POST: 2022-11-11T09:27:28+05:30

சொல்லரிய புகழ் பூண்டவர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அலுவலாக 29.06.2022இல் செல்ல நேர்ந்தது.

வாழும் தமிழ்ப் பல்கலைக்கழகமாக நம்முன் வாழ்ந்து வரும் அறிஞர் சோ.ந. கந்தசாமி அவர்களை அவர் இல்லத்திற்கே சென்று வணங்கி மகிழும் வாய்ப்பினைப் பெற்றேன்.

தமிழ் இலக்கியங்களில் தோய்ந்த நல்லறிஞர் என்று நாடு அவரின் புகழினைப் போற்றுவதை எந்தையார் எப்பொழுதும் பாராட்டிக் கூறுவார்கள்.

ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மும்மொழிகளில் பெரும்புலமை வாய்ந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
‘தமிழில் பௌத்தம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழகத்தில் புத்த நெறியில் பெரும் புலமை பெற்ற சோ. ந. கந்தசாமி அவர்களை என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி குறிப்பிட்டு உள்ளார்.

உரைவேந்தர் ஔவை அவர்கள் தான் சோ. ந. கந்தசாமியின் முனைவர் பட்டப் பேற்று ஆய்வேட்டைக் கண்டு மகிழ்ந்து அதன் தகுதியினைப் போற்றினார்.

பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் என்னைக் கண்டதும் என்னை அரவணைத்து, மணிமேகலையின் பிற்பகுதி (38,39,40) ஆகிய காதைகளுக்கு நாட்டார்க்குப்பின் உரையெழுதித் தன் புகழை நாட்டிய ஔவை அவர்களையே சாரும் என்று கூறியதோடு,

புத்த நெறிகளின் நுணுக்கக் குறிப்புகள் பாலி மொழியில் பரவியிருக்கும் அரிய செய்திகளை அகழ்ந்து தம் நுண்மான் நுழை புலத்தால் பன்மாண் சிறப்பு கொண்ட பெருமை ஔவை அவர்களையே சாரும் என்று கண்களில் நீர் மல்கக் கூறி,

என் மகளின் பெயர் ஆதிரை என்று கூறியதும்;

ஆதிரை அமுதமிட்ட காதையினை வரிவிடாமல் உரைத்து என்னை அன்போடு அரவணைத்தார்.

உரைவேந்தர் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் அறக்கட்டளைப் பொழிவுக்கு இந்தமுறை உறுதியாக வருவதாக என்னிடம் மொழிந்தார்கள்.

சொல்லொணாப் புகழுடைய அறிஞர்
சோ. ந. கந்தசாமி பல்லாண்டு வாழ்க என்ற வாழ்த்துரையோடு நான் விடைபெற்றேன்.

தொல்காப்பியத் தகைஞராக பணியாற்றும் பேராசிரியராகிய சோ.ந.கந்தசாமி அந்தப்பணியில் நிறைவு கண்டு நெடும் புகழ் சேர்ப்பாராக…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *