அருந்தமிழும் அன்றாட வழக்கும் -134
நாடக நடைக்குப் பெருமிதம்
முனைவர் ஔவை அருள்
ஆங்கில கவிவாணர்களுள் மிகவும் சிறந்தனராகக் கொண்டாடப்படுபவர் ஷேக்ஸ்ப்பியர், உலகத்தின்கண் விளங்கிய பெரிய கவிவரர்களில் ஒருவர் இவர்.
இவருடைய நாடகங்களிற் சில, கலாநிலயத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதால் இவரைப் பற்றியும், இவரது உயர்வைப் பற்றியும் நாம் எழுதவேண்டியதில்லை.
இவர் எழுதிய நாடகங்கள் முப்பத்தேழு. அவற்றுள், முக்கியமானவைகளிற் சிறந்தனவாக எண்ணப்படும் பகுதிகளை மட்டும் இங்கே மொழி பெயர்த்துக் காட்டுவோம் என்று கலாநிலையத்தின் ஆசிரியரும் பேரறிஞருமான திரு. டி.என். ஷேசாசலம் இதுவரை யாரும் செய்யத் தொடாத ஷேக்ஸ்பியரின் நாடகமான ஜான் அரசரைப் பற்றிய மொழியாக்கம் தீந்தமிழில் தெள்ளுதமிழில் தென்றலென நம்மை வருடிச் செல்லுகின்ற அளவுக்கு மொழியாக்கம் செய்திருக்கின்ற ஆற்றலை நாம் வியந்து போற்றலாம்.
இம்மொழியாக்கம் சனவரி 4 1934ஆம் ஆண்டு கலா நிலைய இதழில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
என்னுள் உள்ள ஏக்கம் இந்நாடக மொழியாக்கம் நூலாக வெளிவரலில்லை என்பதாகும்.
‘ஜான் அரசர்’ என்னும் நாடகம் சரித்திர சம்பந்தமானது, அதன் கதையை அறிந்துகொள்ளுமுன், ஆங்கில நாட்டின் சரித்திரத்தை ஒருவாறு தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
ஆங்கில நாடு தனித் தீவு.
அது இங்கிலீஷ் சானல் என்னும் கடலினால் பிராஞ்சு நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றது.
கி.பி. 1066ஆம் ஆண்டில் பிரஞ்சுக்காரர் இங்கிலாந்து தேசத்தைவென்று அந்நாட்டின்கண் குடியேறினார்கள்.
அன்னவர்கள் பிராஞ்சு நாட்டின் ஒரு பகுதியாகிய நார்மண்டி என்னும் ஊரிலிரிந்து வந்தவர்களாதலால், நார்மன்ஸ் என்று அழைக்கப்பட்டார்கள்.
நூற்றைம்பது ஆண்டுகளுக்குள், இவ்வகுப்பார் இங்கிலாந்து முழுவதையும் கைப்பற்றினதேயன்றி, பிரெஞ்சு நாட்டிற் பெரும்பகுதிக்கும் அரசராயினர்.
இக்கதை தொடங்கும் காலத்திற்குச் சற்றுமுன்பு, இங்கிலாந்திற்கு அரசனாயிருந்தவன் இரண்டாவது ஹென்றி, அவனுக்கு நான்கு பிள்ளைகள்.
மூத்தவன் தன் தந்தையிடம் சண்டையிட்டு விலகினானேனும், இறுதியில் தன் குற்றத்தையுணர்ந்து மனந்திரும்பி இறந்தான்.
அவனுக்கு இளையவன் ரிச்சர்ட். உயர்ந்த உருவமும், அழகிய முகமும், வியக்கத்தக்க வீரமும் பொருந்தியவன்.
கிறிஸ்து பிறந்த நாடாகிய பலஸ் தீனாவை மகம்மத்தியர் கைப்பற்றினாரென்று, அதை அவர்களிடமிருந்து மீட்கும்படி அந்நாட்டிற்குப் “படைகளைத் திரட்டிச் சென்று போர் புரிந்தவன்.
இதனால் இவன் இங்கிலாந்தில் தங்காமற் போக நேர்ந்தது.
குடிகளுக்கு இவனது வீரச் செய்கையில் வியப்பிருந்ததேயன்றி, அரசனிடம் அன்பில்லாமற் போய் விட்டது.
மூன்றாவது பிள்ளை ஜெப்ரி என்பவன், அவன் ஆர்தர் என்னும் சிறு பிள்ளை ஒருவனை விட்டுத் தன் தகப்பனுக்கு முன்பே இறந்து போனான்.
கடைசி பிள்ளை ஜான். இவனுக்கு இவன் தகப்பனுக்கிருந்த நல்லறிவும், வல்லமையும் வாய்க்கவில்லை.
குடிகளின் நன்மையைக் கருதாக மனம்சென்றவழியும், புவன்கள் புகுந்தவாறும், தன் காலத்தைக் கழித்தான், தன் முத்தோனான ரிச்சர்டுக்கு இவனிழைத்த துரோகங்கள் பல.
ரிச்சர்ட் இறந்தபோது, அவன் பின்னவனான ஜெப்ரியின் பிள்ளைதான் அரசனாவது முறை.
ஆயினும் அக்காலத்தில் ஆர்தர் இளையவனாயும், போரே தொழிலாய்க் கொண்ட பிரதானிகளை அடக்கியாளும் வல்லமை அற்றவனாயும் இருந்தபடியால் அவனை அரசனாய் ஏற்றுக்கொள்ள எவரும் விரும்பவில்லை.
அதனால் ஜானே அரசனாகி நாட்டைக் கைப்பற்றினான்.
தனக்கு என்றும் போட்டியாய் இருக்கக் கூடிய ஆர்தனரச் சிறையிலடைத்துக் கொலையும் செய்வித்தான்.
இவனுடைய ஆளுகையில் பிரெஞ்சு நாடு முழுவதும் இழந்துவிடப்பட்டது.
பிரெஞ்சு அரசனாகிய பிலிப் ஆர்தருக்காகச் சண்டையிடுவதாய் முன்வந்து, ஆங்கில அரசர்களுக்கிருந்த ஊர்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டான்.
பின்னும், போப்பென்னும் காதோலிக் கிறிஸ்தவ மதத் தலைவருக்கும், அரசனுக்கும் முரண்பாடு உண்டாக, போப் இவனை மதத்தை விட்டு விலக்கி இவரை மகுடபங்கம் செய்யும்படி பிலிப்புக்கும் கட்டளை இட்டான்.
அரசன் அஞ்சினவனாய்ப் போப்புக்குக் கீழ்ப்படிந்து, தன் மகுடத்தைப் போப்பின் தூதனிடம் கொடுத்து, அவனிடமிருந்து அவன் தர, அதைத் தான் ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லிப் பெற்றுக்கொண்டான்.
இவ்வகையில், அயல்நாட்டுப் படையெடுப்பின் அச்சம் நீங்கிய பின், ஜானுக்குச் செங்கோல் வரம்பு கெட்டது.
குடிகளை ஆதரிக்க மறந்தான்.
அவரது குறைகளுக்குக் காதுகொடுக்கவில்லை.
வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்யாது, குடிகளின் மனுக்களைப் புறக்கணித்தான்.
இவனது தீச்செயல்களைக் கண்ட குடிகள், மனம் பொறாது, இவனை எதிர்க்கத் தலைப்பட்டு, அயல்நாட்டு அரசனான பிலிப்பை இங்கிலாந்துக்கு அழைத்தார்கள்.
தனக்குற்ற பகைவரை யழிக்க மண்டூகம் அழைக்க வந்த பாம்பெனப் பிரெஞ்சு அரசன் தன்சேனையுடன் ஆங்கில நாட்டைப் படையெடுக்கத் தொடங்கினான்.
இதனிடையே ஜான் அரசனும் மிதமற்ற குடியினாலும், மீதூண் விருப்பினாறலும் நோயுற்று உயிர் துறந்தான்.
இச் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள ஷேக்ஸ்ப்பியர் நாடகக் கதையைச் சற்றே இனி நோக்குவோம்.
அரசன் தனக்குரித்தான பிரெஞ்சு நாடுகளைப் போர் ஒன்றுஞ் செய்யாமல் இழந்து விட்டான் என்று சொல்வதற்குத் தேசாபிமானமுள்ள ஷேக்ஸ்பியருக்கு மனமெழவில்லை.
ஆகையால் கதையின் துவக்கத்தில் ஜானும் அவனது ஆங்கிலப் படையும் பிரெஞ்சு காட்டிற்குச் சென்று, அங்கே ஆங்கியர்ஸ் என்னும் ஊரை, ஆர்தர் சார்பாக முற்றுகை செய்து கொண்டிருந்த பிரெஞ்சுப் படையோடு கைகலந்ததாக ஷேக்ஸ்பியர் நாடகம் ஆரம்பம் ஆகின்றது.
இரண்டு படைகளுக்கும் வெற்றி தோல்வி ஏற்படவில்லை.
ஆதலால் இருதிறத்தாரும் ஆங்கியர்ஸ் ஊருக்குள் செல்ல முயன்றார்கள், நுண்ணிய அறிவுடைய அவ்வூரார் இருவருக்கும் இடந்தராமல் ‘உங்களில் வெற்றி பெற்றவருக்கே நாங்கள் கதவைத் திறப்போம் என்றனர்.
அவ்வேளையில் ஒருவனுக்கு ஓர் உபாயம் தோன்றிற்று.
அவன், அரசரிருவரும் ஒன்று சேர்ந்து அவ்வூரை முதலில் நிர்மூலமாக்கிப் பின்னர் அவர்கள் தம்முள் போர்புரிய வேண்டுமெனத் தூண்டினான்.
இது அனைவருக்கும் சம்மதமாகி அவ்வாறே செய்தனர்.
ஊரும் அறவே ஒழிந்து விடும் போலிருந்தது.
இதைக் கண்ட அவ்வூரானொருவன் அரசர்களை நோக்கி, ‘எங்களூரில் நுழைய எளிய வழியொன்றிருக்க, அதை விடுத்துக் கொலை பாதகத்துக்கு ஆளாவாருண்டோ?
இதோ நிற்கும் ஜான் அரசருடைய உடன்பிறந்தாள் மகளை, பிலிப் அர்சருடைய பிள்ளைக்குத் திருமணம் முடித்தால், உங்கள் விவாதம் முடிந்துவிடும்’ என்றான்.
சண்டையை யொழிக்க வழியொன்று கிடைத்ததென மனமகிழ்ந்த மன்னரும் இதற்கு உடன்பட, மணமும் நடந்தேறியது.
ஆர்தரின் தாயாகிய கான்ஸ்டன்ஸீக்கு இது தன் மகனை ஏமாற்றச்செய்த சூழ்ச்சியெனத் தோன்றிற்று.
அவள் பிலிப்பையும் அவனுக்குத் துணையாய்வந்த ஆஸ்ட்டிரியா அரசனையும் வைது சபித்தாள்.
இச்சமயத்தில், போப் அனுப்பிய தூதன் ஒருவன் அவ்விடம் வந்து இங்கிலாத்தில் காண்டர்பெரி என்னும் ஊருக்குப் போப்பினால் அனுப்பப்பட்ட உத்தியோகஸ்தன் ஒருவனை ஜான் விட்டதாகவும், அதனால் போப்பின் சினத்துக்கவன் உரியவன் ஆனான் என்றும், ஜான் தன் தள்ளி குற்றத்தை ஏற்றுக் கொண்டு அடங்கி நடவாவிடில் பிலிப்பும் ஆஸ்டிரியா அரசனும் அவனை எதிர்க்கவேண்டுமென்றும் கட்டளையிட்டான்.
அக்காலத்தில் இங்கிலாந்து தவிர மற்றைய நாடுகளெல்லாம் போப்பின் அதிகாரத்துக்கு உட்பட்டவை,
ஜான் போப்புக்கு அடங்கவில்லை, என்னசொல்லியுமவன் கேளாமற்போகவே இருதிறத்தாருக்கும் போர் மூண்டது.
அந்தப் போரில் ஜான் அரசனுக்கே வெற்றியுண்டாயிற்று,
அறியாப்பிள்ளையான ஆர்தரும் சிறைப்பட்டான்.
ஜான், அச்சிறுவனை ஹூபர்ட் என்னும் தன்ஆ ஒப்புவித்துக் கொலை செய்யக் ன் ஆளிடம் கட்டளையிட்டான்.
காராவைப் பிரிந்த கன்றென ஆர்தரும் தன் தாயைப்பிரித்து ஆற்றமாட்டாத் துயருடன், தன் மனம் தாயையும் பிரெஞ்சு நாட்டையும் நாடி நிற்க, ஹூபர்ட்டைப் பின்தொடர்ந்து, உயிரில்லா உடம்பென இங்கிலாந்திற்கு வந்து சேர்ந்தான்.
மகனைப் பிரிந்த மாதின் துயரம் சொல்லவொண்ணாதது.
முன்னிருந்த கோபம் சோகமாய் மாறியது.
துன்பமென்பது ஓர் ஏந்திழை வடிவமெய்தித் தன் பொன்னனைய திருமேனி பொடியாடத் தரைமீது வீற்றிருக்குமளவில், இக்கோலங் காண்பான் அரசர்கள் அனைவரும் அவ்வயின் வந்து கூடினார்.
பிலிப்பு அரசன் தன் மகன் திருமணங்கொண்ட வந்தாளே நன்னாளெனக் கூறுதலும், அம்மொழிகள் செவிப்படா முன்னர்க் கான்ஸ்டன்ஸ் கட்செவி யெனக் கனன்று சீறி, நன்மையொன்றுஞ் செய்யப்படாமல், உண்மைதவறி வாக்குறுதி பிறழப்பெற்ற வந்நாள் தீயநாதலால், அதனிற்செய்த கருமங்கள் நன்மை பயக்கா தொழிகவென்றாள்
பேரறிஞர் டி.என். ஷேசாசலம் ஜான் அரசர் மொழிபெயர்ப்பை மிகச் சிறந்த மொழி ஆக்கமாகவே மாற்றிக்கொண்டு ஷேக்ஸ்பியர் எழுதிக் காட்டும் பாங்குடனே தமிழில் ஷேக்ஸ்பியேரே எழுதியிருந்தால் இப்படி தான் எழுதவேண்டும் என்ற வரையரை இந்த மொழியாக்கத்தின் மூலம் வெளிப்படுத்தினார் என்று என்னை வழிநடத்திய ஆங்கிலப் பேராசிரியர் எஸ்.ஏ சங்கரநாராணயன் பல நிலைகளில் எனக்கு சொல்லிக் காட்டிய நடை பின்வருமாறு:
பிலிப்:- பிரிந்த பனிச்சையைப் பிணையாய்! அவளது அளகபாரத் திரள்களின் அன்பை என்னென்பேன்!
தவறியோர் வெள்ளியின் துளி விழுமிடத்து, அத்துளியைச் சூழ்த்து, ‘கம்பியின் தன்மையேய்ந்த பதினாயிரம் நண்பர், உண்மையான இணை பிரியாத நம்பிக்கையுள்ள காதலர் இடுக்கணுற்றவிடத்து ஒன்று சேர்ந்து இழைவது போன்று, துன்பத்தில் துணைகொண்டு, அணைந்து கொள்கின்றன.
கான்ஸ்:- வேண்டுமாயின் இங்கிலாந்து செல்லலாம்.
பிலிப்:- உனது குழலினை முடிப்பாய்
கான்ஸ்:- ஆம்! அதைச் செய்வேன்; ஏன் அதைச் செய்யவேண்டும்? அவைகளைக் கட்டைவிட் டீர்த்து “இம்மயிர்கட்குச் சுதந்தரத்தைத் தந்ததே போல், இக் கைகள் என் சிறுவனைச் சிறைமீட்கலாகுமோ?” என்று கதறினேன்.
ஆனால் இப்போது அவைகள் கொண்டுள்ள சுதந்தரத்தைக் கண்டு பொறாமை கொள்கின்றேன்.
என்னிளங்குமரன் சிறைப்பட்டு இருப்பதால் இவைகளையும் தளைப்படுத்திப் பிணிப்பேன்.
ஐய! பாதிரியாரே! நாம் மேலுலகத்தில் நமது நண்பர்களைக் கண்டு, அவர்களை இன்னாரெனத் தெரிந்துகொள்வோம் என்று நீர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
அது உண்மையானால், மீண்டும் என் சிறுவனைக் காண்பேன்.
ஏனெனில், முதல் தலைப்பிள்ளையாகிய கேயின் என்பவன் பிறந்தது முதல், நெருநற் பிறந்த பிள்ளையீறாக இவ்வுலகில் அவனைப் போன்ற செம்மல் பிறந்ததில்லை.
ஆனால் இனி, மலரிடையுற்ற நோய் போல், துன்பமென்பது என்னரும்பைத் தின்று, அவனுக்கியற்கையாகிய அழகினை அவனது கதுப்பினின்றும் துரத்திவிடும்.
அதனால் அவன் பேயெனக் குழிந்த தோற்றத்தோடும், முறைச்சுரங் கொண்டவர்களைப் போல் மெலிந்தும், உருமாறியும் இறந்துபோவான்.
அவ்வாறே மீண்டெழுந்து மேலுலகஞ் செல்வானாதலால், துறக்கத் திருவோலக்கத்தில் நான் அவனைக் காணுங்கால், அவனை இன்னானெனத் தெரிந்துகொள்ளேன்.
ஆகையால் இனி ஒருபோதும், எனது அழகிய ஆர்தரை நான் காணக்கூடாது.
பாண்டல்ப்:- நீ துன்பத்திற்குப் பெரியதோர் மதிப்பைத் தருவதால் கடவுள் முன் பிழையிழைத்தவள் ஆவாய்!
கான்ஸ்டன்ஸ் :- குழந்தையைப் பெறாதவனொருவனென்னிடம் பேசுகின்றான்
பிலிப்:- நீ உனது குழந்தைமேற் கொண்டதே போன்றதோர் ஆசை துன்பத்தினிடமும் கொண்டுள்ளாய்.
கான்ஸ்:- துன்பமென்பது, என் வெற்றுள்ளத்தினுள் என் குழந்தைக்குரிய இடத்தைக்கொண்டு, அவனது படுக்கையிற்படுத்து, என்னுடன் இங்குமங்குமுலவி, அவனது சீருடைத் தோற்றத்தையெய்தி, அவனது மொழிகளையுரைத்து, அவனது காதற் குணங்களை ஞாபகமூட்டி, அவனது வெற்றுடைகளில் அவனுருவத்தையடைத்து என்முன்னே தோன்றச்செய்வதால், துன்பத்தினிடம் நான் அன்புகொள்ளக் காரணமேற்படுகிறது யான் போய் வருவல். எனக் குற்ற துயர்போல் உங்களுக்கு நேரிடுமாயின், நீங்களெனக்குத் தருவதைவிட மேலான ஆறுதலை உங்களுக்கு நான் தருவேன்.
என் அறிவிலிதுபோற் குழப்பம் ஏற்பட்டிருக்க என் தலையின்மேல் இவ் வடிவைத்து தாங்கேன்.
ஓ இறைவா!
என் சிறுவா!
என் ஆர்தரே!
அழகிய என் குமரா!
என்னுயிரே!
என் மகிழ்வே!
என்னுயிரினுணவே!
என்னுடைய அளைத்துலகமே! கைம்பெண்ணின் ஆறுதலே!
என் துயரின் மருந்தே!
————–
இலக்கிய வரலாற்றாசிரியர்
ஒளவை துரைசாமிப் பிள்ளையின் எழுத்துப் பணிகளுள் தலைச் சிறந்து நிற்பது அவரது சைவ இலக்கிய வரலாறு ஆகும்.
வரலாறு என்பது சமூக உறவுகளின் இயக்கத்தின் விளைவாகும்.
மன்னர்களின் கால வரிசைப்படியான பட்டியலோ அல்லது அவர்களின் தலைசிறந்த போர்ச் செயல்களோ வரலாறாவதில்லை;
குறிப்பிட்ட காலத்தில் சமூகம் எவ்வாறு இயங்கியது என்பதை அறிவித்தல்தான் வரலாறு அமைகின்றது.
இதே முறையில் இலக்கிய வரலாறு என்பதும் நூற்பட்டியல் தருவதில் அடங்குவதில்லை.
இலக்கிய வகைகள் தோன்றுதல், வளர்தல், அதாவது மக்களிடையே செல்வாக்குப் பெறுதல், பின்னர் வேறு இலக்கியவகை தோன்றும்போது அதன் ஒளியில் ஒடுங்குதல் முதலிய நிகழ்வுகளும் இவற்றிற்கான சமூக, அரசியல், உளவியல் காரணங்களை எடுத்துரைப்பதிலும் தான் இலக்கிய வரலாறு அமைகிறது.
ஒளவை துரைசாமிப் பிள்ளையின் சைவ இலக்கிய வரலாறு கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் தோன்றிய சைவப் பெரியோர்களின் படைப்புக்களைப் பற்றி விரிவாக ஆராய்கின்றது.
இலக்கிய வரலாற்றின் நோக்கம்
ஒளவையவர்களின் சைவ இலக்கிய வரலாறு நூலினை இப்போது முழுமையாகப் படிப்பவர்கள், அந்நூலில் தெளிவான ஒரு முறையியலை அவர் பின்பற்றியிருப்பதை உணர முடியும்.
முதற்கண் இத்தகையதொரு நூலினைத் தாம் எழுத முனைந்ததற்கான காரணத்தைக் கூறுகிறார்.
தமிழ் இலக்கியங்களைப் பல பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு வரலாற்றைக் காண்பது முறையாகத் தோன்றினமையின் அவ்வகையில் சைவ இலக்கியப் பகுதி என்பால் எய்திற்று.
இலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து நாட்டு வரலாற்றறிவு பெருந்துணையாகும்….
இத்தகைய பொது வரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. (சைவ இலக்கிய வரலாறு. ப. VII)
இத்தகைய பொது வரலாறு இல்லாததால், கிடைக்கும் துணைகளைக் கொண்டு இந்தச் சைவ இலக்கிய வரலாறு தோன்றி வெளிவருகின்றது என்று ஒளவையவர்கள் கூறுவதால் இலக்கிய வரலாற்றின் நோக்கம், பயன், அதனை எழுதுவதில் உள்ள இடர்ப்பாடுகள் முதலியவை பற்றிய தெளிவுடன் இருந்திருக்கிறார் என்பது புலனாகின்றது.
இலக்கிய வரலாறெழுதியலில் முதல்நிலை (Historiography)
சைவ இலக்கிய வரலாற்றினை விவரிக்கும் முயற்சியில் முதல் படிநிலையாக, அக்காலத் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றினைக் கோடிட்டுக் காட்டுகிறார் பிள்ளையவர்கள்.
இப்பகுதியில், பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள், நாட்டுப் பிரிவுகள், மன்னர்கள் பற்றிக் கூறுகிறார்.
கி.பி. 575 முதல் 900 வரையுள்ள காலப்பகுதியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்து வந்த பல்லவர், பாண்டிய அரச மரபினர்களைப் பற்றிய செய்திகளையும் அவர்களது மொழி, சமயச்சார்பு நிலைகளையும் முதற்கண் விளக்குகிறார்.
இக்காலப் பகுதியில் புத்தச் சமயத்தின் நிலையைப் பற்றி வரையறை செய்து கூறுகிறார்.
ஒரு காலத்தில் அரசியலாதரவு பெற்று நிலைபேறு கொண்ட புத்தச் சமயம் கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளை எய்துதற்குள் தன் செல்வாக்கினை இழப்பதாயிற்று என்று கூறுகிறார்.
(சைவ இலக்கிய வரலாறு, ப.15)
இக்காலத்தில் புத்தச் சமயத்தின் நிலை நடைமுறைப் பயன்பாட்டினை இழந்து வெறும் கொள்கை நிலை அளவில் நின்றது.
அவருடைய சங்கங்கள் புத்தச் சமயக் கருத்துக்களை மாணவர்க்கு உரைப்பதும், அவர்கள் துணையாக நாட்டிற்புகுந்து நாட்டவர்க்குப் புத்தத் தருமத்தை விரித்துரைத்துப் பரப்புவதும் ஏனை சமயத்து அறிஞர்களோடு சொற்போர் செய்வதுமே அவர்கள் பெரும்பாலும் மேற்கொண்டிருந்த கொள்கைகளாகக் காணப்படுகின்றன என்று கூறுகிறார்.
(சைவ இலக்கிய வரலாறு. ப.15)
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment