அருந்தமிழும் அன்றாட வழக்கும் -135
பருப்பொருளிலிருந்து நுண்பொருள்
முனைவர் ஔவை அருள்
ஷேக்ஸ்பியர் அவர்கள் இங்கிலாந்து நாட்டு இளங்கோ.
நம் இளங்கோ முடி துறந்து நாடகம் தீட்டினார்.
ஷேக்ஸ்பியரோ நாடகம் எழுதி புகழ்முடியை தனக்கு புனைந்து கொண்டார்.
மனித மனங்களின் ஆழ அகலங்களை அவர் கவி வரிகளினால் வரையப்பட்டன.
ஆங்கில மொழியை தாங்கும் தூண்களாய் அவர் எழுதிய நாடக நூல்கள் நிமிர்ந்து நிற்கின்றன.
போலி வார்த்தைகளின் பொய்த்தலமாக இருந்த நாடக மேடைகள் ஷேக்ஸ்பியரின் பொன்வரிகளே சித்திர மண்டபங்களாய் செப்பமிட்டன.
அவர் எழுதுகிற நாடகங்கள் வரலாற்றுத் தளத்தில் எழுப்பப்பட்ட காவியக் கலைக்கூடங்களாகும்.
நாடகத்தில் பல இடங்களில் பல எண்ணங்கள் நமக்கு மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தப்படும்.
சான்றாக, ஆன்டனியும் கிளியோபாட்ராவும் எனும் ஒரு நாடகம்;
நீல் நைல் நதியின் நெடுங்கரையில் உலவிக்கொண்டிருந்த தோகை மயிலுக்கு – தனது தேகந்தந்தவனின் மோகக்கதை ஆகும்.
பாவை ஒருத்தியின் பார்வை மதுவால் விக்கி செத்த வீரனின் சோகக்கதையாகும்.
நைல் நதியின் பெருக்கைப் போல கரை புரண்டு ஓடிய காதலின் வேகக்கதையாகும்.
பேரறிஞர் சேஷாசலம் ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் மொழியாக்கத்தின் சில பகுதிகள் பின்வருமாறு:
ஒத்தெல்லோவும், டெஸ்டிமோனாவும், காஸ்ஸியோவும் சில ஏவலாளர்களுடன் வருகின்றனர்.
ஒத்தெல்லோ:- நல்ல மைக்கீல், காவலை இவ்விரவு கவனித்துக்கொள் நீ.
அறிவைக் கடந்து விளையாடாமல், மாண்பமைந்த அந்நிறையினை நமக்கு நாமே கற்பித்துக்கொள்வோம்.
காஸ்ஸியோ:- யாது செய்தல் வேண்டுமென்பது இயாகோவிற்குச் சொல்லப்பட்டிருக்கின்றது;
ஆயினும், இருந்தபோதிலும், நானே என்னுடைய கண்களால் அதனைக் கவனிப்பேன்.
ஒத்தெ:- இயாகோ மிக்க யோக்கியன்.
மைக்கீல், நல்லிரவு உனக்கு; நாளை நின் முந்தியவைகளுடன், உன்னுடன் நான் பேசவேண்டும்.
(டெஸ்டிமோனவைப் பார்த்து) எனதருமை அன்பே, வா. (காஸ்ஸியோவைப் பார்த்து) நல்லிரவு.
[ஒத்தெல்லோவும் டெஸ்டிமோனாவும் ஏவலாளர்களும் போகின்றனர்.](இயாகோ வருகின்றான்)
காஸ்ஸி:- வருக, இயாகோ நாம் காவலிற்குச் செல்லவேண்டும்.
இயா:- இதற்குள்ளாக இல்லை; அடுத்த அதிகாரியே, இன்னும் மணி பத்தாகவில்லை.
தன் டெஸ்டிமோனாவின் காதலுக்காக நம்மை இவ்வளவு முந்தியே தள்ளிவிட்டார், நம் தளகர்த்தர்; அதுபற்றி அவரை நாம் யாதுங் குற்றங் கூறவேண்டா.
காஸ்ஸி:- மிகவும் சிரேஷ்டமான பெருமாட்டி அவள்
இயா:- நான் உத்தரவாதம் அவளுக்கு விளையாட்டும் நிறைந்தவள்,
காஸ்ஸி:- மாறாப் புதுமையும் மெல்லிய இயல்பும் வாய்ந்தவொரு பிராணியே அவள்!
இயா:- என்ன கண்கள் உடையாள் அவள்! கதத்தினிற்கு அது அமைதி முரல்கின்றதென நினைக்கின்றேன்.
காஸ்ஸி:- வசியமுடைய கண்களே; ஆயினும் நேரான அடக்கமுள்ளவை என நினைக்கின்றேன்,
இயா:- அவன் பேசும்பொழுது, காதலுக்குக்கதுமென எழுப்பித் தூண்டுவதல்லவா, அது?
காஸ்ஸி:- சிரேஷ்டமே அவள், மெய்
இயா:- நன்று, அவர்களுக்கு இன்பம் பெருகட்டும்!
அடுத்த அதிகாரியே, வா, ஒயின் சாடி வைத்திருக்கின்றேன்; கரிய ஒத்தெல்லோவின் சுகத்திற்காக ஓரளவு பருகுதற்கு விரும்புகின்ற ஸைப்ரஸ் காளையர் இருவர் இங்கு வெளியே இருக்கின்றனர்.
காஸ்:- இவ்விரவு இல்லை, நல்ல இயாகோ, குடிக்கக் கலங்கும் ஏழை மூளை என்னுடையது.
உபசரணை செய்வதற்கு வினயமானது வேறு ஏதேனும் வழக்கத்தைக் கண்டுபிடித்திருத்தலாகாதாவென்று நான் நனி விரும்புகின்றேன்.
இயா:- ஓ, அவர் நம் நண்பர்கள், ஒரே வள்ளம்; உனக்காக நான் குடிப்பேன்,
காஸ்:- இவ்விரவு ஒரே வள்ளந்தான் குடித்திருக்கிறேன் நான்.
அதுவுந் தந்திரமாய்த் தணிக்கப்பட்டது; ஆயினும், அது என்ன விபரிதம் இங்குப் புரிகின்றது,
பார். இந்தக் குற்றத்திற்கு நான் பாக்கியம் குறைந்தவனாக இருக்கின்றேன்; ஆதலின், இச்சவலையின்மீது இன்னுஞ் சுமத்தி வருத்த நான் துணியமாட்டேன்.
இயா:- என்ன ஐயா! களியாட்டிரவு இது: இக் காளையரும் இதனை விரும்புகின்றனர்.
காஸ்:- எங்கு இருக்கின்றனர் அவர்?
இயா:- இக்கு வாயிற்கதவினருகு; வேண்டிக் கொள்கின்றேன், அவர்களை உள்ளே அழை.
காஸ்:- செய்கின்றேன்; ஆயிரம் எனக்கு வெறுப்பாக இருக்கின்றது அது. (காஸ்ஸியோ போகின்றாள்)
இயா:- இவ்விரவு இவன் முன்னரே குடித்திருப்பதோடு இன்னும் ஒரு வள்ளம் நான் இவன் மீது கட்டிவிடுவேனானால், இளைய வென்பெருமாட்டியின் நாயேபோல், இவன் சண்டையும் கோபமும் நிறைந்தவனாவான்.
இனி, நோயுற்ற என் மடையன் ராடரிகோ, காமத்தால் தன் தப்பான பக்கம் வெளியே திருப்பப்பெற்றிருப்பவன், இவ்விரவு, டெஸ்டிமோனாவின் பொருட்டுக் குவளையின் ஆழம் குடித்துக் குடித்துக் களியாடியிருக்கின்றான்.
காவல்புரிய வேண்டியவன் இவன் – ஸைப்ரஸ்ஸின் இளைஞர் மூவர்-உயர் குலத்தினர், ஒங்கும் ஊக்கத்தினர், தம் மானத்தைத் தகுந்த தூரத்தில் நிறுத்திவைத்திருப்பவர், போர்வல்ல இத்தீவின் சாரமேயானவர், இவர்களை யான் இவ்விரவு பெருகும் வள்ளங்களால் குழப்பியிருக்கின்றேன்; இவர்களும் காவல்புரிகின்றனர்.
இப்பொழுது, இக்குடிகாரர் மந்தைக்கிடையே, இத்தீவினிற்குக் கோபமுண்டாக்கக் கூடிய வொரு செய்கையில் நம் காஸ்ஸியோவைச் சேர்க்கவேண்டியவனாக இருக்கின்றேன் யான் – மற்று, இதோ வருகின்றனர் அவர்.
இதன் முடிவு என் கனவினை அங்கீகரிக்குமாயின், என் படகானது காற்றோடும் ஆற்றோடும் இடையூறின்றிப் படர்வதாகின்றது.
(காஸ்ஸியோ திரும்பி வருகின்றான்.
அவனுடன் மான்டானோவும், பிரபுக்களும், ஒயின் எடுத்துக் கொண்டு ஏவலாளனும், வருகின்றனர்.)
காஸ்ஸியோ:- கடவுளுக்குமுன், இதற்குள்ளேயே என்னை நிறையக் குடிக்கவைத்துவிட்டார்களே.
மான்டானோ :- நிச்சயமாக,
மிகச்சிறியதே; போர் வீரன் நானாக, ஒரு பைன்டிற்குமேற் போகவில்லை.
இயாகோ:- கொஞ்சம் ஒயின், ஹோ!
(பாடுகின்றான்)
குடுவை குடுவை குடுவையுடன்
குடுகு டுகுடு வென்பேனே
காஸ்:- ஆம், ஆயினும், மன்னிக்க வேண்டும், எனக்கு முன்னால் அல்ல பதாகையாளனுக்கு முன் அடுத்த அதிகாரியே உய்யவேண்டியவனாக இருக்கின்றான்.
இதனோடு போதும் இது; நம் காரியத்தைப் பார்ப்போம்-கடவுள் நம் பாவங்களை மன்னித்தருள்வாராக-கனவான்களே, நாம் நம்முடைய காரியங்களைப் பார்ப்போம்.
நான் குடித்திருக்கின்றேனென்று கனவான்களே எண்ணாதீர்.
இது என்பதாகையாளன்-இது என் வலக்கை, இது என் இடக்கை நான் கடித்திருக்கவில்லையே இப்பொழுது நன்றாகவே நான் நிற்கக்கூடும், நன்றாகவே பேசக்கூடும்.
எல்லோரும்:- மிக நன்றாக
காஸ்:- ஏன், ஆயின் நல்லது; நான் குடித்திருக்கின்றேனென்று, ஆயின், எண்ணலாகாது. [போகின்றான்]
மான்:- மேடைக்கு வாருங்கள்: காவலை அமைப்போம்.
இயா:- இதோ முன்னே சென்ற இவனை நீ காண்கின்றாய் ஸீஸருக்கு அயல்நின்று கட்டளைகள் கொடுக்குமொரு தகுதிவாய்ந்த வொரு போர்வீரன் இவன்; அவனுடைய குற்றத்தையும் பார்; அவன் குணத்திற்கு அது நேரான நாடி மண்டலமாக இருக்கின்றது.
ஒன்று எவ்வளவு நீளமோ அவ்வளவு நீளம் மற்றது.
இவனில் இது இரங்கத்தக்கதே.
இவனிடத்தில் ஒத்தெல்லோ வைக்கின்ற நம்பிக்கையானது இவனது தளர்ச்சியின் ஓர் விபரீதமான சமயத்தில் இந்தத் தீவினை அசைத்துவிடும் என்று அஞ்சுகின்றேன்.
மான்:- மற்று, அடிக்கடி இவன் இப்படியாகவா இருக்கின்றான்?
இயா:- எப்பொழுதுமே இவனது நித்திரைக்குப் பாயிரமாம் இது.
கள் தான் அவன் தொட்டிலை ஆட்டா விட்டால், கடியாரத்தை இரட்டை வரிசை அவன் காத்திருப்பான்.
மான்:- நம் தலைவருக்கு இதனை நினைவுபடுத்தல் நலம், ஒருகால் அவர் இதனைப் பார்ப்பதில்லைபோலும்; அல்லது, அவரது நல்லியற்கையானது, காஸ்ஸியோனிடத்தில் தென்படுகின்ற குணத்தையே மதித்து அவன் குற்றங்களைக் காண்கின்றதில்லைபோலும்.
இது உண்மை யல்லவா?
(ராடரிகோ வருகின்றான்)
இயா:- (ராடரிகோவிற்கு ஒருபுறமாய்) என்ன செய்தி இப்பொழுது
ராடரிகோ? அடுத்த அதிகாரியைப் பின்பற்றிச் செல்; போ. (ராடரிகோ போகின்றான்)
மான்:- மேன்மைக்குணம் வாய்ந்த மூரன், தனக்கே அடுத்ததாம் பதவியை ஊன்றிய ஊனமுடைய ஒருவனில் ஆபத்திற்குள்ளாக்குவது மிகவும் இரங்கத்தக்கதே.
அப்படியதனை மூரனிடம் சொல்வது யோக்கியமான காரியமாகும்.
இயா:- இவ்வழகிய தீவிற்காகவும் நான் மாட்டேன்: காஸ்ஸியோவை நான் நன்கு நேசிக்கின்றேன்; இத்தீமையினின்று அவனைக் குணப்படுத்த அதிகம் செய்வேன்.
இதோ கேள்! என்ன அரவும்?
[“உதவிக்கு வாருங்கள்,” “உதவிக்கு வாருங்கள்” என்று கூவுங்குரல் உள்ளே கேட்கின்றது.]
———————–
உரைவேந்தர், சிந்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களைப் பற்றி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை முன்னாள் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் வரைந்த நெடுங்கட்டுரை (5)
புத்த சமயத்தின் நிலையை ஆராய்வது போல, சமண சமயத்தின் நிலையையும் ஆராய்கிறார் ஒளவை.
இதன் நிலையும் புத்த சமயத்தின் நிலையை ஒத்து, மக்கள் வழக்கிலில்லாமல் கோட்பாட்டு முரண்பாடுகளுடன் வாழ்கின்ற நிலையை எய்தியது என்று கூறுகிறார்.
இவ்விடத்தில் பிள்ளையவர்கள் மிக முக்கியமான ஒரு கருத்தினைக் கூறுகின்றார்.
அக்காலத்தில் வேந்தரிடையே நிகழ்ந்த போர்கள் கோயில்கட்குக் கேடு செய்ததில்லை.
பிற்காலத்தே கோயில்கள் பெருஞ்செல்வ நிலையங்களாக மாறியது காரணமாகப் பகைவர் கைபட்டுச் சீர்குலைந்தன.
இது நிற்க பல்லவர் காலத்தே இக்கல்விக் கடிகை பகைவரது தீச்செயல்கட்கு இரையானதற்கு அரசியலில் தொடர்பு வைத்துக்கொண்டதே காரணமாகும் (சைவ இலக்கிய வரலாறு, ப.26).
இது எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை என்பதனை அண்மைக் காலத்தில் வெளிவந்த
கோ. கேசவன் போன்றோருடைய ஆய்வுகள் காட்டுகின்றன.
பொருள் முதல்வாதம் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லாமலேயே ஒளவை இக்கருத்தினைக் கூறியிருப்பது வியப்பாக உள்ளது.
இதன் பின்னர், சைவ சமயம் மக்களிடையேயும் சிந்தனையாளர்களிடையேயும் வாழ்ந்திருந்ததை எடுத்துக்காட்டுகிறார்.
இதன் தொடர்ச்சியாகச் சைவ இலக்கியங்கள் பற்றிய வரலாற்றுக்குப் பிள்ளையவர்கள் வருகின்றார்.
ஒரு வரலாற்றை எழுதத் தொடங்குவதற்கு முன்னர், ஒளவையவர்கள் செய்து கொள்கின்ற முன் வரைவுத் திட்டங்களும், ஆய்வு முறையியலும் வியப்பிற்குரியவை.
பிறரால் பின்பற்றத்தக்கவை.
முதற்கண் நாட்டின் புவியமைப்பு, அரசியல், சமயம், பின்னர் இலக்கியங்கள் என்றவாறு பருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு (Macro to Micro) ஆய்வுப் பயணத்தை ஒளவை மேற்கொண்டிருப்பது புலனாகிறது.
சைவ இலக்கியங்கள் பற்றிய வரலாற்றுப் பகுதியில் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாரூரர், சேரமான் பெருமான், ஏனாதி சாத்தஞ்சாத்தனார், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், சேந்தனர், நந்திக்கலம்பகம், ஒளவையார், சிலர் கண்டராதித்தர், நம்பியாண்டார் நம்பி, வேம்பையர்கோன் நாராயணன் போன்றோர் பற்றி ஆய்கின்றார்.
இப்பகுதியிலும் முன்னர்க் கூறப்பட்டது போன்றே ஆய்வு முறை தெளிவாகப்பின்பற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சான்றோரைப் பற்றிக் கூறும்போதும்
1. அவர் பற்றிய வரலாறு
(பெரிய புராணத்தின் அடிப்படையில்)
2. பிற நூல்களில் அடியார் பற்றிக் கூறப்படும் குறிப்பு,
3. அடியவரின் கால ஆராய்ச்சி,
4. அடியவர் வரலாற்றாராய்ச்சி (இதில் அடியவர்களின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் செய்திகளின் முரண்பாடுகளை ஆய்கிறார்),
5, திருப்பதிகங்களின் எண்ணிக்கை,
6. திருப்பதிகங்களின் ஆராய்ச்சி (இப்பகுதியில் பாடல்களின் உள்ளடக்கச் செய்திகள் முறையாக ஆராயப்படுகின்றன.),
7. பாடல்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பிற சான்றோர்,
8. பாடல்களில் இடம்பெறும் திருத்தலங்கள்,
9, திருப்பதிகங்களின் இலக்கிய நலங்கள், (சொல் நலம், அரிய சொல்லாட்சிகள், முந்துநூல் வழக்கு),
10. சான்றோர்களைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகள் என்றவாறு இயல்களை அமைத்திருக்கிறார்.
இன்றைய ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் ஒளவையிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய அரிய செய்தியாக இது தோன்றுகிறது.
இந்நூலில் உள்ள பதினைந்து இயல்களிலும் இதே மாதிரியான வைப்புமுறை உள்ளது என்று கூறவில்லை.
இவற்றுள் ஒன்றிரண்டு கூடியும் குறைந்தும் மாறியும் தேவைக்கு ஏற்ப அமைக்கப் பட்டுள்ளன.
ஆய்வுப் பொருளுக்கு ஏற்ற அணுகுமுறை இயல் வைப்புமுறைகளை அமைத்துக்கொள்ளுதல், அதே சமயம் உண்மை அறியும் நோக்கில் அமைந்திருக்கின்றன.
ஆய்வுப் பயணத்தடத்திலிருந்து விலகாமை என்ற அரிய பண்புகளைக் காண முடிகிறது.
பெருவழக்காகக் காணப்படுகிற இலக்கிய வரலாறுகளில் எடுத்துக்காட்டப்படும் பாடல்களைத் தவிர்த்துப் புதிய பாடல்களைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தும் முறையினையும் ஒளவை பின்பற்றியுள்ளார்.
சமுதாய ஏற்பினை இனங்காணுதல் குறிப்பிட்ட ஓர் இலக்கியப் படைப்பிற்கு அல்லது இலக்கியாசிரியனுக்குச் சமுதாய ஏற்பு எந்த அளவுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட புள்ளிவிவர அணுகுமுறை இன்றைய ஆய்வுகளில் பயன்படுத்தப் படுகிறது.
இதற்காக ஆய்வுக்குரிய இலக்கியத்திற்குப் பிற்பட்ட காலங்களில் தோன்றிய இலக்கியங்கள், இலக்கிய மல்லாத பிற சான்றுகள் முதலியவற்றில், (Extra Literary or Non literary sources) தரவுகளைத் தேடித் தொகுப்பது உகந்த அணுகுமுறை என்று ஒப்பிலக்கியம் கூறுகிறது.
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் போன்ற பெருமக்களுக்கு எத்தகைய சமுதாய ஏற்பு இருந்தது என்பதைக் கல்வெட்டுக்கள், மக்கள் வரலாறுகள், கோயில் ஆய்வுகள், வழிபாடுகள் முதலிய துறைகளின்று தொகுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு ஒளவை மதிப்பீடு செய்கின்றார்.
ஒரு சான்று காணலாம்.
திருநாவுக்கரசரின் எடுத்த பொற்பாதம் என்ற தொடர், பிற்காலத் தில்லைக் கல்வெட்டு ஒன்றில், இவை அருளால் ஊர்க்கணக்கு எடுத்த பொற்பாதப் பிரியன் எழுத்து என்று இடம் பெறுகின்றது.
தில்லையில் ஊர்க்கணக்கராக இருந்த ஒருவர் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது.
இதன்மூலம் திருநாவுக்கரசரின் பதிகங்கள்,
பதிகத் தொடர்கள் மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கினை உணரமுடியும்.
ஒளவையவர்கள் ஒரு சிறிய தரவினைக் கூட விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக செய்தி.
ஏனாதி சாத்தஞ்சாத்தனார் என்ற சைவப் பெருமகனாரைப் பற்றி எழுதி முடித்தபின், ஏனாதி என்ற சொல்லாராய்ச்சியில் ஏற்பட்ட அரசியல்களை முழுமையாக ஆராய்கின்றார்.
ஏனாதி என்பது அரசன் தானை வீரன் ஒருவனின் திறன்களை வியந்து அளிக்கும் பட்டம் என்று விளக்கியபின் மு.இராகவையங்கார் கூறும் கருத்தினை மறுக்கிறார்.
இராகவையங்கார் ஏனாதி என்ற சொல் சேனாதி என்பதன் திரிபு என்று குறிப்பிடுவதை மேற்கோள் காட்டி, ஸேனாபதி, சேனைத் தலைவர் என்ற சொற்களே தமிழில் வழங்கி வருகின்றன என்ரும் சேனாதி என்ற சொல் தமிழிலேயே இல்லாதபோது மு.இராகவையங்கார் கூறுவது தவறு என்று கடிந்துரைக்கின்றார்.
தோன்றியிராத சொல்லொன்றை நாட்டி அதன் திரிபு இத்தமிழ்ச் சொல்லெனச் சொல்லுவது ஆராய்ச்சியாளர்பால் மறந்தும் தோன்றக்கூடாத குற்றமாகும் (சைவ இலக்கிய வரலாறு, ப.294) என்று உறுதிபடக் கூறுகின்றார்.
ஒரு மொழியைப் பிறிதொரு மொழிக்கு அடிமைப்படுத்துவது அம்மொழியைப் பேசும் மக்கள் உள்ளத்தை அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்பதை உலக வரலாற்றறிவு வெளிப்படுத்திவிட்டது. (சைவ இலக்கிய வரலாறு, ப. 295) என்கிறார்.
இத்தகைய மொழிப்பற்றும், உண்மையை உரைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் மனப்பதைபதைப்பும் உண்மை ஆய்வாளருக்கே உரியன;
வணிக நோக்கில் இன்று வெளிவந்திருக்கின்ற நூற்றுக் கணக்கான இலக்கிய வரலாறுகளில் ஒன்றி லேனும் இத்தகைய தூய தமிழ் உள்ளத்தினைக் காணலரிது.
இலக்கியப் பரவல் பற்றிய ஆய்வு பிற நாடுகளில் சைவ இலக்கியங்கள் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தினையும், ஒளவை அளவிட்டுக் கூறியுள்ளார்.
சேந்தனாரில் திருப்பல்லாண்டு இந்தோனேசியாவில் திருமண வீடுகளில் பல்லாண்டு பாடு என்று கேட்டுக்கொள்வதும் உடனே பெண்கள் மான்கடில் என்று தொடங்கிப் பாடுவார்கள் என்றும் ஜி.கே. வான்புரோக்(G.K. Vanborough, The People in the East Indies, pp. 349-50)`என்பவரின் நூலினை மேற்கோள் காட்டி ஒளவை நிறுவுகிறார்.
எனினும் இது மொழியியல் ஆய்வு அடிப்படையில் உறுதிப் படுத்தப்பட வேண்டியது.
இன்று காண அரிதாக உள்ள கடின உழைப்பும் ஆய்வு நேர்மையும் ஒளவையிடம் இருந்ததை உணர்ந்து கொள்ளலாம்.
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment