POST: 2022-11-15T09:41:26+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 79

– முனைவர் ஔவை நடராசன்

கலைஞர் படைத்த வரலாற்று வியப்பு !

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றிப் பேசுவது என்பது, கடலைக் கைக்குள் அடக்க முயல்வதைப் போன்ற செயல்தான்.

அவரைப்பற்றி என்ன பேசுவது? எப்படி பேசுவது?

சிந்தித்துப் பார்த்தால் மாணிக்கவாசகர் சொல்வதைப்போல ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பாரே அதைப்போல, கலைஞருக்குள் இருந்துதான் கலைஞரை எடுக்க வேண்டும்.

‘அங்கிங்கெனாதபடி’ ஆண்டவன் நிறைந்திருப்பான் என்று பக்தி இயக்கத்தவர் கூறுவார்களே அதைப்போல சென்ற நூற்றாண்டின் உச்சியிலிருந்து இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர் நம்மை ஆண்ட முத்தமிழறிஞர் கலைஞர்.

என் நினைவுகள் கலைஞருடைய இலக்கிய, அரசியல், சமுதாயச் சிந்தனைகளால் மட்டுமன்றி, அவர் மாண்புமிகு முதலமைச்சராகத் திகழ்ந்த காலத்தில் அவரிடம் பணியாற்றும் அரசு அலுவலர் என்ற நிலையில் நிலைத்துவிட்ட மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகளாலும் நிரம்பி வழிகிறது.

கம்பராமாயணத்தை எழுதிய கம்பர் தம்முடைய காவியம் சிறந்திருக்க, ‘சீவக சிந்தாமணியிலிருந்து ஓர் அகப்பை முகர்ந்து கொண்டதாகக் கூறினார் என்று ஒரு குறிப்பு உண்டு.

அதைப்போன்று இந்த எளியோரின் உரை சிறப்படையக் கலைஞரிடமிருந்து சிறிதளவு முகந்து கொண்டேன் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர்கள் எவ்வகையில் பார்த்தாலும், எழுதினாலும் தமிழகத்தின் இருபதாம் நூற்றாண்டு வரலாறு என்பதே திராவிட இயக்க வரலாறுதான்.

தந்தை பெரியாரோடும், பேரறிஞர் அண்ணாவோடும் இணைந்து திராவிட இயக்கத்தின் தொண்டுகளைத் தோள் சுமந்தவர் பெருந்தகை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அதனால் திராவிட இயக்க வரலாற்றின் பெரும்பகுதி முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாறாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தமது 60ஆம் ஆண்டில் (மணிவிழா ஆண்டு) கலைஞர் கூறுகிறார்.

“ திராவிட இயக்க வரலாற்றில் ஓர் எழுத்தாக இருந்து வார்த்தையாக மாறி உருவெடுத்து அறுபதாம் வயதில் ஓர் அத்தியாயமானவன் நான் ”

இப்படி, திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் அங்கிங்கெனாதபடி நிறைந்துவிட்டவர் கலைஞர் அவர்கள்.

இயல்பாகவே இவரிடம் இளமையிலேயே அமைந்திருந்த ‘போர்க்குணம்’, இவர் கண்ட களங்களில் எல்லாம் வெற்றிகளைக் குவிக்கச் காரணமாயிருந்து என்பதே உண்மை.

கலைஞரின் குடும்பம் திருவாரூக்கு இடம் பெயர்கிறது.

1936ஆம் ஆண்டில் கலைஞரைப் பள்ளியில் 6ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள்.

பள்ளியில் இடம் கேட்கிறார்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார், “ஆறாவது வகுப்பில் இந்தப் பையனைச் சேர்த்துக் கொள்ள முடியாது”
என்கிறார்.

அந்தப் பள்ளிக்கு எதிரில்தான் தெப்பக்குளம் இருந்தது.

கலைஞர் கூறுகிறார். “நீங்க என்னைச் சேர்த்துக்கலைன்னா இந்தக் குளத்திலே விழுந்து உயிரை விட்டுருவேன்” என்று கூறிக்கொண்டே குளத்தில் விழப்போகிறார்.

விளைவு? தடுத்து நிறுத்தப்பட்டார்.

6ஆம் வகுப்பில் இடமும் கிடைக்கிறது.

இடஒதுக்கீடுட்டுக்காகப் போராடும் குணம் இளமையிலே இவரிடம் இருந்ததை, (6ஆம் வகுப்பு மாணவப் பருவத்தில்) வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆமாம் கலைஞரைக் கூர்ந்து கவனித்தால் அவர் ஓர் ‘இளமை வியப்பராகத்தான் இருந்துள்ளார்.

கலைஞரின் இளமை வியப்பு என்பது அவருடைய போர்க்குணத்தில் மட்டுமல்ல, அவருடைய எழுத்தாற்றலில், செயலாற்றில் இன்றைக்கும் வியக்கத்தக்கதாகவே வளர்ந்து நிற்கிறது.

1924 ஜுன் 3 ஆம் நாள் பிறந்தவர் கலைஞர்.

அவருடைய 15ஆம் வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவருடைய அரசியல் பார்வையை, இந்தியா முழுவதையும் அவர் பார்த்த கோணத்தைப் புலப்படுத்தி வருகிறது.

அவருடைய நண்பர் ஒருவர், தியாகராசன் எனப் பெயர் கொண்டவர்.

அவர் அக்காலத்துக் காங்கிரசுக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தேசிய கீதம் பாடுவது வழக்கம்.

அப்படி ஒரு மாநாடு திருக்குவளையில் நடந்தது.

கலைஞர் அன்று அங்கே இருந்தார்.

தேசிய கீதம் பாடவேண்டிய தியாகராசனிடம்,

“வந்தே மாதரம்னு பாடதே, தப்பு, வந்தே ஏமாத்தறோம்னு தான் பாடணும்”
என்று சிரிக்காமல், பொய்யான பொறுப்புணர்ச்சியோடு சொல்லித் தருகிறார்.

தியாகராசனும் கலைஞர் சொல்லித் தந்தவாறே பாடி முடிக்கிறார்.

பிறகு அவர் தன் தந்தையிடம் புளியங்குச்சியால் அடிவாங்கியது தனிக்கதை.

கலைஞர் இச்செய்கையைக் குறும்பென்று கருதினாலும், அக்காலத்தில் காங்கிரசை எள்ளி நகையாடிய ‘காரியக்குறும்பு’ என்றே கருதலாம்.

1942ஆம் ஆண்டிலேயே தன்னுடைய கால்சட்டைச் பருவத்தில் கையகலத் தாளாக முரசொலியைத் தொடங்கி விடுகிறார்.

‘சேரன்’ என்ற பெயரில் அதில் எழுதுகிறார்.

‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து இதழை நடத்துகிறார்.

இவை மட்டுமன்றி விதவையின் துயரத்தை வரிகள் தோறும் பதிவு செய்து அவர்களுக்காக வாதிடும் கருத்தமைந்த ‘இளமைப்பலி’ எனும் எழுத்தோவியத்தை (18 வயதில்) பேரறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிடநாடு’ இதழுக்கு அனுப்புகிறார்.

அது ‘திராவிட நாடு’ இதழில் வெளிவருகிறது.

பேரறிஞர் அண்ணா திருவாரூருக்குச் சென்றபோது, அண்ணாவே “கருணாநிதியைப் பார்க்க வேண்டும்” எனக்கேட்கிறார்.

மாணவராகத் தம் முன்வந்து நின்ற ‘கருணாநிதியைக் கண்டு மகிழ்கிறார்.

இதில் தம்மை அண்ணாவிடம் நேரில் அறிமுகப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்த அக்காலத்திலேயே, தமது எழுத்துகளால் அண்ணாவிடம் அறிமுகமாகிவிடும் கலைஞரின் எழுத்தாற்றலை வியக்காமல் இருக்க முடியுமா?

இந்தப் பதினெட்டு வயதில் இப்படியெல்லாம் எழுத முடியுமா?

என வியப்பின் உச்சிக்கே நம்மை அழைக்கிறது

. ‘இளமைப்பலி’ என்ற எழுத்தோவியம், அதில் ஒரு பகுதி இளம்வயதில் விதவையாகிவிட்ட சிறுமியைப் பற்றியது.

“அவள் சிறுமி – பதினாறு வயது நிரம்பிய பைங்கொடி –
எழில் ஒழுகும் பூங்கொடி; அன்னத்தை ஒத்த நடை; மின்னல் குலத்தில் பிறந்ததோ? பொன்னை உருக்கிப் பொலிந்ததோ? மலர்க் கூட்டமோ? அவள் எண்ணக்கடலில் எழுந்த காதற் கப்பல், ‘பணம்’ என்ற பெரும் புயல்காற்றினால் எதிர்க்கப்பட்டு நொறுங்கி மூழ்கிற்று” என எழுதுகிறார்.

கலைஞர் எழுதினார் என்பது செய்தி; ஆனால் இதை அவருடைய 58 வயதில் எழுதினார் என்பது வியப்பு; வரலாறு; அந்தச் சிறுமியின் நிலையைக் கூறும் பகுதியில் கலைஞரின் நடையழகும் கருத்தழகும் உச்சிமேல் வைத்து மெச்சத்தக்கவை:“

வைதீக போதனையால், அவள் நல்லுடை அணியா வண்ணம் தடுத்து; திலகமிடா வண்ணம் கெடுத்தது! ‘விதவை’ என்ற பட்டம் விரும்பிக் கொடுத்தது! துயரக் கணையைத் தொடுத்தது!
எனச் சமூகத்தின் மீது கணை தொடுக்கிறார் கலைஞர்.

கலைஞரின் எழுதுகோல் பிற்காலத்தில் மட்டுமல்ல தொடக்கக் காலத்திலேயே வருணாசிரமத்தின் வைரியாக விளங்கியது.

1942 லேயே சிதம்பரத்தில் ‘வருணாசிரம மாநாடு’ நடத்தபோது அதை எதிர்த்து ‘முரசொலி’ ஏட்டில் வருணமா? மரணமா? என எழுதியவர் கலைஞர் அன்றைக்குக் கலைஞருக்கு இப்படி ஒரு தலைப்பு – எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்த தலைப்பு தோன்றியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் போது மலைப்பாகவே இருக்கிறது.கலைஞர் அதில்

“பரணிபல பாடிப் பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச் சோதரர்கள் சிலபேர்கூடி
வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே மானங்காக்க மறத்தமிழா போராடு”
என்று எழுதுகிறார்.

இன்றைக்கும் கலைஞர் தந்த தலைப்பைப் போலவே ‘வருண பேதவாதிகள்’ மக்களிடையே வேற்றுமையை விதைத்து ‘மரணபயம்’ தருவதைத்தானே செய்து வருகின்றனர்.

கலைஞரின் 18 வயது வியப்புகளின் இன்னொன்று அவர் ‘தமிழ் நாடு தமிழ் மாணவர் மன்றம்’ தொடங்கியது.

இதுவும் 1942ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய வியப்புகளில் ஒன்று அதையும் காண்போம்.

1939ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சியை வேருன்றச்செய்யப் பலர் முயன்ற காலம் அவர்களுள் ஒருவர் பள்ளிச் சிறுவனான கலைஞரைச் சந்திக்கிறார்.

கலைஞர் ‘மாணவ நேசன்’ இதழைக் கையெழுத்து ஏடாக நடத்திவந்த காலமது.

அதைக்கையால் எழுதி ஐம்பது படிகள் எடுத்து வெளியிடுவதில் உள்ள இடர்ப்பாட்டைப் போக்கும் வகையில்தான் ‘முரசொலி’யை அச்சிட்ட துண்டு வெளியீடாகத் தொடங்கினார் கலைஞர்.

இந்தச் சூழலுக்கு முன்புதான் பொதுவுடைமைக்கட்சித் தோழரின் சந்திப்பு நிகழ்ந்தது.

அவர் அப்போது உருவாக்கியிருந்த ‘மாணவர் சம்மேளனம்’ என்ற அமைப்பைப் பற்றிக் கலைஞரிடம் எடுத்துக்கூறி, கலைஞரை அதன் அமைப்பாளராக இருக்க வேண்டும் என்றும் திருவாரூர் பள்ளியில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுதந்திரம், சமாதானம், சமத்துவம் என்றெல்லாம் கருத்தேந்தி பணியாற்றும் வாய்ப்பு என்பதால் கலைஞர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

மொழி, இன, நாட்டுணர்ச்சியும் பகுத்தறிவுணர்ச்சியும் வளர்ந்து கொண்டிருந்த காலம் அது.

கலைஞரின் அமைப்பாற்றலால் 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் காலப்போக்கில் நிலைமை வேறானது.

சம்மேளத்தின் தேர்தல் நடந்து, அதில் கலைஞரே செயலாளரான போதிலும் சம்மேளத்தின் நோக்கும் போக்கும் வேறு திசையில் செல்லத் தொடங்கின.

சம்மேளத்தில் காங்கிரசு, பொதுவுடைமைத் தாக்கங்கள் அதிகமாயின.

‘தமிழ் வாழ்க! இந்தி வளர்க’ என்பதைச் சம்மேளத்தின் முழக்கமாக அமைக்கலாம் எனக் காங்கிரசார் கருத்துரைத்து சம்மேளனத்தைக் கைப்பற்ற முனைந்தனர்.

கலைஞர் வரைந்து முடிவெடுக்கிறார்.

சம்மேளனப் பொருளாளர் சிதம்பரத்தின் வீட்டுக்குச் செல்கிறார்.

அதுவரை சேர்ந்த உறுப்பினர் கட்டணம் ரூ100 ஐயும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

சம்மேளனத்தைக் கலைத்துவிடுகிறார்.

உறுப்பினர் சிலருக்குத் திருப்பித்தரப்பட்ட ரூ.25 போக ரூ75 மீதமிருந்தது.

இத்தொகைக்கரியவர் 150 பேர் அவர்கள் கலைஞருடன் இருக்கவே விரும்பினர்.

இவர்களை வீணில் விட்டுவிட விரும்பாத கலைஞர் அவர்களைக் கொண்டு அன்று மாலையே ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்குகிறார்.

அதே காலத்தில் வேங்கடராமன் என்பவர் சேலத்தில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை நடத்திவந்தார்.

அவர் தொடர்பு கிடைத்ததும் திருவாரூர் மன்றமும் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ எனப் பெயரிடப்பட்டு வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.

இதன் தொடக்க விழா 1942இல் நடைபெற்றது.

இதன் கிளைகளைத் தஞ்சை மாவட்டத்திலும் பிற இடங்களிலும் நிறுவுதற்கும் கலைஞர் முயன்றார்.

இம்மன்றத்தின் ஆண்டு விழா 1943இல் நடைபெற்றது.

இவ்விழாவில் உரையாற்றியவர்கள் யார் யார் தெரியுமா?

இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், திரு.கே.ஏ.மதியழகன் ஆகியோர் இந்த ஆண்டு விழாவிலே உரை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இவர்கள் பேராசிரியர், நாவலர் என்ற சிறப்புப் பெயர்களையெல்லாம் பெறாத காலம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்கள் இவர்களையெல்லாம் தாம் தொடங்கிய ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின்’ ஆண்டு விழாவிற்கு அழைத்துள்ளார் என்றால், கலைஞருடைய உணர்வையும், செயலாற்றும் திறனையும் வியக்காமல் இருக்க இயலாது.

இந்நிகழ்ச்சியை இனமானப் பேராசிரியர் நினைவு கூறும்போது“ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களான அன்பழகனுக்கும், நெடுஞ்செழியனுக்கும் திருவாரூரிலிருந்து பேச அழைப்பு ரயிலில் கிளம்பினார்கள் கூட்டத்தில் பேசிவிட்டு கிளம்புகிற நேரத்தில் கூட்டம் ஏற்பாடு செய்த சுறுசுறுப்பான அந்தத் திருவாரூர் இளைஞரைக் காணவில்லை.

வந்தவர்களின் பயணச் செலவுக்காக, ஆறுரூபாய்க்கூடக் கொடுக்க வழி இல்லாமல் தனது வீட்டில் இருந்த வெள்ளிக்கிண்ணத்தை அடமானம் வைத்து ஐந்து ரூபாயுடன் வந்த அந்த இளைஞர் கருணாநிதி நடத்திய விழா முரசொலியின் ஆண்டு விழா. நடந்த ஆண்டு 1943.

கையில் பணமில்லாத காலத்தில் நெஞ்சில் கொள்கை ஏந்தி இயக்கப் பணிகளை இடையுறவு படாமல் நடத்திக் காட்டுவர்.

இந்த உறுதி அவருடைய இறுதிக்காலம் வரை இருந்ததை அவருடைய வாழ்க்கை வரலாறு காட்டுகிறது.

இந்தக் காலச் சூழலில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ் மண்ணில் மிகவேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.

திராவிட இயக்கத்தவர் அனைவராலும் கவனிக்கத்தக்கவராகவும் மக்கள் கருத்தில் புகுந்து கிளர்ச்சி செய்யும் கருத்தாழம் மிக்க கவிதைகளைத் தருபவராகவும் புரட்சிக் கவிஞர் சிறப்பிடம் பெற்றிருந்தார்.

புரட்சிக் கவிஞரின் கவிதைகள் கலைஞர் நெஞ்சிலும் குடிகொண்டன.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் தமது மன்றத்தின் (தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின்) ஆண்டு விழாவிற்கு ஒரு வாழ்த்துக் கவிதை அனுப்புமாறு கேட்டு மடல் எழுதுகிறார்.

கலைஞரின் 18ஆம் வயதில் 51 வயதுள்ள புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு மடல் எழுதும் துணிவு, தெளிவு, செயற்படுதிறன் எல்லாமே, கலைஞர் இளம் வயதிலேலேயே, எதிர்காலத் தலைவருக்குரிய ‘முழுத்திறமைகளோடு’ வளர்ந்தவர் என்பதைப் பறைசாற்றுகின்றன.

புரட்சிக் கவிஞருக்கும் கலைஞர், வாழ்த்துக் கவிதை அனுப்பக் கேட்டு 16.11.1942இல் தமது கையால் எழுதிய மடல் ,உயர் திரு. கவிப் பெரியார் அவர்களுக்கு தமிழன்பன் மு.கருணாநிதி வணக்கம் பல நிற்க, தமிழின் தற்போதைய நிலையினை நீக்கி ஆக்கத்தோடு செயற்படும் பொருட்டு தமிழ் மாணவர்கள் ஒன்று கூடி “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” நிறுவியுள்ளோம்.

தலைமை மன்றம் சேலம் கிளைகள் ஆங்காங்கு பல உள.

திருவாரூரிலும் கிளை ஒன்று நிறுவத் துணிந்துள்ளோம்.

திறப்பு விழாவிற்குத் தங்கள் வாழ்த்துச் செய்தியையும் வருகையையும் எதிர்பார்க்கிறோம்.

இங்ஙனம்
தங்களன்புள்ள
மு.கருணாநிதி

வணக்கம்.

தமிழ் மாணவர் மன்றத்தின் வாயிலாக தங்களது கவி ஒன்று வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.

தயவு செய்து எங்களை அலட்சியம் செய்யாமல் ஒன்று அனுப்பவும் மிகமிக வணக்கம்.

முகவரி
மு.கருணாநிதி (ஆறாம் உயர் வகுப்பு)
உயர்நிலைப்பள்ளி
திருவாரூர்.

இந்த மடலை இன்றைக்கு ஒரு மடலாக மட்டும் கருத முடியவில்லை. இந்த மடலில் மாணவப் பருவத்தில் கலைஞரைக் காணமுடிகிறது.

இம்மடல் எழுதப்பட்ட நாள் 16.11.1942. இதில் தன்னைத் தமிழன்பன் மு.கருணாநிதி என்று பாவேந்தருக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறார் கலைஞர்.

உயர்நிலைப்பள்ளி மாணவப் பருவத்தில் அமைப்பை உருவாக்கிப் பலரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றும் ஆற்றலும், இயக்க முன்னோடித் தலைவர்களை அழைத்து, அவர்களுடைய சொற்பொழிவுகள் வாயிலாக திராவிட இயக்க உணர்வுகளை மக்களிடம் சேர்க்கவேண்டும் என்ற சிந்தனையும் மொழிக்குத் தொண்டு செய்யத் துடித்த இளைஞர்களிடையே, வீறுமிக்க உள்ளத்தையும் கலைஞர் இளமையிலே பெற்றிருந்தார் என்பதற்குச் சான்றாக இம்மன்றமும் அதன் பணிகளும் திகழ்கின்றன.

இத்தகைய திறமைகளால்தான் அவருடைய பெரு வளர்ச்சி என்பது வரலாற்றுப் பதிவாகிறது.

தமது 18 வயதில் புரட்சிக்கவிஞருக்கு வாழ்த்துக் கவிதை கேட்டு, மடல் வரைந்த கலைஞர்தான் பின்னாளில் தமிழக முதல்வராகப் பாவேந்தரின் நூல்களை நாட்டுமையாக்கினார்.

இதுவும் கலைஞர் படைத்த ‘வரலாற்று வியப்பு’ என்று தான் கருத வேண்டும்.

கலைஞர் எனும் வரலாற்று நாயகனை, கண்டறிந்து பாவேந்தர் ஊக்க மூட்டியதையும் இந்த வாழ்த்துக் கவிதையில் காணமுடிகிறது.

கலைஞர் தம் வாழ்வின் இறுதி வரையில் தாம் பாவேந்தர்க்கு எழுதிய மடலைப் பற்றியும், அவர் தமக்களித்த வாழ்த்துக் கவிதை பற்றியும் அடிக்கடி தம் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் நினைவுகூர்ந்து மகிழ்ந்து பெருமை கொண்டார்.

பாவேந்தர் எழுதிய கவிதையின் உட்பொருள் தமக்கு மட்டுமே உரியதெனக் கருதாமல் தமிழக இளைஞர்களையெல்லாம் வழி நடத்தும் வரிகளாக அவற்றை இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துரைத்தார்.

பிற்காலத்தில் விழுப்புரம் அரசினர் கலைக்கல்லூரியில் (11.4.1982) உரையாற்றியபோது:

‘நம்முடைய வீரம் செறிந்த வரலாறுகளை மாணவர்கள் படித்திட வேண்டும்.

நம்முடைய மாணவர்கள் ஒரு காலத்திலே கவிதை எழுதினார்கள்.

“சேரர்கள் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே? வீரர் பாண்டியர் அரசு ஏன் கவிழ்ந்தது?

சோழர் உலவிய சோர்விலா நாட்டில் கோதைக் கொள்கை குவிந்தது எவ்விதம்?

வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில்”
என்று கவிதை எழுதப்பட்ட நாடு இது. மாணவப் பருவத்திலேயே எங்களுடைய மாணவர் மன்றத்திற்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டபோது:

“தன்பொழிவில் குயில்பாடும் திருவாரூரில்
தமிழ்நாடு தமிழ்மாணவர் மன்றங்காண்!
வண்மையொடும் உண்மையொடும் வாழ்ந்திடுங்காண்!

மக்களிடையே எழுச்சிக்கு மருந்தாகுங்காண்!
கண் மூடிக்குறி மறந்து தமிழர் தங்கள்
கலைமறந்த நெஞ்சத்தில் ஒளியெய்துங்காண்!

புண்வாய்ந்தேள் அல்லர்காண்!
திருவாரூரின் புலி இளைஞர்காண்!
தோள்கள் பூரித்தார் காண்!

வளரும் . . .
– முனைவர் ஔவை நடராசன்,
தொடர்புக்கு “thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *