நல்லாரைக் காண்பதுவும்
நூலிருந்து பக்கம் 306,307,308
முத்தமிழ் இசைத்திலகம் கலை மாமணி டி கே எஸ் கலைவாணன்
1.7.2021
அவ்வையின் பெயரில் ஓர் அருந்தமிழ் அறிவர்
அவ்வை நடராசன்
தமிழ் மூதாட்டியாம் அவ்வைப்பிராட்டியின் பெயரினை தம் பெயரோடு தாங்கியிருக்கும் நடராசன் அவர்கள் தமிழ்ச் சுரங்கம்
தோண்டத் தோண்ட அதிலிருந்து தங்க தமிழ் கட்டிகட்டியாக வெளிவந்து கொண்டேயிருக்கும்.
தமிழுலகுக்கு தமிழ் நீர் தரும் ஓர் ஊற்றாக விளங்குபவர்.
அவர் தரும் தேன்தமிழை நாம் பருகிக்கொண்டே இருக்கலாம்.
அதனால் நம் வாழ்நாள் நீளும். என்பது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
நல்ல தமிழை நாளும் பரப்புபவர் அவர்.
என் தந்தையார் அவ்வை சண்முகம் அவர்களுக்கும் தங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டபோது, அதற்கு அவர், ‘
நான் ஊரால் அவ்வை. அவர் பேரால் அவ்வை என்று அழகாகக் கூறினார்.
அதாவது அவர் அவ்வையார் குப்பம் என்னும் ஊரைச் சேர்ந்தவராதலால், ஊரின் பெயர் தன் பெயருக்கு முன்னால் அமைந்தது என்றும்,
ஆனால், சண்முகம் அவர்களுக்கு அவருடைய அவ்வையார் நாடகத்தில் ‘ அவ்வையின் ‘ பாத்திரமேற்று திறம்பட நடித்து நம் நாட்டின் பட்டிதொட்டியெங்கும் அவ்வை மூதாட்டியின் புகழைப் பரப்பிய காரணத்தால், அவர் பெற்ற பேரால் – புகழால் அவருக்கு முன்பாக அந்த ‘ அவ்வை ‘ என்னும் பெயர் சேர்ந்தது என்றும், அது மிகவும் பெருமை வாய்ந்தது என்றும் புகழ்ந்து கூறினார்.
அந்த அளவுக்கு என் தந்தையார் அவ்வை டி.கே. சண்முகம் அவர்களிடம் மிகுந்த பற்றுதலும், பாசமும் கொண்டவர் நடராசன் அவர்கள்.
சிறந்த தமிழறிஞர், உரை வேந்தர் அவ்வை துரைசாமிப்பிள்ளையின் அருந்தவப் புதல்வர் – தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளராக இருந்து ( ஐ.ஏ.எஸ் இல்லாமல் ) பின்னர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக வீற்றிருந்த பெருமைக்குரிய சாதனை நிகழ்த்தியவர் .
தன் இனிய தமிழ்ப் பேச்சால் , யாரையும் ஏன் ? தமிழ் அறியாதவனைக் கூட கவர்ந்துவிடுவார்.
அத்தகைய ஆற்றல் மிக்கவர் .
சில நேரங்களில் இவரை அணுகும் போது, இவர் சற்று அலட்சிய மனப்பான்மை கொண்டவர் போலத் தோன்றும்.
நாம் இவரை வணங்கினால், பார்க்காதது போல் போய்விடுவார்.
பதிலுக்கு
அலட்சியப்படுத்தி விட்டாரோ என்று எண்ணுவோம்.
ஊன்றி கவனித்தால் அதில் ஓர் சூட்சுமம் இருக்கும்.
ஆம் ! அவருக்கு அருகிலோ, பின்னாலோ, வேறு பெரிய தமிழறிஞர் அல்லது அருட்செல்வர் மகாலிங்கம் போன்றோ யாராவது வந்து கொண்டிருப்பார்கள்.
அதனால் தன்னை வணங்குவதை விட முதலில் பின்னால் வரும் அவருக்கு முதல் வணக்கம் செலுத்துவது தானே முறை என்று ஒதுங்கி விடுவார்.
இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
ராஜாவும், மந்திரியும் வரும்போது, ராஜாவைத்தானே முதலில் வணங்க வேண்டும்.
அதே போன்றுதான் இங்கும். பிறகு வணங்கினால், நம்மை கையைப் பிடித்து அதனை ஏற்றுக் கொள்வார்.
அதே போன்று, தம்மைச் சார்ந்திருக்கின்ற புலவர்கள், கவிஞர்கள் பாடகர்கள், கலைஞர்கள் பலராக இருந்தாலும் அவர்களின் ஆற்றல் வெளிப்பட முயற்சி செய்வார் – தூண்டுதலாக இருப்பார் – யோசனை சொல்வார் அவர்.
அதுதான் அவர் குணம், நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குப் போகிறேன் என்றவுடன் தந்தையாரிடம் இவனை மேலும் படிக்க வைத்து முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு தயார்படுத்துங்கள் என்று கூறினார் என்னை ஊக்கப்படுத்தினார்.
வாய்ப்பு வரும்போதெல்லாம் என் தமிழிசை அரங்கேற மேடையமைத்துக் கொடுத்தார்.
அரசு விழாக்களிலும் நான் நிறைய பாடியிருக்கிறேன்.
அவர் வீட்டு திருமண வைபவத்திலும் பாடியிருக்கிறேன்
ஆண்டுதோறும் நாங்கள் நடத்தும் எங்கள் தந்தையாரின் பிறந்த நாள் விழாக்களிலும் கலந்து கொண்டு எங்களை உற்சாகப்படுத்துவார்.
அவ்வாறு ஒரு விழாவில் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்பதை ‘ ஒரு தாமரைத் திருதான் கலைவாணனைத் தஞ்சம் புகுந்து வரட்டுமே ‘ என்று அழகு தமிழில் எடுத்துரைத்தார்.
நான் எழுதிய அமெரிக்காவில் என் கலைப் பயணம் என்னும் பயண நூலுக்கு அழகான ஓர் அணிந்துரை தந்து பாராட்டினார்.
எங்கள் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் சார்பில், இவருக்கு ‘ திருவள்ளுவர் விருது தந்து பாராட்டியிருக்கிறோம்.
அதனை அவர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.
அந்த அவ்வையின் அருளால், இந்த இரு அவ்வைக் குடும்பங்களும் இன்று உறவினர்களாக இணைந்து விட்டோம்.
ஆம் ! எங்கள் பெரியப்பா டி.கே. முத்துசாமியின் கடைசி மகளான செல்வி சீதாவை, அவ்வை நடராசன் அவர்களின் உடன் பிறந்த தம்பி குழந்தை மருத்துவர் டாக்டர் து .மெய்கண்டான் அவர்கள் மணமுடித்தார் ,
அவர்கள் மதுரையில் வசித்து வருகின்றனர்.
எனவே, அவவை நடராசன் அவர்கள் எங்கள் கலைக் குடும்பத்து உறவினருமாவார்.
டி கே எஸ் கலைவாணன்

Add a Comment