POST: 2022-10-31T10:10:31+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 77

சீரிய கூரிய தீஞ்சொல்

– முனைவர் ஔவை நடராசன்

1942ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியராக எந்தையார் முனைவர் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் பணியாற்றியபோது அப்பொழுது பள்ளிக்கு அப்பள்ளியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு பேரறிஞர் அண்ணாவை அழைத்து உரையாற்ற வைத்தார்.

பேரறிஞர் அண்ணாவின் உரை வீச்சுக்குப் பிறகு எந்தையார் வரைந்த மறக்க ஒண்ணா காவியக் கட்டுரை பின்வருமாறு:

“சீரிய கூரிய தீஞ்சொல்” என்பது கம்பன் வழங்கும் அழகிய தொடர்களுள் ஒன்று.

இதனை அவன் வழங்கிய இடமும் காலமும் வேறு.

ஆயினும் இதன் பொருளும் கருத்தும் அவ்விடம் காலம் முதலிய இயல்பு நோக்காது உண்மையும் அது நிறைந்த உரையும் இரண்டும் செறிந்த செயலும் ஒருங்கு நிகழும் இடங்கட்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

பல அறிஞர்கள் பால் உண்மையும் உரையும் செயலும் ஒளிருங்கால் சீர்மையும் கூர்மையும் இனிமையும் நிறைந்த சொற்கள் பிறந்து நல்ல பயனை விளைவிக்கின்றன.

அவருள் அன்பர் திரு.அண்ணாத்துரையும் ஒருவர்,

அவர்பால் சீரிய கூரிய தீஞ்சொற்கள் பெருஞ்செல்வமாக நிலவுகின்றன.

செல்வத்துப்பயன் ஈதல் என்பர்.

திரு.அண்ணாத்துரையும் பெருஞ்செல்வமாகிய இச்சொற்களை வரையாது நிரம்ப வழங்குகின்றார்.

தமிழிளஞ் செல்வத் தோன்றல்கள் அவற்றை விரைந்து மனங்கொள்ள ஏற்றுத் தொழில் கேட்கும் தமிழ் நலம் எய்துகின்றனர்.

இதனைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்து வரும் என் போன்றோர் உள்ளத்தில், எதிர்காலத் தமிழகம் இனிய காட்சி வழங்கக் கண்டு இன்புறுகின்றனர்.

திரு.அண்ணாத்துரை சுயமரியாதைக்காரர் என்ற மட்டில் நில்லாது சுயமரியாதை சிறக்கவுடையர்.

சுயமரியாதையில்லாதவர் நடைப்பிணமேயாவர் என்றாலும், உலகியல் வாழ்வுக்கு வேண்டும் செல்வம், பதவி, மக்களிடையே செல்வாக்கு முதலிய கூறுகளை எதிர்நோக்கித் தமது சுயமரியாதையை விற்றும், ஒற்றிவைத்தும், மறந்தும், இழந்தும் அரசியல், செல்வம் முதலிய உலகுகளில் உலவுபவர் பலர்.

சிலரே சுயமரியாதையைக் குறிக்கொண்டு நோக்குகின்றனர்.

சுயமரியாதை யென்பது புதுச் சொல்.

மானம் என்பது பழஞ் சொல்.

மானமுடையார் சுயமரியாதைக்காரர்.

மானவுணர்வு குறையாது வாழ்பவன் மாண்புடைய தமிழன்.

திரு.அண்ணாத்துரையை இந்த வகையால் நோக்குமிடத்து ஒரு நல்ல சுயமரியாதைக் காரராகக் காட்சி வழங்கி, தூய சுயமரியாதை வீரராய், மான மாண்புடைய கட்டிளந் தமிழ்த் தோன்றலாய் விளங்குகின்றார்.

இனி, இவ்வாறு நோக்காது, “மக்கள் கூட்டத்தைச் சிதைக்கும் சூறைக்காற்று, சமய வாழ்வைப் பறிக்கும் சண்டக் காய்ச்சல், செல்வ வாழ்வைச் சீர்குலைக்கும் செந்தேன், ஆரிய முறையை அருவருக்கும் அரக்கப்படை, பழைய இதிகாச புராணங்களை நிலைக்க வொட்டாது தூற்றும் கூற்றம்” என்றெல்லாம் கூறப்படும் கூற்றுக்களை ஏற்று நோக்குவோ மாயின் திரு.அண்ணாத்துரையின் காட்சி, அக் கூற்றுக்களை வழங்கும் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டு நிற்கும் மாட்சி இன்புறுத்துகிறது.

திரு.அண்ணாத்துரை மக்கள் கூட்டத்தைச் சிதைக்கும் சூறைக்காற்றுத் தானா?

மக்கள் கூட்டம் கற்றவரும் கல்லாதவரும் என இருதிறப்படுகிறது.

கல்லாதவர் பெரிதும் கற்றோர் செல்லும் வழியே செல்பவர், அவர் தமக்கென ஒன்றும் இல்லாதவர்.

கற்றவரும் இருதிறப்படுகின்றனர்.

ஒருசாரார், என்றும் தாமே உயர்ந்தோக்கி வாழ வேண்டும், ஏனையாவரும் தம்பின்னும், அடியிலும் நின்று நிலவ வேண்டும்.

தமது தலைமையும் உயர்வும் ஏனையவருடைய அறியாமையினையும் கீழ்மையினையும் அடிப்படையாகக் கொண்டு நிற்பதால், அறியாமையும் கீழ்மையும் ஏனையோரைவிட்டு நீங்காதிருப்பதற்கேற்ற சூழ்ச்சியும் செயலம் செய்து கொண்டிருப்பதே அச்சாரார்க்கு அல்லும் பகலும் அயராது இருக்கும் தொழிலாகும்.

அதனை அறிவுடைய பலரும் அறிகின்றனர்.

ஆயினும் அறிந்தததனை யெடுத்துரைக்க அஞ்சிக் கோழைகளாய்க் குழைகின்றனர்.

திரு.அண்ணாத்துரை அறிஞருள் ஒருவராய் அறிகின்றார்.

அறிந்ததனை அஞ்சாது எடுத்துரைக்கின்றார்.

அவ்வுரைகளைக் கேட்டுகும் மக்கள் கூட்டம் தம் அறிவுக்கும் வேலை தருகிறது.

தம்முடைய அறியாமையும் கீழ்மையும் ஒரு கூட்டத்தைத் தாங்கும் சுமைதாங்கிகளாய் இருப்பதை உணர்கிறது.

சலசலப்புண்டாகிறது.

“உயர்ந்தோர்” எனப்படுவோருடைய தலைமையும் உயர்வும் தளர்ந்து அசையத் தலைப்படுகின்றன.

செம்மாந்திருந்த அவர்களிடையே தெருமரல் உண்டாகிறது வாய் வெருவுகின்றனர்.

“இந்த அண்ணாத்துரை மக்கள் கூட்டத்தைச் சிதைக்கும் சூறைக்காற்று” என்கின்றனர்.

திரு.அண்ணாத்துரை சமய வாழ்வைப் பழிக்கும் சண்டக் காய்ச்சலா?

அண்ணாத்துரை சமயவுலகைக் காண்கின்றார்.

அது சூதும் வாதும் பொய்யும் புனை சுருட்டும் நிரம்பி மக்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாய் இருப்பது புலனாகிறது.

சமய நிலையங்கள் யாவும் “பொன்னும் பொருளும் போகமும் திருவும்” வுணர்ந்து சாதியாசார குல கோத்திர வேற்றுமைகளை வளர்த்து மக்களை மாக்களாம் தன்மையில் அழுத்தி வைக்கும் திறன் நன்றாய்த் தெரிகிறது.

நமய வொழுக்கங்கள் தாழ்ந்தாரை உயர்த்துவதோ, வீழ்ந்தோரைக் கைத்தூக்குவதோ, கெட்டோரை எடுப்பதோ, கல்லாரைக் கற்றவராக்குவதோ, உணண்ரை உண்பிப்பதோ ஒன்றும் செய்யாமல், உயர்ந்தோரை உயர்த்தவும், வீழ்ந்தோரை வீழ்த்தவும், கெட்டோரைக் கெடுக்கவும், கல்லாரைக் கல்லாமையில் ஆழ்த்தவும், உண்டவரை மேன் மேலும் உண்பிக்கவும் துணை செய்வது விளங்கித் தோன்றுகிறது.

அரசியல் அலுவலாளரெனவும் வழக்கறிஞரெனவும் பெரு வணிகச் செல்வரெனவும் பெருநிலக்கிழவரெனவும் சாதியால் உயர்ந்தோரெனவும் தலை நிமிர்ந்து வயிறு பெருத்துத் தம் கைகால்களை எடுத்து வைத்ததற்கு ஆள் தேடிப்பார்க்கும் செல்வத் தசைப் பிண்டங்களுக்குச் சமய நிலையங்கள் வடை பாயசத்துடன் பெருஞ்சோற்று விழா நடத்துகின்றன.

அன்றாடவுணவுக்குத் திண்டாடி யுழைக்கும் ஏழைமக்கள் நாயும் பன்றியும் போல எச்சில் இடைகட்குத் தம்முள் போராடுவதை இச்சமய நிலையங்கள் கண்ணாரக் கண்டிருந்தும் காமக்களிக் கூடத்தில் கருத்திழந்து களிக்கின்றன.

இத்தகைய தீச்செயல்களைக் காணும் கண்பெற்ற காளையர் தலைவர் திரு.அண்ணாத்துரையும் காண்கின்றார்.

கண்கள் கலங்குகின்றார்.

சமய நிலையங்களின் இந்தக்காட்சி அவர் கருத்தில் பல எண்ணங்களை எழுப்புகின்றன.

இவற்றின் யுண்மைகளை எடுத்துத் தம் எண்ணமாகிய உலைகளத்தில் இட்டுக்காய்ச்சி இனிய உருவாக்கி எடுத்துரைக்கின்றார்.

சமய நிலையங்கள் செவியிலும் இச்சொற்கள் சென்று சேர்கின்றன.

சமய நிலையங்களைத் தம் வருவாயாகக் கருதித் தின்று கொழுத்துத் திரியும் கூட்டத்தில் கலக்குமுண்டாகிறது.

திங்கள் தாள்களும் தினத்தாள்களும் இக்கலக்கத்தை விரித்தும், தொகுத்தும், திரித்தும், மறைத்தும், பூச்சுவேலை செய்கின்றன.

இப்புனை சுருட்டுவேலைகளை இளைஞருலகம் எரியெழ நோக்கி வருகிறது.

இது கண்டு கருத்தழியும் அக்கூட்டம் அண்ணாத்துரையைச் “சமய வாழ்வைப் பழிக்கும் சண்டக் காய்ச்சல்” என்கிறது.

தமிழ்நாட்டில் தமிழருடைய பொன்னும் பொருளும் உழைப்பும் கொண்டெழுந்து நிற்கும் தமிழ்ச் சமய நிலையங்கள் தமிழருக்கும், தமிழருடைய தமிழக்கும் இடந் தருவதில்லை யென்பதை அறிந்தும் எவர் தான் திரு.அண்ணாத்துரை கூறுவதைத் தவறு என்று சொல்ல முடியும்?

“புண்வைத்து மூடார் பொதிந்து” என்றது அன்று குமரகுருபரர் அறவுரை யல்லவோ?

இனி ஒருசாரார் திரு.அண்ணாத்துரை செல்வ வாழ்வைச் சீரழிக்கும் செந்தேள் என்கின்றனர்.

செல்வரது செல்வவாழ்வு கண்டு சீரழிப்பது செந்தமிழர் செயலன்று.

செல்வர் செல்வக் குறைவின்றிச் சீர்த்த வாழ்வு பெறல் வேண்டுமென்பது செல்வத் தமிழரது குறிக்கோள்களுள் ஒன்று.

திரு.அண்ணாத்துரை இன்று நம் நாட்டுச் செல்வரது செல்வவாழ்கைக் காண்கின்றார்.

அதன்கண் அச்செல்வம் சீரழியும் வகையில் சில செயல்கள் அவர்பால் காணப்படுகின்றன.

அவரது செல்வம் அவர்கட்கோ, அவர் இனத்தவர்க்கோ நன்மை விளைவிக்கும் துறையில் செலவழிக்கப்படுவதில்லை.

தமிழ்ச் செல்வர்களின் செல்வம் தமிழர் கல்வி நலமோ, கைத்தொழில் நலமோ, மருத்துவ நலமோ கருதாது, உழைப்பவர் உழைக்க, அவரது உப்பை உறிஞ்சிச் சுரண்டியுண்ணும் ஒரு கூட்டத்தின் ஆதரவும் செல்வாக்கும் பாராட்டும் பெறுவதையே கருதி இயங்குகிறது.

அக்கருத்தால் ஏழையெளியவர்களுக்கு இரங்கும் மன ஈரம் அவர் உள்ளத்தில் வற்றிவிடுகிறது.

உண்டிக்கும் உடைக்கம் பிறநாட்டை நோக்கிக் கையெந்தி நிற்கும் கயமை தமிழகத்துக்கு வந்துவிட்டது.

பிற நாட்டவருடைய செல்வப்பயனாய் அவர் நாடுகளில் சிறக்கும் வாணிகர்க்கு நம் தமிழகம் கடைத் தெருவாய் விட்டது.

நாள்தோறும் தமிழகத்தின் செல்வம் இவ்வணிகர்களால் சுரண்டப்படுகிறது.

இவ்வணிகரது வாணிகம் நம் அண்ணாத்துரைக்கு ஒரு பணத்தோட்டமாய்க் காட்சியளித்தது.

அதனுள் நுழைந்து காணுமிடத்து அத்தோட்டம் தமிழகமேயாய் அதனுள் விளைவும் கனிமுற்றும் வேற்று நாட்டவர்க்குரியமையாய் வெளியேற்றப்படுவது கண்டார்.

வேதனை கொண்டார்.

செல்வர் பார்வையை இப்பக்கத்தே திருப்ப முயன்றார்.

சீரிய கூரிய தீஞ்சொல்லால் செல்வச் சீரழிவு காட்டி அதனைச் சீர் செய்து கொள்ளும் முறையைத் தீட்டிக் காட்டினார்.

அரசியல், கலை, வாணிகம் முதலிய துறைகளில் பிறநாட்டவர்க்குத் தமிழகத்தை அடிமைப்படுத்தி வைத்தாலன்றித் தம் இனத்தின் சுரண்டல் தொழிலுக்கு ஆக்கமில்லையென்று கண்டது இன்று செல்வாக்குச் சிறந்திருக்கும் ஒரு கூட்டம் அது தன்பாலுள்ள வெளியீட்டு வலியால் திரு.அண்ணாத்துரைச் செல்வ வாழ்வைச் சீரழிக்கும் செந்தேள் என்று குறைகூறுவதாயிற்று.

நடுநின்று நோக்கிய விடத்து, அண்ணாத்துரை, செல்வ வாழ்வைச் சீர்பெற வளர்க்கும் செந்தமிழ்ச் செல்வத் தோன்றல் என்பது சிறப்புற விளங்குகிறது.

இவ்வாறே ஆரிய நூல்கள் பலவும் தமிழகத்துத் தமிழர் சமுதாயத்தைப் பலப்பல சாதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றிக்கும் உயர்வு தாழ்வு படைத்துக் காட்டித் தம்முள் ஒற்றுமையும் ஒருமையும் உண்டாகாதபடி நெடுங்காலத்துக்கு முன்பே பெருந் தீங்கைச் செய்தன.

இவ் வேறுபாட்டமைப்பு, பொருளாதார அமைப்பென்றும், வேத நூன் முடிபென்னும் பலபடக் கூறி, நீதிமன்றங்களில் “ஒரு குலத்துக்கொரு நீதி” வழங்குந் திறத்தைச் செய்தொழித்தது.

நீதி மன்றங்கள் செய்யும் தீர்ப்புக்களில் தமிழகத்துக் கொவ்வாத எத்தனையோ மிருதிகளும் சுருதிகளும் காட்டப்படுவதை வழக்கறிஞர் கண்டு வயிறு எரிகின்றார்கள்.

தீண்டாமை, சூத்திரத்தன்மை, உலக வாழ்வில் பற்றின்மை, பெண்ணடிமை முதலிய கூறுகளால் தமிழினம் தாழ்த்தப்பட்டது.

ஆரியர் ஒருவரே வணங்குதற்கும் வாழ்த்துதற்கும் உரிய ரென்பது தோன்ற எழுத்தும் சொல்லும் பயன்படுத்தப்பட்டன.

இவற்றை ஆராய்ந்து உரைக்குமுகத்தால் ஆரியத்தின் “மிலேச்சத்தன்மை”யை விளக்கியுரைக்கும் விறல் பற்றி, திரு.அண்ணாத்துரை ஆரிய முறையை அருவருக்கும் அரக்கப்படை எனப்படுகின்றார்.

ஆரியரும் தமிழும் ஒருங்கு நோக்கி ஆயுமிடத்து பிறர் கூறும் பழிப்புரை ஒருமருங்கு பற்றிய பொய்யுரையாய் ஒழிவது இனிது தெளிவாகிறது.

இறுதியாக, “இதிகாசப் புராணங்களைத் தூற்றும் கூற்றம்” என்பது ஆராயத்தகுவது.

திரு.அண்ணாத்துரை இதிகாச புராணங்களை நன்கு ஆராய்ந்து கூறுவன கொள்ளத்தகுவனவே.

இதிகாசங்களும் புராணங்களும் மக்கள் வாழ்வைச் செம்மை செய்யும் வகையில் அமைந்து மாக்களினும் கடைப்பட்ட நிலையை அடையச் செய்தாதபடி ஆக்கம் புரிவன வாயிருப்பின் அவற்றைப் புறங் கூறுதல் குற்றமேயாகும்.

இதிகாச புராணங்கள் இவ்வியல்புடையவாய் இருக்கின்றனவா என்பது அறிவுடையோர் அறிவால் அறிய வேண்டுவதொன்றாகும்.

இவைகள் மக்களிடத்தில் ஒரு கூட்டம் மட்டில் பசியும் வறுமையுமின்றி இன்ப வாழ்வு வாழ்வதற்கு ஆக்கமும் அரணும் தருவனவாய் இருப்பதை அறியாதவர் அறிவில்லாதவரேயாவர்.

இவ்விதிகாச புராணங்களிற் காணப்படும் உண்மைகளை வடநாட்டவரும் வேற்று மொழிகளில் விரிய
எழுதிக் காட்டியிருக்கின்றனர்.

அவற்றுள் மிகச் சிறுபகுதியே திரு.அண்ணாத்துரையவர்களால் எளிய தமிழில் தமிழர் அறியக் கூறியது குற்றமாகக் கருதித் தூற்றப்படுவது வருந்தத் தக்கதொன்று.

இதனால் இவரைத் தூற்றுவோரது மடமையின் உண்மை நிலை உலகிற்கு விளக்கமுறுகிறது.

இப்புராண இதிகாசங்கள் ஒரு காலத்தில் மக்களுக்கு மனதில் கடவுள்பால் அன்புண்டாக வேண்டியும், அன்புநெறி (பக்தி மார்க்கம்) நிலைப்பது வேண்டியும் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

இவற்றிற்குத் துணையாக நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய தோத்திரப் பாட்டுகள் ஆயிரக்கணக்கில் உண்டாகியிருக்கின்றன.

இவற்றால் ஒரு நல்ல பயன் உண்டாகியும் இருக்கிறது.

நாட்டில் ஆயிரக்கணக்கில் கோயில் உண்டாய்விட்டன.

கோயில்கட்குச் செல்வத்திலும் குறைவில்லை.

ஆண்டுதோறும் நமது மாகாணத்தில் சுமார் ஐந்து கோடி ரூபாய் இக்கோயில்களில் அன்பு நெறியின் பெயரால் செலவாகிறது.

இந்நிலையில் புராண இதிகாசங்களின் நோக்கமும் ஓரளவு நிறைவேறிவிட்டதென்றே கூறிவிடலாம்.

இனி, இவ்வளவு பொருள் ஆண்டுதோறும் செலவாகிய வழியும், நாட்டில் சமயவறிவும், ஆன்மநேய ஒருமையும் தோன்றவேயில்லை.

சாதி சமய வேற்றுமைகள் பெருகின.

வேற்றுச் சமயங்கள் தோன்றி அரசியலுரிமையிலும் பங்கு கொண்டன.

மேற்கூறிய ஐந்து கோடி ரூபாவில் சுமார் மூன்று கோடி ரூபா ஒரு சமுதாயத்தின் நலத்துக்கே சென்று சேர்கிறது.

சுருங்கச் சொன்னால் இந்த ஐந்து கோடி ரூபாவில் மூன்று நான்கு கோடி ரூபா ஆற்றில் கரைத்த பெருங்காயமாய் ஒழிகிறது.

இதனை ஒழுங்கு செய்து மக்கட்கு நேரிய முறையில் பயன்படுத்துவதற்கு இப்புராண இதிகாசங்கள் துணையாகவில்லை.

இப்புராண இதிகாசங்களைப் படித்தவரும் படிக்கக் கேட்டவரும் மேற்கூறியவற்றை அறியும் அறிவு பெறவில்லை.

பொருட்கேடு தான் ஆண்டுதோறும் காணப்படுகிறதேயன்றி, மக்கட்குச் சமய அறிவோ, சமுதாய அறிவோ, பொளாதார அறிவோ, சிறிதும் பிறந்ததாகக் காணப்படவில்லை.

ஆகவே, இப்புராண இதிகாசங்களைத் தொகுத்து நூல் நிலையங்களில் வைப்பது தக்கது.

எதிர்காலத்தில் வருபவர், “இவற்றின் வளர்ச்சியால் நாட்டில் மக்கள் சமய அறிவின்றி, பிறர்க்கே யுழைத்து ஏழையானவர்கள்” என்பதை அறிந்து தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய வகையில் வேறு வேறு வகையில் இலக்கியங்கள் செய்து கொள்வார்கள்.

இதிகாசப் புராணங்களைப் பழிக்கிறார்கள் எனத் தூற்றுவோருள் ஒரு துறையில் கண்மூடிக்கபோதிகளாய்க் கயமை நெறியில் செல்கின்றனர்.

தமிழகத்துக் கோயில்கள் பலவும் தமிழரது தமிழ் உழைப்பும், தமிழ்ச் செல்வமும் கொண்டு எழுந்தனவாகும்.

அக்கோயில்களில் ஆண்டவனை வழிபடுவது முதலிய செயல்கள் தமிழில் நடப்பதில்லை.

தமிழில் அருச்சனை செய்ததற்கேற்ற வகையில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாட்டுக்கள் மிகக்பல இருக்கவும் அவை இக்கோயில்களில் வழங்குவதில்லை.

கயிலாயத்தில் சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலான ஞானவுலா என்னும் தமிழ்நூல் இறைவனுக்குப் படித்துக் காட்டப்பட்டது.

திருஞானசம்பந்தர் முதலியோர் பாட்டுக்களை ஆண்டவன் அருச்சனையாகவே கொண்டான்.

இப்படிப் புராணங்களும் பிறவும் சொல்லுகின்றன.

இப்போது கயிலாய பாரம்பரை யென்பவர்களும் புராணிகர்களும் வைதீகர்களம் தமிழ் நாட்டுக் கோயில்களில் தமிழில் அருச்சனை வழிபாடகள் நடக்க வேண்டுமென நினைக்க அஞ்சுகின்றார்கள்.

சொல்லுதற்கு நடுங்குகிறார்கள்.

தங்கள் முன்னோர்களும், முன்னோர்க்கு முன்னோர்களும் வழிபட்ட தமிழ் முறையில் வழிபாடு செய்ய வகையற்றுத் திறமையற்றுச் சொல்ல வலியற்றுச் சூடு சொரணையற்றுக் கிடக்கின்றனர்.

பொன்னும் பொருளும் கொடுத்துக் கோயில் கட்டிக் குளம் வெட்டிப் பிறர்க்கும் பிறர் மொழிக்கும் அடிமைப்படுத்தித் தம்மைப் பெரும் பேதைகளாக்கிக் கொள்ளும் செல்வ மக்களையும் அவரைப் பின்பற்றி -ஊமைகளாய்க் குருடர்களாய்ச் செவிடர்களாக்கிக் கொள்ளும் செல்வ மக்களையும், அவரைப் பின்பற்றி ஊமைகளாய்க் குருடர்களாய்ச் செவிடர்களாய்த் திரியும் ஏனைய மக்களையும் எண்ணியெண்ணிப் புண்பட்ட மனத்தால் திரு.அண்ணாத்துரை போலும் இளைஞர்கள் சீரிய கூரிய தீஞ்சொற்களால் மக்களைத் தெருட்டுங் கடமையுடை யோராகின்றனர்.

இந்நிலையில் அண்ணாத்துரை ஒருவர் போதாது.

பல அண்ணாத்துரைகள் வேண்டும்.

அவர்களுடைய பரந்த அறிவு மேலே கூறிய கோளாறுகளை ஆணிவேரோடு அகழ்ந்தெறிய முற்பட வேண்டும்.

அச்செயற்கு இன்றியமையாத அஞ்சாமையும் ஆண்மையும் செறிந்த அடல்மிக்க இளைஞர்கள் படை திரள வேண்டும்.

அவர்கள் பாய்ப்பறையாக நாக்கடிப்பாக எல்லாருடைய செவியிலும் அறிவுக் கருத்துரைகள் சென்று முழங்க வேண்டம்.

அதன் விளைவாக எழும் தமிழகம் தமிழரது தமிழகமாம்.

தமிழ் மொழி தமிழரது தமிழ் மொழியாம்.

தலைசிறந்த வாழ்வு தமிழரது வாழ்வாம்.

வளரும் . . .

– முனைவர் ஔவை நடராசன்,

தொடர்புக்கு “thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *