POST: 2022-08-30T11:14:22+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 68

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை

பெருஞ்சேரலிரும்பொறை செல்வக் கடுங்கோ வாழி யாதன் திருமகன். இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி யெனப் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.

இவன் தகடூருக்குரிய அதியமானொடு பொருது அவனது தகடூரை யெறிந்து தன்பால் கொண்டதனால் இவ்வாறு சிறப்பித்துக் கூறப்படுகின்றான்.

இவனைப் பதிற்றுப்பத்திற் காணப்படும் எட்டாம் பத்திற் பாடிய அரிசில்கிழாருக்கு இவன் தன் கோயிலாளுடன் வெளிப் போந்து கோயிலில் உள்ளனவும் அரசுங் கொள்கவென வழங்கினான்.

அவர் அவற்றை ஏலாது வேறாகக் கொடுத்த ஒன்பது நூறாயிரம் காணத்தைப் பெற்றுக்கொண்டு தமக்கு இவன் கொடுத்த அரசினை இவனையே மேற்கொண்டாளுமாறு வேண்டினார் , பொறுப்பை அவன்பால் ஏற்றுக்கொண்டார் .

இவன் பதினேழாண்டு அரசு வீற்றிருந்தான்.

இவன் ஆட்சிக் காலத்தே, புலவர் பலரும் இவனால் உயிரினும்
சிறந்தாராகப் பாராட்டப் பட்டனர்.

ஒருகால், இவனைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார் என்னும் சான்றோர், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின்மேல் தம்மை யறியாது கிடந்து உறங்கி விட்டார்.

வெற்றித் திரு வீற்றிருக்கும் கட்டிலின் மேல் வேறு பிறர் கிடந்து உறங்குவது குற்றமாகும்.

அது செய்வோர், கொலைத் தண்டத்துக் குரியவராவர்.

இஃது அக்கால அரசு முறை இதனை யறியாதவர் புலவர்.

அவர் உறங்கியதை யறிந்த இவ்விரும் பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு அவர்க்குக் கவரிகொண்டு வீசலுற்றான்.

இதனால், இவன் வெற்றித் திருவும் பிறவும் புலவர் புலமைமாண்பினை நோக்கத் தாழ்ந்தன வெனக் கருதும் கருத்தினனாதலை நன்கறியலாம்.

இப்பாடல் நாட்டவரால் நாளும் புகழப் பெறுகிறது .

இப் பாட்டின்கண், முரசுகட்டிலின்கண் அறியாது உறங்கிக் கிடந்த தனக்கு உறக்கம் தெளியுங்காறும் சாமரை வீசிய சேரமானது பேரருளை வியந்து, மோசிகீரனர், ” முரசினுடைய மென்பூஞ் சேக்கைக்கண் அறியா தேறிய என்னை, வாளால் இருபாற் படுப்பதைச் செய்யாதருளிய தொன்றே, நீ தமிழ் முழுவதும் நன்கறிந்த சிறப்புக்குப் போதிய சான்றாகும்.

அதனோடமையாது, என்னை யணுக வந்து, முழவுத்தோள் கொண்டு, கவரி வீசியதற்குக் காரணம் யாதுகொல்லோ ?

இவ்வுலகத்தே இசையுடையோர்க் கல்லது உயர்நிலை யுலகத்துள் உறைவிடம் இல்லையெனச் சான்றோர் கூறுதலை விளங்கக் கேட்ட கேள்விப் பயனோ நீ இங்கே இதனைச் செய்தற்குக் காரணம் ” எனக் கூறிப் பாராட்டுகின்றார்.

ஆசிரியர் மோசி கீரனார், மோசி யென்பாருடைய மகனார் போலும் இனி, மோசு கீரனார் என்று கொண்டு, மோசுகுடி யென்னும் ஊருண்மை பற்றி அவ்வூரினராகக் கருதுபவரும் உண்டு.

இவர், சேரநாட்டு வேந்தனையே யன்றி, அவன் நாட்டிற் கடுத்த கொண்கான நாட்டுத் தலைவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அவன் கொண்கானங் கிழான் எனப்படுவன்.

” உலகத்து வாழும் மக்கட்கு நெல்லும் நீருமன்று உயிர்; மக்கள் மன்னனையே உயிராகக்கொண்டு வாழ்வர்; அதனால், வேந்தன், ” யான் உலகிற் குயிராவேன் என்றறிந்தொழுகுதல் கடமையாகும் என்று பெருஞ்சேர லிரும்பொறைக்கு வற்புறுத்தி யுரைத் தவர் இவரே.

கொன்கானங் கிழானைக் காணச்சென்ற காலத்து, ” முடிவேந்தர்பால் நெருங்கிப் பயிலும் இவர், குறுநிலக்கிழாரைப் பாடிப் பரிசில் பெறல் வேண்டாவே ” என்றொரு கேள்வி யெழுந்தது.

அதற்கு விடையிறுப்பார் போல, கடலருகே வாழி னும் நீர் வேட்கையுற்றோர் சிற்றூறலையே நாடுவர்; அதுபோல், அரசர் உழையராகிய வழியும் புலவர் உயர்ந்த வள்ளியோரையே விரும்பிச் செல்வர்; எனக்கு ஈயென இரத்தல் அரிதாயினும் இக்கொண்கானம் பாடுதல் எளிதுகாண் ” என்று பாடுகின்றார்.

இவ்வாறு தம் புறநானூற்று உரையில் உரைவேந்தர் ஒளவை துரைசாமி எழுதினார் .

இப்பாடலின் நலங்கண்டு மகிழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தன் கலைவண்ணம் காட்டிய பகுதியை இனிக் காணலாம் .

முரசு கட்டிலில் மோசி கீரனார்

தும்பை மலர் எடுத்துச் சரம் தொடுத்துத் தொங்க விட்ட நீர்வீழ்ச்சித் தாடி !

கம்பஞ் சோறுண்ணும் பழக்கத்தால் கடுகளவும் கட்டுக் குலையாத நெடுநல் மேனி !

அம்பின் முனையும் தோற்று விடும்படியாக அழகான கூர் விழிகள் !

அதோ வருகின்றார். அமுதத் தமிழ்மொழியே அரும்புலவர் உருவெடுத்து வருவது போல் !

மோசிகீரனார் என்பது அவர் பெயர்; அவருடல் தழுவி வீசுகின்ற தென்றல் கூடத் தமிழாய் மணக்கும்;
மூவேந்தராம் சேர சோழ பாண்டியர்க்கு – இந்தப் பாவேந்தர் மீது தனி மதிப்பே உண்டென்பர் !

முடியேறியிருக்கும் மும்மன்னர் தலையினிலே – தமிழ்க் குடியேறியிருக்கும் வரலாறு பல உண்டு இலக்கியத்தில் !

தமிழ் காக்கும் மூவரில் ஒருவன் தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறையாம் !

பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்துப் பாடி – அவனைப் பாராட்டி மகிழ்வித்த செயலுக்காக – அவன் ஆண்டிருந்த நில முழுதும் கொடையாக அரிசில் கிழார் எனும் புலவருக்குப் பரிசெனவே அறிவித்து அதனைப் பெற அவர் மறுத்திடவே அவரையே தனக்கு அறிவுரை கூறும் அமைச்சராக ஆக்கிக்கெண்டான் !

செந்தமிழ்பால் வைத்திருந்த பாசத்தாலே செங்கோல் பிடித்திருந்த அவன் கையில் சிலவேளை எழுதுகோலும் ஏறிக்கொண்டு சிறப்புமிகு இலக்கியங்கள் படைத்ததுவாம்

முதுகவிஞர் மோசிகீரனார்: மலர்க்குடத்தில் மதுவருந்த வருகின்ற வண்டே போல், மதிமன்னன் சேரமானைச் சந்திக்க அதி தொலைவு நடந்து வந்து, அரசனது மாளிகையை அடைந்துவிட்டார்.

அயர்வுடனே மன்னன் உறங்குவது கேள்வியுற்று அவனைக் காண அரண்மனையில் காத்திருந்தார்.

அவருக்கும் ஓய்வு கொள்ள வேண்டுமென்றோர் உணர்வு. அதனாலே சுற்றுமுற்றும் பார்க்கலானார் ஆங்கோர் இடம் படுப்பதற்குக் கிடைக்குமா என்று !

வீர முரசம் வைக்கின்ற கட்டி லொன்று வெண்மலர்கள் நிறைந்தவாறு இருக்கக்கண்டார்!

குருதி வழியும் போர் முகத்தில் கொட்டுகின்ற முரசு வைக்கும் கட்டிலென்று அறியாத புலவர் ஏறு கண்ணுறங்க வசதியெனப் படுத்துக்கொண்டார் !

வெற்றிகொள் முரசு வீற்றிருக்கும் கட்டில்மீது வேறெவரும் படுப்பதெனில் பெருங்குற்றமென
வேந்தர்கள் வெகுண்டெழுந்து தலைதனையே வெட்டி வீழ்த்தும் காலம் அது !

நீராட்டி எடுத்து வர வீரர் சிலர் – அந்தப் போராட்டக் கள முரசை அகற்றியதால் விவரம் தெரியா வித்தகப்புலவர் – அதில் விழிகளை மூடி உறங்கலுற்றார் !

வெகு தொலைவு நடந்த களைப்பில் வியர்வை முத்து உடலில் விளைய மிகு உறக்கம் கொண்டுவிட்டார்; மெய் மறந்து குறட்டைவிட்டார் !

மயில் அணைத்து மஞ்சத்தில் கிடந்த மன்னன். துயில் களைந்து எழுந்துவிட்டான் !

மாளிகையின் முன்புறத்தில் உலவுவதற்கு மாமன்னன் வந்தபோது வியப்புற்று முரசு கட்டிலருகே விரைந்தான் – அங்கு மோசிகீரனார் உறங்குதல் கண்டான் !

“வாள் எடுத்து வந்திடவோ அரசே?”யென்று ஆள் ஒருவன் வணங்கி நின்றான்…

போர் முரசம் வைக்கின்ற கட்டில் மீது யார் ஒருவர் படுத்தாலும் அவரைத் துண்டித்து உயிர் பறித்தல் – ஒரு கண்டிப்பு ஆணையென இருப்பதாலே மண்டியிட்ட வீரன், மன்னனது கண்ணசைவை மரியாதையுடனே எதிர்நோக்கிக் கொண்டிருந்தான் !

அரசனின் விழிகள் நெருப்பைப் பொழியும்; அவனது மொழியில் ஆத்திரம் வழியும்; என்றந்த வீரன் நினைத்ததற்கு மாறாக ” எடுத்துவா விசிறியை ! ” என்றான் வேந்தன் !

காவலனோடிக் கொண்டுவந்த கவரியினைக் கைகளில் ஏந்திக் கவிஞர் மீது
கனிவுடன் வீசிப் பணிவிடை புரிந்தான் நனிமிகு புகழுடன் நாடாண்ட வேந்தன் !

களைப்பு நீங்கிப் புலவர் எழுகின்ற வரையில் கவரி வீசுதலை மன்னன் நிறுத்திடவில்லை …

நெடுநேரம் கழிந்தபின்னர் எழுந்த புலவர். திடுமெனக் குதித்தார். கட்டிலில் இருந்து “ மன்னவனே என்ன இது ? ” எனத் துடித்தார் ! –

-இந்தச் சின்னவன் பெற்ற பேறு ” என்றான். சேரன் !

“அரசு ஆணையை அறிவேன் எனினும் முரசு கட்டிலென அறியாது படுத்தேன்.

ஆவி போக்கிடும் தண்டனையிலிருந்தும் – எனைக் கூவியெழுப்பிக் கொல்லுதல் விடுத்துக் கொற்றவனே தன் கையால் எனக்குக் குளிர் சாமரம் வீசுகின்ற காட்சி என்னே ? ” என்றயர்ந்தார் புலவர் !

” தமிழுக்குத் தொண்டு செய்தால் – அந்தத் தமிழ் உள்ளளவும் வாழ்வோம் என்ற தன்னலத்தால், தமிழேவடிவாக என்னகத்தே வந்துள்ள தங்களுக்கு நான் செய்த தொண்டு இஃதெ” ன்றான் சேரன் !

தேன் பெய்த பழச்சாறாய்ப் பாட்டொன்றைப் பரிசாய்த் தந்தார் புலவர் !

“ மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி. மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர.

இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை அதூவும் சாலும், நற் றமிழ் முழுது அறிதல்: அதெனொடும் அமையாது, அணுக வந்து, நின் மதனுடை முழுவுத்தோள் ஓச்சித், தண்ணென வீசி யோயே, வியலிடம் கமழ, இவண்இசை உடையோர்க்கு அல்லது, அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்,
வலம்படு குருசில், நீ ஈங்கு இது செயலோ ? ”
( புறநானூறு : பாடல் : 50. பாடியவர் : மோசிகீரனார் )
பொருள் விளக்கம்:

விசித்த = வலித்துப்பிணைத்த. வார்புறுவள்பின் = வாரப்பட்ட வாரையுடைய
மபடுமருங்குல் = கருமரத்தால் செய்த உறுதி வாய்ந்த முரசின் பகுதி மஞ்ஞை = மயில். மண்ணி வாரா அளவை = நீரடி வருவதன் முன்னே மென்பூஞ்சேக்கை = மெல்லிய பூக்களையுடைய கட்டில் தெறு = வெகுளல். இருபாற்படுக்கும் = இரு கூறாகப் பிளக்கும்
மதனுடை = வலிமை வாய்ந்த. தண்ணென வீசியோய் = சாமரங்கொண்டு குளிர வீசினாய்
வலம்படு குருசில் = வெற்றியுடைய தலைவனே.

தொடர்புக்கு :
thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *