தினமணி நாளிதழில் 26 8 2022 அன்று வெளியான
தமிழ்த்தென்றல் திரு வி க பற்றிய சிறப்புக்கட்டுரை
உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ் !
பற்றி வெளியான
கடிதப்பரல்கள் …
1.முன்னோடி நூல்
திரு.வி.க.வின் வாழ்க்கைச் சித்திரத்தை இன்றைய தலைமுறையினர் அறியுமாறு செய்த
கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்
( ‘ உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ் ! ‘ கட்டுரை, முனைவர் ஔவை அருள், 26 – 8 – 2022 ).
திருக்குறளுக்கு திரு.வி.க. எழுதிய ‘ திருக்குறள் விளக்கம் ‘ உரை நூலே பின்னர் எழுதப்பட்ட உரை நூல்களுக்கு முன்னோடி நூல் எனலாம்.
திரு.வி.க. எழுதிய ‘ மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ‘ நூல் காந்தியடிகளைக் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூல்களுள் ஒன்றாகும்.
நாட்டுப்பற்றாலும், மொழிப்பற்றாலும், பொதுத் தொண்டாலும் சிறப்புற்று வாழ்ந்தவர் திரு.வி.க.
தமிழகத்தில் சங்கங்களும் அமைப்புகளும் நிலைத்து நிற்க முடியாமைக்கு திரு. வி.க. அன்று கூறியுள்ள காரணங்கள் இன்றும் பொருந்துவன.
– பா. மதிவண்ணன்,
சேலம்.
2.திரிவேணி சங்கமம்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. தேசியவாதி, காந்தியவாதி, தொழிற்சங்கவாதி, பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகப் பேராற்றல் மிக்கவர்
( ‘ உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ் ! ‘ கட்டுரை, முனைவர் ஔவை அருள், 26 – 8 – 2022 ).
மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் அவர் உரையை சிறப்பாக மொழிபெயர்த்தவர் திரு.விக. தான் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக இருந்தவர்.
‘ முருகு ‘ என்ற சொல்லுக்கு இளமை, அழகு, தெய்வத்தன்மை போன்ற பல பொருள்கள் உண்டு என்பதை விளக்கி ‘ முருகன் அல்லது அழகு ‘ என்ற நூலை இயற்றியவர்.
உபநிடதங்களையும்,
திருக்குர் ஆனையும் நன்கு கற்றவர்.
அதனால், சமயப் பொறை அவரிடம் இயல்பாகவே இருந்தது.
அரசியல், தொழில், பத்திரிகை ஆகிய மூன்று துறைகளிலும் ஆற்றிய பங்களிப்பிற்காக திரு.வி.க ‘ திரிவேணி சங்கமம் ‘ என்று புகழப்பட்டார்.
– என்.ஆர். ஸத்யமூர்த்தி,
கடலூர்.
3.வழித்தடம்
தமிழ்த் தென்றல் திரு.வி.க. தனது 35 – ஆவது வயதில் மனைவியை இழந்தார்.
அவரை மறுமணம் செய்து கொள்ள மு.வ. போன்றவர்கள் வற்புறுத்தியும், இல்லற வாழ்வைத் துறந்து பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் அவர்
( ‘ உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ் ! ‘ கட்டுரை, முனைவர் ஔவை அருள்,
26 – 8 – 2022 ).
1906 – இல் பல அறிஞர்களோடு இணைந்து சென்னையில் சைவ சித்தாந்த மன்றத்தை நிறுவியவர்.
ஆன்மிகவாதி, அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.
தமிழோடு இரண்டறக் கலந்தவர்.
திரு வி க தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம்.
அவரது வரலாறு தமிழறிஞர்களுக்கு என்றும் வழித்தடமாகும்.
– உ. இராசமாணிக்கம்,
கடலூர்.
4.பெருமை சேர்த்தவர்
தமிழுக்காகவே வாழ்ந்த பெருந்தகையாம் திரு. வி.க. எனும் திரு. வி. கல்யாணசுந்தரனாரின் 140 ஆவது பிறந்த நாளில் அன்னாரை நினைவுகூர்ந்து அருமையான கட்டுரையைத் தந்த கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்
( ‘ உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ் ! ‘ கட்டுரை, முனைவர் ஔவை அருள், 26-8-2022 ).
கட்டுரையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய இரண்டு தகவல்கள்.
முதலாவது, வள்ளலார் இராமலிங்க அடிகளார் காலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் மகாத்மா காந்தியின் பெயருடன் அடிகளை இணைத்து ‘ காந்தியடிகள் ‘ என்று தமது கட்டுரைகளில் குறிப்பிட்டு, தமிழுக்கும் மகாத்மாவுக்கும் ஒருங்கே பெருமை சேர்த்தவர் திரு.வி.க. ஆவார்.
இரண்டாவது, எளிய தமிழில் தலைசிறந்த வரலாற்றுப் புதினங்களை வழங்கிய எழுத்தாளர் ‘ கல்கி ‘, தொடக்க காலத்தில் திரு.வி.க.வின் ‘ நவசக்தி ‘ இதழில் பணிபுரிந்தவர் ஆவார்.
– ஆர். தீனதயாளன்,
காரமடை

Add a Comment