சாதனைச் சிகரம் சாய்ந்ததே !
உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் – உள்ளங்களிலும் உயரிய இடம் பெற்றிருந்த மலேசிய மாமனிதர் – மாசில்லாத மாணிக்கமாக ஒளிர்ந்த துன் சாமிவேலு மறைந்தார் என்பதைக் கேட்டு எவராலும் ஆறுதல் கொள்ள முடியாது .
அதியமான் நெடுமான் அஞ்சியைப் போல விருந்தினர்களை அரவணைத்த பெருந்தகைமையை நினைக்கும் போதெல்லாம் பல்லாயிரம் மக்களின் கண்களில் அருவியாக நீர் சொரிகிறது .
கடந்த ஈராண்டுகளாகச் செயல் குறைந்து – சோர்ந்திருந்தாலும் மலேசியத் தலைவர்கள் அவரைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்து வந்தார்கள் .
புரந்தார் கண்ணீர் மல்க அவர் வாழ்வு முடிந்துவிட்டது ,
சென்னை வரும்போதெல்லாம் என் உடல்நலத்தைப் பரிவோடு வினவியதோடு நான் இதய அறுவைச் சிகிச்சையில் அப்பல்லோவில் இருந்த போது அவர் இருந்த நிலையிலேயே அமெரிக்காவிற்கு உடனே அழைத்துப் போகிறேன் என்று அவர் கூறியதை என் வாழ்நாளில் நான் என்றும் மறக்கவில்லை . .
நான் இன்னும் இருந்தும் – கிடந்தும் அவரை இழந்திருப்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை .
அன்னோனை இழந்த உலகம்
இனி என்னாவது கொல்
அளியாது தானே !
என்று மனம் சோர்ந்து என் வாய் முணுமுணுக்கிறது ! .
ஒப்பற்ற திலகம் அண்ணல் சாமிவேலுவின் உயரிய புகழ் என்றும் ஓங்குக !
கலங்கிய கண்களோடு
ஒளவை நடராசன்

Add a Comment