செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 70
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
வெஞ்சினமும் – வஞ்சினமும்
காக்கைபாடினியார் நச்செள்ளையார் “ விருந்து வருமாயின் கரைந்து காட்டுக, வாராதாயின் நடந்து காட்டுக ” என இளமகளிர் காக்கை தம் மனைக்கண்வரின் அது கண்டு சொல்வது வழக்கம். இவ்வழக்காறு தமிழகத்தில் தொன்று தொட்டு வருவது. இதனைப் பொருளாக வைத்துப் பாடிய சிறப்பினால் நச்செள்ளையார் காக்கைபாடினியார் எனச் சிறப்பிக்கப்படுகின்றார்.
செள்ளையென்பது இவரது இயற்பெயர். சிறப்புணர்த்தும் எழுத்தாகிய நகரம் புணர்ந்து நச்செள்ளையென வந்தது.
கீரனாரென்பது நக்கீரனார் என்றும், பூதனாரென்பது நப்பூதனாரென்றும் வருவது காண்க.
இனி, நற்கீரன் நற்பூதன் என்பன நக்கீரன் நப்பூதன் எனவரும்; அவ்வாறே நற்செள்ளை யென்பது நச்செள்ளையென வந்தது என்று கூறுவாருமுளர்.
இச்சான்றோர் கண்டீரக்கோப்பெருநள்ளியின் கானத்தையும் தொண்டி நகரத்தையும் பாடியவர்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்துள் ஆறாம்பத்தைப் பாடிக் கலன்களுக்கென ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பெற்று. அதியமான் நெடுமான் அஞ்சிபால் ஒளவையார் இருந்தாற்போல அவன் பக்கத்துப் புலவராகும் சிறப்பு பெற்றாரென்ப. ஒருகால் ஒரு மறவன் போரில் பகைவர் வாளால் வெட்டுண்டிறந்தான்;
அவன் பீடுடைய போருடற்றியதனால் அவன் உடல் துணிபட்டுச் சிதைந்து வேறு வேறாய்க் கிடப்பதாயிற்று.
அதனையறியாத பலர், போர் முடிவில் ஊர்க்குப் போந்து அவன் தாயைக் கண்டு ” நின் மகன் பகைவர்க்கு முதுகு காட்டி மாண்டான் ” என்று பொய்யாகக் கூறினர்.
அவன் தாயோ அப்போது மிக்க முதுமையெய்தி யிருந்தாராயினும் அச்சொல் தனது மறக்குடி மாண்புக்கு இழுக்காதலை யெண்ணினாள்; கண்ணைத் தீயெழத் திறந்து நோக்கி, ” என் மகன் இவ்வாறு மாண்டானாயின், அவன் வாய் வைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன் ” என வஞ்சினம் கூறிக் கைவாளொன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்குச் சென்றாள்.
அங்கே மறவர் பிணங்கள் மலிந்து கிடந்தன.
அவளுக்குத் தன் மகனுடலைக் காண்பது அரிதாயிருந்தது.
கள முழுதும் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.
முடிவில் ஓரிடத்தில் வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் அவன் உடலைக் கண்டாள்; வேறு வேறாகக் கிடந்த துண்டங்களைத் தொகுத்து ஒழுங்குற அமைத்து நோக்கினாள்; அவன் முகத்தினும் மார்பினும் விழுப்புண்பட்டு வீழ்ந்தானேயன்றிப் புறப்புண்ணுற்று உயிர் போயிற்றிலன் எனத் தெரிந்தாள்.
அக்காலை அவள் உள்ளத்தில் நிலவிய வெம்மை நீங்கிற்று; குடிப்பெருமையை நிறுவினானென உண்டாகிய உவகை மிகுந்தது.
அதுதானும் அவனை அவள் பெற்றகாலையிற் பிறந்த உவகையினும் பெரிதாயிருந்தது.
இது காக்கைபாடினியார்க்குப் பெருவியப்பை விளைத்தது. அதுவே காரணமாக இப்பாட்டினைப் பாடுவாராயினர்.
நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்று பலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.
( 278 )
திணை: தும்பை; துறை: தானைநிலை. காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.
இப்பாடல் தமிழர் வீரத்தைப் பொலிவுறக் காட்டுவதாகும் .
முத்தமிழறிஞர் கலைஞர் கைபட்டு இப்பாடலின் வரிகள் வைரங்களாயின .
ஒருமுறை நான் மேடையில் பேசும்போது முதல்வர் கலைஞரின் இப்பாடலைச் சில வரிகள் மட்டும் கூறினேன் .
தலைமை தாங்கிய முதல்வர் புறப்பாடலை நான் எழுதியபடி முழுவதும் சொல்கிறேன் என்று எழுந்து நின்றார்
.ஒளவைக்கு வேண்டுமானால் நினைவு மறதி எனக்கு எந்நாளும் மனஉறுதி , எனக்கு மறதி என்பதே இல்லை என்று மேடையில் நின்று துளித்த நறுந்தேன் என்ற சொல்லைத் தொடங்கு குரல் – முழங்கு கடலாக தலைவரின் பேச்சைக் கேட்டதும் மேடை அதிர்ந்தது .
மேடைகளில் திருமதி மனோரமா – இளமை மாமணி நடிகர் சிவகுமார் இந்தப் புறநானூற்று வரிகளை நடிப்புத் திறனோடு கூறியதைக் கேட்டு மேடைகளைச் சிலிர்க்க வைத்தனர் .
அழியாப் புகழ் கொண்ட இந்தப் பாடலுக்குத் தலைவர் எழுதிய வீரத் தொடர்களால் மேலும் மெருகேறி ஒளிவீசிடக் காணலாம் .
வாளிங்கே அவன்
நாக்கெங்கே ?
குடிசைதான் ! ஒரு புறத்தில்
கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் – வையத்தைப்
பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம் போல் மின்னும்; மிளிரும் !
புலியின் குகையினிலே அழகில்லை –
புதுமையல்ல ! கிலியும் மெய் சிலிர்ப்பும்
கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம் –
மறவன் மாளிகை !
இல்லத்து வாயிலிலே
கிண்ணத்துச் சோற்றோடு வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்பப் பொக்கை வாய்தனைத் திறந்து
பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி. ஓடி வந்தான் ஒரு வீரன்
” ஒரு சேதி பாட்டி ! ”
என்றான். ஆடி வந்த சிறுமி போல் பெருமூச்சு வாங்குகின்றாய் ஆண்மகனா நீ தம்பி !
மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்; பின், பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக்
கிண்டலுக்குப் பேர் போன கிழட்டுத் தமிழச்சி !
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி – உன்
வாடிக்கைக் கேலியை விட்டுவிடு ‘ மடிந்தான் உன் மகன் களத்தில்
என்றான் – மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி அக்கணமே ! ”
தாயம் ஆடுகையில் காய்களை
வெட்டுவதுண்டு – களமும் அதுதான். காயம் மார்பிலா ? முதுகிலா ? – கழறுவாய் ” என்றாள் – முதுகிலென்றான். கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்; முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம் ! ”
கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும் மோழைக்குப் பெயர்
போர் வீரனாம் !
முன்பொருநாள் பாய்ந்து வந்த ஈட்டிக்குப் – பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர் !
அவருக்குப் பிறந்தானா ? -அடடா மானமெங்கே – குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான். இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் – இங்கு – வீணை நரம்பினிலே இசை துடிக்கும் அதுவும் மானம் மானமென்றே முழக்கும் !
மாற்றார்க்கு மண்டியிட்டு வாழுகின்ற மானமற்ற வம்சமா நீ – ஏடா
மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய் மார்பு கொடுத்தேன்
மடிமேல் வளர்த்தேன் – தின்று கொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்களெங்கே ?
தினவெடுக்கவில்லையா ? அந்தோ !
பகைவர் வேலுக்கு வழி சொல்ல வகையற்ற
கோழையே – என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய் ! என்று கதறினாள் – எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்கு செரு முனையில்
சிதறிக் கிடந்த செந்தமிழ்க் காளைகளைப்
புரட்டிப் பார்த்தாள் – அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க
ஓடிற்று ரத்த வெள்ளம் ! பிணக் குவியலிலே பெருமூச்சு
வாங்க நடந்தாள் !
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை – மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு
எல்லையுண்டு – அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி !
இதைக் கண்டாள் – இதயங் குளிர்ந்தாள் ! ”
எதைக் கண்டாலும் இனிக்கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான் ” என்றாள். அறுத்தெறிய இருந்தேன்
அவன் குடித்த மார்பை – அடடா ! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே ?
வாளிங்கே ! அவன் நாக்கெங்கே ? ‘
நரம்பு எழுந்து உலறிய = நரம்புகள் தோன்றிட வற்றிய. முளரிமருங்கின் முதியோள் = தாமரைபோல் ஒட்டிய வயிறுடைய கிழவி. படையழிந்து மாறினன் = படைகண்டு அஞ்சிப் புறங்கொண்டு மாண்டான். மண்டமர் = களப்போர். சினை இ = சினந்து. சிதைந்து வேறாகிய படுமகன் = விழுப்புண் பெற்றுக் கிடக்கும் மகன்.
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment