தினசெய்தி – 31 12 2022
பக்கம் எண் : 4
பாவைப்பேருரை –
( திருப்பாவை – திருவெம்பாவை )
– பத்மஸ்ரீ ஒளவை நடராச
திருப்பாவை
============
பாவைப் பேருரை – முன்னுரை
•••••••••••••••••••••••••••••••••••••
பாவைப் பேரியக்கம்
———————————–
தமிழிலக்கிய வரலாற்றில் ஆறாம் நூற்றாண்டு முதல் தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு முடிவு வரை சமயக் கோட்பாடுகளின் காலமாகும்.
அதனைச் சமய மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
சைவ வைணவ சமயங்கள் புத்துயிர் பெற்று மக்களிடையே பரவிய காலம் அது.
ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற மெய்யடியார்கள் தோன்றியதும் அப்பொழுதுதான்.
தேவாரம், திருவாசகம்,திவ்யப் பிரபந்தங்கள் போன்ற தெய்விக இலக்கியங்கள் பிறந்து தமிழை ஞானத்தமிழ் எனப் பெயர் சூட்டிக் காட்டிய பொற்காலமும் அதுவே எனலாம்.
பொதுவாகத் தமிழகத்தில் பத்தி இயக்கம் தோன்றி வேரூன்றிய காலமும் அதுவே என்றால் மிகையாகாது.
தேவார திருவாசகங்களைத் தமிழ் வேதம் பொதுமறை என்றெல்லாம் சைவப் பெருமக்கள் போற்றுவர்.
வைணவர்களோ நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை செந்தமிழ் வேதம் என்று பாராட்டுவதோடு நில்லாது, அதனைக் கற்று உணர்ந்தோரைச் செந்தமிழ் வேதியர் எனவும் சிறப்பித்து வழங்குவர்.
“பச்சைப் பசுந்தமிழின் பின் சென்ற பைங்கொண்டலே“ எனச் சிவனடியார்களும் பாராட்டுமாறு, திருமாலுக்கு முன்னர் பிரபந்த குழுவினர் பாடிப் போற்றிச் செய்து போவது மரபு.
அந்த மரபு அன்று முதல் இன்றளவும் நீடித்து நிலைபெற்று நிற்பதைக் காணலாம்.
இவ்வகையில் சிறப்புற்ற சமய இலக்கியங்களுள் திருப்பாவை, திருவெம்பாவை எனும் இருபெரும் நூல்களும் தன்னிகரற்றுத் தனிச்சிறப்புப் பெற்றவை ஆகும்.
மார்கழி நோன்பையும் தைந்நீராடலையும் வெளிப்படையாகச் சொல்லும் நூல் வகையுள் மேற்போக்காக அமைந்தவையே இவ்விரண்டும்.
இருந்தாலும், திருப்பாவை, மிக்க இறைநிலை, மேலாம் உயிர்நிலை, தக்கநெறி தடையாகும் ஊழ்வினை, அது நீங்கி வாழும் பேரின்ப வாழ்வு என்பவற்றை விளக்கி இறையருள் விசேடங்களை உள்ளுறையாகக் கொண்டது.
இதைப் போலவே திருவெம்பாவையும் பொங்கும் மவ்விருள் உற்று உறங்காமல், இறைவன் அருட்கயத்தில் மூழ்க வருக என அடியார்களை அழைத்து அவர்கள் எய்தும் சிவானந்தப் பெருவாழ்வின் பேரியல்புகளை எடுத்துரைக்கும்.
இதனால் இவை இரண்டுமே வேத வித்து என்றும் மறைத்தமிழ் என்றும் பேர்பெற்றுச் சிறப்பெய்தி வந்துள்ளன.
இருபாவைகட்கும் இப்படி அருமை பெருமைகள் பல இருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகட்கு முன் வரை நாட்டில் இருந்த நிலைமை வேறு.
தமிழிலே புலமை பெற்ற ஒரு சிலரைத் தவிரப் பொதுமக்கட்கு இவற்றின் பெயர் கூடத் தெரிய வராது.
திருப்பாவை செய்தவர் ஆண்டாள். அதில் முப்பது பாசுரங்கள் உண்டு என்பதுகூடத் தெரியாத வைணவர்கள் இருந்தனர் என்றால் அது மிகையாகாது.
திருவெம்பாவையினைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.
தெரியாதவர்கள் சைவர்களில் பலர் என்பது மட்டுமின்றித் தெரிந்தவர் கூட அதன் பேரைத் திருவெம்பாவை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன்.
காரணம் அதுவரை மக்கள் இலக்கியமாகப் பொது மக்களிடையே பயின்று பரவாமை தான்.
பரவாத தன்மை என்பதைக் காட்டிலும் பரவ விடாத புன்மை என்றே சொல்லலாம்.
ஆனாலும் திருப்பாவையின் ஏற்றமுணர்ந்து வைணவ முன்னோர்கள் போற்றிய முறை துறைகளை இன்று நாம் மறக்க இயலாது.
ஆண்டாளுக்குக் கோயில் கட்டி வழிபட்டது.
ஆண்டுதோறும் திருவாடிப்பூர விழா கொண்டாடுவது.
மார்கழி முப்பதும் நாளுக்கு ஒரு பாட்டாகத் திருப்பாவையைப் பாடிப்பரவுவது.
இந்த மாதத்தை அருட்புயர் காலம் எனக் கொண்டு கோயில்களிலும் இல்லங்களிலும் திருப்பாவை மட்டுமே பாராயணம் பண்ணிவருவது,
உடையவர் திருப்பாவை ஜீயர் என்றே பெயர் பெற்றுச் சிறந்து நின்றது.
இன்னோரன்னவை அவற்றுள் தலைசிறந்தவை ஆகும்.
செந்தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்க முன்னோர் திருப்பாவை நூலின் உள்ளுறையான சீரிய ஞான நுணுக்கங்களை விரிவுரையாக உரைவளம் கண்டு காட்டிய செயல் திறமே இவையனைத்திலும் மிகச்சிறந்த ஒன்றாகும் எனலாம்.
இருந்த போதிலும் பின் வந்தோர்கள் காலத்திற்கு ஏற்ப அதனை மக்கட் காப்பியம் ஆக்கி, பொதுமக்களோடு தொடர்புபடுத்த வேண்டிய பெருங் கடமையினை பல நூற்றாண்டுகளாக மறந்தே போய்விட்டனர்.
இதனை நாம் மிகவும் வருத்தத்தோடு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
வரலாறு சுட்டும் இப்பேருண்மையினை, எவரும் மறுக்கவோ அன்றி மறைக்கவோ இயலாதது.
திருப்பாவை நூலைப் பெரிதும் தனிச்சமய நூலாகவே கையாண்டு வந்தனர் அவர்கள்.
போது போக்கும் உரையினர் என்ற குறுகிய வட்டங்களை அமைத்துக்கொண்டு மரபுப் பொருள் விளக்கங்களையே பலரும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்.
இதன் பரவுதலைக் குறுகிய வளைவுக்குள்ளேயே சுழலவிட்டு புறம்பு நடமாட விடாமல் அதை இருட்டடிப்புச் செய்த ஒரு பெருங்குறை எவரும் மறுத்தற்கு இயலாத பேருண்மை.
தமிழிலக்கிய வரலாறு இதற்கு நடுநின்று தக்க சான்று கூறும்.
கோதை தமிழ் எனச்சிறப்புப் பெறும் இத்திருப்பாவை நூலுக்கு – சங்கத் தமிழ் மாலை என ஒரு தனிச்சிறப்பு உண்டு.
சங்கத்தமிழ் மாலை என்றது தமிழிலக்கிய வரிசையில் திருப்பாவைக்குரிய இடம் பற்றி வந்த சிறப்பு.
கோதை தமிழ் என்பதோ செய்த ஆசிரியரால் பெற்ற ஏற்றம் பற்றி வந்த சிறப்பு. இவ்விருவகைப் பெருமைகட்கும் தகுந்த முறையில் இந்நூலின் அருமை பெருமைகளைப் பொதுமக்கள் நேற்று வரை அறிந்து மகிழ முடிய வில்லை.
சமயநூல் என்கிற முறையில் பழம் பொருள்களையே திரும்பத் திரும்பச் சொல்லக் கேட்குப் பழகி வந்தனர்.
தமிழிலக்கிய வரிசையுள் திருப்பாவைக்குரிய சிறப்பிடம் எடுத்த கருத்தை வற்புறுத்தும் முறையழகு
உள்ளுறையால் அமைந்த பத்தியின் பல்வேறு படிகள்,
சொற்பொருள் அழகுகள், கருத்தமைதி. அலங்கார மரபுகள், இலக்கண விசேடம்,
யாப்பமைதியின் திறன். உட்கருத்துக்கு ஏற்றபடி அமைந்த ஓசை நயம்.
பிற பாவைகளோடு உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்.
வேற்றுமையால் அமைந்த சிறப்பியல்புகள்.
முன்னைய மரபுவழி அழியாது போற்றிய பாங்கு
, சமய சமரசக் கோட்பாடுகள். இவற்றை எல்லாம், எளிய இனிய தமிழில் எடுத்து விளக்கிப் பொதுமக்கட்குப் புலனாகும் போக்கில், எழுதவோ, பேசவோ செய்திருந்தால் நிலையான பொது மக்கள் காப்பியமாகப் பெயர் பெற்றுச் சிறந்து நிற்கும்.
சைவ சமயத்தினைச் சார்ந்த திருவெம்பாவை நூலின் இயல்பும் இத்தகையதே.
திருக்கோவையார் என்பது திருவெம்பாவை போல மாணிக்கவாசகர் இயற்றிய பிறிதொரு நூல்.
அதற்கு உரைவளம் கண்ட பேராசிரியர் என்பார்.
மாணிக்கவாசகரை அறிவால் சிவனே என்பது தேற்றம்‘ என்று கூறி மகிழ்வர்.
முந்தைய சைவப்பெருமக்கள் அனைவருமே திருநான் மறைமுடிவும் கோவை திருவாசகமும் ஒரு வாசகம்“ என்றே உணர்ந்தும் உணர்த்தியும் வந்தனர்.
திருவாசகம், சதுர்மறையின் சாரம் பிழிந்த சங்கிரகம்‘ என்றது அங்ஙனம் உணர்ந்தோர் உட்கருத்து.
இருந்தும் திருப்பாவைக்குப் போல் நேற்று வரை திருவெம்பாவைக்கு ஒரு பேருரை காண முடியவில்லை.
காரணம், சித்தாந்த சைவர்களாகிய சிவாச்சாரியர்களும் குருக்கள்மாரும் ஆகம சாஸ்திர வல்லுநர்களாய் சிவ தீட்டிசை புரிவதிலும் ஆலய பூஜா கைங்கரியங்களிலுமே பெரிதும் ஈடுபட்டிருந்தனர்.
அன்றியும் வடமொழி தமிழ் ஆகிய இருமொழிகளிலும் போதிய புலமை பெற்று உரைவளம் காணும் தகுதி பெற்றவர்கள் அருகியும் இருந்தனர்.
இரு மொழிகளிலும் சீரிய புலமை பெற்று ஆதீனத்தலைவர்களாய் இருந்த பெருந்தகையோர் ஒரு சிலருண்டு.
அவர்களை எண்ணிப்பார்த்தால் சமய நூல்களைச் சாத்திரம் தோத்திரம் என இருவகைப்படுத்திக்கொண்டு, தேவார திருவாசகங்களைத் தோத்திரமாக ஆக்கிப் புறக்கணிக்கல் ஆயினர்.
இதன் பயனாய்த் திருவெம்பாவை கோயில்களில் வழிபாட்டு நேரங்களில் மத்தளம் கொட்டித் தாள முழக்கோடு பண்ணிசைப் பாடும் அளவுக்கு நடைபெற முடிந்ததே தவிர திருப்பாவை போலவே இதுவும் மக்கள் இலக்கியமாக மாறி முழுப் பெருமை பெற இயலவில்லை.
எனவே, முற்கூறியபடி திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இவ்விரு நூல்களும் மக்கள் இலக்கியமாக மாண்புபெறும் மறுமலர்ச்சியினை எதிர்நோக்கி இருந்தன.
இவ்வுண்மை எவருக்கும் சொல்லாமலே துலங்கும் நிலையில் இருந்தன.
இந்தப் பின்னணியோடு இக்கால நிலையில் நாம் சிலவற்றை உற்று நோக்குதல் வேண்டும்.
இன்றோ, திருப்பாவை, திருவெம்பாவை பற்றித் தெரியாத பொது மக்கள் கிடையாது.
ஊருக்கு ஊர் பாவை மன்றங்கள் அமைந்து சிறக்கின்றன.
இலவசமாக விரும்புபவர்கட்கு இரு பாவைகளையும் கற்றுத்தரக் காண்கிறோம்.
எழுத்தறிவில்லாத பாலர் முதல் பெண்டிர் வரை அவற்றை மனப்பாடமாக்கி ஒப்புவித்தனர்.
அப்படி, இரு பாவைகட்கு ஒப்புவித்தல் போட்டி ஏற்படுத்தி பரிசு வழங்கி மக்களை ஊக்குவித்தும் வருகின்றனர்.
நாடெங்கிலும் பாவை மன்றங்கள் நிறுவி ஆண்டுதோறும் பாவை விழாக்கள் கொண்டாடப் பெற்று வருகின்றன.
பாவைப் பாடல்களைக் கொண்டே முழுக்கச்சேரிகள் நிகழ்வது இன்றைய புதுமை.
பேதமில்லாதபடி மக்கள் இரு பாவைகளையும் ஓதி சரிசமமாகப் பாவித்து சமய ஒற்றுமை வளரவும் வளர்க்கவும் காண்கிறோம்.
இனிய எளிய பதவுரை பொழிப்புரையுடன் பாவைகள் இரண்டும் வெளி வருகின்றன.
பாவைக் கூத்து என்ற பெயரால் திருப்பாவை முழுதும் நடன நாடகமாக கலையரங்குகளில் நடிக்கப்பெற்று வருவதனை யாவருமே உணர்வர்.
சிவன் கோயில்களில் திருப்பாவையும், வைணவத்தலங்களில் திருவெம்பாவையும் பொழிவாக நடைபெறுகிறது.
அது மட்டுமின்றி, சைவப்பெருமக்கள் திருப்பாவை பற்றியும் வைணவப் பெரியோர்கள் திருவெம்பாவை பற்றியும் உரையாற்றும் பேரதிசயம் இக்காலத்திலே நிகழ்ந்து வருகிறது.
ஆண்டாள் மாணிக்கவாசகர் திருவுருவப் படங்களை ஒரு சேர வைத்து ஆராதிக்கப்படுகின்றன.
இரு பாவைகளையும் யானை மீது வைத்து ஊர்வலம் வந்து பொதுப்பட மக்கள் எல்லோரும் வணங்கி வழிபடுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் இல்லாமல் தில்லி, கல்கத்தா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா முதலான பிற மாநிலங்களிலும் பாவை மகாநாடுகள் மிகப் பெருமையோடு கொண்டாடப்பெற்று வருகின்றன.
திருவெம்பாவைக்கு வெகுகாலமாக இல்லாத குறை ஒரு பேருரை இல்லாததே ஆகும்.
அக்குறை இக்காலத்திலே காலஞ்சென்ற மகிபாலன்பட்டி பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால் நீக்கப்பட்டுவிட்டது.
கதிர்மணி விளக்கம் என்ற வரிசையில் திருவெம்பாவைப் பேருரை ஒன்று வெளி வந்துள்ளது.
மிகவும் போற்றுவதற்குரியது.
ஊர்தோறும் வார வழிபாட்டுக் கழகம் நிறுவப்பெற்று, அதன் சார்பில் வாரம் ஒரு நாள் ஆலயத்தில் கூடி கூட்டு வழிபாடு நடந்து வருகின்றன.
அக்கழகச் சார்பில் பாலர் பெண்டிர் உள்பட பலரும் ஒருநாளில் கூடி பாவைப்பாடல்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள்.
இரு திருப்பாவைகளையும் பாராயணம் செய்து வீதி வலம் வந்து பாடிவரும் பழக்கம் பட்டி தொட்டிகளில் கூட இன்றளவும் காட்சிதரும் செய்தியாகும்.
இங்ஙனம் இரு பாவை நூல்களும் மக்கள் காப்பியம் எனும் நிலையிலே மாறி நிற்கிறது.
மறுமலர்ச்சி பெற்று புலவர், பாமரர் வேறுபாடின்றி போற்றுதல் பெற்றும் வருகிறது.
தமிழுணர்வினையும் சமய சமரச நிலையினையும் கூட்டிவைத்து நலம் புரிந்து நிற்கிறது.
சமயப் பற்றினையும் நாட்டில் நிலைபெறச்செய்து செழிப்பூட்டி வைத்திருக்கிறது என்றால் இவ்வளவு மாற்றத்திற்கும் காரணம் என்ன?
இதை ஒவ்வொருவரும் ஆழச் சிந்தித்துச் செயலாற்றக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இதற்கு எல்லாம் முதன்மையாளராக காமகோடிப் பீடாதிபதி காஞ்சிப் பெரியவராய் விளங்கியவரே என்பது நாடும் நகரும் நன்கு அறிந்த செய்தி ஆகும்.
முப்பது ஆண்டுகட்கு முன்னர் அவர் தொடங்கி வைத்த பாவைப்பேரியக்கம் இல்லையானால் இத்தகைய பெரும் மாற்றங்கள் நிகழ இடமேற்பட்டிருக்க முடியாது.
இன்று மார்கழி மாதம் வந்தால் யாவரும் திருப்பாவையோடு காஞ்சிப் பெரியவரையும் சேர்த்து நினைக்கும் அளவுக்கு அவர் திருப்பெயர் தமிழகத்தில் நின்று நிலைபெற்றுவரும் அளவுக்கு தமிழ்த்தொண்டு பூண்டு செயலாற்றி இருப்பது அவரது தனிச்சிறப்பே என்பதில் தட்டில்லை.
தமிழுணர்வுடன் கூடிய புலமை நிறைவு, கடவுளர் வேறுபாடற்ற சமய மனப்பான்மை, சர்வ சமய சமரச நோக்கு – முதலானவை இன்மையே இதுவரை பாவை மறுமலர்ச்சி கைகூடாத காரணம், காஞ்சிப் பெரியவரிடம் இக்குறைகள் தலைகாட்டாமையோடு, இவற்றுக்கு எதிரிடையான நல்ல பண்பு நல மேம்பாடுகளும் ஒருசேரப் பொருந்தியிருந்தமையாலேயே அவரால் இப்பேரியக்கத்தைத் தோற்றுவித்து வெற்றிகாண முடிந்தது.
சுருங்கச் சொன்னால் காஞ்சிப் பெரியவர்களைத்
“தமிழர் மறந்தாலும் தமிழ் மறவாத பெருந் தகையாளர் எனலாம்.
“பாவை மறுமலர்ச்சி காணத் தோன்றிய பெருந்தகை“ என்று சொன்னாலும் அது பொய்யோ, புனைந்துரையோ அன்று என்பது திண்ணம்.
காஞ்சிப் பெரியவர் வடமொழியில் எல்லைகண்ட பெரும் புலமையாளர்.
தமிழையும் அதற்கு இணையான தெய்வமொழி எனப் போற்றி மகிழும் மனப்பான்மையர்.
இப்புனிதமான மனநிலை தான் அவரைப் பாவைப்பேரியக்கத்துக்கு உறுதுணை ஆக்கியது.
பாவைப் பெயருக்கு முன்னர் பலர் பல்வேறு காரணங்கள் சுட்டியுள்ளனர்.
“தமிழ்மொழி ஒரு தெய்வம்.
அதற்கு சைவமும் வைணவமும் இரு கண்கள்.
தமிழ் மறையாகிய திருவாசகமும் திவ்யப்பிரபந்தமும் கண்ணுள் தோன்றும் இருவிழிகள்.
விழிக்குள் சிறந்த பாவை போல திருப்பாவையும் திருவெம்பாவையும் கண்ணுட்சிறந்தது.
கண்மணி மணிகளிலும் சிறந்தது மணியாடு பாவை அதுபோல தமிழ்த் தெய்வத்தின் கண்மணிப்பாவை போன்றது.
ஆகையால் பாவை என்று காரணம் காட்டினார் காஞ்சிப் பெரியவர்.
இப்படி நல்லதொரு பொருத்தமும் திருத்தமும் காட்டிப் பெயர் விளக்கம் சுட்டியது அப்பெரியாரது தமிழுணர்வுடன் கூடிய புலமைத் திறத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டில்லையா?
முன்பு எல்லாம் கடவுளர் வேறுபாடே சமய வேற்றுமை காண இடம் தந்து பகைமையையும் மூட்டியது.
சைவர்கள் திருப்பாவையைக் கண் எடுத்தும் பாரார்.
வைணவர்களோ திருவெம்பாவையினைத் தீண்டவும் நினையார்.
இரு சாராருமே தமிழகத்திலே பிறந்து வாழ்ந்து வருபவர்களே.
ஆயினும் தமிழ் நூல்கள் அவர்கள் கையில் பட்டபாடிது.
காஞ்சிப் பெரியவரோ எனில் அரியையும் அரனையும் ஒப்ப நினைக்கும் பெருமகனாய் அத்துவித மரபு வழிவந்தவர்.
அதனாலேயே இங்ஙனம் இருபாவைகளையும் இணைத்து விழாக் கொண்டாட வழிவகுத்துக் கொடுக்க முடிந்தது.
மொழி வேறுபாடு கருதாது, சமயப் பொதுமையை உருவாக்கி, தேசீய ஒருமைப்பாட்டுக்கும் வழி காட்டுவதால் பாவைப் பேரியக்கம் நாட்டிடையே நல்ல வலுப்பெற்று வலுவூன்றி நிற்கிறது.
இதைத் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டியது இரு சமயத்தார்க்கும் ஒத்த கடமை.
திருப்பாவை -1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள்.
அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள்.
108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம்.
108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார்.
நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே!
சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே!
மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது.
இன்று நாம் நீராடக் கிளம்புவோம்.
கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்..
திருவெம்பாவை
=============
பாடல் – 1
————–
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ! வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள், என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!
விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
எந்நாட்டவராலும்
எக்காலத்தவராலும் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு என்றும் நிலைத்த பண்புகளையோ, உண்மைகளையோ நெறிகளையோ சிந்தைக்கும் செவிக்கும் இனிய செஞ்சொற்களால் உரைப்பதே சிறந்த இலக்கியமென இலக்கண வரம்பு வகுப்போமானால் மணிவாசகர் அருளிய திருவாசகம் தலைசிறந்த தமிழ் மாமறையாகத் திகழ்வதாகும்.
திருவாசகத்தில் பேசப்பெறும் செய்தி, காலம், இடம் என்னும் பாகுபாடுகளைக் கடந்த, சிந்தை செல்லாச் சேணகத்ததாய் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுமையாய்ப் பிறங்குகின்ற
பேரருட்பிழம்பைப் பற்றியதும், அவ்வருள் ஒளியை நாடிக் கலந்த ஒரு சிற்றுயிர்க்குற்ற பலதிறப்பட்ட நிகழ்வுகளைப் பற்றியதுமாகும்.
இன்னினிய பண்ணினிமையும், பொருட்செறிவும், கலை நலமும் வாய்ந்த சொற்களால் கற்பவர் பயிற்சிக்கும் உணர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பப் பொருள் பொலியுமாறு வளவிய பாடல்களை வழங்கிய வள்ளன்மை திருவாசகத் திறமாகும்.
திருவாசகப் பதிகங்களிடையே ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக‘ எனப் பாராட்டப் பெற்ற பகுதி திருவெம்பாவையாகும்.
மனங்கவர் திருவெம்பாவையை மாணிக்கவாசக சுவாமிகள் திருவெண்ணாமலையில் தங்கியிருந்த காலத்தில் அருளிச் செய்ததாகக் கடவுள் மாமுனிவர் தாம் எழுதிய “திருவாதவூரர் புராணத்தில்“ குறித்துள்ளார்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் தமது “திருப்பெருந்துறைப் புராணத்தில்“ அக் கருத்தையே ஏற்றுள்ளார்.
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் திருவெம்பாவையைத் தில்லையில் அருளிச் செய்ததாகக் கருதி ஓர் ஆசிரியப்பா பாடியுள்ளார்.
இவர்களுக்கெல்லாம் காலத்தில் முற்பட்டவராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தமது “திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில்“ திருவெம்பாவையைத் திருப்பெருந்துறையிலே அருளிச் செய்ததாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு திருவெண்ணாமலையிலும், தில்லையிலும், திருப்பெருந்துறையிலும்
தெய்வ நலம் கற்பார் உள்ளத்தைக் கனிவிக்கின்றது.
பழந்தமிழ் நூல்கள் காட்டும் பாவைப்பாட்டு என்னும் வகையைச் சார்ந்தது திருவெம்பாவை.
நீர்த்துறையில் சீர்இள மகளிர் பாவையமைத்து நீராடி வணங்கும் நீர்மையைப் பொருளாகக் கொண்டது இப்பாட்டு.
பழங்காலத்தில் முழுத்திங்கள் வழியாக மாதங்கள் கணக்கிடப்பெற்றன.
அதனால் மாதத்தைத் திங்கள் என்று குறிப்பது வழக்கம்.
பழந்தமிழ் நூல்களில் மாதம் என்ற சொல் காணப்படாது திங்கள் என்றே கூறப்படும்.
நாம் இப்போது வழங்கும் மார்கழித் திங்கள் மார்கழி முழுமதியோடு முடியும்.
மறுநாள் தொடங்கும் தைத் திங்கள் தை முழுமதியோடு முடியும்.
எனவே இம் மார்கழி நீராட்டைத் தைந் நீராடல், தையில் நீராடிய தவம் எனச் சங்கச் சான்றோர் குறித்தனர்.
இன்று ‘இவ்வூராரெல்லாம் தை நீராடுப, மருவூரார் தை நீராடினார்‘ என்னும் இலக்கணச் சொற்றொடர்களும் பாவை நோன்பு புரிந்திருந்த பாங்கைச் சுட்டிக் காட்டுகின்றன.
வெப்பம் மிகுந்த நாடுகளில் தண்புனலுக்குத் தனிச் சிறப்பு உண்டாவதும், நீராடுதலே விழாவாதலும் ஆகும்.
அவ்வகையில் பாவைப்பாட்டு நீராடுதலை அடிப்படையாகக் கொண்டிருத்தலும் இயல்பாகும்.
இப்போதைய தாய்லாந்து எனும் சயாம் நாட்டில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதப்பெறுவது தமிழ் நாகரிகம் உலகளாவிப் பரவியிருந்த மாட்சிமைக்குச் சாட்சியாகும்.
‘ஆணவக் காரிருளில் அழுந்தி உறங்காமல் அருள் வெள்ளத்தில் நீராட வருக‘ என அழைப்பதே திருப்பாவையின் உட்பொருள் என ஆன்றோர் கூறுவர்.
நாடு மழையால் நலம் பெறவேண்டும்.
வீடு சிறந்த கணவனால் வளம் பெறவேண்டும் என, நாடும் வீடும் செழித்தோங்கப் பாடும் பாவையர் பொய்கையருகே கூடிப் பரவுகின்றனர்.
வெள்ளி முளைப்ப விடியல் வந்ததும் வீடுதோறும் நாடி ஒருவரையொருவர் சென்று எழுப்புகின்றனர்.
எம் பாவாய் என அன்போடு அழைக்கின்றனர்.
இன்னுமா இருள் உறக்கம் !
எப்போது உனக்கு அருள் பிறக்கும் !
உண்டாக வேண்டாமா உருக்கம்!
அப்படியென்ன தூக்கத்தில் ஆசை !
அங்கே கேட்கவில்லையா எங்கள் பாட்டு ஓசை!
என்றொல்லாம் பேசுகிறார்கள்.
பரம்பொருளை நினைத்து மகிழ்கிறார்கள்.
திருவருளின் பெருங்கருணைக்கு நெகிழ்கிறார்கள்.
இப்படி மகளிர், தமக்குள் பேசிக்கொள்வது இளமைக்குரிய ஏச்சா!
வெறும் பேச்சா?
இல்லை பெரும் மூச்சு –
ஞான உரை வீச்சு
எனக் காட்டப் பெறுகிறது.
இவ்வண்ணம் எழுந்த பாவைப்பாட்டு இதோ வீதி வாய்க் கேட்கிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை அவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள்.
உலகின் எல்லாப் பொருளுக்கும் முதலும் முடிவும் உண்டு.
தோற்றமும் இறுதியும் உண்டு.
எல்லாப் பொருளும் தோன்றவும் மறையவும் இடந்தருகின்ற – காண்பதற்கு அருமையும் உரைப்பதற்குச் சொல்லி முடியாத பெருமையும் பூண்ட பொருளாகிய – இருள் நீக்கித் தெளிவும் ஒளியும் ஊட்டுகின்ற பேரொளிப் பிழம்பாகிய சோதியின் நலங்களை உன் தோழியராகிய நாங்கள் பாடிப் பாவுகின்றோம்.
எங்கள் பாட்டொலி கேட்டும் விழித்து எழவில்லையே நீ !
நீண்ட ஒளியும் நெறியான அளவும் பொலிவான அழகும் பொங்கி மிளிர்கின்ற விழியழகி நீ !
உன் காதென்ன கேட்காத காதா?
மற்றொரு தோழியோ பெருந் தேவனாகிய பரம்பொருளின் திருவடிகளை வணங்கிப் பரவும் எங்கள் குரலொலியைத் தெருமுனையில் கேட்ட அளவிலேயே உணர்வு மிகுந்து, உள்ளம் நெகிழ்ந்து மனங்கரைந்து தேம்பித் திகைத்துத் தன்னை மறந்து செயலற்று மெத்தென்ற அமளியிலிருந்து பொத்தென்று வீழ்ந்து புரண்டு செயல் மறந்து கிடக்கின்றாள்.
இத் தோழியின் உருக்கவியல்பு இப்படி உள்ளதே !
இதனை எண்ணிப் பாராய் !
எம் பாவாயே !
ஒன்பது சக்திகள் ஒருவரை ஒருவர் எழுப்பும் வகையில் மனோன்மணியாகிய சக்தி சர்வபூத தமனியை எழுப்புவதாகத் துயில் எழுப்பும் எட்டுப் பாக்களுக்கும் நுண்பொருள் கூறுபவருண்டு.
உயிர்கள் விழிப்புற்றுத் திருவருள் நலத்தில் மூழ்கி எழுந்து தெளிவு பெறுவது என்றும், அடியவர்கள் பலராகச் சேர்ந்து அருள் வழிபாடியற்றுவது என்றும் இப் பகுதிக்குப் பொருள் கூறலாம்.
இத் திருப்பாட்டில் கேவல நிலையிலுள்ள உயிர், பாடிக் கேட்டும் துயிலெழாமல் ஆணவத்தால் கட்டுண்டு இருண்முடி இறைவனை நினையாது வாளா கிடக்குமெனவும், சுத்த நிலையிலுள்ள உயிரோ இறையருட் பாடலைக் கேட்ட போதே அன்பின் பெருக்கினால் தன்னுடலை மறந்து உலகுநெறி விட்டுச் சிவநெறி புகுந்து சிவானந்தத்தில் மூழ்கித் திளைத்து நிற்கும் இயல்புடையதெனவும், இடைப்பட்ட சகல நிலையிலுள்ள உயிரோ விரதங் காப்பதோடு ஆண்டவனை அருட் பாடல்களால் துதித்தும் வழிபாடு செய்தும் புண்ணியப் பேற்றினையடைதற்கு முயலுஞ் சிறப்புடையதெனவும் உணர்த்தப்படுவதாகவும் நலம் உய்த்தறியலாம் என மூவகை இயல்பும் இப் பாடலில் குறிக்கப்பட்டன.
தொடரும் ….

Add a Comment