அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 132
அருளால் உடனீந்த தேர்
முனைவர் ஔவை அருள்,
அன்னைப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் அமைந்த மொழித் துறையில் அவரின் நேரடி வழிகாட்டுதலின் பேரில் 1989 முதல் 1991 வரை தமிழ் இலக்கியத்தில் முதுகலை வகுப்பில் இணைந்தேன்.
பிறகு, அங்கேயே முதுநிலை ஆய்வினைப் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி உயர்வு பெற்று செல்லும் போது, அவருடைய இனிய நண்பரும் அருமைப் பேராசிரியருமான முனைவர் வ.ஜெயதேவனிடம் என்னை முதுநிலை ஆய்வுக்குப் பதிவு செய்ய வைத்தார்.
‘அருந்தமிழில் அயற்சொற்கள்’ என்ற தலைப்பில் என்னுடைய முதுநிலை ஆய்வு அமையப்பெற்று, பிறகு நூலாகவே மலர்ந்தது.
முதுநிலை ஆய்விற்குப் பிறகு முனைவர் பட்டப் பேறுக்கு எந்தையார், தமிழ் வழியில் உன்னுடைய வாழ்வு அமைந்தாலும் முனைவர் ஆய்வுப் பட்டம் மட்டும் ஆங்கிலத்தில் நீ செய்தால் பிற்காலங்களில் அமெரிக்காவோ இலண்டன் நாடுகளுக்கோ செல்லும் வாய்ப்பு அமையப்பெறும் என்று நினைந்து ஆங்கிலத்தில் செய்யுமாறு விழைந்தார்.
அப்பொழுது, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ. ஜெயதேவனிடம் வினைவியபோது, அம்மாதிரி வாய்ப்பு தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறாது ஆயினும், நீ முயன்றால் இந்திய நாட்டின் தலைநகராம் தில்லிக்குச் சென்று தில்லிப் பல்கலைக்கழகத்தில் Modern Indian Literary Studies என்ற துறையை நீ அணுகலாம் என்று வழிகாட்டினார்.
இச்செய்தியினை எந்தையாரிடம் சொன்ன பொழுது, அவர் உடனே ஆமாம் எனக்கு நன்று தெரியும்.
தில்லிப்பல்கலைக்கழகத்தில் தான் எழுத்தாளர் பெருந்தகை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் சாலை இளந்திரையன் பணியாற்றினார்கள்.
இப்பொழுது பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம் நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபோது எனக்கு மூத்தவராக இருந்ததும் நினவுக்கு வருகிறது.
அவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அறிவுறுத்தினார்.
அவ்வறிவுரைக்கிணங்க, பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியன் அவர்களைத் தொடர்பு கொண்டபோது சில வாரங்களில் வடசென்னையில் உள்ள என்னுடைய இல்லத்திற்கு நான் வரும்பொழுது சந்திக்கலாம் என்று சொன்னதன் பெயரில் அவரை 30.06.1992இல் சந்தித்தேன்.
அவர் சூலைத் திங்களிலேயே தில்லிக்கு வருமாறும் தான் பணியாற்றும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் தன்னிடமே முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அன்றே, அவரிடம் நான் விரும்புகிற தலைப்பு THE TRANSLATIONS AND ADAPTATIONS OF Shakespeare PLAYS IN TAMIL என்ற தலைப்பாகும்.
இத்தலைப்பினை ஆங்கிலத்தில் செய்வதற்கு விழைகிறேன் என்று சொன்னேன்.
மறு வார்த்தை சொல்லாமல் நீ விரும்பிய வண்ணமே செய்யலாம் என்று சொன்னார்.
பிறகு, என்னைப் பார்த்து அப்படி என்ன ஷேக்ஸ்பியர் மீது உனக்கு தனியாத ஆர்வம் என்று வினவினார்.
நான் உடனே அவரிடம் சொன்னது, எந்தையார் வாயிலாக பேரறிஞர் டி. என். சேஷாசலம் எழுதிய ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் 1934ஆம் ஆண்டு 1935ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கலா நிலையத்தினுடைய பழைய இதழ்கள் எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ளதைப் படித்து டி. என். சேஷாசலம் கையாண்ட வண்ணத் தமிழில் மயங்கினேன் என்றேன்.
1935ஆம் ஆண்டு சூலை 4 அன்று கலா நிலையத்தில் ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தில் அவர் எழுதிய பாங்கினை விவரிக்க விழைகிறேன்.
“வடமொழி நாடகங்களைப் போல் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் சிலவற்றிலும் விதூஷகன் வருவதுண்டு.
இவ்விதூஷகன் உலக அனுபவத்தை நகையுறச் சுவைப்பட பேசுபவனாக இருப்பான்.
ஆயினும் இந்த ஒத்தல்லோ நாடகத்தில் வருகின்ற விதூஷகனிடத்தில் சுவையொன்றும் காணவில்லை.
இதற்குப் பின் இவன் இந்நாடகத்தில் தோன்றுவதும் சிறிதே.
விதூஷகனை வரவழைத்த ஷேக்ஸ்பியர் பிறகு இந்நாடகத்தில் அவன் தேவையில்லை என எண்ணி விட்டுவிட்டார் போலும்.
ஷேக்ஸ்பியர் வாசகர்களுக்கு இந்நாடகத்தில் விதூஷகன் என்று ஒருவன் இருப்பதே நினைவில் இருப்பதில்லை.
இவனை விதூஷகன் என்று அழைப்பதைக் காட்டிலும் ஒத்தல்லோவின் வேலையாட்களில் ஒருவனாகக் கருதுவதே நேர்.”
என்ற இம்மாதிரி நுணுக்கமானக் குறிப்பினை நாடகம் மொழிபெயர்க்கும்போதே மொழிபெயர்ப்பாளருடைய படிநிலையிலிருந்து மாறி ஒரு படி மேலே சென்று ஷேக்ஸ்பியர் நாடகங்களினை வகுப்புகளில் நடத்தும் பேராசிரியர்கள் சொல்லும் அரிய ஆங்கிலக் குறிப்புகளையும் இவர் மொழிபெயர்த்து அதனைத் தமிழில் வெளியிட்டது தமிழகத்திற்குப் பெரும் பேராகும்.
அதேபோல, “வேறோரிடத்தில் இக்கலம் மிகச் சிறியது, ஒத்தேல்லோவின் மனம் மாறுபட்டு உடைவதன் முன்னே அவன் எவ்வளவு கருத்துடன் தான் செய்ய வேண்டிய காரியங்களைக் கவனித்தான் என்பதையும் மற்றவரிடத்தில் எவ்வளவு வினயமுடன் நடந்து கொண்டான் என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கு இந்தச் சிறு களம் மிகவும் உதவியாய் இருக்கின்றது”
1. தான் வந்த கப்பலின் மாலுமியின் மூலமாக, செனட் சபையினருக்குச் சில கடிதங்களைக் கொடுத்தனுப்பியபோது, தன் வணக்கத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்கும்படி சொல்கின்றான்.
2. வேலை, என்பது இங்கு, காவலுக்காகக் கட்டப்படுகின்ற கொத்தளங்களின் கட்டட வேலை, கட்டப்பட்டுவருகின்ற கொத்தள வேலைகளை நான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அங்கு வா என்பது பொருள்.
3. கொத்தளங்களைப் பார்வையிடப் போவோம் வாருங்கள் என்பதும் பொருள்.
4. உன் சித்தத்தின்படி, செய்யக் காத்திருக்கின்றோம் என்பதும் பொருள்.
மூன்றாம் அங்கம் முதல் கலத்தில் முடிவில் கண்டபடி, எமிலியோ, காஷ்யோவை அழைத்துச் சொன்று டெஸ்டிமோனாவுடன் சந்திக்கும்படி செய்திருக்கின்றான்-
காஷ்யோ, தன்னுடைய உரையைத் தெரிவிக்கும் பொருட்டு, அவன்பால் இரக்கம் கொண்ட டெஸ்டிமோனா, அவன் பொருட்டு ஒத்தல்லோவிடம் மன்றாடி மீண்டும் அவனை வேலையில் அமர்த்தி வைக்க முயல்வதாக வாக்களிக்கின்றாள்.
– இதனுடன் இக்களம் ஆரம்பமாகின்றது.
1. திறமை அனைத்தையும் செய்வேன்-என் திறமை அனைத்தையும் செலுத்தி வேண்டியதெல்லாம் செய்வேன் என்பது பொருள்.
2. காஷியோவின் மீது ஒத்தல்லோ கோபம் கொள்வதற்குத் தானே காரணமாய் இருந்தவன் போல என் கணவராகிய இயாகோ வருந்துகின்றான் என்பது இன்னொரு பொருள்.
ஆகையால், இவ்விஷயத்தில் நீ முயன்று காஷியோவை மீண்டும் வேலையில் அமர்த்துவேயானால் இயாகோவும் நன்றி பாராட்டுவான் என்ற குறிப்பு இதனில் அடங்கியிருக்கிறது.
3. இது, இயாகோவைக் குறித்துச் சொன்னது உண்மையாளன் என்றும் உத்தமன் என்றும் இயாகோவைப் பாராட்டாதவர் இல்லை.
4. நீங்கள் இருவரும் இதன் முன் இருந்தது போல மீண்டும் நட்பினர்களாக ஆகும்படி செய்வேனேயல்லாமல் சும்மா இருந்து விடமாட்டேன், இதனை, நீ நிச்சயமாக வைத்துக் கொள் என்பது பொருள்.
5. கட்டுரைச் சுவையின் பொருட்டு, காஷியோ தன்னையே இங்கு படர்க்கையில் பேசிக் கொள்கின்றான்.
என் பொருட்டு, நீ செய்யும் முயற்சி பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும், உனக்கு நான் என்றும் கடமை பூண்டு ஊழியனாயிருப்பேன் என்று உபசாரம் கூறுகின்றான்.
6. இச்சம்பவம் நேர்ந்தபின் உன்னின்று எவ்வளவு தூரம் விலகி இருப்பதுபோல் ஊரார் கண் முன் தோன்றுவது உசிதமோ அதனினும் அதிகம் விலகாமல் இருக்கக் கற்றுக்கொள்.
என்றெல்லாம் நுணுக்கமாக ஆங்கிலப்பெறும் பேராசிரியர் ஏ.சி. பிராட்லே சொல்லிவைத்த உரைக் குறிப்புக்களையெல்லாம். திரு. டி. என். சேஷாசலம் அவர்கள் உள்வாங்கிக்கொண்டு நாடகத்தினூடே குறிப்புகளை நமக்கு மொழியாக்கம் செய்தது அரிதினும் அரிதானச் செயலாகும்.
———————
உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களைப்பற்றி
தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மாண்பமை முன்னாள் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் வரைந்த நெடுங்கட்டுரை (2)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையின் இலக்கியப் பணி
உரைவேந்தரின் பல்துறை அறிவு நலம் அவரது உரைகளிற் புலனாகிறது.
ஒரு பாடல் சான்று காணலாம்.
இவர்யார் என் குவையாயின், இவரே
ஊருடன் இரவலர்க்கருளித் தேருடன்
முல்லைக்கீத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பிற்கோமான்
நெடுமாப் பாரிமகளிர்;
யானே
தந்தை தோழன் இவரென்மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
நீயே, வடபான் முனிவன் தடவினுட் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேணெடும்புரிசை
உவரா ஈகைத் துவரையாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்
தாரணியானைச் சேட்டிரு ங்கோவே
ஆண் கடனுடைமையிற் பாண்கடனாற்றிய
ஒலியிற் கண்ணிப் புலிகடிமால்
யான்தர இவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன்படுமால் வரைக்கிழவன் வென்வேல்
உடலுநர் உட்குந் தானைக்
கெடலருங் குரைய நாடு கிழவோயே (புறநானூறு. 201)
பொதுவாக ஒளவையின் உரையில்
1. முன்னுரை.
2. பாடல்,
3. உரை
4. வினைமுடிவு கூறுதல்
5. விளக்கமுறை ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.
இப்பாடலுக்கு அதன் அடிகள் கிடந்தவாறே அரிய விளக்கங்களை முதற்கண் வரைந்துள்ளார் ஒளவை.
தோல் நீக்கிய பின் பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப் பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து வரன்முறையில் தெளிவுபடுத்துவது.
(ச. சாம்பசிவன், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, ப. 62)
என்று கலையன்னையார் இராதா தியாகராசனார் கூறுவதைப் போன்று ஒளவையார் உரை இப்பாடலுக்கு அமைந்திருக்கிறது.
உரைப்பகுதியை அடுத்து, ‘புலிகடிமால்’ என்பது இவனுக்கொரு பெயர்.
வேளே, அண்ணல், இருங்கோவே, புலிகடிமால், கிழவ, நாடு கிழவோய், நீ இப்படிப்பட்ட உயர்ந்த குடியிற் பிறந்த வனாதலால், யான் தர இவரைக் கொண்மதி எனக்கூட்டி வினை முடிவு செய்க, யான் இவருடைய தந்தை தோழனாதலானும் அந்தணனாதலானும் யான் தர இவரைக் கோடற்குக் குறையில்லையென்பது கருத்து
(ஒளவை துரைசாமிப் பிள்ளை, புறநானூறு. ப.3)
என்று விளக்கம் தருகிறார்.
இவ்வாறு கூட்டி வினைமுடிவு செய்ய உதவுதலை ஒரு சிறிய உதாரணம் கொண்டு விளக்கலாம்.
பல அடி நீளமுள்ள நுண்ணிய நூற்கண்டு ஒன்றில் சிக்கல் விழுந்துவிட்ட பிறகு, அதனை விடுவித்து நூற்கண்டை ஒழுங்கு படுத்துதற்கு முயற்சி செய்யும் ஒருவர் ஏதேனும் ஒரு பகுதியின் நுனியைப் பற்றிக்கொண்டு சிறிது சிறிதாகச் சிக்கலை விடுவித்து நூற்கண்டினைச் சரி செய்து சுருட்டி வைப்பதைப் போன்று கவிதையின் சிக்கலை விடுவிக்கப் புரிய வைக்கிறார் என்று கூறலாம்.
உரையின் மூன்றாவது பகுதியாக விளக்கம் என்ற பகுதியை அமைக்கிறார்.
தேருடன் முல்லைக்கீத்து என்பதற்குத் தேருடன் புரவியும் முல்லைக்கு ஈத்தான் என்று பழைய உரைகாரர் கூறும் உரையை மென்மையாக மறுக்கிறார் ஒளவை.
இவ்வாறு கூறாது, முல்லைக் கொடியின் நிலை கண்டு பிறந்த அருளால் முன்பின் நினையாது உடனே தேரை ஈந்தான் என்றிருப்பின் சிறப்பாக இருக்கும்.
(புறநானூறு. பகுதி-II ப.3) என்று கூறுகிறார்.
தேருடன் என்ற சொல்லில் உள்ள உடன் என்பதற்குப் பழைய உரைகாரர் கூறும் பொருளை விட ஒளவை கூறும் பொருள் சிறப்பாகவும் பொருத்தமாகவும் உள்ளது.
அந்தணன் புலவன் என்பதற்கு வெறும் சொற்பொருள் கூறாமல், அந்தணரும் மகட்கொடை நேர்தற்குரியவர் என்பது தோன்ற அந்தணன் என்கிறார் என்று விளக்கம் தருகின்றார்.
உரையாசிரியர், பாடலுக்கு வெறும் சொற்பொருள் மட்டும் கூறும் கடப்பாடு உரையவரல்லர். சொற்களுக்குப் புறமாக நின்றிருக்கும் மெய்ம்மைகளையும் எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடுடையவர் என்பது இதனால் பெறப்படுகின்றது.
வடபால் முனிவர் என்பதற்கு விசுவபுராணசாரம் என்னும் தமிழ் நூலையும் இரட்டையர் செய்த தெய்வீகவுலாவையும் துணையாகக் கொண்டு, வடபால் முனிவர் என்றது சம்பு முனிவனாக இருக்கலாம் என டாக்டர் உ.வே.சா. ஐயரவர்கள் ஊகிக்கின்றார்கள்
(புறநானூறு. பகுதி II ப.3) என்று விளக்கம் தருகின்றார்.
உரையாசிரியர் பன்னூற்புலமை மிக்கவராக இருக்க வேண்டும் என்பதற்கு இப்பகுதி சான்றாகிறது.
ஒளவையவர்கள் இலக்கியப் புலமையுடன் வரலாற்று அறிவும் கொண்டு விளங்கினார்கள் என்பதையும் இப்பாடலின் உரைப்பகுதி கொண்டு உணரலாம்.
உவரா ஈகைத் துவரையாண்டு என்ற தொடருக்கு உரை வரையுமிடத்து துவரையென்றது, வட நாட்டில் நிலங்கடந்த நெடுமுடியண்ணல் இருந்து ஆட்சி புரிந்த துவரை என்றும் அவன் பாலிருந்து மயை மாதவனான குறுமுனிவன் கொணர்ந்தவர் வேளிர்கள் என்றும் பதினெண் குடியினரென்றும் நச்சினார்க்கினியர் குறிக்கின்றார்.
(புறநானூறு, பகுதி-II ப. 3)
என்று தமக்கு முந்தைய உரையாசிரியரின் கருத்தை மேற்கோள் காட்டுகின்றார்.
இத்துடன் நில்லாது துவரை மாநகர் நின்றுபோந்த தொன்மை பார்த்துக் கிள்ளிவேந்தன், நிகரில் தென்கவிர் நாடு தன்னில் நிகழ்வித்த நிதியாளர் என்ற கல்வெட்டுச் சான்றினையும் எடுத்து மேற்கோள் காட்டி, (Pudukkottai State Inscription, p. 120) துவரை பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே தொன்மையுடையதாய்க் கூறப்படுகிறது என்பதை நிறுவி நச்சினார்க்கினியர் கூற்றை வலுப்படுத்துகிறார்.
இப்பாடலில் புலிகடிமால் என்ற தொடருக்கு ஒளவையவர்கள் பன்முக விளக்கம் கூறுகிறார்.
புலிகடிமால் என்றது ஹொய்சள என்ற தொடரின் தமிழ்ப் பெயராகக் கருதுவதுமுண்டு.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் இருந்து ஆட்சி செலுத்திய ஹொய்சள வேந்தருடைய கல்வெட்டுக்களுள், பண்டை நாளில் யது குலத்தில் தோன்றிய சளவென்ற பெயரினனான வேந்தனொருவன் சஃகிய மலைகளிடையே (மேலைவரைத் தொடர் Western Ghats) வேட்டை புரியுங்கால் முயலொன்று புலியொடு பொருதுவது கண்டு வியப்புற்று இந்நிலம் மிக்க வன்மை நல்கும் பெருநிலம் போலும் என எண்ணியவனாய், அவற்றைத் தொடர்ந்து சென்றானாக, அங்கே தவம் புரிந்து வந்த முனிவனொருவன் புலியைக் கண்டு, சளனே போய்ப் புலியைக் கொல்க (அதம் ஹொய்சள) என வேந்தனைப் பணித்தலும் அவன் உடைவாளையுருவிப் புலியைக் கொன்றான்.
முனிவர் அருள் பெற்று மீண்ட சளவேந்தன் அது முதல் ஹொய்சளன் எனப்பட்டான்;
அவன் வழிவந்தோர் தம்மை ஹொய்சளர் எனக் கூறிக்கொள்வாராயினர் என மைசூர் நாட்டுப் பேலூர் மாவட்டத்தில் பேலவாடியில் உள்ள நரசிம்ம ஹொய்சள தேவர் கல்வெட்டொன்று (Epi. Car. Vol. 1 BLL 171)கூறுகிறது.
(புறநானூறு, பகுதி-ii,u. 2-3) இவ்வாறு ஒரு தொடருக்கு விளக்கம் தரக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்தாண்டிருப்பது பிள்ளையவர்களின் பரந்து பட்ட அறிவை எடுத்துக் காட்டுகிறது.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment