தினசெய்தி – 12 12 2022
பக்கம் எண் : 4
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 83
பழுது நீக்கிய எழுதுகோல்
– முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
திராவிட இயக்கத்தின் பெருந்தொண்டினால் தான் தமிழரிடம் சிந்திக்கும் பழக்கம் செழுமை பெற்றது எனில் மிகையன்று.
கடவுள், பூசை, மதம், சாதி, சனாதனம் எனப் புழுத்துப்போன பழைய சரக்குகளைச் சுமந்து சுமந்து கழுத்தொடிந்து சிந்தனை முடமாகிக் கிடந்த தமிழரைப் புத்தாக்கம் செய்தார் தந்தை பெரியார்.
அவருடைய கேள்விகள் தமிழர் மீது சுமத்தப்பட்ட அத்தனை மூடநம்பிக்கைகளையும் துளைத்தெடுத்தன.
தந்தை பெரியாரிடம் பயின்ற கலைஞர், பெரியாரின் பாதையைத் தெளிவாகப் பின்பற்றினார்.
மக்கள் விழிப்புணர்வு பெற, கலை வடிவங்கள் அனைத்தையும் பயன்படுத்தியவர் கலைஞர்.
மாடமாளிகை முதல் மூலை முடுக்குவரை திராவிட இயக்கக் கோட்பாடுகள் சென்று சேர்ந்து, கலந்துரையாடல்கள், அமைப்புகள், பரப்புரைகள், எழுத்துக்களங்கள், திரை ஓவியங்கள், நாடகங்கள் எனப் பன்முகப் பாங்கில் உலா வந்ததில் பெரும்பங்கு வகித்தவர் கலைஞர்.
நூறாண்டுகளுக்கு முன்பே இடஒதுக்கீடு, மாநில சுயாட்சி போன்ற கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு சென்று அவற்றை அடித்தளமாகக் கொண்ட தமிழக அரசியலைக் கட்டமைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உரியது.
இப்பெரும்பணிகள் காலந்தோறும் தொய்வடையாமல் இன்றுவரை உயிர்ப்போடு உலா வரத் தன் வாழ்நாள் முழுதும் உழைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
திராவிட இயக்கம் ஓர் அறிவியக்கம் என்பதையும் அதன் அரசியல் என்பது தமிழ்நாட்டின் அனைத்துக் கூறுகளையும் மாற்றிப் புனரமைக்கும் ஆற்றல் பெற்றது என்பதையும் மெய்ப்பித்துக் காட்டியவர் கலைஞர்.
திருவாரூர் திருவிழாவில் வேடிக்கைப் பார்க்கப்போன கலைஞர் கண்டது கொடுமையான ஒரு நிகழ்ச்சி.
முன்னால் தேரை இழுக்கிறவர்கள் வடத்தை இழுக்கச் சிரமப்படும்போதெல்லாம் அவர்களுடைய உடம்பில் சாதியின் காரணமாக சவுக்கடிகள் துள்ளி விழுந்தன.
அவர்கள் வேகத்துடன் தேரை இழுப்பார்கள்.
அப்போது கலைஞரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கலைஞரின் நண்பர் தென்னனின் சொற்களில் காண்போம்.
திருவாரூர்த் தேர் நகர்ந்து வரும்போது அந்தத் தேரின் தடித்த கயிற்றை இழுத்து வரும் குறிப்பிட்ட சமூகத்தவர்களைச் சவுக்கால் அடிக்கும் போது அருகில் இருந்து பார்த்த அனுபவம் பற்றித் தென்னன் சொல்லும் போது,“…எனக்குச் சொல்றதுக்கே கஷ்டமா இருக்குதுப்பா.
யாரோ தேரை இழுக்கிறதுக்காகச் சிலரைச் சவுக்கால் அடிக்கிறாங்கன்னு கலைஞர் அந்த வயசிலேயும் நினைக்கலை.
அவங்களுக்கு அடிவிழும் போது இவருக்குக் கண் கலங்கியிருக்கும்.
அதைப்பற்றி அவரோட நெஞ்சுக்கு நீதி நூலிலும் கூட எழுதியிருப்பார்.
கண்ணுக்கு முன்னாடி மத்தவங்க அடிபடும் போது அதைத் தன்னோட வலியா உணர்ந்த தன்மை அவர்கிட்டே இருந்துச்சு.
அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததாலே அன்னைக்குப் பட்ட இழிவுகள் என்னைப் போலக் கூட இருந்தவங்களுக்குத் தெரியும்.
அவ்வளவு அவமானங்களையும் உறவினர்கள் கிட்டேயும் ஊர்க்காரங்க கிட்டேயும் சந்திச்சிருக்கார்.
காவல்துறையில் அவர் பட்ட கஷ்டங்கள் அதிகம்.
என்னமா அவமானப் படுத்தியிருக்காங்க தெரியுமா ? அதை வெளியில் அவர் சொல்லிக்கிட்டதே இல்லை.
எழுதவும் இல்லை. சொந்தக்காரர்களுக்கும் அது பற்றித் தெரியாது.”
இத்தகைய வலிகளும், அவமானங்களும் கலைஞரைத் திராவிடச் சிற்பியாகவும், தமிழ்ச் சமுதாயத்தின் மறுமலர்ச்சி தூதுவராகவும் உருவாக்கின.
சாதியக் கொடுமைகளும், மூடநம்பிக்கைகளும் மலிந்துவிட்ட சமுதாயத்தில் தமது பணி என்ன என்பதைக் கலைஞர் தெளிவாக வரையறுத்துக் கொண்டவர்.
தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சியும் அவரைத் துணிச்சல் மிக்கவராக, சமுதாயத்தை மாற்றியே தீர வேண்டும் என்ற வேட்கையுடையவராக வடிவமைத்தது.
சாதி, மத, மூடநம்பிக்கைகள் மீது அவருடைய சொற்கள் சாட்டையடிகளான விழுந்தன.
“சதிக்குக் கால் முளைத்து சாதியாகிவிட்டது”.
“மதவெறி யானைக்கே வரக்கூடாது. மனிதனுக்கு வரலாமா?”
“அனைத்தையும் படைத்ததாகச் சொல்லப்படும் ஆண்டவனைப் படைத்தவன் மனிதனே”
“நாத்திகன் என்பவன் தன்னம்பிக்கை கொண்டவன்”
“… என் பாதை – சுயமரியாதைப் பாதை”
“விதி அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்று நடந்துவிட்ட பிறகு அதற்கு நாம் பயன்படுத்தும் சொற்களே தவிர வேறல்ல”.
‘ஆவி’ மோகம் அதிகரித்து வருவது என்பது பகுத்தறிவுக்கெதிராகப் பாவிகள் திரிக்கும் கயிறாகும்”
“அடுத்த பிறவியில் யாராகப் பிறக்க ஆசை என்றால் “மறுபிறவி” என்பதே ஒரு கற்பனை என்பதே என் எண்ணம்.
எனச் சாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பல கருத்துகளை அவ்வப்போது கூறியவர் கலைஞர்.
கலைஞர் அக்காலத்தில் எழுதிய தலையங்களில் ஒன்று ‘தீட்டாயிடுத்து’ எனும் தலைப்பைக் கொண்டது.
அத்தலையங்கம் எழுத நேர்ந்த காரணத்தைக் கலைஞர் கூறுகிறார். . .
“நான் ஈரோட்டில் குடியரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திருவையாறு தியாகராசர் திருநாளையொட்டி இசை விழாக்கள் நடைபெற்றன,
வழக்கம் போல்! விழாவில் பங்கு கொண்ட இசையாளர் ஒருவர், அன்றைய தினம் மேடையில் அமர்ந்ததும், தமிழிசைப் பாடல்களையே பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு இறங்கினார்.
அடுத்து ஒருவர் இசை நிகழ்ச்சியை நடத்த வந்தவுடன் ‘இந்த மேடையைச் சுத்தம் செய்து, புண்ணியாசனம் நடத்தித் ‘தோஷம்’ கழித்தால்தான் மேடையேறுவேன்‘ என்று கூறி, அந்தக் காரியங்கள் எல்லாம் நடந்த பிறகு தமது இசையைப் பொழிந்து முடித்தார்! அதை வைத்துத்தான் ‘தீட்டாயிடுத்து’ என்று தலையங்கம் எழுதினேன்.
“தமிழிசை நடத்திய மேடையைத் தோஷம் கழித்த காரியம் நடக்கிறது; தமிழர்கள்தான் வாழ்கிறார்களா? என்று எழுதி முடித்தேன்.
அந்த அளவிற்கு எதிர்ப்புகளைத் தாங்க வேண்டியுள்ளது”
அறிஞர் அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறினார்.
அதை மையமாக வைத்துக் கலைஞரிடம் கேள்விகள் கேட்டார்கள்.
கலைஞர் அதையும் தமது பதிலில் தெளிவுபடுத்தினார்.
அறிஞர் அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறினார்.
ஒரு ‘தேவன்’ இருக்கிறான் என்கிற இறையாண்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அவரே இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கிறார் என்பதை நம்புகிறீர்களா என்றால், ‘எங்கோ ஓர் இடத்தில் கடவுள் என்பவர் அமர்ந்து கொண்டு.
விண்ணிலும் மண்ணிலும் இத்தனை அதிசயங்களை நடத்துகிறார் என்பதை நம்ப முடியாவிட்டாலும்; ஏதோ ஒரு சக்தியால் எல்லாம் நிகழ்கிறது என்பது உண்மை.
அதற்காக அந்தச் சக்திக்குக் கைகால் உண்டா? பேசுமா? வரம் அருளுமா? என்றெல்லாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
என்னைப் பொருத்தவரையில் இந்தக் கருத்தை வலியுறுத்தும் நாத்திகன்.
ஆனால் அண்ணா அவர்களும் நானும் இந்தக் கருத்தை எவர்மீதும் திணிக்கவோ அல்லது ஓர் இயக்கமாக நடத்தவோ எண்ணியதில்லை,
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் என வசை பொழிந்த பாரதியார், “உண்மையொன்றே தெய்வமென்று உணர்வீரே” என்று கூறிய கருத்துதான் “ஒருவனே தேவன்” என்பதாகும்.
என விளக்கமளித்தார்.
“பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்களின் குருதியோட்டத்துடன் கலந்துவிட்ட நஞ்சுதான் மூடநம்பிக்கை” என்கிறார்.
கடவுள் பற்றிய சிந்தனையைக் காலில் கட்டிக்கொண்டு நடை தடுமாறும் தமிழர்களை ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என அழைத்த துணிச்சல் கலைஞருக்கே உரியது.
இதுமட்டுமல்ல, “கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பதல்ல முக்கியம், கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் நம்மை ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம் நடந்து கொள்கிறோமா என்பதுதான் முக்கியம்” என்கிறார்.
இவையெல்லாமே கலைஞரின் பகுத்தறிவுப் பரப்புதலின் உத்திகள்தான்.
இதன் உட்பொருள் ‘கடவுள் என்ற மூடநம்பிக்கையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காலங்கழித்து வீணாகாதே; உன்னைச் சுற்றிய உலகைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்று’ என்பதுதான்.
“கடவுளை மற மனிதனை நினை” எனும் பெரியாரின் அரசியல் மொழி வடிவங்கள் இவை என்றே கருதலாம்.
கடவுளின் பேரால், சாதியின் பேரால், மூடநம்பிக்கைகளின் பேரால் மக்களை இழிவுபடுத்துவதையும், மடையர்களாகவே வைத்திருப்பதையும் கண்டு மனம் கொதித்தவர் கலைஞர்.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இவர்களால் சொர்க்கம், நரகம் என்ற கற்பனை உலகிலும் கட்டமைக்கப்பட்டது.
ஒருவர் இறந்த பிறகு ‘சிவலோக பதவி’ அடைந்தார் என்றும் ‘வைகுந்த பதவி’ அடைந்தார் என்றும் கற்பனை செய்து மகிழ்ந்தார்கள்.
ஆனால் இறந்துபோனவர் வாழ்ந்த காலத்தில் அவருக்குரிய சமஉரிமையை மறுத்து அவரிடமிருந்து ‘மனிதன்’ என்ற பதவியையே பறித்துத் ‘தாழ்ந்தவன்’ என்றே குறியீடு அளித்த கொடுமையை இவர்கள் ஒருபோதும் சிந்திக்கவில்லை.
இதைக்கண்டு சினங்கொண்ட கலைஞர்,
‘இடுகாடுகளில் இந்த பேதம் என்றால் இறந்தவர் சென்றடைவதாகச் சொல்லுகின்ற சொர்க்கம் நரகத்திலும் உயர்ந்தோருக்கு ஒரு சொர்க்கம் தாழ்ந்தோருக்கு ஒரு சொர்க்கம் – உயர்ந்தோருக்கு ஒரு நரகம், தாழ்ந்தோருக்கு ஒரு நரகம் என்ற பேதம் வகுத்துக் கூறும் வேதம் ஏதாவது இருக்கிறதா?
இதுவரையில் உங்களிடம் நாங்கள் விடுத்தது வேண்டுகோள்!
கேட்டது சலுகை!
இனிமேல் விடுப்பது எச்சரிக்கை! கேட்பது உரிமை!
அதற்கு முன்பே திருந்திக் கொள்ளுங்கள்!
எனச்சமுதாயத்தை நோக்கிப் போர்க்கொடி உயர்த்துகிறார்.
“கூடியவிரைவில் சாதி ஆணவத்தின் கால்களும் – மூடநம்பிக்கையின் முதுகெலும்பும் – தீண்டாமைக் கொடுமையின் குரல்வளையும் – வெட்டப்பட்டு, முறிக்கப்பட்டு, நெறிக்கப்பட்டு, – இந்த நாடு உண்மையான விடுதலையைப் பெறப்போகிற நிகழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது”
என்பது அவர் துணிவு. பராசக்தி திரைப்படத்தில்
“அம்பாள் எந்தக்காலத்தில் பேசினாள்” என அவர் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே! கலைஞரின் உரையாடல்களோடு ‘பராசக்தி’ படம் வெளிவந்த 1952இல் திராவிட இயக்க இதழான ‘போர்வாள்’ ‘பராசக்தி மலர்’ ஒன்றை வெளியிட்டது.
ஒரு இதழே, இப்படத்திற்குச் ‘சிறப்பு மலர்’ வெளியிடும் அளவுக்குப் ‘பராசக்தி’ திரைப்படம் சமுதாயத்தில் தாக்குரவு நிகழ்த்தியதிருந்தது.
அந்த மலரில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகனார் ‘பராசக்தி’ திரைப்படத்தைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரை ஒன்றை ‘படம் தரும் பாடம்’ (போர்வாள், பராசக்தி மலர், 1952) எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
அவர் கூறும் செறிவான கருத்துகளே கலைஞரின் பகுத்தறிவு, சமுதாயச் சீர்திருத்தக் கோட்பாடுகளைத் தெளிவாகக் காட்டிவிடுகின்றன.
· “பராசக்தி” தேவதை போல பராசக்தி, பேசாசக்தி அல்ல. ஆனால் மக்களைப் பார்த்து அவர்தம் நிலையை உணர்ந்து கொண்டதால் வெளிப்பட்டவளே பராசக்தி. உணர்ந்ததை உலகறியப் பேசுகிறாள் பராசக்தி.
எனவே, ‘பராசக்தி’ மக்கள் சக்தியாக மதிக்கப்படுகிறது”
· “… பராசக்தி புதுமையை நோக்கிப் புறப்பட்டு அணிவகுத்துச் செல்லும் முற்போக்காளர்களுக்குக் கிடைத்த ஓர் எதிர்பாரா சக்தி…”
· “… இப்படத்தின் சிறப்பிற்கு, தோழர் கருணாநிதியின் வசனம் உயிராகவும், சிவாஜி கணேசனின் நடிப்பு உடலாகவும் … இடையில் வருகின்ற அத்தனை பேரும் அவரவராகவே
(கதை மாந்தர்களாகவே) காட்சி அளிக்கின்றனர்.”
· அண்ணா – ‘வேலைக்காரி; கே.ஆர்.இராமசாமி; கருணாநிதி – ‘பராசக்தி’ – சிவாஜி கணேசன் என்றொரு பரம்பரை தோன்றி வளர்ந்து, வெற்றிக்கொடி நாட்டி வருகிறது என்பதை நிலை நாட்டிவிட்டது பராசக்தி.
· ‘பராசக்தி’ – பார்த்து மகிழ்ந்திடும் அளவில் நின்றுவிடும் ஒரு கலைக்காட்சியல்ல. பார்ப்போர் உள்ளத்தைத் தடவி, அதில் படிந்துள்ள வஞ்சக சூழ்ச்சிக் கருத்தகளைத் துடைத்து வெளியேற்றி அங்கு குடி கொள்ளும் அறச்சக்தி.
· நாள் நட்சத்திரத்தின் மகத்துவம், அர்த்தமற்ற தெய்வ நம்பிக்கை காமவெறி, பணக் கொழுப்பு, அதிகாரத் திமிர், பக்தி, பகல்வேஷம், ஈவு இரக்கமற்ற மனம், பொது நலம் பேணாத சுயநலம், சட்டத்தின் சதி, ஆட்சி பீடத்தின் கண்மூடித்தனம், சூது, சூழ்ச்சி, வஞ்சகம், விபசாரம், திருட்டு, வறுமைக்கொடுமை, பஞ்சப் பரிதாபம், தற்கொலை நிலைமை ஆகிய அத்தனையையும் புட்டுக்காட்டி, வெட்டிவீழ்த்தும் வீரசக்தியே பராசக்தி – அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு விளக்கமளிப்பதை எவரே மறுப்பர்?
நாட்டிலே உள்ள நாணயமற்றோர் ஆதிக்கத்தையும், நயவஞ்சகர்களின் செல்வாக்கையும், நல்லெண்ணமற்றோர் ஆட்சியையும், பஞ்சமும், பட்டினியும் கோரத் தாண்டவமாடுவதையும், பஞ்சமாபாதகங்களும், பட்டினிச்சாவுகளும் பெருகுவதையும் கொலையும் தற்கொலையும் வளருவதையும் அதற்கான சூழ்நிலையையும் விளக்குவது பராசக்தி.
· பராசக்தியை இழிவுபடுத்துவதற்கு மாறாகப் பூசாரி மனப்பான்மையினரால், பலகாலமாக ஏற்றப்பட்டுள்ள மாசைப் பகுத்தறிவுக் கண் கொண்டு நீக்கி – தூய்மை செய்வதே – இப்படம், தெய்வத்தை நிந்திப்பதற்கு இடம் வைக்காமல், தெய்வத்தைப் பற்றிய தவறான நம்பிக்கைகளைக் களைந்தெறிவதே இப்படம். எல்லாவற்றையும் விதியின் விளையாட்டாக விட்டுவிடாமல் – மதியின் மகத்தானப் பயனைப் புலப்படுத்துவதே இப்படம்.
எனவே படம் தரும் பாடத்திற்காக மக்கள் வாழ்த்துகின்றனர்.
வாழ்க பராசக்தியினர்.
இனமானப் பேராசிரியர் எழுதிய நீண்ட திறனாய்வுரையின் சிலபகுதிகளே இங்கு குறிப்பிடப்பட்டன.
கலைஞர் ஈடுபட்டுப் பகுத்தறிவு பரப்பத் துணிந்த திரைத்துறையைக் கூட மூடநம்பிக்கை ஆட்டிப்படைத்ததைக் கலைஞரே ஒரு நிகழ்ச்சியைக் கூறி உணர்த்துகின்றார்.
இது வண்ணத்திரை 12.01.1989, 19.01.1989 நாளிட்ட இதழ்களில் வெளிவந்த ‘எனது கலைப்பணி’ எனக் கலைஞர் தீட்டிய கட்டுரையில் இடம்பெற்ற நிகழ்ச்சி.
சேலம் திரு.டி.ஆர்.சுந்தரம் அவர்களின் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மாயாவதி’ என்ற படம் தோல்வியைத் தழுவிய காலம் – கலைஞரிடம், அவருடைய ‘மந்திரி குமாரி’ நாடகத்தைப் படமாகத் தயாரிக்க அந்நிறுவனம் விரும்பி இசைவு பெறுகிறது.
அந்நிறுவனத்தின் ‘மாயாவதி’ படத்தோல்வியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யக் கலைஞரின் ‘மந்திரிகுமாரி’யைப் படமாக்குவதே அந்நிறுவனத்தின் திட்டம்.
சில நிபந்தனைகளோடு கலைஞர் ‘மந்திரிகுமாரி’ திரைக்கதையையும், உரையாடல்களையும் எழுதி முடித்தார்.
(நிபந்தனை என்ன தெரியுமா? எம்.ஜி.ஆர். அவர்கள் முக்கியமானதொரு பாத்திரத்தை ஏற்க வேண்டும் என்பது தான்.
‘வீரமோகன்’ என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்).
பிறகு கலைஞர் எழுதியதை அப்படியே காண்போம்:
படத்திற்கான ஆரம்ப விழாவிற்குத் தேதி குறிக்கத் தொடங்கினார்கள்.
நல்ல நாள் பார்க்க ஒரு ஆருடக்காரர் அழைத்து வரப்பட்டார்.
அவரை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
நான் அவரிடத்தில், “மந்திரிகுமாரி’’ பட ஆரம்ப விழாவிற்கு நாள் பார்க்க வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
‘ஆமாம்’, என்று மிக மகிழ்ச்சியோடு ஆனந்தம் பொங்க அவர் பதிலளித்தார். ‘
மாயாவதி’ படத்திற்கும் நீங்கள் தானே நாள் பார்த்தீர்கள்?’ என்று நான் கேட்டதற்கு அசடுவழிய ‘ஆமாம்’ என்றார்.
இதில், நகைச்சுவை ஒருபுறம், கலைஞர் புகட்டக் கருதும் பகுத்தறிவு மறுபுறம்.
தமது கலைத்துறைப் பணிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக ‘அவன் பித்தனா?’ திரைப்படம் அமைந்தது என்கிறார் கலைஞர். அதில்,
ஒற்றுமை பேசி வேற்றுமை வளர்ப்போர்;
ஊரை அடித்து உலையில் போடுவோர்;
ஒருவர் தேவைக்கே இவ்வுலகு உண்டென்போர்;
உழைத்தும் கூலிகொடார்;
உண்ணச் சோறறியார்;
வண்ணத் தமிழ் அழிப்போர்;
வளர் தொழில் வாழாது கெடுப்போர்;
ஏமாற்றக் கற்றவர்;
ஏமாறி இளைத்தவர்;
இவர்களுக்கு மத்தியில்
கொள்கைச் சிங்கங்கள்
கொடுமை கண்டு அஞ்சாத
இலட்சியத் தங்கங்கள்
இவர்கள் அத்தனை பேரும்
பைத்தியக்காரர்கள் என்றால்
நானும் பைத்தியக்காரன்தான்
என எழுதிய உரையாடல் மக்களைச் சிந்திக்க வைத்த பெருமையுடையது.
இவ்வகையில் எல்லாம் கலைஞர் சமுதாயப் பழுது நீக்க எழுதுகோல் எடுத்தவர்.
தன் படைப்புகளையெல்லாம் சமுதாயத்தைச் சீர்திருத்தும் பரப்புரைக் களமாக அமைத்துக் கொண்டவர் என்பதைப் பெருமையோடு சுட்டிக்காட்டலாம்.
தொடர்புக்கு :thamizhavvai@gmail.com

Add a Comment