POST: 2022-10-22T10:33:09+05:30

செய்திப்பரல்

தினமணி
பக்கம் 11

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2022

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா

சென்னை, அக். 21: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ கலந்து கொண்டு ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – இன்றும், இனியும்’ என்ற தலைப்பில் பேசுகையில்,

‘மக்களுக்கு மொழி உணர்வுகளை அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும். அதற்கான நல்ல பெயர் பட்டியல்களை உருவாக்க வேண்டும்.

பழம்பெரும் பாரம்பரியத்தில் வந்த நாம், அதை உணர்ந்து, அதன் சிறப்பை பாதுகாக்க வேண்டும் அதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பயன்பட வேண்டும்’ என்றார் அவர்.

முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்குவதில் பல்வேறு தமிழறிஞர்களின் பங்களிப்பு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் விளக்கிப் பேசினார்.

நிறுவன நாள் விழாவை முன்னிட்டு நடத்தியக் கட்டுரை, கவிதை, பேச்சு, பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நிறுவன மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்மொழி, மொழியியல் புலத்தின் பேராசிரி யர் பெ.செல்வக்குமார் வரவேற்றுப் பேசினார்.

முதுநிலை மாணவி தே.சுபஸ்ரீ நன்றி கூறினார்.

இந்த விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் கள், மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினசெய்தி 22.10.2022,சனிக்கிழமை
பக்கம் 4

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா

இயக்குனர் ந.அருள் பங்கேற்பு

சென்னை, அக்.22, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நாளான (21.10.1970) ஒவ்வொரு ஆண்டும் நிறுவன நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

அவர் தமது தலைமையுரையில் 52 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முத்தமிழறிஞர் கலைஞரால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது என்றார்.

1968ஆம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எவ்வாறு தோற்றுவிக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 20க்கும் மேற்பட்ட அறிஞர்கள் ஒன்றுகூடி மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி விவாதிக்கப்பட்ட பொருண்மைதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது,

இக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், யுனொஸ்கோவின் சுப்பிரமணியன், பெரும் பேராசிரியர் தெ.பொ.மீ. ஆகியோர் கலந்துகொண்டனர் எனக் கூறினார்.

1880ஆம் ஆண்டு புனாவில் தொடங்கப்பட்டது டெக்கான் கல்லூரி இதன் சிறப்பு இதைத் தொடங்கியவர் பாலகங்காதர திலகர்.

இக்கல்லூரி தொடங்கப்பட்டதற்கான காரணம் இதில் பயிலும் இந்திய மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு கற்று ஆங்கிலேயர்களுக்கே, ஆங்கிலத்தை நன்கு கற்றுகொடுக்கும் அளவிற்கு தங்கள் திறமையையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

இக்கல்லூரியே புனாவில் இன்று புகழ்பெற்று விளங்கும் செர்பூசன் கல்லூரியாகும்.

அக்கல்லூரியின் முதல்வர் தான் எஸ்.எம்.காத்ரே.

இவர் பாணினியிலும், வடமொழியிலும் ஆழ்ந்த புலமைப்பெற்றவர்.

இவரையே பேராசிரியர் தெ.பொ.மீ. அழைத்து தமிழ் ஆய்வுக்கென்று ஒரு நிறுவனத்தை அமைத்துத் தாருங்கள், அதற்கான ஒரு கட்டுரையை எழுதித்தாருங்கள் என்று கூறியதன் விளைவாக, அன்று காத்ரே எழுதிய கட்டுரைதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றுவதற்கான விதையாக அமைந்தது என்றார்.

முன்னதாக நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியற் புல இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்,

நிறுவன நாள் விழாவினை முன்னிட்டு நடத்தியக் கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் பாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற நிறுவன மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறுவன முதுகலை மாணவர் செல்வி தே.சுபஸ்ரீ நன்றி நவின்றார்.

முதுகலை மாணவர் செ.செல்வம் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள், மாணவர்கள், மேனாள் பேராசிரியர்கள் மற்றும் மேனாள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *