தினசெய்தி – 11 12 2022
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் -139
உரைவேந்தர் – தமிழ்க் கொடை
முனைவர் ஔவை அருள்
தவத்திரு விபுலானந்த அடிகள் ஆங்கிலவாணி என்ற அருமையான கட்டுரையை தன்னுடைய செம்மாந்த செந்தமிழ் நடையில் தமிழ் மக்களுக்கு அளித்திருந்த உரைக் காவியத்தைத்தான் பகுதி பகுதியாக வெளியிட்டு மகிழ்கிறேன்.
எந்தையார் மறைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு ஆங்கிலவாணி கட்டுரை குறிப்பிட்டு இதை எழுதியது பேரறிஞர் டி.என். சேஷாச்சலம் என்றேன்.
அப்பொழுது, அவர் கண்களை அங்கிங்கெனாதபடி உருட்டிக் கொண்டு எதுவும் பேசாமல் என்னைப் பார்த்தபடியே இருந்தார்.
ஓரிரு நாட்களில் அப்பாவும் வானில் கலந்தார்.
திருவடிப்பேறு நிகழ்வுகளை முடித்தபிறகு இன்று விடியற்காலையில் ஒரு கீற்று என் சிந்தையுள் பாய்ந்தது.
ஆழ்ந்து சிந்தித்தப் பிறகு என்னே ! தவறு செய்து விட்டோம்.
ஆங்கிலவாணி கட்டுரையை தவத்திரு விபுலானந்த அடிகளின் எழுத்துக் கொடையாயிற்றே அதை எப்படி நான் பிழையாக அப்பாவிடம் சொன்னேன் என்று சொல்லி ஏங்கினேன்.
இன்று அவருடைய ஒளிப்படைத்தைப் பார்க்கும்போது முகமலர்வோடு பார்ப்பதைக் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்.
இனி, தவத்திரு விபுலானந்த அடிகளாரின் கட்டுரையைக் காண்போம்.
பிளுத்தாக் ( Plutarch ) எனப் பெயரிய யவனபுரத்து அறிஞர் இயற்றிய வீரர் வாழ்க்கைச் சரிதங்கள் என்னும் நூலின் வழியாக அநேக சரித்திரங்களையும், ஆங்கிலநாட்டு மன்னர் சரித்திரங்கள் பலவற்றையும் செகசிற்பியார் நாடகமாக்கி உலகிற்கு அளித்தார்.
ஆங்கிலமொழி உலகில் வழங்குங்காலம் வரையும் இப்பெருங் கலியின் பெயர் நின்று நிலவும்.
ஆங்கில நாடு பெருஞ் சிறப்புற்றிருந்த காலத்திலே, தோன்றிய செகசிற்பியாரைப் போலத் தமிழ்நாட்டு மன்னர் கடல் கடந்து சென்று பல நாடுகளிலும் தமதுவெற்றிக் கொடி நாட்டிய காலத்திலே தோன்றிய கம்பநாடர், உலகுபுகழும் வனப்புவாய்ந்த காப்பியத்தை வகுத்தளித்தார்.
வீரத்தையும், ஆண்மையையும் மக்கள் நீர்மையையும் சித்திரித்துக் காட்டும் வகையிலே இருபெருங் கவிஞரும் ஒத்தபான்மையர்.
இருவர் நாவிலும் நின்று கவிதை சுரந்தளித்தவள் ஒருத்தியன்றோ?
இக்காலத்திலே, மில்தனார் எனப்பெயரிய காப்பியக் கவியும் வாழ்ந்தார்.
யவனபுரத்துக் காவியங்களிலே நன்கு பயின்று. அவை தம்முட் பொதிந்த வனப்பு விளங்கச் செய்யுள் செய்தார்.
அவரியற்றிய பெருங் காப்பியம் ‘சுவர்க்க நீக்கம்’ எனப் பெயரியது.
இதன் ஒருபகுதியினைத் தமிழ்ப் பெருங்கவி வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்கள் தமிழ் விருத்தச் செய்யுளில் மொழிபெயர்த்துள்ளார்கள்.
தேவாசுர யுத்தங்கூறுதலின் இந்நூல் சுந்தபுராணம் போன்றது வானுலகத்திலே ஆண்டவன் முன்னிலையிலிருந்த தேவர்களின் மூன்றின் ஒரு பகுதியார் இறைவனாணைக்கு அமைந்து நடக்காத காரணத்தினாலே நரகராயினர்.
இவர்கள் தலைவனாகிய ஒளிவண்ணன் சாத்தானாயினான்.
இந்த எல்லையிலே, இறைவன் இம் மண்ணுலகையும் புல், பூண்டு, மரஞ்செடி, கொடி, பறவை, விலங்கு, மீன் என்னும் இவற்றையும் படைத்து இறுதியிலே மன்பதைக்குத் தந்தை தாயாராகிய அத்தனையும், அவ்வையையும் படைத்து அவர் தம்மை ஏதேன் என்னும் உவவனத்தில் இருத்தினார்.
இவ்வுவவனம் பேரழகுடையது.
இதன் நடுவிலே கலைஞானத்தருவிருந்தது.
அதன் கனியை உண்ணவேண்டாமென்று ஆதித்தந்தை தாயாருக்கு ஆண்டவன் ஆணையிட்டிருந்தனர்.
சாத்தான் அவர்களை வஞ்சித்துக்கனியை உண்ணுமாறு செய்தனன், அக்குற்றத்திற்காக அத்தனும் அவ்வையும் பூலோக சுவர்க்கமாகிய உவவனத்திலிருந்து துரத்தப்பட்டனர்.
இதுவே காப்பியத்தின் கதை
ஐந்தாம் பரிச்சேதத்தின் தொடக்கத்திற் சில அடிகளின் மொழி பெயர்பினைத் தருகின்றாம்.
நித்திலத்தை வாரி நிலத்தில் உகுத்ததுபோல்
காலைப் பரிதி கதிர்காலும் வேளையிலே,
உள்ளக் கவலையின்றி உணவுடலிற் சேர்தலினால்,
நன்கு துயின்றெழுந்த நல்லோர் புகழ் அத்தன்
இளங்காற் றிசையொலியும், இன்ப இலையொலியும்,
வளஞ்சான்ற நீரருவி வாய்நின் றெழுமொலியும்,
பள்ளி யெழுச்சிப்பண் பாடுகின்ற புள்ளொலியும்
ஆரா உவகைதர, அன்பிதயத் துள்ளூரச்,
சீரார் இளமான், திருமகள் போல்வாள் அவ்வை,
காதற் கிளியனைய கட்டழகி, எந்நாளும்
வைகறையில் முன்னெழுவாள் மலர்ச்சயனம் விட்டகலாச்
செய்கையினை நோக்கி, அவள் செந்தா மரைவதனம்
ஏறச் சிவந்த இயல்பும், மலர்க்கூந்தல்
சீர்சிதைந்து சோர்ந்த செயலுங்கண் டுள்ளுருகி,
எழிலார் மடநல்லார் இன்றுயிலுஞ் சீரிதே
என்னவுளத் தெண்ணி, இளந்தென்றல் மென்மலர்மேற்
சென்று வருடுந் திறமனைய மெல்லொலியில்,
‘என்னா ருயிர்த்துணையே; ஈசன் எனக்களித்த
செல்வ நிதியே செழுந்துயில்நீத் தேயெழுவாய்,
புத்தமிழ்தே!, அன்பே புலரிப் பொழுதினிலே,
வாச மலர்க்கொடியில் வண்டினங்கள் தேன் அருந்தும்
விந்தையினைக் காண்போம். விழிதுயில்நீத் தேயெழுவாய்,
வண்ணவண்ணப் பூக்கள் மலாந்தனகாண்’ என்றுரைத்தான்
ஆங்கவளும் இன்றுயில்நீத் தன்பன் முகநோக்கி,
‘மேதகவு செம்மைநெறி மேவியஎன் னன்பரே!
காதலரே! நும்முகமும் காலை இளம்பொழுதும்
கண்டேன்; கவலையற்றேன்; கங்குற் பொழுதினிலே,
கனவோ நனவோநான் கண்டதொரு காட்சியினை
விண்டுரைப்பேன் கேளீரிம் மேதினியில் வந்ததற்பின்.
நாளின் பின் நாள்கழிய நாளையென்ப தொன்றறியாத்
துன்ப மறியாத் தொடக்கறியா வாழ்க்கை துய்த்தேன்;
கடந்த இரவிற் கலக்கமுறுஞ் செய்திகண்டேன்;
நின்குரல்போல் மென்குரலில், ‘நித்திரையோ அவ்வையே!
இனிய நிசிப்பொழுதில் எவ்விடத்தும் மோனநிலை;
வட்ட மதியம் உயாவானின் றொளிகாலும்;
இருள்குவிந்த மென்னிழலால் எங்கெங்கும் எப்பொருளுங்
கண்ணுக் கினியகண்டாய், காரிகையே! வானுறையும்
விண்ணவர்நின் பேரழகில் வேட்கையுற்ற நீர்மையராய்க்
கண்ணிமையார் நோக்குதலைக் கண்டிலையோ, ”என்றுரைக்க
எழுந்தெங்கும் நோக்கினேன்; இன்குரலின் பின்சென்றேன்;
ஞானத் தருவிடத்தை நண்ணினேன். ஆங்கொருவன்
வானோர் படிவத்தன் வாய்விட் டுரைபகர்வான்;
“கண்ணுக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
உண்ணத் தெவிட்டா உணர்வமிழ்தச் செங்களிகள்,
எண்ணெண் கலைஞான இன்கனிகள் தாங்கிநின்ற
செல்வ மரமே நின் செழுங்கிளைகள் பாரித்த
தீங்கனியை மானிடருந் தேவர்களும் உண்டிலர்காண்;
கல்வி யறிவைக் கடிந்தொதுக்கல் சீரிதோ?
உண்பல்யான்”, என்றான் ஒருகனியை வாய்மடுத்தான்;
ஆனை கடந்தசெயல் ஆதலினல் நான் அஞ்சி,
ஒருபால் ஒதுங்கினேன்; உரவோன்பின் னும்மொழிவான்;
”மானிடர்இத் தீங்கனியை மாந்துவரேல், வானுலக
இன்பம் பெறுவார்; எழிற்பாவாய். அவ்வையே!
இக்கனியை உண்ணுதியேல், எழிலார் அரமகளிர்
தோற்றப் பொலிவுடனே தூயஅறி வும்பெறுவாய்;
வானத் திவர்ந்துசெல்லும் வல்லமையும் நீபெறுவாய்;
நாகநாட் டோர்தம் நலம்பெறுவாய்,” என்று சொல்லி,
ஓர்கனியைத் தந்தான் உயர்மணமுந் தீஞ்சுவையும்,
புலன்வழியென் சிந்தைபுகப் புதுக்கனியை வாய்மடுத்தேன்
ககனத் தெழுந்தந்தக் கந்தருவன் பின்போனேன்;
மேகமியங்கும் வியன்புலத்தைத் தாண்டியபின்,
மேதினியை நோக்கி வியந்தேன்; அவ்வெல்லையிலே,
கந்தருவன் சென்றுவிட்டான்; கண்டுயின்றேன் காதலரே!
கனவீ தெனவறிந்தேன் கலக்கந் தெளிந்த’ தென்றாள்.
செகசிற்பியார் காலம் கி.பி. 1564 முதல் 1616 வரை ஆகும்:
மில்தனார் காலம் 1608 முதல் 1674 வரை ஆகும்.
டிறைடன் என்னும் அகலக்கவி 1631 முதல் 1700 வரையும் வாழ்ந்தார்;
பாப்பு என்னும் இலக்கணக்கவி 1688 முதல் 1744 வரை வாழ்ந்தார்.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலே ஆங்கிலமொழி வழங்கிய மக்களின் தொகை ஐம்பது லக்ஷ்மாகும்.
ஐம்பது லக்ஷம் என்றால் அரைக்கோடி.
இந்நாளிலே இலங்கைத் தீவிலேயுள்ள சனத்தொகையினும் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களே, அந்நாளில் ஆங்கில நாட்டில் வாழ்ந்து ஆங்கில மொழியை வழங்கினார்கள்.
முந்நூறாண்டு எல்லையினுள்ளே ஆங்கில மொழியைத் தமது தாய் மொழியாக வழங்குவோர் தொகை நாற்பது மடங்கு. பெருகிவிட்டது.
பிரித்தானியாவிலே, இந்நாளில் வாழும் நாலரைக் கோடி மக்களும், அமெரிக்க ஐக்கிய மாகாணம், கனடா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா முதலிய குடியேற்ற நாடுகளில் வாழ்வோருமாக இருபது கோடி மக்கள் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
இந்நாளில் இப்பூவுலகில் வாழ்கின்றனர்.
அஃதன்றியும் ஆங்கிலரது ஆணைசெல்லும் இந்தியா முதலிய நாடுகளிலும், பிற நாடுகளிலும், ஆங்கில மொழியறிவு உள்ளோர் தொகை இன்னும் பலகோடியாகும்.
———————–
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு
பொழிவு – 2
நான் இன்று கொண்டுவந்துள்ள குறிப்புகள் (மொத்தம் 101 ஸ்லைடுகள்) அனைத்தையும் சுருக்கமாகத் தொகுத்துச் சொல்லிவிடப் பார்க்கிறேன்.
“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தனள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதி சொன்னதைப் பாரதத் தாயைப் பற்றிச் சொல்லப்பட்டதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.
அது நம் தமிழன்னையைப் பற்றிச் சொல்லப்பட்டதாகத்தான் நான் உணர்ந்துகொள்கிறேன்.
அத்தகைய ‘ஆதி அந்தமறிய முடியாத’ ஒரு பெரும் தமிழ் நூல் பரப்பிற்குள், நமது ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்கள், வேறு யாரும் அதற்கு முன் செய்து பார்த்திராத ஒரு தனிநெடும் பயணத்தைச் சிறப்பாகச் செய்து பார்த்திருக்கிறார்.
இதுதான் நம் உரைவேந்தர் அவர்களின் தனிப்பெருமை.
தலைமுறைகள் தாண்டியும் தமிழ்ப் பண்பாட்டின் செழுமையைக் கொண்டுசேர்க்கும் மாபெரும் குறிக்கோளின் மொழி வடிவமே அவரது உரைகள் என்று நாம் துணிந்து சொல்லலாம்.
சுந்தரம்பிள்ளைக்கும் சந்திரமதி அம்மையாருக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் நமது உரைவேந்தர்.
கருவிலேயே திரு என்பதுபோலப் பிறப்பிலேயே உரைவேந்தருக்கு ஒரு சிறப்புண்டு.
இரட்டைக் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் அவர்.
இவரோடு ஒரு தங்கையும் உடன்பிறந்தார்.
திண்டிவனத்திற்கு அருகிலுள்ள ஒளவையார்குப்பம் என்ற கிராமத்தில் இவர் பிறந்தார்.
அதனால்தான், ஒளவை என்ற பெயர், இவருடன் வந்து சிறப்பாக ஒட்டிக்கொண்டது என்பார்கள் சிலர்.
பெரும் புலமைச்செல்வியான சங்ககால ஔவையாருக்கு நிகரான தமிழ்ப் புலமையுடையவர் என்பதாலும், பிற்காலத்தில் இப்பெயர் இவருக்குப் பெரிதும் பொருந்துவதாயிற்று என்பதும் அறிஞர்களின் கருத்தாகும்.
திண்டிவனத்தில் தொடக்கப்பள்ளிப் படிப்பும், வேலூரில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பும் பயின்றார்.
கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளையிடமும், ந.மு.வேங்கடசாமி நாட்டாரிடமும் தமிழ் பயின்று வித்வான் பட்டம் பெற்றார்.
இன்றைக்குத் தமிழாசிரியர்களாக இருக்கும் பெரும்பாலானவர்களைப் போலவே, நமது உரைவேந்தர் அவர்களும்கூடச் சிற்றூர்ப்புறத்திலிருந்து நம்மைப் போலவே படிப்பின் நிமித்தம் பேரூர்ப் பக்கம் வந்தவர் தான்.
தமிழ் கற்கவும் கற்பிக்கவும் திண்டிவனம், வேலூர், செய்யாறு, சென்னை, திருத்தணி, கரந்தை, திருப்பதி, சிதம்பரம், மதுரை என ஒளவை செல்லாத ஊரில்லை எனலாம்.
உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர், திருப்பதி திருவேங்கடவன் கல்லூரிப் பேராசிரியர், மதுரைத் தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எனப் பல உயர்கல்வி நிறுவனங்களில் ஔவை தமிழ்த் தொண்டாற்றினார்.
தம்மாசிரியர் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளையவர்களிடமும், ந.மு. வேங்கடசாமி நாட்டாரிடமும் ஒளவை தமிழ் படித்திருக்கிறார்.
இவர்கள் இருவர் மீதும் மாறாத அன்பும் நன்றியுமுடையவர் நம் ஒளவை.
தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும் மௌனநோன்பும் கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் நம் ஒளவை என்பதிலிருந்து, இவரது நன்றி மறவா நெஞ்சின் சிறப்பினை நாம் அறிந்து கொள்ளலாம்.
உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராயிருந்து, படிப்படியாக வளர்ந்து, கல்லூரி ஆசிரியராகவும், பின் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப்பேராசிரியராகவும் உயர்ந்தவர் ஒளவை.
இதை ஏன் கூறுகிறேனென்றால், உரையெழுதுவதற்குப் பல நிலைகளிலும் தமிழ்ப் பணியில் உங்களுக்குப் பயிற்சியும் முயற்சியும் வேண்டும்.
ஒரு தமிழாசிரியராகப் பல்வேறு பணியிடங்களிலும் பல்வேறு பணிநிலைகளிலும் நம் ஒளவை பெற்ற வாழ்வியல் அனுபவங்களும், மாணவர்களுடனும் பொதுமக்களோடும் அவருக்கிருந்த தமிழ் சார்ந்த உரையாடலும் சேர்ந்துதான் அவரது உரைகளைச் செழுமைப்படுத்தின எனலாம்.
நாட்டுப்புற மக்கள் என்ன பேசுகிறார்கள், பழைய சொல்லாட்சி தமிழ் நூல்களில் எப்படியிருக்கிறது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேச்சு வழக்கு எப்படிப் பயில்கிறது, இடத்திற்கு ஏற்றாற்போல் பண்பாட்டம்சங்கள் எப்படி மாறுகின்றன, ஊர்ப் பெயர்களுக்கான காரணம், பன்னெடுங்காலமாகப் பயன்பட்டு வரும் ஒரு சொல் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் நின்று நிலைத்துப் பரவியிருக்கிறது முதலியவற்றையெல்லாம் தெரிந்துகொள்கிற ஒரு நிறைவான புலமையனுபவம் நம் ஒளவைக்கு வாய்த்திருந்ததுதான், அவரை உரைவேந்தராக உயர்த்தியது என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.
பாவேந்தரின் பின்வரும் பாடல்தான், ஒளவையின் புலமை மாண்பைத் துல்லியமாய் அடையாளப்படுத்தும் பாடல் என்பேன்.
“பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை, பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை”
ஒளவை என்கிறார் பாவேந்தர்.
பள்ளிக்கூடத்து மாணவனானாலும் சரி; பல்கலைக்கழகப் பேராசிரியரானாலும் சரி; ஒளவையின் உரையைப் படித்தால், அதிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஏதோ ஒன்றிருக்கிறது.
அதனால்தான் ஒளவையைக் கொடைமழை என்கிறார் பாவேந்தர்.
மேலும் அவர், “வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ?, உண்டா உரைவேந்தை, வாயார வாழ்த்தாத வாய்!” என்றும் போற்றுகிறார்.
இத்துடன் மட்டும் பாவேந்தர் நின்று விடுவதில்லை.
“நூலுக்கு நூலருமை காட்டுவதில், நுண்ணறிஞன், மேலுக்குச் சொல்லவில்லை, வேர்ப்பலாத் -, தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும், உண்மை உழைப்பாளன், அள்ளக் குறையாத ஆறு” என்றும் ஔவைக்குப் புகழ் மகுடம் சூட்டுகிறார்.
ஒளவையின் உரைகளைப் படிப்பதன் மூலம், அதுவரை நமக்குத் தெரிய வராத புதிய புதிய கருத்துக்களைச் சிறப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால்தான், ஒளவையை ‘நுண்ணறிஞன்’ என்றும், ‘உண்மை உழைப்பாளன்’ என்றும், ‘அள்ளக் குறையாத ஆறு’ என்றும் பாவேந்தர் பலவாறாகப் பாராட்டுகிறார்.
இவ்வளவும் ஔவைக்கு வசப்பட்டதற்குத் தமிழுக்குத் தொண்டு செய்யத் துடித்த அவரது பேருள்ளமே காரணமென்றும் பாவேந்தர் நன்கறிந்திருந்தார்.
“இரவுபகல் தானறியான், இன்தமிழை வைத்து வரவுசெலவறியான், வாழ்வில் – உரமுடையான், தன்கடன் தாய்நாட்டு மக்கட்கு உழைப்பதிலே, முன்கடன் என்றுரைக்கும் ஏறு” எனத் தமிழுக்குத் தொண்டு செய்த பெரியோனாகப் பாவேந்தர் ஒளவையைப் போற்றுகின்றார்.
பாவேந்தர் பாராட்டுவதில் வியப்பில்லை நமக்கு; அவரை விடவும் ஒருபடி மேலே போய்ப் புதுக்கவிஞர் மீராவும் நம் உரைவேந்தரைத் தலைமேல்வைத்துக் கொண்டாடுகிறாரே!
“பயனுள்ள வரலாற்றைத் தந்ததாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்!,
வாக்குநயங்காட்டிச் செவிக்குத் தேன் தந்ததாலே, நக்கீரர்தான் தாங்கள்!,
இந்த நாளில் கயல் மன்னர் தொழுத மொழி காத்ததனால், தொல்காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்!,
எங்கும் தயங்காமல் சென்று தமிழ் வளர்த்ததாலே, தாங்கள் அவ்-ஒளவைதான்! ஒளவையேதான்!”
என்று உறுதிப்பட நம் கால ஔவையாகத் துரைசாமிப்பிள்ளையவர்களைக் கவிஞர் மீரா புகழேணியின் உச்சியில் ஏற்றிவைத்துக் கொண்டாடுகிறார்.
இத்தகைய உயர்தனிப் பெருமை, இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியர்களில் நம் ஒளவை ஒருவருக்கே உரிமையுடையதாகும் என்பதுதான் இங்கு நாம் அறிய வேண்டியதாகும்.
இதைக் கவிஞர் மீரா நன்குணர்ந்திருந்தார்.
அதனால்தான் அவர், “அதிகன்தான் இன்று இல்லை, இருந்திருந்தால் அடடாவோ!, ஈது என்ன விந்தை!, இங்கே புதியதாய், ஓர் ஆண் ஒளவை என வியப்பான்!”
என் வியந்து நெகிழ்கிறார்.
இவ்வாறெல்லாம் கவிஞர் மீரா வியக்கக் காரணமென்ன?
இந்த ஆண் ஒளவை வாழ்ந்த ஆண்டுகள் 78; எழுதிய நூல்கள் 38.
இவர் எழுதிய உரை நூல்களில், ‘வரலாறு, கல்வெட்டு, தத்துவம், மரபியல், தாவரவியல், விலங்கியல், தர்க்கவியல், சட்டவியல், உயிரியல், பயிரியல், உளவியல்’ எனப் பல்துறைப் புலமை சார்ந்த நுண்ணிய தரவுகள் பலவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.
இவற்றைக் கூர்ந்து வாசிக்கும் இயல்புடைய வாசகர்கள் யாராயினும், அவர்கள் அனைவரும், கவிஞர் மீரா போலவே ஒளவையை வியந்து பாராட்டாமலிருக்க முடியாது.
இந்த ஒண்மைதான், உரைவேந்தர் என நம் ஒளவை கொண்டாடப்படுவதற்கும் காரணமாகும்.
ஒளவையவர்கள், ‘தமிழ், வடமொழி, பாலி, ஆங்கிலம்’ என்ற நான்கு மொழிகளிலும் சிறந்த புலமையுடையவர்.
ஏடுகள் தேடி மூலப்பாடம் தேர்ந்து தெளிந்து பொருள் வரம்பு செய்துகொண்டவர்.
உரையொழுங்கு கூடிய நுண்ணறிஞர் என்பதுடன், சித்தாந்தக் கலாநிதியாகவும் கொண்டாடப்பட்டவர்.
தக்க பாட வேறுபாடு காட்டி மூலத்தைச் செம்மைப்படுத்தும் மேதைமையும் இவருக்குண்டு.
பழமைக்கு அமைதி காணும் அதே வேளையில், புதுமைக்கும் வழிசெய்பவராக ஔவை திகழ்ந்தார்.
வைணவ உரை நூல்களில் காணப்படும் ‘பதசாரம்’ என்ற தனிமுறையில், சொல்லுக்குச் சொல் தெளிவுரை வரைந்தவர் நம் ஒளவை. தமிழ் மரபுக்குப் புறம்பாகப் பழைய உரையாசிரியர்கள் உரை செய்யுமிடத்துத் தயங்காமல் அவர்களை மறுத்துப் புத்துரை செய்யும் பேராற்றலுடையவர் இவர்.
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment