செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 78
– முனைவர் ஔவை நடராசன்
வந்தாரை வாழவைக்கும் தமிழ் மண்
முத்தமிழறிஞர் கலைஞர் தமிழக அரசியலில் தமிழ் மக்களின் சமுதாய வாழ்வில் மறுமலர்ச்சியையும், பொற்காலத்தையும் உருவாக்கிய பெருந்தகையாவார்.
அவரைப் போன்று அரசியல் வித்தகராகவும், அருந்தமிழ்க் கலைஞராகவும் விளங்கியவர் எவருமில்லை.
தம் இளமைக்காலத்தில் இருந்தே எழுதத்தொடங்கிய பேராற்றல் அவரை வாழ்நாளெல்லாம் எழுதவைத்தது.
எழுத்துலகப் பெருமலையாக அவரை ஏற்றம்பெற செய்தது.
தமிழை அவர் கையாண்ட முறையால் தமிழில் அடுக்குமொழிகள் அணிவகுத்தன; எதுகையும், மோனையும் எக்களித்தன; ‘கற்பனைகள் சிறகடித்துப் பறந்தன!
தமிழக மாமன்னர்களின் வரலாறும் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் தமிழரின் வீரமும், காதலும் வரிசைகட்டி நின்றன.’
திரைத்துறையில் அவர் நிகழ்த்திய புரட்சியோ எல்லையில்லாதது.
வீதிகள் தோறும் அவர் எழுதிய திரைப்பட வசனங்கள் வலம் வந்தன !
திராவிட இயக்கத்தின் தலைமகனாய்த் திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டு தமிழின் பரப்பளவை விரிவு செய்தது. அவரிடம் திரைப்பட வசனங்களை எழுதிப்பெறவல்ல திரைப்பட இயக்குநர்களால் மட்டுமே திரைப்படத் தயாரிப்பாளர்களின் நிதி முதலீட்டைப் பெறமுடியும் என்ற பொற்காலம் ஒன்று இருந்தது.
அவர் படைத்த மருதநாட்டு இளவரசி திரைக்காவியத்தின் வசனங்களை இன்றும் என்னால் மறக்க இயலாது.
நான் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயிலும்பொழுது சங்க இலக்கியப் பாடல்களை முற்றோதல் செய்வதற்கு முன் முத்தமிழறிஞரின்வசனங்களை மனப்பாடமாகச் சொல்லத் தொடங்கினோம்.
அதில் மறக்கவொன்னா வசனம் தான் மருதநாட்டு இளவரசியில் வரப்பெற்ற வசனங்களாகும்.
குறிஞ்சிநாட்டுக் கொற்றவனுக்கு இரண்டு மனைவிகள்.
இளையாளின் அண்ணன் துர்ஜயன், தன் அதிகாரம் நிலைக்க, தங்கையின் குழந்தை தரணி ஆளவேண்டுமே என்று அவனுக்குத் தனி ஆசை.
அதன் காரணமாக…….
கோபதிவர்மன்:- கொலைகாரி. போதும் உன் கும்மாளம். அங்கே நாசவேலை நடத்திவிட்டு அதை மறைக்க இங்கே நடனம்.
சித்ரா:- என்ன?
கோபதி:- சிங்காரியின் வாழ்வைச் சிதைக்க நீ போட்டாயே திட்டம், அது செத்துவிட்டது தெரியுமா? சண்டாளி,
சித்ரா:- திட்டமா? என்ன?
கோபதி:- ஆஹா! என்ன நடிப்பு அக்ரமக்காரி, உன்னை அக்கினியில் தள்ளிப் பொசுக்கினாலும் போதாது.
அன்பானந்தர்:- அரசே, கோபம் நீதியை மறைத்து விடும், நிதானமாக….
கோபதி:- நிதானம், அன்பானந்தரே ! நீரே கேளும் இந்த நீலியை !
அன்பா:- மகாராணி, இளையராணி கர்ப்பமுற்றிருப்பதில் தங்களுக்குப் பொறாமை, அந்தக் குழந்தை ராஜ்யத்தில் பங்கு கேட்குமே என்ற பயம்.
அதன் காரணமாய் இளைய ராணிக்கு அனுப்பப்பட்ட மருந்தில் தாங்கள் விஷம் கலந்து விட்டீர்கள்.
ராணி:- அப்பா !
மணி:- எனக்காக நீ இந்த தியாகம் கூடவா செய்யக் கூடாது ?
ராணி:- தங்களுக்காக உயிரைத் தியாகம் செய்கிறேன். மானம் தியாகம்செய்யும் பொருள் அல்ல தந்தையே!
மணி பல்லவர்:- ராணி ! வெற்றி அவர்கள் பக்கமென்றால் நம் மானம் என்னாவது ?
ராணி:- வெற்றி! அது வீரர்களின் சத்தம் நிர்ணயிக்க வேண்டிய முடிவு!
அதைப்பற்றி இப்போது என்ன கவலை.
மணி பல்லவர்:- வீரர்களின் பலமும், என் பலமும் எனக்குத் தெரியும்.
உன் உபதேசம் வேண்டாம்.
ராணி:- அப்பா ! தாங்களா இப்படிப் பேசுகிறீர்கள் !
வேலும், வாளும், வாழ்க்கையில் தோழனென்று கூறும் வம்சத்தில் பிறந்த தாங்களா இப்படிப்பேசுகிறீர்கள் !
வெங்கொடுமை சாக்காட்டில், விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள் என்ற வீரப்பாண்டிய பரம்பரையில் பிறந்த தாங்களா இப்படிப் பேசுகிறீர்கள் ?
ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை !
இதை இதய கீதமாக்கிக்கொண்ட தமிழனுக்குப் பிறந்த தாங்களா இப்படிப் பேசுகிறீர்கள் ?
வெட்கம், இழிவு, நம் நாட்டு சரித்திரத்திற்கே இழிவு. களம் பலகண்ட கதிரவன் சிரிப்பான் !
வீரர்களைத் தாங்கிய இந்த பூமி சிரிக்கும்.
வேண்டாமப்பா !
வீர வரலாற்றில் களங்கம் வேண்டாம்.
மரணத்திற்குப் பயந்து, மாற்றானுக்கு மகளை கப்பமாக அளித்தார் மணிபல்லவர் என்று மாநிலம் சிரிக்கும்.
அந்த மாசு படிய வேண்டாம்.
மணி பல்லவர்:- வேண்டாம் ராணி ! உணர்ச்சியற்ற என் உள்ளத்தை சம்மட்டியால் அடிக்க வேண்டாம்.
புழுவாய் நெளிந்த என்னை புலியாக மாற்றிவிட்டாய் !
கண்ணைப்போல் காப்பதை, அந்தக் கரடிவாயில் தள்ள மாட்டேன் !
கொக்கரிக்கும் குறிஞ்சி நாடே !
பெண் கிடையாது ! உன் கொட்டத்தை அடக்கப் போர் !
காண்டிபன்:- எங்கே ராணி ? எங்கே ? ராணி ! ராணி இளவரசி ! என் ராணி இளவரசியா !………..
ராணி:- ஆம் ! இளவரசிதான்.
காண்டிபன்:- வேலைக்காரி என்றாயே வேஷக்காரி ! சண்டாளி ! உன் கண்களில் பொங்குகிறதே அந்தக் காமம் ! உன் உதடுகளின் இடுக்கில் வடிகிறதே அந்த நஞ்சு ! இவைகளை வைத்துக்கொண்டு, என் நம்பிக்கையை அணு அணுவாக சிதைத்துவிட்டாயே, அரண்மனை பிசாசே !
ராணி:- தங்கள் காதலைப் பெறுவதற்காக.
காண்டிபன்:- காதல் ! உன் காம வெறிக்காக போட்ட திரையின் பெயர், காதல் ! அழுகல் நாற்றத்திற்குப் பெயர், அந்திமல்லிகையின் வாடை ஆஹா ! ஆலகால விஷத்தை அமிர்தம் என்று எண்ணி ஏமாந்தேன் ! அஸ்தமனத்தை உதயம் என்று நினைத்து அடியோடு கெட்டேன் ! நரகமென்று ஒன்று இருந்தால் உன் நரம்பிற்கு ஒரு நாகத்தை விட்டு கடிக்கவிடுவேன்.
அப்போதும் இந்தக் கள்ளியின் நம்பிக்கை நிவர்த்தி கிடையாது. இளவரசி இரக்கமற்ற பேய் ! ஏழைகளை வாட்டி அவர்கள் எலும்பைத் தின்று உடலை மெருகேற்றிக்கொண்ட ராசவம்சத்தில் உதித்த பிரம்ம ராஷசி ! உன் வனப்பால் என்னை மயக்கி, வாக்கு வசீகரத்தால் என் வாலிப உள்ளத்தை உருக்குலைத்து நடுத்தெருவில் விட்டு விட்டாயே நாசகாரி ! உன் மேல் தவறில்லை ! மன்னர்களுக்கு புதுப்புது ராஜ்யங்களைப் பிடிக்கும் ஆசை ! அவன் மகளுக்கு புதுப்புது கணவனைப் பிடிக்கும் ஆசை !
ராணி:- இளவரசி ஆணையிடுகிறேன், தயவுசெய்து வெளியேறுங்கள் !
காண்டிபன்:- வெளியேறுகிறேன், ஆனால் வெறுங்கையுடன் போக உத்தேசமில்லை, காமவெறியேற்றி என்னைக் கலங்கச்செய்த உன் விழிகளைப் பிடுங்கிக்கொண்டுதான் வெளியேறுவேன் ! நம்பினவனை நட்டாற்றில் விட்டதுமல்லாமல், வெளியே செல்லுங்கள் என்று ஆணையிட்ட அந்த இரும்பு இதயத்தை பெயர்த்துக்கொண்டுதான் வெளியேறுவேன் ( கழுத்தை நெறிக்கிறான் ) .
காண்டிபன்:- உங்கள் மன ஆறுதலுக்காக நான் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமா ?
மகாராஜா நீதியின் சாயாத பண்பு தங்களிடம் இருந்தால் தயவுசெய்து ஆலோசியுங்கள்.
மகனின் பிரிவு மனப்பதட்டத்தை அதிகப்படுத்தும். ஆனால் ஒரு கொலை மற்றொரு கொலைக்கு சாந்தி ஆகாது.
துர்ஜயன்:- இது குற்றவாளிக் கூண்டு, குருநாதர் பீடமில்லை.
இளவர்சனைக் கொன்றது நீ, இதற்கு உன் ஆட்சேபம்.
காண்டிபன்:- நிறைய இருக்கிறது. ஆண்கள் நுழையக் கூடாத காளி கோவிலில் துர்ஜயனுக்கும் ரௌத்திரனுக்கும் அந்த நேரத்தில் அங்கு என்ன வேலை.
துர்ஜயன்:- பொய், சுத்தப்பொய். அரசே இவனை கைது செய்த அத்தனை சிப்பாய்களையும் கேளுங்கள்.
என்னை காளிகோயிலில் பார்த்தவர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா ?
உயிர் பிழைப்பதற்காக உழுத்த வாதங்களை அள்ளி வீசுகிறான் உன்மத்தன் ! மன்னரின் நீதிமன்றத்தை அவ்வளவு மட்டமாக நினைத்துவிட்டான் மண்டூகம் !
காண்டிபன்:- நீதியை வரவழைக்க நேரம் தெரியாமல் இவன் வரட்டுக் கூச்சலுக்கு ஒதுக்கியிருக்கும் இந்த இடத்திற்குப் பெயர் நீதிமன்றமா ? இங்கு வழங்குவதற்குப் பெயர் தான் நீதியா ?
கோபதி:- என்ன ?
துர்ஜயன்- தெய்வ நீதி வேண்டுமென்கிறான் தகிடுதத்தக்காரன்.
காண்டிபன்:- இல்லை. மனித நீதி போதும் என்கிறேன் மன்னர்.
மன்னர் மகனைக் கொன்றதாக நான் இதற்கு நீதி தேவன் ஸ்தானத்தில் வீற்றிருக்க வேண்டியது மன்னரல்ல இந்த மாநிலத்து மக்கள்.
சபையோர்:- ஆம் மகாராஜா குற்றவாளியின் வாதமும் பொருத்தமானதுதான்,
துர்ஜயன்:- சாட்சியம் இல்லாத வாக்குமூலம், சாரீரமில்லாத சங்கீதம் அம்பலத்திற்கு வர முடியாது அரசே.
நானும் ரௌத்திரனும் காளி கோயிலில் நுழைந்தோம்.
இது காண்டிபனின் வாதம்.
இவனை கைது செய்த அத்தனை சிப்பாய்களுக்கும் தெரியாமல் நான் எங்கே பதுங்கிவிட்டேன்.
நான் என்ன கண்கட்டி வித்தைக்காரனா ? அல்லது கடவுள் அவதாரமா ? உண்மை அதுவல்ல. ராணி காளி கோயிலில் இருந்திருக்கிறாள், காண்டிபன் அவளைச் சந்திக்கச் சென்றிருக்கிறான் கள்ளக் காதலின் காமவேட்கை அது.
ரௌத்திரன் அதைக் கவனித்திருக்கலாம். ஆனால் அதற்கும் கொலைக்கும் என்ன சம்பந்தமென்பீர்கள் ?
ஏன் இவனே ரௌத்திரனை காளி கோயிலுக்கு இழுத்துச் சென்றிருந்தால் ! இவன் வலையில் சிக்கி அந்த சுத்தவீரனை இவனே கொன்றிருந்தால் !
காண்டிபன்:- நான் கொன்றிருந்தாலும் அது அநியாயமல்ல.
இந்த நாட்டுக்குச் செய்த நல்ல காரியத்தைச்செய்து முடித்ததாக எண்ணுவேன்.
கோபதி:- என்ன ?
காண்டிபன்:- இறந்துபோன இளவரசன் இந்நாட்டு மக்களை காட்டு மிருகம்போல் நடத்தியது உங்களுக்குத் தெரியாதா ?
சபையோர்:- இது அவன் ராஜ்யம்.
காண்டிபன்:- ஆண்டவன் ராஜ்யமாக இருக்கட்டுமே ! அநீதியை எதிர்க்க பிரஜைகளுக்கு உரிமை உண்டு.
எத்தனை இளம் பெண்களின் கற்பு உங்கள் இளவரசன் லீலாவினோதங்களுக்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறது,
ஏன் என்று கேட்ட எத்தனை ஏழை மக்களின் ரத்தத்தைப் பார்த்து கோர சிரிப்புச் சிரித்திருக்கிறான் உங்கள் இளவரசன். அவனை விட்டிருந்தால், அவன் பட்டத்திற்கு வந்திருந்தால் பெண்களின் கரங்களை செங்கோலாக்கிக் கொண்டு அந்தப்புரத்தை சபா மண்டபமாக்கிக் கொண்டு, சரசசல்லாபங்களை சட்டப் புத்தகமாக்கிக் கொண்டு ரதி மதன ஆட்சியல்லவா நடத்தியிருப்பான். நல்லாட்சியா நடைபெறும் ?
நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உலைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே ! நீ, சூதகர்களின் உறைவிடமாய், சூழ்ச்சியின் இருப்பிடமாய் ஆனது ஏன் ? தூய்மை, அன்பு, சத்தியம் இவைகளை மட்டும் தாங்கிய தங்கத் தாய் நாடே ! நீ துரோகிகளை, துன்மார்க்கர்களை, துஷ்டர்களைத் தாங்குவது ஏன் ! இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குக் கிடைக்கும் ஒரே பதில், பலிபீடம் ! பலிபீடம் !! இந்த பயங்கரமான வார்த்தைதானா ? ஏ ! கொடுமை தாண்டவமாடும் குறிஞ்சிநாடே ! நீ என்னைக் கொல்வதோடு என் ரத்தத்தை உறிஞ்சி கொழுப்பதோடு இருக்கக்கூடாதா ! என் ராணியின் வாழ்வையுமா வாட்டவேண்டும் ? என் ஆசைக் காதலியை என்னிடம் இருந்து பிரித்து, என்னைப் பெற்ற தாயாரைப் பாதாள சிறையில் பூட்டிவிட்டாயே !
என் நெஞ்சைச் சிதள் சிதளாகப் பிரிக்கிறாயே ! பட்சாதாபப் படுகிறாயே ! பரிதாபம், ஈவு, இரக்கம் எள்ளளவும் இல்லையா உனக்கு ? என்னைக் காதலித்தாள், எனக்கு வாழ்வு அளித்தாள், மானிலம் சாயந்தாலும் உம்மை மறவேன் என்றாள், பூங்காட்டில் புரங்காளும் பூங்குழலாள் எங்கோ போய்விட்டாள் ! சாக்காட்டின் அடிவாரத்திலும் அவளைச்சந்திக்கமுடியாத பாவியாகிவிட்டேன் ! என் அறிவு வந்த பருவ முதல் என்னைப் பெற்ற அப்பா அம்மா யார் யார் என்று எங்கித் தவித்தேன் !
மகனே என்று ஒளி வீசும் கண்களோடு அன்பு மொழி பேசிய என் அன்னையின் முகத்தைச் சரியாகக்கூடப் பார்க்கவில்லை ! அவ்வளவு சீக்கிரத்தில் சாவதா ? அந்த ஆனந்தத்தை அக்கிரமக்காரர்கள் ரசிப்பதா ? இந்த மண்ணிலேதான் பிறந்தேன் ! இந்த மண்ணிலேதான் மழலைமொழி பேசி தவழ்ந்து விளையாடினேன் ! இந்த மண்ணிலேதான் சவமாகச் சாயப்போகிறேன்.
வந்தாரை வாழவைக்கும் இந்த மண்ணில் சொந்த நாட்டுக்காரன் அநியாயமாகச் சாவதா ? குற்றமற்றவன் சாவதா ? கொடுமையைகினைக்கவும் தெரியாதவன் சாவதா ? என் சாவு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இனிமேல் இந்தப் பலிபீடத்தில் நிரபராதிகள் நொறுங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏழைகளை என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்ற அகங்காரத்தை, ஆணவத்தை அரசாங்கச்சட்டத்தை, அதற்குத் தூபம்போடும் துரோகக் கும்பலை, துர்ஜயன் கூட்டத்தைப் பலிபீடத்தில் நிறுத்துங்கள்.
சூழ்ச்சியின் முதுகெலும்பைச் சுக்கு சுக்காக நொறுக்குங்கள்.
துரோகத்தை தூள் தூளாக நொறுக்குங்கள்.
அக்கிரமத்தை அணு அணுவாக வீழ்த்துங்கள்……
( ஆவேசத்தில் கால் இடரி கீழே விழுகிறான் காண்டிபன் ) வீழ்ந்தது போதுமினி நாமே வாழ்வோம் ! அழிந்தது போதுமினி நாமே ஆள்வோம் !
துர்ஜயன்:- போதும் உன் ஒப்பாரி ! ….ம் நடக்கட்டும்.
( தூக்குமேடை மணி ஓசை கேட்கிறது. இரண்டு முறை கேட்டான், மூன்றாம் முறை கேட்கவில்லை.
காரணம் ? மூன்றாம் முறை மணி ஒலித்தால் காண்டிபன் தலை கீழே உருளும் என்று நினைத்த ராணி தன் தலையை மூன்றாம் அடிக்கு நேரே பலி கொடுத்தாள்.
மூன்றாம் முறை ஒலிக்காத காரணத்தால் எல்லோரும் திகைக்க, நிமிர்ந்து பார்க்கிறான் காண்டிபன்.)
காண்டிபன்:- ராணி !
[தன் அரச குமாரி கீழே விழுந்ததை அறிந்த ரம்பா, ராணியை மடியில் தூக்கிவைக்கிறாள்.)
துர்ஜயன் :- … உம் நிறுத்தாதே, நடக்கட்டும்.
( காண்டிபன் கழுத்தை நறுக்க கொலையாளி தயாராகிறான் மறுக்க யாதொரு வழியும் தெரியாமல் திகைக்கிறான் அழகு.
அப்போது ரம்பா தும்முகிறாள்.
தும்மலைக் கேட்டவுடன் தன் வழக்கமான “ குதி ” யை ஆரம்பித்து வெட்டை நிறுத்துகிறான்.)
துர்ஜயன்:- டேய் ! பிடியுங்கள்.
( அது சமயம், அரசன் தன் மகனைப் பார்க்க அங்கு வருகிறான். தன் மகன் உயிரோடு இருப்பதைப் பார்த்து……..)
கோபதி :- ஆ ! காண்டிபா !
அழகு:- விடு ! காண்டிபன் இளவரசனா ? காண்டிபா ! துர்ஜயன், காளிங்கன், முத்தம்மாள் இருவரையும் கண்டு கதிகலங்கி அங்கிருந்து தப்ப முயல்கிறான்.
துர்ஜயன்- காளிங்கன், முத்தம்மாள் !
துர்ஜயன் கூட்டத்தில் புகுந்து ஓடுகிறான்.
தன்னை மானபங்கம் செய்ததற்காக பிரதி உபகாரமாக, தன் கையிலுள்ள பிச்சுவாவினால் வஞ்சம் தீர்த்துக்கொள்கிறாள் முத்தம்மாள் !
காளிங்கன்:- இருதய சுத்தமில்லாத அத்தனை பேர்களுக்கும் இதுதான் முடிவு !
அழகு:- ரம்பா !
காண்டிபன்:- ராணி… !
ராணி:- ஸ்வாமி.. .!
காண்டிபன்:- இவள்தான், ராணி ! மருதநாட்டு இளவரசி !
கோபதி:- இளவரசர் !
பொதுமக்கள்:- வாழ்க !
காண்டிபன்:- வளம், வழியும் குறிஞ்சிநாட்டுப் பெரு மக்காள், வணக்கம், நான் இந்த மாநிலத்து மன்னனில்லை.
மக்களின் தலைவன், மக்களின் தொண்டன்.
குறிஞ்சி நாட்டு முடியாட்சி முடிவுற்றது.
இனி குடியாட்சிப் பூத்துக்குலுங்கும், புதுவாழ்வு மலரும், புதுக்கருத்து வளரும், எல்லோரும் ஓர் குலம் ! எல்லோரும் ஓர் இனம் !! எல்லோரும் இந்நாட்டு மன்னர் !!!
இத்தகைய திரைப்பட வசனங்களாலும், தீந்தமிழ் இலக்கியப் படைப்புகளாலும், காலமெல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றிய பெருந்தகை முத்தமிழறிஞர் கலைஞர் பெருமானை மறத்தலும் ஆகுமோ ? அவருக்கு இணையாக வேறொருவரை கூறவும் இயலுமோ ?
வளரும் . . .
தொடர்புக்கு “thamizhavvai@gmail.com

Add a Comment