POST: 2022-12-27T11:04:33+05:30

பெருமையான நற்பேறு

மறைந்த துணைவேந்தர்
க. ப. அறவாணன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை நூலாக புதுவை யுகபாரதி தொகுத்துள்ளார்.

நூலின் வெளியீட்டு விழா கவிப்பேரரசு வைரமுத்து இல்லத்தில் 24.12.2022,சனிக்கிழமை, காலை 9.45 மணிக்கு நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் தலைமை தாங்கினார்.

கவிப்பேரரசு வைரமுத்து நூலினை வெளியிட்டார்.

முனைவர் தாயம்மாள் அறவாணன், முனைவர் வாணி அறிவாளன், மற்றும் நூலாசிரியர் புதுவை யுகபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிப்பேரரசின் நயவுரை

தமிழ் வளர்ச்சித் துறையின் பெருமை மிக்க, சிறப்பு மிக்க
செயல் புயல் என்று சொல்லத்தக்க அளவில் செயல்பட்டு கொண்டிருக்கிற நம்முடைய ஔவை அருள் அவர்கள் இப்போது அறவாணன் ஐயா குறித்து சில சொற்கள் சொல்லுவார்.

அவர் சொல்லும் சொற்களை என்னுடைய தமிழாசிரியர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் கூறிய கூற்றாகவே கொண்டு போற்றப்படும்.

ஒளவை அருளின் உரை…

எந்தையாரின் இனிய நண்பரும் பெரும் பேராசிரியராகத் திகழ்ந்த
க. ப அறவாணன் அவர்களுடைய தலைசிறந்த இரு நூல்களை இன்று கவிப்பேரரசு அவர்கள் வெளியிட்டு இருக்கின்றார்கள்.

இந்த நூல்களைப் பெறுகின்ற நற்பேறு எனக்குக் கிட்டியதற்கு நான் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றேன்.

பேராசிரியர் அறவாணன் அவர்களும் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் அவர்களும் எங்கள் குடும்பத்தில் நெருங்கிய தோழமை வாய்ந்தவர்கள்.

அவர்கள் இருவரும் இணைந்து எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எங்கள் பெற்றோர்களை காண வரும் பொழுதெல்லாம் நாங்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து நெகிழ்ந்திருக்கின்றோம்.

செனகால் நாட்டிலேயே பணியாற்றி செங்கோர் என்ற தலைவரைக் குறித்து தலைசிறந்த கட்டுரையை எழுதி நூலாக வெளியிட்ட பொழுது எந்தையார் பெரிதும் உவகை கொண்டார்.

தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப்படையெடுப்புகள் என்ற அருமையான நூல் எங்களைப் போன்ற அந்நாள் கல்லூரி மாணவர்களுடைய நெஞ்சங்களில் புதுமையான பல எண்ண அலைகளை உருவாக்கியிருந்தது.

அவர் ஒருவர்தான் தமிழ்ப் படிக்கும் மாணவன் இலயோலா கல்லூரியில் படிக்கும் போதே தட்டச்சுப்பழக வேண்டும், சுருக்கெழுத்து பயில வேண்டும் ,,விளம்பரத்துறையில் செயற்பட வேண்டும், திரைத்துறையில் படர வேண்டும் என்று பன்முக ஆற்றலை தமிழ் இலக்கியம் பயிலும் இளைஞர்கள் பெற வேண்டும் என்று இலயோலா கல்லூரியில் அவர் வாயிலாக மாபெரும் மாறுதல்களை செய்தவையெல்லாம் நாங்கள் எண்ணி எண்ணி விம்மிதம் அடைகின்றோம்.

எந்தையாரின் இனிய நண்பருடைய நினைவை மீண்டும் இன்றைக்கு அரும்பணி ஆற்றி வருகின்ற திருமதி தாயம்மாள் அறவாணன் மூலமாகவும்

என்னுடைய தங்கை, பேராசிரியர் வாணி அறிவாளன் வழியாகவும்

நாங்கள் அவருடைய கட்டுரைகளைக் கண்டு மகிழ்கிறோம்.

வாய்ப்பு நல்கிய கவிப்பேரரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்து அமைகிறேன்

வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *