செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 82
திராவிட இயக்கப் பரப்புரைக் களம்
– முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
கலைஞரின் நினைவுகள் எனும்போது அவருடைய ‘படைப்புலகிற்குள்’ நுழையாமல் இருக்க முடியாது.
கவிதையா, மடல்களா, கட்டுரையா, நாடகமா, பாடலா, உரை இலக்கியங்களா, சிறுகதையா, புதினமா, வரலாற்றுப் புதினமா, திரை ஓவியங்களா எதையென்று கூறுவது?
தமிழில் அவர் தொடாத துறையில்லை.
அவருடைய அரசியல் நுழைவுக்கும், எழுத்துப் பணிக்கும் காரணமாக அமைந்த சூழலை கலைஞரே கூறுகிறார்.
“எனக்கும் ரசனை உண்டுன்னாலும், அன்னைக்கிருந்த எந்தக் கட்டுப்பாட்டையும் ஏத்துக்க முடியலை.
முடி வெட்டுறதில் துவங்கி எல்லாவற்றையும் எதிர்த்தேன்.
வீட்டில் சொல்லிப் பார்த்துட்டு விட்டுட்டாங்க.
ஒவ்வொரு அடி வைக்கும் போதும் நான் போராட வேண்டியிருந்தது.
படிக்கிறதுக்குக்கூட காவல்துறை அப்போது என்னை நடத்திய விதம் கடுமையான சித்ரவதைகளை நான் சந்திக்க வேண்டியிருந்தது.
என்னோட பழகினவங்கள்லே ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்தக் கொடுமைகள் எல்லாம் தெரியும்.
‘நெஞ்சுக்கு நீதியிலே கூட நான் அதையெல்லாம் பதிவு பண்ணல.
அந்த அவமானங்களை நினைச்சா இப்போக்கூட வலிக்கும்.
அப்போ நீதிக்கட்சித் தலைமையில் இருந்தவங்க, திராவிட இயக்கத்தின் தலைமையிலே இருந்தவங்களைப் பார்த்தா, ஒண்ணு நல்லா வசதியானவங்களா இருந்தாங்க.
இரண்டாவது சாதியில் இரண்டாவது அடுக்கில் இருந்தவர்களா இருந்தாங்க.
என்னை மாதிரி இரண்டிலும் அன்னைக்குப் பின் தங்கியிருந்தவங்க ரொம்பக்குறைவு.
அதுதான் நீதிக்கட்சி, திராவிடக்கட்சிகிட்டே என்னை நெருக்கமாகக் கொண்டுபோச்சு.
அப்பவே நெருப்பைக் கக்கின மாதிரி பேச, எழுத வைச்சது.
அதுக்குக்காரணம் எப்படியாவது நம்மை நாமே முன்னேத்திக்கணும்னு மனசுக்குள் இருந்த வேகம் தான்.
எழுத்து, திரைப்படம், நாடகம், அரசியல்னு எல்லத்திலேயும் அந்த வேகம் தெரியும்.
என்ன.. அந்த வேகம் இன்னைக்கு வரைக்கும் குறையலை.”
என்கிறார். சமுதாயக் கொடுமைகளைக் களையும் நோக்கமே இவர் எழுத்தில் மேலோங்கி நிற்கின்றன என்பதை இவருடைய படைப்புகள் எதைத் தொட்டாலும் உள்ளீடாகப் பொதிந்திருப்பதை நம்மால் உணர முடியும்.
திராவிடக் கோட்பாட்டின் தொடர்ச்சியான ஆற்றலைக் கலைஞரின் செயற்பாடுகளில் மட்டுமன்றிப் படைப்புகளில் முழுமையாகக் காணமுடியும்.
சமுகச் சீர்திருத்தம் பற்றிய ஆழமான சிந்தனைகள், பகுத்தறிவுக் கோட்பாடு என இருபெருந்தூண்களால் அவர் படைப்புகள் உயர்ந்தோங்கி நிற்கின்றன.
அவற்றில் இலக்கிய அழகுணர்வும், நாவன்மையும் ஒளிவீசுவதை நாம் காணமுடியும்.
கலைஞர் காலத்தில் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க மேடைச் சொற்பொழிவுகள், செய்தித்தாள், திரைப்படம் என்னும் மூன்று வழிகளே இருந்தன.
பெரியார் ஏற்றுக்கொள்ளாத திரைப்படத்துறை பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் இவர்கள் சிந்தனை வீச்சுகள் தங்குமிடமாயின.
திரைக்கலையை இவ்விருவரும் கையாண்ட பாங்கு இந்தச் சமுதாய மாற்றத்தை உண்டாக்கியது.
தமிழர்கள் எங்கிருந்தாலும் மூளைக்குள் புகுந்து கிளர்ச்சி செய்தன கலைஞரின் திரை உரையாடல்கள்.
இந்த மண்ணில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் கலைஞரின் உரையாடலை ஒருமுறையேனும் பேசிக்காட்டுவதும், அவருடைய திரைப்படங்களைப் பார்த்தேன் என்று கூறிக்கொள்வதும் அவர்களின் ‘சமுதாயத்தகுதி’ யாகவே மாறிப்போனது என்றால் மிகையில்லை.
தமிழ்த்திரையுலகில் இந்தியாவின் சுதந்திரத்தை வேண்டுகின்ற – அந்த உணர்வை மக்களிடம் தூண்டுகின்ற படங்கள் உண்டு.
ஆனால் ’சுயமரியாதை’ பேசிய படங்கள் கலைஞர் காலத்தின் அவரால் செதுக்கப்பட்ட கல்லெழுத்துக்கள்.
‘சுதந்திரம் வேண்டிய’ காலத்தில் வெளிவந்த புதியபூமி என்ற திரைப்படத்தில் கூட விடுதலை கிடைத்த பிறகு இந்த பூமி புதிய பூமியாக மாறும் எனக்கூறப்படவில்லை.
வறுமையின் மீதும், மூடநம்பிக்கைகள் மீதும், மக்கள் வேதனைகள் மீதும் அந்தப்படம்கூட சாட்டையை வீசவில்லை.
ஆனால் கலைஞரின் திரைக்கதை உரையாடலில் வெளிவந்த ‘பராசக்தி’ இந்தப் பழைய மரபுகளையும் பதுங்கல்களையும் குழிதோண்டிப் புதைத்தது.
இவர் பயன்படுத்திய திரைக்கதையின் உரையாடல்கள், குறிப்பாகப் ‘பராசக்தி’ சமுதாயத்தின் ஒவ்வொரு கோணல்களையும் குத்திக் கிழித்தன.
இத்திரைப்படத்தைப் பார்த்த மக்களின் சிந்தனையில் கட்டியிருந்த மடமை என்னும் சிலந்தி வலைகள் சிதையத் தொடங்கின.
வழக்கமான மக்களாக ‘பராசக்தி’ திரைப்படம் காணச்சென்றவர்கள் கலைஞரின் உரையாடல்களால் மூளைக்குள் தீ எரியும் மக்களாக வெளியே வந்தார்கள்.
கலைஞர், ‘பராசக்தி’ படத்திற்கு முன்பே ‘மருதநாட்டு இளவரசி’, அபிமன்யு உள்பட பலபடங்களுக்கு உரையாடல் எழுதிவிட்டார்.
இருப்பினும் அவை மன்னர்களின் கதைகளாக அமைந்ததால் அவற்றின் தாக்குறவு, சமுதாயத்தில் ‘உரையாடல் சுவைக்காக வந்தவை’ என்ற நிலையில் நின்றுவிட்டன.
சான்றுக்காக 1947இல் எம்.ஜி.ஆர்.கதாநாயகனாக நடித்த ‘ராஜகுமாரி’ படத்தில் ஒரு காட்சி
கதாநாயகி : நான் எட்டாத பழம்
நாயகன் : வெட்டும் கத்தி நான்
நாயகி : வைரக்கத்தியாகவே இருக்கலாம். அதற்காக யாரும்
வயிற்றில் குத்திக் கொள்ள மாட்டார்கள்.
நாயகன் : சிலரைச் சிலகாலம் ஏமாற்றலாம் பலரைப் பலகாலம்
ஏமாற்ற முடியாது.
பராசக்தி 1952இல் வெளிவந்தது.
மக்களின் சமகால வாழ்வின் பல்வேறு அவலங்களையும், அடுக்குகளையும் இப்படத்தின் கனல்தெறிக்கும் உரையாடல்களால் புரட்டிப்போட்டார் கலைஞர்.
இன்றுவரை ‘பராசக்தி’ படம் பாராட்டப்படுவதற்கு கலைஞரின் வல்லமை மிக்க உரையாடலே முதற்காரணமாய் நிற்கிறது.
‘பராசக்தி’ திரைப்படத்தால் கலைஞர் செய்த புரட்சிக்கு அளவே இல்லை.
பிற்காலத்தில் அவர் முதலமைச்சராகித் தீட்டிய திட்டங்களுக்கெல்லாம் அப்படத்தில் கலைஞர் முன்னுரை எழுதத் தொடங்கிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் குரலில்,
‘பிறக்க ஒரு நாடு; பிழைக்க ஒரு நாடு; தமிழனின் தலை எழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?’
என்ற கேள்வி இன்று வரை தமிழினம் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்வி அல்லவா?
இந்தியா விடுதலை பெற்ற சில ஆண்டுகளில் (1952) வெளிவந்த பராசக்தி, ‘விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம்’ என்ற கற்பனையில் மிதந்த மக்களுக்கு அவர்களின் ‘உண்மையான இருப்பு நிலையை’ உணர்த்திவிட்டது.
பால் வருமென்றும், தேன் வரும் என்றும் பாதையில் படுத்து உறங்கியவனின் போதை தெளியவைத்த படம் ‘பராசக்தி’ தான்.
சமுதாய விடுதலையும், பொருளாதார விடுதலையும் ஒரு சேரத்தமிழனுக்குப் பராசக்தி பார்த்த பிறகுதான் புரிந்தது.
இத்திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றிலும் கலைஞர் உரையாடல் ஒவ்வொன்றிலும் சமுதாயத்தின் கண்ணீரை, வறுமையை, வேதனையை வெந்தணல் வீசும் தமிழால் விளங்கவைத்தார் கலைஞர்.
வறுமையால் தான் பெற்ற குழந்தையைக் கதாநாயகி கொல்லப் போகிறாள்.
அதனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள்.
நீதிபதி : குழந்தையைக் கொல்வது குற்றம். ஆக்கப்பட்ட
பொருள்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தம்.
கதாநாயகி: சொந்தம். பட்டினிப்புழுக்களாய்த் துடித்தோம், நெளிந்தோம், அப்போதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிக்கவில்லை அரசாங்கம்.
அநீதியிடையே வாழ வேண்டாம்.
சிறப்புலகில் இன்பம் காண்போம் என்று சாவதற்குச் சென்றால், சட்டமென்ற கையை நீட்டிச் சொந்தம் என்ற சூழ்ச்சி மொழி பேசுகிறது அரசாங்கம், அதிசயமான அரசாங்கம்; அற்புதமான நீதி. என்கிறாள் மீண்டும்.
நீதிபதி : குழந்தையை எப்படியும் காப்பாற்ற வேண்டும்.
கதாநாயகி: ‘என் குழந்தை என்ன திருஞானசம்பந்தரா? பார்வதி வந்து பால்கொடுத்துக் காப்பற்ற’ எனும்போது, தமிழகத்தில் பரவிய பகுத்தறிவு வீச்சு எல்லை கடந்தது.
தாயகம் வந்து தங்கையைத் தேடும் குணசேகரனைக் காப்பாற்றுகிறாள் விமலா என்பவள்.
அவள் பேசும் பகுதி (குணசேகரனிடம்)யில்
விமலா : உனக்குத் தெரியாமல் சமூகத்தோடு சேர்ந்து முட்டாள் ஆகியிருக்கிறாய்…
நீ ஒரு சுயநலவாதி. உன் சொந்தத் தங்கைக்காக, அவள் வாழ்வுக்காகச் சுருண்டு போனாயே தவிர, நாட்டில் எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என்று நினைத்தாவது பார்த்தாயா, அதற்காக உன் நாவு அசைந்ததுண்டா, நெஞ்சு துடித்ததுண்டா என வினாத்தொடுக்கிறாள்.
இதில் முத்தாய்ப்பாகக் கலைஞர் விமலா பேசுவதாக.
விமலா: உன்னை ஏமாற்றிய நாடோடியைப் பாராட்டுகிறேன்.
நீ ஏழையாக ஆக்கப்படாவிட்டால், ஏழைகள் உலகத்தை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாய்; அப்படி ஒரு உலகம் இருப்பதாகவே உனக்குத் தெரியாது.
எனக் கலைஞர் தீட்டிய வரிகள் ‘ஏழைகள் உலகத்தை’ எட்டிப் பார்க்க வைத்தது.
இதில் வரும் இன்னொரு உடன் பிறப்பு பிச்சைக்காரர் மாநாடு நடத்துவதாகக் காட்டுகிறார் கலைஞர்.
கணவனையும் தந்தையையும் இழந்து கைக்குழந்தைடன் வாழும் கல்யாணியைப் பார்த்து , “இட்லிக்கடை வைப்பதுதான் பிழைப்பதற்கான வழி” என்று ஒரு பெண்மணி சொல்வார்.
கல்யாணி அதனைத் தரக்குறைவாக நினைக்க,
“தாலியறுத்தவருக்கெல்லாம் அதுதானேம்மா தாசில் உத்தியோகம்” என்பார் அந்தப்பெண்
. இப்போது சிந்தித்துப்பாருங்கள். கலைஞர் முதலமைச்சராகி ‘பிச்சைக்காரர் மறுவாழ்வுத்திட்டம்’ கொண்டு வருகிறார்; கைரிக்சா ஒழிப்புத் திட்டம் கொண்டு வருகிறார்; குடிசைப்பகுதி மாற்று வாரியம் உருவாக்குகிறார்.
இவையெல்லாம் பராசக்தி காலத்திற் (1952) முன்பிருந்த அவர் நெஞ்சில் அடைகாக்கப்பட்ட சீர்திருத்தச் சிந்தனைகள் என்பதில் ஐயமில்லை.
1948இல் வெளிவந்த ‘அபிமன்யூ’ படத்தில் அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் சூழ்ச்சி என்று சமகால அரசியலைப் பதியவைக்கிறார்.
1950இல் வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராசன்) பேசும் உரையாடல்:
“திறமையின் பெயர்ல சூதாட்டம் கூடக் கலையாகி விடுகிறது.
அந்தப் பட்டியலில் நான் களவாடுவதையும் கலையாகக் கருதுகிறேன்”
“புலி ஆட்டைக் கொல்லாமல் இருந்தால்,
கொக்கு மானைக் கொத்தாமல் இருந்தால்,
தவளையைப் பாம்பு விழுங்காமல் இருந்தால்,
நானும் கொள்ளையடிக்காமல் இருந்திருக்கலாம்.”
“சிங்கங்கள் உலவும் நாட்டிலே சிறுநரிகள் உலவவுது போல், நமது நாட்டைச் சுற்றித் திரிகிறது ஒரு சோதாக் கும்பல் எண்ணிக்கையிலே குறைந்திருக்கும் அந்த இதயமற்ற கூட்டம் வஞ்சத்தால் வாழ்கிறது.
அநாதைகளின் ரத்தத்தை அள்ளிக்குடிக்கிறது.
உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறது.
நாடோடி ஆட்சி நடக்கிறது என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்கள் சிலர். நாம் பலர்.
அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், நாம் சூரர்கள் சிங்கத் தமிழர்களே சீறி எழுங்கள்”
எனும் வரிகளில் சமுதாய ஏற்றத்தாழ்வால் தீயகுணம் கொண்டவராக மனிதர்கள் மாறும் நிலையைப் படம் பிடிக்கிறார்.
பராசக்தியில் குணசேகரன் நீதிமன்றத்தில் வாதிடும் காட்சி. அதில் கலைஞரின் வசனம் திரையுலகம் உள்ளவரை, ஏன் சமுதாய அவலங்கள் அகலாமல் இருக்கும் வரை நிலைத்திருக்கும், நீதிமன்றத்தில்
குணசேகரன்
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.
கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதால்; பூசாரியைத் தாக்கினேன்.
பூசாரி பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷம் ஆகிவிட்டதைக் கண்டிப்பதற்காக.
இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால், அவன் கடந்து வந்துள்ள பாதை எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில் படம் எடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன.
தென்றலைத் தீண்டியதில்லை நான்; தீயைத் தாண்டியிருக்கிறேன்.
பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழர்களின் தலை எழுத்துக்கு நான் விதிவிலக்கா!
வெளிநாட்டிலிருந்து பிறந்த நாட்டுக்கு வந்த பெண்ணுக்கு வாழ்வதற்குத் தக்க பாதுகாப்பு இல்லை.
என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒருநாள்… மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள்… இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.. இதைத்தானா விரும்புகிறது இந்த நீதிமன்றம்!
பகட்டு என் தங்கையை மிரட்டியது.
பயந்து ஓடினாள், பணம் என் தங்கையைத் துரத்தியது மீண்டும் ஓடினாள்.
பக்தி என் தங்கையைப் பயமுறுத்தியது.
ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும்,
இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா? வாழவிட்டார்களா என் தங்கையை?
கல்யாணி தற்கொலை செய்யமுயன்றது ஒரு குற்றம்.
குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம்.
நான் பூசாரியைத் தாக்கியது குற்றம். இத்தனை குற்றங்களுக்கு யார் குற்றம்.
விதியின் குற்றமா? விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளையர் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம். பஞ்சத்தின் குற்றமா?
அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லிக் காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?
இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில், எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம். பகுத்தறிவு பயனுள்ள அரசியல் தத்துவம்.
சமுதாயப்புரட்சி ஆலகால விருட்சத்தின் கிளையை வெட்டுவதல்ல.
அதனை ஆணிவேரோடு பெயர்ப்பதுதான் எனச்சமுதாயத்தின் மீது சீறிசைத்த கலைஞர்.
‘பராசக்தி திரைப்பட உரையாடல் தாக்குரவு மக்களிடம் எல்லை கடந்தது.
கூட்டம் கூடும் இடங்களிலெல்லாம் கலைஞரின் நெருப்புச் சொற்கள் நின்று நிலைத்தன.
‘திரும்பிப்பார்’ (1951) திரைப்படத்தில்
“காடு வெட்டிக் கழனி திருத்திக் காலையிலே மாடுஓட்டிக் கலப்பை எடுத்துச்சென்று மனமொடிந்த பாட்டாளியும், சித்தம் நோக நித்தம் நித்தம் பாடுபடும் தொழிலாளியும் புத்தம் புது வாழ்வு வாழ வேண்டும் என்பதே என் நோக்கம்”
எனத்தொழிலாளர்களுக்காக் குரல் கொடுப்பார்.
கலைஞரின் திரைப்படங்களில் மனோகராவின் உரையாடல்கள் பலகாலம் மக்களால் மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டவை.
கலைஞரின் கனல்வீசும் தமிழை வரிக்குவரி அவற்றில் காணலாம்.
மனோகரன், தந்தையிடம்
“பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே தமிழ்ப்பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே வீரனே!
என் விழி நிறைந்தவனே!
என்று யாரைச் சீராட்டிப் பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனைச் சங்கிலியால் பிணைத்து சபை நடுவே நிறுத்தி, சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்னும் உங்களது தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?”
“வசந்தசேனை வட்டமிடும் கழுகு. வாய் பிளந்து நிற்கும் ஓநாய். நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு. அதோடு அவள் வடக்கத்திக்காரி”
எனப்பேசும் உரையாடல் உரையிலிருந்து வெளிவந்த வாளாகச் சுழன்றடித்தது.
1950 வெளிவந்த மலைக்கள்ளனில்
“மிருக சாதியில் புலி மானைக் கொல்கிறது.
மனித சாதியில் மான் புலியைக் கொல்கிறது என்பார்.
மலைக்கள்ளன் வரும்போது யாரென்று அறியாமல் திகைக்கும் கதாநாயகியிடம், மலைக்கள்ளன்,
”கற்புக் கனலைக் காப்பாற்ற வந்த கடவுள் உத்தமியை சிஷ்ட பரிபாலனம் செய்ய ஆண்டவன் எடுத்த அவதாரம்.
திக்கற்ற ஒரு பெண்ணின் வேதனையைப் போக்க வந்த தெய்வத்தின் அவதாரம் என்று எண்ணிவிடாதே.
நான் மலைக்கள்ளன்” என அவதாரக் கதையை எள்ளி நகையாடிப் பகுத்தறிவு புகட்டுவார்.
1960இல் வெளிவந்த ‘குறவஞ்சி’ படத்தில்
“காகிதப்பூ மணக்காது; கயவர்களின் நியாயம் ஜெயிக்காது; என்றும்,
1964இல் வெளிவந்த பூம்புகார் திரைக்காவியத்தில்
“மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது”
என்றும் முத்திரை பதிப்பார்.
இதன் விளைவு, திரை உலகையே தன்பக்கம் ஈர்த்தார்.
கலைஞரின் திரைப்பட உரையாடல் எழுத இசைவு பெற்றவர்களே தயாரிப்பாளர்களை அணுகி நிதிதேடும் நிலை உருவானது.
கலைஞரின் திரைப்படப் பணிகளை மதிப்பிட்ட அறிஞர் தொ.பரமசிவன்.
“ஒரு காலத்தையே அவர் ஆண்டிருக்கிறார்.
திரும்பிப் பார்க்கும் போது, பராசக்தியின் பின்னணியில் நாம் பார்த்த கருணாநிதியைப் பின்னாளில் அரசியல் களம் நீர்க்கடித்துவிட்டது என்று தோன்றுகிறது” எனக் கூறுகிறார்.
தமிழர்கள் தம் பழம்பெருமைகளை மறந்து, புராணக் குப்பைக்குள் முகம் புதைத்துக் கொண்டிருந்த காலம் அது.
திராவிட இயக்கம் தமிழனின் புதைந்த முகத்தைத் தோண்டி எடுத்தது.
கலைஞரின் திரைப்படங்கள் இந்தப் பணியையும் இணைப்பணியாகச் செய்தது.
தமிழன் பெருமை பேசும் பழந்தமிழ் இலக்கியங்களைத் தமது திரைப்பட உரையால்களில் உலாவிட்டார் கலைஞர்.
மனோகராவில்
“புறநானூற்றை மறைக்க வந்த புழுதிக்காற்றே!
புறமுதுகிட்டு ஓடும். கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே!
கால் பிடரியில் இடிபட ஓடும்”
எனும் உரையாடல் ஒரு சான்று.
திரைத்துறையில் அவர் நிகழ்த்திய புதுமைகளும், புரட்சிகளும் எண்ணிலடங்கா.
திரைப்பட ஊடகத்தை திராவிட இயக்கக் கருத்தாக்கத்தின் பரப்புரைக் களமாக மாற்றிய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் மட்டுமே உரியது.

Add a Comment