பெரும்புலவர் காசுமான் அவர்களின் புலமையும் மாட்சியும் எந்நாளும் போற்றுவோம்…
எந்தையார் பாராட்டும் உயரிய நண்பர் ,
தமிழ் நாடு அரசின் கபிலர் விருது பெற்று எந்தையாரை அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்த பொழுது ஒளிப்படம்(22.2.2019)
சில ஆண்டுகளுக்கு முன்பு புலவர் காசுமான் எனக்கு அனுப்பிய மடலுக்கு என் விடை மடல்
19.12.2018
ஆய்வுப் பெருந்தகையீர்
வணக்கம் .
தென்குமரித் தென்றலாகத் திகழும் தங்கள் அஞ்சல் வரப்பெற்றேன்.
தந்தைக்கு மகன் என்ற அளவில் என்னால் எளிய நிலையிலேயே பணியாற்ற முடிகிறது.
எட்டும் பத்தும் எண்ணத் தெரியாத என்னைப் பதிற்றுப்பத்துக்கு உரையெழுத வேண்டும் என்று பணித்ததை ஊக்கயுரையாகக் கருதி என்றேனும் அப்பணியில் தலைப்படுவேன்.
தாத்தா அவர்கள் பதிற்றுப்பத்துக்கு உரையெழுதிய சூழலில் சேரநாடு முழுவதும் சென்று வந்ததைக் கூறியது என் நினைவுக்கு வருகிறது.
நான் ஒருமுறை மாணவனாகக் கொச்சி சென்று வந்தபோது இதனை நினைவூட்டினார்கள் .
சேர மன்னர் வரலாறு என்ற நூலையும் அப்போது தந்தார்கள் .
தங்கள் உறுதுணையால் எழுத முயல்வேன்.
” குமரியர் – நாவலன் தீவின் – உரிமை மாந்தர் வரலாற்று நூலை படிக்கத் தொடங்கி உள்ளேன் .
தங்கள் இலக்கணப் புலமையையும், திருக்குறள் தோய்வையும், வரலாற்றியலின் மாட்சியையும் எந்தையார் பலமுறை பாராட்டிக் கூறுவார்கள் .
நல்லிசைப் புலவர்களில் கபிலர் போலக் காசுமான் விளங்குகிறார் என்ற புகழுரையோடு தங்கள் மடலுக்கு
மீளவும் நன்றி கூறுகிறேன் .
அன்போடு
ஒளவை அருள்
பெறுநர்
புலவர் மி.காசுமான்
4 – 226, நந்தன்காடு ,
மாரத்தாண்டம் – 629 165.

Add a Comment