முத்தமிழ் வளர்க்கும்
முத்திறப் பொறுப்புகள்
ஏற்றுள்ள
என் அன்பு இளவல்
முனைவர் ந. அருள்
அவர்களுக்கு
ஓர் வண்டமிழ்
வாழ்த்து மடல்
வழிவழி வந்த வண்டமிழ்ப் புலமையும்
முயன்று முறையாய்க் கற்றுத் தேர்ந்த
முத்தமிழ்க் கல்வியும்
அயரா துழைத்துத்தன் அரிய முயற்சியால்
நிறுவிக் காட்டிய நேரிய பணிகளும் என
முத்திறத் தகுதிகள் மொய்ம்புறப் பெற்றதால் – இன்று
முத்தமிழ் வளர்க்கும் முத்திறப் பொறுப்பை,
தளர்நடையில்லா வளர்முகப் பாதையில்
அல்லும் பகலும் அருந்தமிழ் வளர்க்கும்
தமிழர சான தமிழ்நாட் டரசு
மகுடமாய் என்றன் மாணிக்க இளவல்மேல்
தகுபுகழோடு தரித்துள செய்தி – என்
செவிவழித்தேனாய்ச் சிந்தையில் பாய்ந்திட
கவிமொழி யால்அதைப் போற்றி மகிழ்கிறேன்
பழிமொழி ஒருவரும் பகரா வகையில்
மொழிபெயர் துறையின் மாண்புறு பொறுப்பில்
அரிய பணிகள்பல ஆற்றிக் காட்டினீர் !
ஈரா(று) ஆண்டுகள் இணையிலாச் சாதனை
பலப்பல நிகழ்த்தி அரசும் அறிஞரும்
உளமாரப் போற்றி உவந்திடச்செய்தீர்
உலகத் தமிழ்எனும் ஒண்டமிழ் ஆய்விதழ்
எவரும் தூண்டாது நீரே தொடங்கி – எவரையும்
கவரும் வகையில் மலர்ந்திடச் செய்தீர்.
முத்தமிழ்த் தாயின் மூத்த பிள்ளைகளாம்
உரைவேந்தரையும் உயர்நா வரசரையும்
தந்தையராய் நீர் தவத்தால் பெற்றீர்.
தமிழ்க்குடிச் சா(று)(உ)ம்முள் ஆழமாய் இறங்கப்
பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப் பனிலும்
மற்றுள உயர்பெரும் ஆய்வரங்குகளிலும்
பெற்ற கல்வியை – நிகழ்த்திய ஆய்வை
எழுதத் தொடங்கினால் ஏடு கொள்ளாது
இன்முகப் பண்பால் பன்முக உறவால்
நற்றமிழ் அறிஞர், பல்துறை – பல்கலைக்
கலைஞர்கள், வித்தகர் எனப்பல ரோடு
கொண்ட தொடர்பால் மொண்ட அறிவும்
அனுபவச் செழுமையும் அளவில்லாதது
இத்தனைத் தகுதிகள் இணையப் பெற்றதால்
முத்தனைய இம்முப்பெரும் பொறுப்புகள்
ஒருசேர நிகழ்த்த உம்மால் கூடுமென
ஒண்டமிழ் அரசே உணர்ந்து தந்தது
” எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
ஒருதனித் தாங்கிய உரனுடை நோன்தாள் ” என
சிறுபாணாற்றுப் படையின் நல்லியக்கோடனை
நற்றமிழ்ப் புலவர் நத்தத்தனார் வாழ்த்திய
செந்தமிழ் வாழ்த்தே என் சிந்தையில் பெறுகிறேன்.
அதனையே உமக்கும் என் வாழ்த்து மாலையாய்
அன்புடன் சார்த்தி ஆனந்தம் கொள்கிறேன்.
ஆண்டவன் அருளும் அரசின் பொருளும்
அருந்தமிழுலகத்து அறிவோர் துணையும்
நிறைவாய்ப் பெற்று நேரிய பணிகள்
பற்பல நிகழ்த்தி, பைந்தமிழ் வளர்ச்சி
இத்தமிழ் நாட்டில் இன்றைய சூழலில்
புதிய சிகரங்கள் எட்டிடும் வண்ணம்
சாதனைப் பயணம் தொடர்க ! வெல்க ! – என
சோதரனாய் என் சொற்றமிழ் வாழ்த்துகள்
கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுக்கிறேன்.
வாழிய ! வாழிய !
வளம் பல சூழவே !
நிறைந்த அன்புடன்,
தமிழுறவில் அண்ணன்
( மோசசு மைக்கேல் பாரடே )

Add a Comment