POST: 2022-11-20T14:39:35+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் -136

ஆங்கிலவாணி

முனைவர் ஔவை அருள்

பேரறிஞர் டி. என். சேஷாசலம் அவர்கள் மொழியின் மாபெரும் வளர்ச்சியைப் பற்றி தமிழர்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக 85 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை இன்றும் அக்கருத்திற்கு ஏற்ப மின்னி மிளிர்வதை பின்வரும் கட்டுரையில் காணலாம்.

திருமலிந்தோங்கிய நிலவுலகத்தின் வடமேற்குக் கோடியிலே, பவளம் பொலிந்து விளங்கும் ஆங்கில நாட்டின் கலைச்செல்வத்தை ஆராயப்புகுமுன், அந்நாட்டு மக்களது வரன்முறையை ஒரு சிறிது அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

நாற்றிசையினுங் கடலினாற் சூழப்பட்ட பிரித்தானியா என்னுந் தீவின் வடபாலிலே ஒரு பகுதி, ஸ்காட்லாந்து எனப்படும்.

இவ்விருபகுதியும் நீங்கலாக எஞ்சி நின்ற பெரும்பாகம் இங்கிலாந்து (அங்கிளத்தரை) எனப்படும்.

‘அங்கிளர்’ என்னும் மொழிதிரிந்து ஆங்கிளர். ஆங்கிலர், இங்கிலீஷ் எனவாயிற்று.

தெற்குக்கரையிலே சுண்ணக் கற்பாறைகள் மருவிக் கடலிலிருந்து நோக்குவோருக்கு கரை வெண்ணிறமாகக் தோற்றுதலின், ஆங்கில நாட்டுக்கு அல்பியன் (albion) வெண்ணிறத்தீவு, சுவேதத்துவீபம் என்னுங் கவிதைப் பெயருண்டு.

மேற்றிசையிலே கடலுக்கப்புறத்திலே ஐர்லாந்து என்னும் தீவு உளது.

இது பசும் புற்றரைகள் செறிந்திருத்தலின், மரகதத் துவீபம் எனும் கவிதைப் பெயர் பெற்றது.

மேற்குறித்த நான்கு தேசங்களிலும் வாழும் மக்கள் வெவ்வேறு இனத்தினர். ஸ்கொட்ஸ், உவெல்ஷ், இங்கிலீஷ். ஐரிஷ் என்னும் நான்கு இனத்தினரும் ஆதியிலே வழங்கிய மொழிகளும் நால்வேறு ஆவன.

பூர்வத்தில் இவர்கள் கைக்கொண்ட சமயமும் வேறு.

ஆங்கிலர் வருவதற்கு முன் பிரித்தானியாவின் கீழ், தென்பாகங்களில் வாழ்ந்த மக்கள் பிரித்தன் என்னும் இனத்தினர்.

இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பின்றி நாகரிகங் குறைந்தவர்களாயிருந்தனர்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலே, இத்தாலி தேசத்தின் தலைநகராகிய உரோமாபுரியானது பெரிய சக்கரவர்த்திகளுக்குரிய இராசதானியாக விளங்கியது.

இச் சக்கரவர்த்திகள் தங்கள் இயற் பெயரோடு சீசர் என்னும் விருதுப் பெயரினைச் சார்த்தி ஆகஸ்தஸ் சீசர், திபேரியஸ் சீசர், கிளோடியஸ் சீசர் என்றித்தகைய பெயர்களைத் தாங்கினார்கள்.

சீசர் என்னும் பெயரினைத் தமக்கு இயற் பெயராகக் கொண்டவர் யூலியஸ் சீசர் எனப் பெயரிய பராக்கிரமசாலி, இவர் உரோமாபுரிச் சேனைகளுக்குத் தளபதியாகச் சென்று பல நாடுகளை மேற்கொண்டு உரோமச் சக்கராதிபத்தியத்தின் எல்லையை அகலச் செய்தார்.

கிளோடியஸ் சீசர் காலத்திலே கி.பி. 43 ஆம் ஆண்டிலே, பிரித்தானியாவின் தென்கீழ்ப்பாகங்கள் உரோமரது ஆளுகைக்குட்பட்டன.

வடபாலிலுள்ள கலிடோனியா எனப்படும் ஸ்கொட்லாந்தை உரோமர் கைப்பற்றவில்லை.

நானூறு ஆண்டுகளுக்கு உரோமர் ஆங்கில நாட்டை ஆண்டனர்.

அக்காலத்திலே அவர்கள் அமைத்த பாதைகளும் பாலங்களும் இன்றும் இருக்கின்றன.

உரோமச்சக்கராதிபத்தியம் நிலைகுலைந்த காரணத்தினாலே உரோமர் வெளியேறிய பின், வடபாலிலுள்ள ஸ்கொட்ஸ் தெற்கே வந்து ஆநிரைகளைக் கவர்ந்து பிரித்தானியரைச் சில காலந் துன்புறுத்தினர்.

ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே, ஜெர்மனி, ஸ்காண்டிநேவியா
(இக்காலத்து நோர்வே, சுவீடன்) நாடுகளிலிருந்து கடல் கடந்து சென்ற சாக்சனியரும்.

அங்கிளரும் பிரித்தானியாவின் கீழ்த் திசையிலே சில பகுதிகளைப் பற்றி ஆளுகை புரிந்தனர்.

தேன்மார்க் நாட்டினராகிய தேனர் அவரை மேற்கொண்டு தம்மாணை செலுத்தினர்.

ஐந்நூறு ஆண்டுகளுக்கு நாடு பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.

இவ்வாறு வந்து குடியேறினோர் பலருடைய கலப்பினாலே ஆங்கில மக்கள் தோன்றினர்.

வாடைக் காற்றுக் கஞ்சாது சிறு படகுகளிலே கடல்மீது சென்ற வைக்கிங்ஸ் என்னும் ஆங்கில முன்னோர் போர்த்தொழிற் பிரியராயிருந்தனர்.

பண்டைத்தமிழ் நாட்டிலிருந்த குறுநில மன்னரைப்போலப் பூர்வ ஆங்கிலரும் ஒருவரோடொருவர் போர்மலைந்துகொண்டிருந்தனர்.

சிறையாகப் பிடிக்கப்பட்டு உரோமாபுரியை அடைந்த ஆங்கில இளைஞர் சிலரைக்கண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத் தலைமைப் பீடாதிபதியாகிய பாப்பரசர் அவ்விளைஞர்கள் தோற்றப்பொலிவை நோக்கி வியந்து இவர்கள் ‘அங்கிள்ஸ்’ அல்ல எஞ்ஜெல்ஸ்’ (வானவர்) எனக்கூறி ஆங்கில நாட்டிலே கிறிஸ்தவ சமயத்தை பரப்பும்படி சில குருமாரை அனுப்பினர்.

கிறிஸ்தவ சமயம் புகுதற்கு முற்பட்ட காலத்திலே. ஆங்கிளசாக்ஸன் என்னும் பூர்வ ஆங்கிலத்திலே பெயவுல்வ் (Beowulf) எனப் பெயரிய காப்பியமொன்று இயற்றப்பட்டது.

இதன் பகுதிகள் இன்றும் இருக்கின்றன.

கிறிஸ்து சமயம் புகுந்த பின் பழைய போர்த்தொழிலைக் கைவிட்டு மக்கள் கட்டுக்கடங்கி வாழத் தொடங்கினர்.

கவிகளும் சமய சம்பந்தமான நூல்களை ஆக்கினர்.

கேய்ட்மன் (Caedmon) கயின்வுல்வ் (Cynewulf) அல்பிரட் அரசர் (King Alfred) என்றின்னோர் ஆக்கிய நூல்கள் சமய சம்பந்தமானவை.

கி.பி. 1066 ஆம் ஆண்டிலே, பிராஞ்சு தேசத்தின் வட பாலிலுள்ள நோர்மாண்டி என்பான், ஆங்கில நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டு அந்நாட்டின் முடிமன்னனானான்.

இவனை உவில் லியம்-த-கோங்கரர் – ‘வாகை. சூடிய உவில்லிய மன்னன்’ எனச் சரித்திர நூலாசிரியா கூறுவர்.

இம் மன்னனோடு நோர்மானிய, பிராஞ்சியர் அநேகர் ஆங்கில நாட்டிலே குடியேறினர்.

ஆங்கில மொழியும் நோர்மானிய பிரஞ்சுப்பதங்களை ஏற்று வழங்கத் தொடங்கியது.

அதனாற் பாஷையானது வளமெய்தியது.

ஆயினும், நாட்டிலே அரசியற் கலக்க மிருந்தமையின், பெரிய நூல்கள் தோன்றவில்லை.

முந்நூறாண்டின் எல்லையிலே நோர்மான் பிராஞ்சியர் வேறுபாடின்றிக் கலந்து ஆங்கிலரோடு ஒன்றாயினர்.

நாட்டிலும் சமாதானம் நிலவியது.
———————–
உரைவேந்தர், சிந்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களைப் பற்றி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை முன்னாள் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் வரைந்த நெடுங்கட்டுரை (5)

காப்பிய ஆய்வு

ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களின் மிகக் குறிப்பிடத்தக்க அடுத்த பகுதி அவர் எழுதியுள்ள சிலப்பதிகார ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி, சீவகசிந்தாமணி ஆராய்ச்சி முதலியவையாகும்.

இதே முறையில் இந்நூல்களுக்கெல்லாம் அவர் எழுதியுள்ள உரைநடை வடிவிலான சுருக்க நூல்கள் மிகவும் முக்கியமானவை என்று தோன்றுகின்றன.

இத்தகைய நூல்களுள் சீவக சிந்தாமணி ஆராய்ச்சி இங்குப் பேசப்படுகின்றது.

இந்நூல் சீவக சிந்தாமணி பற்றிய முழுமையான உள்ளடக்க ஆய்வாகிறது.

நூலாசிரியர், நூல்பாடிய வரலாறு, நூலாசிரியர் காலம், நூற்பொருள், கிளைக்கதைகள், கதைமாந்தர் குணம் செயல்கள், நூற்பொருள் ஆராய்ச்சி உள்ளிட்ட இருபது இயல்களில் சீவகசிந்தாமணியின் நலன்கள் முழுதும் விரித்துரைக்கப்படுகின்றன.

ஒளவையவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இக்காவியம் பற்றி விமரிசையாகக் கூறியிருப்பினும் இது சமூகத்தில் ஏற்படுத்திய எதிர் விளைவுகளைக் குறிப்பிடவும் தவறவில்லை.

வினைக்கொள்கையின் (Theory of Karma) பயன் பற்றி இந்நூலில் பிள்ளை கூறுவது புதிய கோணத்தில் அமைந்திருக்கிறது.

அவர் ஒருவர் பிறரால் துன்புறுத்தப்பட்டபோது துன்பம் செய்தார் பால் வெறுப்புற்று மேலும் பகை வளர்வதற்குரியவற்றைத் தாம் செய்து கெடாது அரண் செய்தல் வேண்டி, அவரால் தமக்குற்ற துன்பத்திற்குக் காரணம் தமது பண்டை வினையே என அமைதல் வேண்டும் என்றற்கெழுந்த வினையுணர்வுக் கொள்கை என்று கூறுவது (சீவக சிந்தாமணி ஆராய்ச்சி, ப. 239) புதிய அணுகுமுறையாகத் தோன்றுகிறது.

சீவக சிந்தாமணி சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தால் இவ்வினையுணர்வுக் கொள்கை அழுத்தம் பெற்றது என ஒளவை கூறுகிறார்.

வினையுணர்வுக் கொள்கையை எல்லாச் செயற்கண்ணும் புகுத்தி, அதன் வீறுபாடு நாட்டு மக்கள் மனத்தில் வேரூன்றி நிற்பதற்கு இக்காவியமும் இதனைப் பின்பற்றி எழுந்த நூல்களும் காரணமாயின.

இதன் பயனாக மக்கள் மனத்தில் தமக்கென இறைவன் அருளிய மனவுணர்வு வன்மையொன்று உளது.

அதனால் செயற்கு உரியவற்றைத் தீதறச் செய்து ஒருவர் நலமடைதல் கூடும் என்ற தன்னம்பிக்கை (Trust in one’s own self) குன்றுவதாயிற்று (சீவகசிந்தாமணி ஆராய்ச்சி, ப. 240) என்று துணிந்து கருத்துக் கூறுகிறார்.

ஒரு காவியத்தை எவ்வாறு படிக்க வேண்டும் என்றும் எதற்காகப் படிக்க வேண்டும் என்றும் பிள்ளையவர்கள் தெளிவான கருத்துரைகளை முன்வைக்கிறார்.

காவியத்தைப் படிக்கும்போது தள்ள வேண்டுவனவற்றைத் தள்ளிக் கொள்ள வேண்டுவனவற்றைக் கொண்டு படித்தல் வேண்டும்.

காவியத்தை எதற்காகப் படிக்க வேண்டும் எனில், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ளவும் பண்புகளைச் செம்மைப் படுத்திக்கொள்ளவும் தான் படிக்க வேண்டும் என்ற கருத்தினைக் கூறுகிறார்.

இலக்கியத்தினைச் சமுதாயப் பயன்பாட்டுக்கு உரியதாகக் கருதும் பிள்ளையவர்களின் பார்வையும் இதில் புலனாகிறது.

இன்றைய ஓர் ஆய்வு என்ற வகையில் பல ஆய்வுகளுக்கு இந்நூல்கள் முன்மாதிரியாக அமைகின்றன.

இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைத் தொடங்கும் முன்னர் இத்தகைய நூல்களை ஆழ்ந்து கற்றால் அவர்களது ஆய்வுப் பார்வை கூர்மை பெறக்கூடும்.

கட்டுரை நூல்கள்:

ஒளவைத் தமிழ்

ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதியுள்ள ஒளவைத் தமிழ் என்ற நூல் அவரது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக (1953-ல்) வெளிவந்திருக்கிறது.

தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் பற்றி ஒளவையவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இவை.

இவற்றிலும் பிள்ளையவர்களின் தனித்த ஆய்வுத் திறனைக் காணமுடிகின்றது.

எந்தவொரு இலக்கியப் படைப்பினையும் தனித்த நிலையில் கணித்துவிட இயலாது.

ஓர் இலக்கியத்திற்கு அதற்கு முந்தைய இலக்கிய மரபுகளில் வித்துக்கள் காணப்படும்.

அவ்விலக்கியத்தின் காலத்திற்குப் பின்னரும் அதன் வீச்சுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

இது இயக்கவிதி, ஒளவையவர்கள் இதனை பிரக்ஞை பூர்வமாக அறிந்தோ அல்லது அறியாமலோ தம் ஆய்வுகளில் செய்து காட்டுகிறார்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பற்றிய ஆய்வில் பாவைப்பாடல்களின் தோற்றத்திறனைப் பண்டைய இலக்கியங்களில் தேடுகிறார்.

பாவைப்பாடல்களின் பல்வேறு திறன்களை ஆராய்கிறார்.

தமிழகத்தில் புகழ் பெற்ற பாவைப்பாடல்கள் சயாம் நாட்டிலும் நிலவுவதைப் பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

முடிசூட்டு விழாவில் ஓதப்படும் மந்திரம் லோரிபாவாய் என்றழைக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.

திருவெம்பாவை, திருப்பாவை விழா லோ-ஜின்–ஜா என்றழைக்கப் படுவதையும் சுட்டுகிறார்.

இதற்காக இந்திய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு கல்வெட்டுத் தொகை நூல்களிலிருந்தும் சான்றுகள் காட்டுகின்றார்.

H.G. குவாரிட்சு என்பாரின் சயாம் நாட்டு அரசு வாழ்க்கை (The Lord Chamberlain Department of the Court of Siam) என்ற ஆங்கில நூலின் கருத்துக்களையும் தக்கவாறு மேற்கோளாகப் பயன்படுத்துகிறார்.

ஒளவையவர்களின் சங்க இலக்கிய அறிவும், சித்தாந்தத் தெளிவும் ஏனைய கட்டுரைகளில் நன்கு புலனாகின்றன.

நந்தா விளக்கு

இவருடைய பிறிதொரு கட்டுரைத் தொகுதி நந்தா விளக்கு என்ற நூலாகும்.

இக்கட்டுரை நூலின் தொடக்கத்தில் கட்டுரை என்பதற்கு விளக்கம் தருகிறார்.

எடுத்த ஒரு பொருளைப் பற்றி எழும் நினைவுகளைக் காரண காரிய நெறியில் முறைப்படுத்திப் பிறர் உள்ளம் கொள்ளும் வகையில் எழுதிக்காட்டுவன கட்டுரைகள் (முன்னுரை, ப.1) என்று கூறுகிறார்.

பண்டைத்தமிழகம் என்ற கட்டுரையில் தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறை செய்து காட்டுகிறார்.

பண்டைத்தமிழர் நாகரிகம், வேளிர்கள் செய்த நற்பணிகள் முதலியவை பற்றிக் கூறுகிறார்.

ஒரு காலத்தில் சேரவரசு கொங்குநாடு முழுவதும் பரவி இருந்ததைக் குறிப்பிட்டு, இரண்டு வஞ்சி நகரங்கள் தலைநகராக இருந்தன என்பதைக் கூறுகிறார்.

இரண்டாவது வஞ்சி நகரம் கருவூராக மாறிற்று என்று கூறிப் பிற்காலச் சோழவேந்தரின் கொங்கு வஞ்சி இராசராசபுரம் என்ற பெயர் பெற்று முடிவில் அதுவும் தேய்ந்து தாராபுரம் என்ற பெயருடன் இன்று நிலவுவதாயிற்று என்று கூறுகிறார். (நந்தா விளக்கு, ப.12. நாகலிங்கம் அண்டு கம்பெனி, புது மண்டபம், மதுரை 1954)

இதேபோல் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் , கல்வெட்டுக்கள் பற்றியும் ஒளவையவர்கள் அரிய செய்திகளைக் கூறியுள்ளார்.

வரலாற்று நூல்கள்

பிள்ளையவர்களின் இலக்கிய அறிவும் வரலாற்றறிவும் புலப்படும் பிறிதொரு நூல் மதுரைக்குமரனார் என்ற நூலாகும்.

இதில் கோனாட்டு எறிச்சலூர் மதுரைக்குமரனார் பாடிய பாடல்களை ஆராய்ந்திருக்கிறார்.

இதில் கோனாடு என்பது இன்றைய புதுக்கோட்டைப் பகுதி என்பதை நிறுவுகிறார்.

வரலாற்றினை எழுதும் போதும் இலக்கிய நயத்துடனான நடையினைப் பயன்படுத்துதல் இவரது தனித்தன்மை ஆகும்.

இளஞ்சேட்சென்னியின் வீரத்தையும் வலிமையையும் மக்களும் சான்றோரும் பலபடப் பாராட்டுவது உண்டு என்று கூறும் பிள்ளை பின்வருமாறு எழுதுகிறார்.

சான்றோரிடையே வேந்தர்களின் போர்ச்செயல்கள் பொருளாகப் பேச்சு நிகழுமேயன்றி வேறு பொருள் பற்றிய பேசுதற்கு இடமேது?

வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் மக்கள் உள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. (ப.98) என்றெழுதுகிறார்.

இதில் வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும் என்பது தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாவாகும்.

இந்நூற்பாவின் ஒரு வரிசை உரைநடையிலேயே தக்கவாறு பெய்து எழுதும் திறன் பெற்றிருந்தார் பிள்ளையவர்கள்.

ரசிகமணி டி.கே.சி. முத்தொள்ளாயிரம், கம்பராமாயணத்தில் மிகுதியாக ஈடுபாடு கொண்டு அவற்றைப் பயில்வதிலும் பிறர்க்கு எடுத்துரைப்பதிலும் காலத்தைச் செலவிட்டவர்.

அதுபோல் ஒளவை துரைசாமிப் பிள்ளை சங்க இலக்கியச் சுவையில் தன்னை மறந்து தலைப்பட்டவர் என்பதை இச்சிறிய நூல் எடுத்துக்காட்டுகிறது.

சங்க இலக்கியங்களைப் பயில்வது பண்டிதர் தொழில்.

நமக்கு பாவங்கள் நிரம்பிய முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் போதும் என்று டி.கே.சிதம்பரநாத முதலியார் கூறியதாக ஒரு செய்தி அவரைப் பற்றிய நூல்களில் உண்டு.

ஒளவையின் சங்க இலக்கிய நூல்களை டி.கே.சி. படிக்கவில்லை. படித்திருந்தால் அவரது பார்வை சங்க இலக்கியங்களில் படிந்திருக்கும்.

மேலும் சில புது வரவுகள் சங்க இலக்கியங்களைப் பற்றி வந்திருக்கும் என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு என்ற நூலும் ஒளவையவர்களின் வரலாற்று அறிவுக்குத் தக்க சான்றாக அமைகின்றது.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் சித்தாந்த நூல்கள், வரலாறு என்றவாறு பலவகைகளில் தமது எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்.

இவருடைய நூல்கள் பலவற்றிலும் ஆழ்ந்து பயணம் மேற்கொள்ளும் ஒருவன் எந்த இடத்திலும் முரண்பாட்டினைக் காணவியலாது.

நந்தா விளக்கு நூலில் கருவூர்ச் சேர மன்னர் வரலாற்றைப் பற்றிக்கூறும் செய்திகள் பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு என்ற நூலில் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பற்றிக் கூறுமிடத்திலும் அதிகமான இலக்கிய மேற்கோள்கள் இடம் பெறுகின்றன.

இவ்வாறு மறதியோ முரண்பாடுகளோ இல்லாமல் பல்வேறு நூல்களை எழுதுவது சாதாரணமான மனித மூளையின் செயல்பாடு என்று கருதமுடியாது.

இன்று தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பயன்படுத்தப்படுகின்ற பெருங்கணினி (Super Computer) போல் நினைவாற்றலும் செய்திகளை ஒருங்கிணைக்கும் செயல்திறனும் உடைய மூளையினை உடையவர்களால் தான் இது போன்ற செயல்களைச் செய்யவியலும்.

ஒளவை துரைசாமிப் பிள்ளை இறையருளினாலும் தமது இடையறாத தொடர்ந்த படிப்பினாலும் முயற்சியினாலும் இத்தகைய திறன்மிகு அறிவாற்றலைப் பெற்றிருந்தார் என்று தோன்றுகிறது.

“சங்க நூற்கடலில் தோய்ந்தெழு கொண்டல்

சைவசித்தாந்தத்தின் திலகம்
மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை
மலர்த்தும் வான்சுடர்,

வள்ளலார் நூலின்
இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி

இமயத்தைப் புலமையால் தாழ்த்தும்
துங்கமார் ஒளவை நம் துரைசாமித் தோன்றல்……..”

என்னும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் கவிதை மிகையன்று.

உண்மை.
வளரும் . . . .

– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *