செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 67
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
நாடு வாழவும் நலிவு தீரவும் !
தொண்டைமான் இளந்திரையன்
கச்சியைத் தலைநகராகக்கொண்ட தொண்டைநாட்டு வேந்தர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர்.
அவர்களைத் தொண்டையர் என்றும் வழங்குவர்.
இவ்விளந்திரையனையும் சான்றோர் ” தொண்டையோர் மருக ” என்பர்.
தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும்.
” வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங் கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்” (அகம். 213) எனச் சான்றோர் கூறுதல் காண்க.
இதற்குத் தென்னெல்லை பெண்ணையாறும், மேலெல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாமென்பது கல்வெட்டுக் களால் அறிகின்றோம்.
இத்தொண்டையரை, “உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர்” (பெரும்பாண் 454.5) என்றும்,
” பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்’ (குறுந். 260) என்றும்,
“வினை நவில் யானை விறற்போர்த் தொண்டையர் ” (அகம். 213) என்றும்,
சான்றோர் கூறுவதை நோக்கின், இத் தொண்டையர் யானைப்படை கொண்டு பெரும்போ ருடற்றும் சிறப்புடைய ரென்பது தெளிவாம்.
அதியமான் நெடுமானஞ்சியின் பொருட்டு ஔவையார் தூது சென்றதும், இத் தொண்டைமான்களில் ஒருவனிடமேயாகும்.
இத் தொண்டைமான்களில் இளந்திரையன் என்பவன் மிக்க சிறப்புடையவன்.
இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
“இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ண ன் பிறங்கடை அந்நீர்த், திரை தரு மரபின் உரவோன் உம்பல்” (பெரும்பாண். 29 – 31) என்பதனால், இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினானென்று, அவன் வழித்தோன்றல் இவனென்றும் அறியலாம்.
வென்வேற்கிள்ளி யென்னும் சோழனுக்கும், நாகநாட்டு வேந்தன் மகள் பீலிவளை யென்பாட்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்ததாக, இவன் திரையில் மிதந்து கரை யடைந் தானென மணிமேகலை கூறுகிறது.
பின்பு அவன் அக்காரணத்தால்
திரையனெனப்பட்டா னென்றும், வேந்தன் மகனென்றற் கடையாள மாகத் தொண்டைக்கொடி யணிந்திருந்தது பற்றி அவன் தொண்டைமானாயினான்; அவனாண்ட நாடு தொண்டை நாடாயிற்றென்றும் கூறுப.
இத்திரையன், தமிழ் வேந்தர் மூவருள்ளும் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்” உடைமையாற் சிறந்தவனென்றும்,
“குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண், பகற்செய் மண்டிலம் பாரித் தாங்கு, முறைவேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி” மேம்பட்டவ னென்றும்,
“புலவர் பூண்கடனாற்றிப் பகைவர், கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும், வென்றி யல்லது வினையுடம் படினும்,
ஒன்றல்
செல்லா” உரவோனென்றும், அவன் நாட்டில் ஆறலை கள்வரும் பிற தீங்கு புரிவோரும் இலரென்றும் பெரும்பாணாற்றுப்படை பெரிதெடுத்துப் பேசுகின்றது.
இவ்வாறு செங்கோன்மையால் சிறப்புமிக்க இளந்திரையன் ஆட்சியில் அளியுந் தெறலும் எளிய முறையில் நடந்தன.
இவனைப் பகைத்து மலைந்த வேந்தர்களின் மன்றங்கள் பாழ்பட்டன; இவனை நயந்தவர் நாடுகள் நன்பொன் பூப்ப நலமிகுந் தோங்கின.
நாடோறும் வேந்தர் பலரும் பல்வேறு வகையில் பணிந்து, “நட்புக் கொளல்வேண்டி நயந்திசி னோரும், துப்புக் கொளல் வேண்டிய துணையி லோரும், கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்கு” இவன்பால் வந்தவண்ணமிருந்தனர்.
இவர்கட்கு வேண்டுவன வற்றை அருளிய இவ் விளந்திரையன், அரசியலின் செம்மை குறித்து அவர்கட்குச் சில அறிவுரைகளும் வழங்கினன்.
அவற்றுட் சில பாட்டுமாம். இங்கே காட்டப்படும் பாட்டு அவற்றுள் ஒன்றாகும்.
இதன்கண் “அரசியலை ஒரு சகடமாக வுவமித்து, சகடத்தை உகைப்பவன் உகைக்குந் திறத்தை மாண்புற அறிந்தானாயின், அஃது இடையூறு சிறிதுமின்றி இனிது செல்லும். அத்திறம் அறியானாயின், நெறியல்லா நெறியிற் சென்று சேற்றில் அழுந்தி மிக்க துன்பத்துக் குள்ளாவன் அவ்வாறே அரசியலை நடத்தும் வேந்தன் அரசியல் முறையைத் திறம் பட அறிந்தானாதல் வேண்டும்; அதனால் நாடு நலம் பெறும்; அவனும் சீர்பெறுவான்; அறியானாயின், உட்பகை புறப்பகைகளாகிய சேற்றில் அழுந்திக் கெடுவன்” என்று அறிவுறுத்துள்ளான்.
கால்பார் கோத்து ஞாலத் தியக்கும் காவற் சாகாடுகைப்போன் மாணின் ஊறின் றாகி யாறினிது படுமே உய்த்த றேற்றா னாயின் வைகலும் பகைக்கூ ழள்ளற் பட்டு
மிகப்பஃறீநோய் தலைத்தலைத் தருமே. (185)
திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி, தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.
உரை : கால் பார் கோத்து – உருளையையும் பாரையும் கோத்து; ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு – உலகின்கண்ணே செலுத்தும் காப்புடைய சகடந்தான்; உகைப்போன் மாணின் – அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்; ஊறு இன்றாகி ஆறு இனிது படும் – ஊறுபாடில்லையாய் வழியை இனிதாகச் செல்லும்; உய்த்தல் தேற்றானாயின் – அவன் அதனை இனிதாகச் செலுத்துதலைத் தெளியமாட்டானாயின்; வைகலும் பகைக்கூழ்
அள்ளற்பட்டு – அது நாடோறும் பகையாகிய செறிந்த சேற்றிலே யழுந்தி, மிகப் பல் நோய் தலைத்தலைத் தரும் – மிகப் பல தய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும் எ-று
இஃது உலகாளும் முறைமை கூறுதலையட்கொண்டு சக செல்வறுமாற்றைக் கூறினமையின், நுவலா நுவற்சி யென்னும் அலங்கார மாயிற்று, ஒட்டென்று கூறுவாருமுளர். அன்ற, இதற்கு உலகத்தின்கண்னே உலகியற்கையை நிறுத்தி, அதனோடு ஞாலத்தின்கண்ணே செலுத்தப்படும் காப்பாகிய சகடம் தன்னைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின், தனக்கு ஒரிடையூறின்றாக நெறிமுறைமையே நடக்கும், அதனைச் செலுத்துதல் தெளியா னாயின், அச் சாகாடு மறுதலை யென்னும் செறிந்த அள்ளல்லே அகப்பட்டுத் தனக்கும் தன்கீழ் வாழ்வார்க்கும் மிகப் பலவாகிய தீக்கேட்டினை மேன்மேலே தருமெனவும் பொருளுரைப்பர்.
இப் பொருட்குப் பாரென்றது, உலகியற்கையை கால் – உருளை.
விளக்கம் : உலகாளு முறைமை கூறுதலை யுட்கொண்டு உரைக்கு மிடத்து, அரசியலாகிய சகடத்தை யுகைப்போனாகிய வேந்தன் மாட்சிமைப் படின், ஊறுபாடின்றி ஆட்சியைக் கடைபோக இனிது செலுத்துவன்;
அதனைச் செலுத்து முறைமையை அறியானாயின், நாளும் உட் பகையும் புறப்பகையுமாகிய இவற்றிடையே அகப்பட்டுத் தனக்கும் தன்னாட்டவர்க்கும் மிகப் பல துன்பத்தை மேன்மேலும் செய்து கொள்வன் என வரும். இப்பாட்டின் கருத்தைத் திருத்தக்கதேவர், “ஆர்வலஞ் சூழ்ந்த ஆழி யலைமணித் தேரை வல்லான், நேர்நிலத் தூருமாயின் நீடுபல் காலஞ் செல்லும், ஊர்நில மறிதல் தேற்றா தூருமேல் முறிந்து வீழும், தார்நிலமார்பவேந்தர் தன்மையு மன்ன தாமே” ( சீவக. 2909 ) என்று கூறுதல் காண்க.
( 185 )
இக்கருத்தை தித்திக்கும் தீந்தமிழால் நம் முத்தமிழறிஞர் கலைஞர் எழுதியதை இனிக் காணலாம் .
காஞ்சியினை ஆண்டமன்னன் தொண்டைமான் இளந்திரையன்; கவதைபுனையும் ஆற்றலுடன் கடமையுணர்வு மிகவுடையோன் ! கடல்வழிவந்தவர் இக்காவலனின் முன்னோர் எனக் கதையுண்டு ! காதலில் தோய்ந்த சோழன்கிள்ளியும் நாகமகள் பீலிவளையும், பெற்றெடுத்த பிள்ளைக்கனியமுதாம் இளந்திரையன் பிழைத்தெழுந்தான் கலம் மூழ்கிக் கடலில் என்றும் – அந்த மாவீரனே காஞ்சியினைத் தலைநகராய்க்கொண்டு
தொண்டைநாட்டு மகுடம் புனைந்தானென்றும் ”மணிமேகலை” இலக்கியம் கூறும் !
தொண்டைக்கொடியொன்று பற்றிக் கடலோரம் சேர்ந்ததனால் தொண்டைமான் என்கின்ற அடைமொழி சார்ந்ததென்றும் திரையென்றால் அலையன்றோ; அத்திரைமீது மிதந்துவந்து தரையாளும் இளம் மன்னனாய் வாய்த்ததாலே, இளந்திரையன் எனும் சிறப்புப் பெயர் பெற்றானென்றும் இனியதமிழ்க் காப்பியமாம் மணிமேகலை; மேலும் இயம்பும்! இறையனார் அகப்பொருள் உரையுள் நக்கீரனார் “இளந்திரையம்’ எனும் நூல் இவன் இயற்றியது என்பார்! அதியமான் நெடுமானஞ்சிக்காகத் தூதாக வந்து ஔவை வாதாடியதும் இத்தொண்டைமானிடம்தான் என்பர்! நன்னூலுக்கு உரைகண்ட மயிலைநாதர்; நல்லூராம் ”திரையனதூர்’ இவன் பேரால் அமைந்ததென்பார் ! நற்றிணையில் மூன்று பாடல் இளந்திரையனின் கற்றறி நெஞ்சக் கற்பனைக்கு எடுத்துக்காட்டாம்! நாடாளும் மன்னர் பலர் இவன்பால் நட்புக்கொண்டு நாடியிவன் மாளிகைக்கு விருந்தாக வந்திடுவர்; இவனோ
அவரையெல்லாம் வரவேற்று அவர்க்கு வேண்டுவன
வழங்கி – அரசுதனை நடத்துகின்ற அறவழி பலவும் அன்பாய்
விளக்கிடுவான்! அவ்வாறு ஒருமுறை அவன் தந்த அரசியல் அறிவுரைதான்; சவ்வாது மணங்கமழும் சங்கப்பாட்டாய் சாகாது
வாழுதென்பேன்! ”வண்டிக்காலாம் உருளையையும் – அதன் அச்சுத் தண்டில்; பாரையும் கோத்தமைத்துப் புவியில் செல்லும் வழி தெளிந்து செம்மை நெறி உணர்ந்து ஒல்லும் வகையெல்லாம் ஒழுங்கான பாதையிலே செலுத்திடும் வண்டியைப்போல் செங்கோலும்
சிறப்பெய்தி மாண்பு தரும்; செழுமை வரும்! அல்லால்;
வண்டியைச் செலுத்துகின்ற மனிதன் – அதனைக் கண்டவழி செலுத்தினாலோ ஆரக்கால் பதியும்
– ஆழ்பகைச் சேற்றினிலே! மனம் போன போக்கெல்லாம் மண்ணாள்வோர்
சென்று குணம் கெட்டுத் திரிவரேல் குட்டிச்சுவராகும் நாடு! நலிவுற்ற மக்கள் – வலிவற்ற ஆட்சி; நாள்தோறும் பொலிவற்றுப்போகும் தொழில்கள் எனப்
புதைந்துவிடும்; எல்லாமே!” இளந்திரையத் தொண்டைமான் மன்னன் அன்றைக்கு எடுத்தாண்ட உவமையது என்றைக்கும் பொருந்துமன்றோ? வளமிகு நாடு கண்டு மக்கள் வாழ்விலே புதுமை செய்ய உளமது பக்குவப்படுதல் வேண்டும்; அந்த உண்மையை
உரைக்கும் பாடல் இஃதே !
* “கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே; உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும், பகைக் கூழ் அள்ளற்பட்டு, மிகப்பல தீநோய் தலைத்தலைத் தருமே.”
(புறநானூறு : பாடல் : 185
பாடியவர் : தொண்டைமான் இளந்திரையன்) பொருள் விளக்கம் : கால்பார் = வண்டிச் சக்கரமும் பாரும். சாகாடு = வண்டி. உகைப்போன் மாணின் = செலுத்துவோன் செம்மையாக இருப்பின். ஆறு = வழியானது. உய்த்தல் தேற்றான் = செலுத்தும் வகை அறியாதவன். பகைக்கூழ் அள்ளல் = ஆழ்ந்த பகைச் சேறு. வைகல் = நாள்தோறும் தலைத்தலை = மென்மேலும்.
தொடர்புக்கு : thamizhavvai@gmail .com

Add a Comment