POST: 2022-12-25T10:01:40+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் -141

கவி மிளிரும் உரைக் கோவை

முனைவர் ஔவை அருள்

இவருக்கு நேர் விரோதமாக முப்பத்தைந்து, முப்பது, இருபத்தைந்து என்னும் எண்ணிக்கையுடைய ஆண்டுகள் மாத்திரமே உயிர் வாழ்ந்த பைரன், ஷெல்லி, கீத்சு என்னும் மூன்று பெருங்கவிகளும் ஆங்கிலமொழிக்கே அழியாத பெருஞ் செல்வத்தை வழங்கினர்.

இம் மூவரும் நண்பர்கள் பைரன் கிரேக்க நாட்டிலே போர்க்களத்திலே உயிர் துறந்தார்;

ஷெல்லி ரோமாபுரியையடுத்த கடலிலே படகு கவிழ்ந்து நீரில் அமிழ்ந்து உயிர் நீத்தார்.

இவர் உடலை அக்கடற்கரையிலே எரியூட்டிச் சாம்பலை உரோமாபுரியிலே அடக்கஞ் செய்தார்கள்.

கீத்சும் உரோமாபுரியிலே தமது பூதவுடலினை நீத்தார்.

மூவரிலும் இளையராகிய கீத்சு முதலிலே மரணித்தார்.

இவரைக்குறித்து ஷெல்லி இயற்றிய கையறுநிலைச் செய்யுள், கவிநயம் நிறைந்தது.

கடலிலமிழ்ந்த ஷெல்லியின் சட்டைப்பையிலே கீத்சு இயற்றிய ‘லாமியா’ என்னும் பனுவல் இருந்தது.

இவர்கள் முற்பிறப்பிலே யவனபுரத்திலும், உரோமாபுரியிலும் வாழ்ந்த புலவர் வரிசையில் உள்ளவர்களோ என எண்ண வேண்டி இருக்கிறது.

கீத்சு கல்லூரியிலே யவன மொழி பயிலவில்லை; ஆனால் அவருடைய செழும் பாடல்கள் வரிக்குவரி யவனபுரத்துக் கவிநயம் சொட்டுவன.

இம்மூவரும் இயற்றிய சிறந்த நூல்கள் பாரகாவியங்களாதலினாலே, ஒவ்வொரு வரையுங் குறித்து ஒவ்வொரு தனிப்புத்தகம்
(பெரிய அளவிலே) எழுதினாலன்றி, இவர்களது ஆற்றலை அளவிட்டுரைக்க முடியாது.

இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் மாநகரிலே, கீத்சு இகவாழ்வொருவிய நூற்றாண்டுவிழாக் கொண்டாடினார்கள்.
அவ்விழாக் கொண்டாட்டத்து நிருவாக சபையாருக்கு யான் எழுதியனுப்பிய செய்யுளை இங்குத்தருகின்றேன்.

இப்பெருங்கவி வகுத்த காப்பியங்களின் தொகையினை இச் செய்யுள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

திருமலி அழகுடைச் செழும்பொருள் தானே
உவகை நீர்மையது; ஆங்கவ் வுவகை
பன்னாட் கழியினும் கழியா இயல்பிற்
றண்டா இன்பந் தந்துநிற் பதுவே
எனமுதல் நிறீஇய இன்னிசைச் செய்யுள்
மனனுறு மகிழ்வினை வழங்கி அணிமிகும்
செஞ்சொற் பொதிந்த செவ்விய நடையினது;
அஞ்செஞ் சீறடி அரமகள் ஒருத்தி
சோமனுலகு துறந்து, புவி யுற்றுக்
காமனுங் கைதொழுங் கட்டழ கமைந்த
எண்படிமி யோன் எனும் இளவலை விரும்பும்
செய்தி கூறும் சீரிது; திரைகடல்
அலையி னாப்பணும், அருங்கடி கமழ்தரும்
நறுமலர் பொதுளி உறுஞிமி. றார்க்கும்
உவவன மருங்கும் உற்ற துரைத்தலின்
விஞ்சைய ருலகின் வியன்றெரிந் துரைப்பது;
யவனநல் லறிஞர் பனுவலி னமைந்த
கவிநய மருவிய காட்சியது; அறிஞர்
பெருங்காப் பியமெனப் பேசுதற் குரிய
அருங்காப் பியத்தை அளித்தனை மன்னோ
அதாஅன்று,
மாயா மயக்க வஞ்சமிவ் வுலகம்
குருபரன் அருளால் மருவுவது அறிவெனும்
உண்மையை யுரைக்கும் உண்மைசால் கவிதை
லாமியா வெனும்பெயர் மேவிய மடவரல்
லீசியஸ் என்னும் இளைஞற் பேணி
இன்னுயிர்க் காதலன் ஆக்கல் வேண்ட
அவனும்,
மங்கல நாணை வழங்கும் எல்லை
அபல்லோனியன் எனும் அறிஞன் தோன்றிக்
கட்புலங் கொண்டவள் கள்ளவஞ் சனையை
ஒழித்த லுரைக்கும் உயர்நடைச் செய்யுள்
அளித்தனை மன்னோ; ஆங்கது வன்றியும்
காதலி னியல்பைக் கருத்துற விளக்கும்
இஸபெல் லாவின் இன்னல்சார் சரிதம்
வசையின் றாகு மாண்பிற் சமைத்தனை;
அதன்கண்,
நித்திலந் தருவ திலங்கைத் தீவென,
வித்தக உரைத்தனை; விண்ணாட் டமிழ்தம்
புரையுமெய்ச் சுவைபொதி உரையுடைச் செய்யுள்
பலவா யமைத்தனை: நலநா நுகர்ந்தோம்.
பல்லா யிரங்கா வதத்தினுக் கிப்பால்
உள்ளோம் ஆயினும், உன்னுரை கேட்டு
மகிழ்ச்சி எய்தினம்; மதுவிரி நறுமலர்
அவிழ்ந்து பகற்போது அளிகளுக்கு உணவும்.
பாங்குசென் றோர்க்குப் பரிமள வாசமும்,
தந்து வீயுந் தன்மையைப் போல
ஐயைந் தாண்டின் அகில நீத்தனை,
நீபோய்,
நூறாண்டு கழிந்தன எனினும் நின்மொழி
இன்றலர் நறுமலர் என்ன நின்றது;
அதனால்,
ஆங்கில மொழிசெலும் அனைத்துநா டர்க்கும்
களங்கமில் களிப்பினைத் தந்து
கிளர்ந்து விளங்குமாற் கீத்சு எனும் பெயரே.

இப்புலவர்கள் வாழ்ந்த காலத்திலே பிரெஞ்சு தேசத்திலே பெரியதொரு புரட்சி ஏற்பட்டது.

உணவின்றித் துன்புற்ற தொழிலாளிகளும் ஏழைமக்களும் முதலாளிகளையும் பிரபுக்களையும் அரசகுடும்பத்தையும் அழித்து, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முழக்கத்தோடு நாட்டிலே புரட்சி செய்தார்கள்.

பிரெஞ்சு நாட்டினை ஐரோப்பிய முடிமன்னர்களெல்லோரும் எதிரத்துப் போராடினார்கள்.

நெப்போலியன் எனப் பெயரியதளபதி பிராஞ்சு நாட்டினை எதிர்த்து வந்தோரோடு போராடி வெற்றி பெற்றதோடமையாது, படையெடுத்துச்சென்று ஐரோப்பாவின் பெரும்பாகத்தை மேற்கொண்டு பிராஞ்சு நாட்டுக்குப் பெரும்பெயர் உண்டாக்கினான்.

நன்றியறிதல் காரணமாகப் பிராஞ்சியர் நெப்போலியனைச் சக்கரவர்த்தியாக்கிச் சிங்காசனத்தில் இருத்தினர்.

இந்நிகழ்ச்சிகள் ஆங்கில நாட்டுக் கவிவாணரது காப்பியங்களிலே, ஒரு புத்துணர்ச்சியோடு காணப்படுகின்றன.

பிராஞ்சிய நாட்டில் எழுந்த “விடுதலை, சமத்துவம். சகோதரத்துவம்” என்னும் ஒலியானது எவ்விடத்தும் பரவியது.

ஷெல்லி துன்புற்றோருக்கு இரங்கும் தூய உள்ளம் வாய்ந்த கவி.

கலாசாலையிற் படிக்கின்ற காலத்திலே, இவர் பூவுலகத்துக் கொடுங்கோல் மன்னர்களையும், ஏழைகளை வருத்தும் பிரபுக்களையும், மன்னருக்கும் பிரபுகளுக்குஞ் சார்ப்பாக வானுலகத்திலேயிருந்து அரசாளும் தெய்வத்தையும் ஒருங்கே வையத்தொடங்கினார்.

எங்கும் பரந்து உயிர்க்குயிராக விளங்கும் கருணைக்கடலாகிய மெய்க் கடவுளிடத்திலே நிறைந்த பத்தியுள்ள ஷெல்லியின் உள்ளக்கருத்தை அறியாத மக்கள் அவர் தெய்வத்தை இகழுகிறார் எனக் குற்றஞ் சாட்டிக் கலாசாலையிலிருந்து துரத்தியதோடமையாது, அவரது குழந்தையைத் தானும் அவர் வளர்த்தல் கூடாதெனக் கூறித் தந்தையிடமிருந்து மைந்தனைப் பிரித்தார்கள்.

இத்தகைய நிகழ்ச்சிகளினாலே கவிஞருள்ளம் பெரிதும் அல்லலுற்றது.

இவரது கவிதை விண்ணுலகத்தை மண்ணுலகத்திலே காட்டும் பேரழகுவாய்ந்தது.

நிலவின் ஒளியும் விண்மீன்களின் வனப்பும், இசையின் மென்னீர்மையும், குழந்தையின் மழலையும், மெல்லி நல்லாரது தூய அன்பும், மேகங்களின் வனப்பும், செஞ்சுடர்ப்பரிதியின் தோற்றமும் மறைவும் இவரது கவிதையிற் படிதலினாலே புதிய நலம் பெற்றுத் திகழ்கின்றன.

யாழ் நரம்பினிசையோடு இன்னிசைக் கீதம் பாடிய ஒரு மடவரலை நோக்கிப் பின்வருமாறு கூறுகிறார்.

வளர்வான் மதியி னொளிக்கிரணம்
வயங்கி, மெல்லென் றியங்கியபின்
குளிர்வான் மீனின் கடுப்படிந்த
கொள்கை யென்னக் கூறுவமோ?

தெளியா மழலை அணங்கே! நின்
தேனார் கிளவி இசையமிழ்தம்
அளிநேர் விரல்சேர் யாழ்நரம்பிற்(கு)
ஆவி யாகும் மாண்பினையே.

எங்கும் பரந்த இசைநறுந்தேன்
ஈர்ந்தண் பனிநீ ராயியையக்,
கங்குற் பொழுதில், மென்கொடியிற்
கலந்த இலையும் அசைந்திலவால்;

திங்கட் புத்தேள் ஒரு கடிகை
செலவு தாழ்ந்து சென்றிடினும்,
தங்கு விண்மீன் அமைப்பிலவாய்த்
தரணி நோக்கும் தகைமையவே.

தேனார் இசையென் உளங்கவரச்
செயலற் றயர்ந்தேன் யானெனினும்.
மானே! இன்னும் இசைநறுந்தேன்
வழங்கல் வேண்டும்; இளங்குதலை

ஆனா இனிய குரலொலியால்
அகிலம் மறைய மதிக்கதிரும்
வானோர் உலகும் இசையமிழ்தும்
மருவி யொருங்கு வந்தனவே.

இளந்தென்றலின் மெல்லுயிர்ப்பும் மாலைப்பொழுதின் அழகும், எங்கும் நிறைந்த அமைதி நிலையும், வளர்மதியின் உள்ளொளியும், விண்மீன்களின் மெல்வொளியும், நீல விதானம் போன்றமைந்த வானினழகும் இனிவரும் வெண்பாக்களுட் கூறப்படுகின்றன.

வேனி லிளந்தென்றல் மெல்லுயிர்ப்பு நன்மாலை
மானின் செவிக்கு மருந்தாகி, வானின்
உரைதேர்ந்த மோன உறுதி குலைக்கும்,
அரிதன்றோ அல்லின் அழகு?

மங்குல் பயிலா வளர்மதியின் ஒள்ளொளியும்,
எங்குமியல் மீனொளியும், எய்தியே — கங்குல்
விழிதுயிலும் பூமகட்கு மேலாப்பா யன்பின்
வழியியலும் நீர்மையதிவ் வான்.
ஐய்க்கிலீஸ் எனப்பெயரிய யவனபுரத்து நாடக ஆசிரியரது நடையினைப் பின்பற்றி இவரெழுதிய கட்டு நீங்கிய பிரமேதயன் என்னும் நாடகம் உயர்ந்த வீரச்சுவை செறிந்தது.

பிரமேதயன் வானுலகிலிருந்து நெருப்பினைக் கவர்ந்துவந்து மண்ணுலகத்தோருக்கு வழங்கிய பேருபகாரி. தேவராஜனாகிய யோபிதாவினது ஆணைக்கு அடங்காத காரணத்தினாலே பிரமேதயன் சிறையிலிடப்பட்டான்.

பனிபடர்ந்த மலைச்சாரலிலே சங்கிலியாற் கட்டப்பட்டான்.

தேவராஜனுடைய கட்டளையினாலே ஓய்வின்றிக் குளிர்ந்த வாடை வீசியது; கழுகுகள் வந்து மூக்கினாலே உடற்றசையைக் குடைந்தன.

பிரமேதயனுடைய ஆண்மையையும் உண்மை வீரத்தையும் எவ்வகையாகவும் எதிர்த்து அடக்கமுடியவில்லை.

ஹெல்லாஸ் எனப்பெயரிட்டு இவரெழுதிய நாடகம் யவனபுரத்தின் மீது இவருக்குள்ள பேரன்பினை வெளிப்படுத்துவது, அக்காலத்திலே துருக்கியர் கிரேக்க நாட்டில் அரசு செலுத்தினமையின், சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

இவரியற்றிய பார காவியங்கள் அரிதுணர் பொருளன.

வானம்பாடிப் புள்ளினைக்குறித்த இசைப்பாட்டு, மேகத்தைக் குறித்த இசைப்பாட்டு முதலிய சிறு நூல்களே மாணவராற் பெரிதும் பயிலப்படுவன.
———————–
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்,
‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு

பகுதி – 4

ஐங்குறுநூற்றின் நான்காம் பாடலுக்கு (மருதம் : 4),

அதில் வரும் “பகைவர் புல்லார்க” என்ற தொடருக்கு, “புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது” என்ற சேனாவரையர் கருத்தின் நீட்சியாக ஒளவை, மனிதர் புல் ஆர்தல் உண்டோ? என்ற வினாவுக்குப் பதிலளிப்பதுபோல், “பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க” என்றெழுதியுள்ள திறம் போற்றத்தக்கதாகும்.

இதே பாடலில் வரும், “பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் கழனியூரன்” என்ற புகழ் வாய்ந்த தொடர்களுக்கு, “பூத்துப் பயன்படாத கரும்பினையும் காய்த்துப் பயன்படும் நெல்லினையுமுடைய ஊரன் என்றது, ஈன்று பயன்படாப் பொதுமகளிரையும், மகப்பயந்து பயன்படும் குலமகளிரையும் ஒப்ப நினைப்பான் என்றவாறு” என்றெழுதியுள்ள உரை நுட்பமும் கருதத்தக்கதாகும்.

இதேபோல் ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பாடலில் (மருதம் : 5) வரும் “முதலைப் போத்து முழுமீனாரும்” என்ற தொடருக்கு, “முழுமீனையும்” என்ற பழைய விளக்கத்திற்கு மாறாக, “இனி வளர்ச்சியில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று ஒளவை கண்டுள்ள நுண்ணுரையும் அறியத்தக்கதாகும்.

ஒளவை எவ்வாறு நூலாசிரியர் வரலாற்றைப் படிப்போர் அனைவரும் ஐயமின்றித் தெரிந்துகொள்ளுமாறு தெளிவுற வரைவார் என்பதற்குச் ‘சிலப்பதிகார ஆசிரியர்’ பற்றிய அவரது பின்வரும் விளக்கத்தைச் சான்றாகக் காட்டலாம்.

“இவ்விலக்கியத்தை இயற்றிய சான்றோர் இளங்கோவடிகள்.

இவர் சேரர் குடியில் பிறந்தவர்.

இவருடைய தந்தை, “ஆராத்திருவின் சேரலாதன்” என்னும் வேந்தர் பெருந்தகை;

தாயார் நற்சோணை எனப்படுவார்.

சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் செங்குட்டுவன், இளங்கோ என மக்கள் இருவராவர்.

இவருள் செங்குட்டுவன் மூத்தவன்.

ஒருநாள் மக்கள் இருவரும் தம் தந்தையுடன் இனிதிருக்குங்கால், நிமித்திகள் ஒருவன் வந்தான்.

வந்தவன், இளங்கோவை முடிமுதல் அடிகாறும் ஏற இறங்க நோக்கி, இவனை அரசுரிமை பெறுவன்” என்றான்.

அது கேட்ட செங்குட்டுவன், சினந்து எரிதவழ நோக்கினன்.

மூத்தோன் இருப்ப, இளையனான தான் அரசுரிமை எய்துதல் ஆகாதெனக் கொண்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டார்.

அதனால் இவ்விளங்கோ, ‘இளங்கோ அடிகள்’ எனச் சான்றோரால் சிறப்பிக்கப்படுவாராயினர்.

இவ்வரலாறு, இச்சிலப்பதிகாரத்திற்கு உரைவிரித்த ஆசிரியர் அடியாருக்கு நல்லாரால் பின்வருமாறு உரைக்கப்படுகிறது

(“குமரியொடு…… அந்தமில் இன்பத்து அரைசாள் வேந்து ஆயினன்”) எனப் பாமரருக்கும் புரியும் வகையிலும், அதேவேளையில் பொருளாழத்துடனும் எழுத வல்லவர் ஒளவை என்பதனை, இச்சான்றால் அறியலாம்.

எந்த ஒரு கருத்தை எழுதும்போதும்

(அக்கருத்துடன் தாம் உடன்பட்டாலும் சரி, அதனுடன் தாம் மாறுபட்டாலும் சரி),

ஆய்வு நோக்கைக் கைவிட்டுவிடாமல் – அறிவுக் கண்ணுடனேயே, எதைப் பற்றியும் எழுதுவதென்பது ஔவையின் சிறப்பாகும்.

இதற்குச் சிலப்பதிகாரத்தின் காலம் பற்றி அவரெழுதியதைச் சான்றாகக் காட்டலாம்.

“இளங்கோவடிகள் காலம் முதற் கயவாகுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும் என்று கொள்ளப்படுகிறது.

இனி, வேறு சிலர், இச்சிலப்பதிகாரக் காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.

இக்கூற்றுக்களை நோக்கின், இப்பேரிலக்கியத்தின் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறாதிருத்தல் தெரிகிறது.

இது நன்கு தெளிவாகி வரையறுக்கப்படுந்துணையும், இளங்கோவடிகள் இற்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்ணூறுயாண்டுகட்கு முன் இருந்தவர் என்று கோடல் சிறப்புடைத்தாம்” எனப் பொதுநோக்குடன், அதாவது நடுவுநிலை மனப்பான்மையுடன் எழுதும் தனித்திறம் படைத்தவராக ஒளவையை மதிப்பிடலாம்.

ஒளவையிடம் சைவச் சார்புண்டு என்பது அனைவரும் அறிந்ததாகும்.

எனினும், உரிய சான்றாதாரங்களின் அடிப்படையிலேயே, தமது சைவச் சார்பான கருத்துகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“இவர் (இளங்கோவடிகள்) காலத்தே நம் தமிழ்நாட்டில் இந்திரன் முதலிய சிறு தெய்வ வழிபாடும், வேள்வி செய்தலாகிய வைதிக சமயமும், புத்த சமணச் சமயங்களும் பரவியிருந்தன.

தமிழ்நாட்டிற்கே உரிய சிவ வழிபாடாகிய, இக்காலத்தே சைவம் எனப்படும் – தமிழ்ச் சமயமும் இருந்துவந்தது.

இளங்கோவடிகள் இச்சமயங்களிடத்தே காழ்ப்புச் சிறிதுமின்றி, அவ்வவற்றின் தகுதியினைத் தக்காங்கு அறிந்திருந்தனர்.

அவற்றைக் கூற வேண்டுமிடங்களில், அவ்வவற்றுக்குரியவர் போலவே கூறுவது கொண்டு, அவரைச் சமணர் என்பாரும், வைதிக சமயத்தவர் என்பாரும் பல திறத்தர் உளராயினர்.

ஆயினும், இவரைச் சைவர் என்றே துணியுமாறு டாக்டர் உ.வே.சாமிநாதையர் கூறுகின்றார்” என்று உ.வே.சா.வையும் தம்முடன் சேர்த்துக்கொண்டு, உ.வே.சா. கூற்றையே வலுவான சான்றாதாரமாகக் காட்டி இளங்கோவடிகளைச் சைவராகத் தீர்மானித்துவிடுகிறார் ஒளவையவர்கள்.

எது பற்றியும் தம் கருத்துகளைத் திட்டவட்டமாகத் தெரிவிக்க ஔவை தயங்குவதில்லை.

சேரர் தலைநகரமான வஞ்சியைக் கரூர் என ராகவையங்கார் முடிவுசெய்திருக்கிறார்.

இக்கருத்துக்கு ஒளவை எதிர்நிலையெடுத்துள்ளார். ”

வஞ்சி நகரம் என்பது இப்போது கோயமுத்தூர் சில்லாவிலுள்ள கரூர் என்பாரும்,

மலையாளத்திலுள்ள அஞ்சைக்களம் என்பாரும் பல திறத்தர்

ஆராய்ச்சியாளர். வஞ்சிக் காண்டத்து வரும் பேரியாறும், குறவர் செயலும், பிறவும் நோக்கின், வஞ்சி நகர் இக்காலத்துக் கரூர் என்று துணிதற்கு இடந்தரவில்லை” என்கிறார் ஒளவை.

உரைக்குறிப்பெழுதும்போது, சாதாரண உரைநடையாக மட்டும் எழுதிச் செல்லாமல், அவ்வப்போது கவித்துவம் மிளிரும் நடையழகு காட்டும் திறமுடையவை ஒளவையின் உரைக் குறிப்புகள் எனலாம்.

இதற்குச் சிறந்த சான்றாக, ஔவை எழுதிய சிலப்பதிகாரச் சுருக்கத்திலிருந்து, கீழ்க்காணும் பத்தியைக் குறிப்பிடலாம்.

“விழாக் கழித்த உவா நாளில், மக்கள் கடலாடச் செல்கின்றனர்.

மாதவியும் கோவலனும் கடற்கரைக்குச் சென்று புன்னை நீழற் புதுமணற் பரப்பில் இனிதிருக்கின்றனர்.

அப்போழ்து, வசந்தமாலை என்னும் தோழி, யாழொன்றை மாதவியின் கையிற் கொடுக்க, அதனை அவள் கோவலன்பால் தந்து பாட வேண்டுகின்றாள்.

அவனும் தான் ஒன்றின் மேல் மனம் வைத்துக் காவிரி பற்றியும் கடற்கானல் பற்றியும் பல்வகை வரிப் பாட்டுக்களைப் பாடுகின்றான்.

பாட்டுக் கேட்ட மாதவி, ஊழ்வினையால், அவன் வேற்றுக் குறிப்புடன் பாடினானெனப் புலந்தாள்போல் அவ்யாழைத் தான் வாங்கி, வேறு குறிப்புத் தோன்ற இசைக்கின்றாள்.

அக்குறிப்புணர்ந்த கோவலன் நெஞ்சிற் புலந்து அவளின் நீங்கித் தன் மனையை அடைகின்றான்.

மாதவியோ, அவன் பிரிவாற்றாது பெருந்துயர் எழுதுகின்றாள்” எனக் கதைச் சுருக்கத்தைக்கூடக் கம்பீரமான மொழியிலேயே ஒளவை எழுதுகிறார்.

வளரும் . . . .

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *