் தொடங்குகிறது.
தொல்காப்பியரைப் பின்பற்றித்தான் போலும் அய்யன் வள்ளுவரும் ” அகர முதல எழுத்தெல்லாம் ” என்று திருக்குறளை எழுத்திலேயே தொடங்கியிருக்கிறார்.
தமிழ் மொழியில் உள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களை அலசி ஆய்ந்து பார்க்கும் போது, அவையனைத்தும் முப்பது எழுத்தொலியில் அடங்கிடும் என்ற வரம்பு, தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே வழி வழியாக வந்த ஒன்றாகும்.
அதனால்தான் காப்பியரின் அந்தக் கனவில் ஒலியெழுப்பியவாறு எழுத்துகள் அணிவகுத்து வீறுநடை போட்டு வந்து கொண்டிருந்தன.
ஒவ்வொரு முதலெழுத்தும் அவர் முன் நடந்து வந்து, வணக்கம் தெரிவித்துவிட்டு, வரிசையில் நின்றன.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என ஒரு முன் வரிசை அமைந்தது.
பின் வரிசையில்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் ஆகிய எழுத்துகள் அணி வகுத்தன.
அப்போது சுவர் ஓரமாக ஒரு நிழல் தென்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்னொரு நிழலும் தென்பட்டது.
அந்த இரு நிழல்கள் எழுப்பிய ஒலி சற்றுக் குறுகியதாகக் கேட்டமையால், அந்த வேறுபாட்டை உணர்ந்த தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.
ஒரு நிழல், என் பெயர் ‘ இ ‘கரம் என்றது !
இன்னொரு நிழல், என் பெயர் ‘ உ ‘கரம் என்றது !
தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து, ” நீங்கள் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்ற வரிசையில்தான் இடம் பெறுவீர்கள்.
உங்களை முதல் எழுத்துகள் முப்பதன் வரிசையில் வைக்க முடியாது ! ” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
அப்போது கையில் ஒரு கம்புடன் ஒரு புதுமையான எழுத்துருவம் அங்கே தோன்றி, ” இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா ? ” என்று கேட்டது.
உடனே தொல்காப்பியர், ” என்ன, என்னை மிரட்டுகிறாயா ? நீ ஆயுதமேந்தி ஆய்த எழுத்தாக வந்தால், நான் அஞ்சி நடுங்கி உன்னை முதல் எழுத்துகள் வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்ற நினைப்பா ? ”
அவரது சீற்றம் உணர்ந்த ஆய்த எழுத்து, ” அய்யனே ! என்னைத் தங்கள் விருப்பம் போல் அமர வைக்கலாம்.
முதல் எழுத்து வரிசையில் எனக்கு இடமளிக்காவிடினும், தேவைப்படும் முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன் ! ” என்று அடக்கமாகக் கூறியது , தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக்கொண்டே, எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு, “ நீ எனக்கு உதவிட வருகிறேன் என்கிறாய்; நல்ல வேடிக்கை ! ” என்று புன்னகை புரிந்தவாறு கூறினார்.
” ஆமாம் ! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டார்களோ என் திறமையைப் பார்த்தீர்களா ? ” என்று ஆய்த எழுத்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது.
தொல்காப்பியர், அவர் எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்த்தார்.
” எழுத்தெனப் படும்
அகர முதல் னகர விறுவாய்
முப்பல் தென்ப
சார்ந்து வரன் மரபின் மூன்றலங் கடையே ”
( எழுத்ததிகாரம் – நூல் மரபு – 1 )
முப்பஃதென்ப ” என்னும் தொடரில் ஆய்த எழுத்து வந்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.
தமிழ் எழுத்துக்கள் ‘ அ ‘ முதல் ‘ ன இறுதியாக முப்பது எழுத்துகள் எனக் கூறுவர்; சார்பு எழுத்துகளான குறுகிய ஒலியுடைய இகரம் குறுகிய ஒலியுடைய ‘ உ ‘கரம், ஆய்த எழுத்து ஆகிய மூன்றும் இல்லாமல் முப்பது எழுத்துகள்.
” அவை தாம்
குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம், ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன ”
( நூற்பா :2 )
அலங்கடை = அல்லாத இடத்து
குறிப்பு மூன்று எழுத்துகள் இல்லாமல் முப்பது எழுத்துகள் தமிழின் முதல் எழுத்துகள் என்பதால், அவ்வாறு விடப்படும் அந்த மூன்று எழுத்துகளைக் குற்றியல் இகரம் என்றும் குற்றியல் உகரம் என்றும் ஆய்த எழுத்து என்றும் இந்த நூற்பா குறிப்பிடுகிறது.
தொடர்புக்கு :
thamizhavvai@gmail.com

Add a Comment