தினசெய்தி – 1 1 2023
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் -142
இசை பரப்புக
முனைவர் ஔவை அருள்
ஐரோப்பாக் கண்டத்திலுள்ளோர் ஆங்கிலப் புலவர்களுடைய கவித்திறத்தினைப் பாராட்டுங்கால், செகசிற்பியாருக்கு அடுத்த படியிலே பைரன் என்னும் புலவரைக் கொள்ளுவார்கள்.
பைரன் பட்டவர்த்தனர் குடும்பத்துத் தலைமகனாதலின் லார்ட் பட்டம் வகித்தவர்.
இளமையிலே தந்தையை இழந்தார்.
இவர் தாயின்மீது வெறுப்புடையவர்.
ஒழுக்கந் தவறிய நடையினாலே இவரை முதயோர் வெறுத்தனர்.
சிருங்கார ரசம் மேவ இவர் செய்த காவியங்கள் மிகப்பல.
தொட்டவற்றையெல்லாம் பொன்னாக்கும் பரிசவேதி போல் எந்தப் பொருளையெடுத்தாலும் கவிநயம் சொட்டுமாறு செய்வார்.
”கருதுவதங்கொன்றுண் டோ காப்பியக் கவிகள் காம எரியெழ விசுற்பித்திட்டார்’
எனத் தமிழ்நாட்டுப் பெரும் புலவர் கூறுவதுபோலவும்,
சுவை பல வென்று சொல்லுவர்.
புலவர் யாம் வேண்டுவது இன்பச் சுவையே’ என்று வடமொழி மன்னன் வரித்தது போலவும் இன்பச் சுவையினைப் போற்றி இவர் செய்த டன்ஜுவான் என்னும் பெருங்காப்பியம் பதினாறு இலம்பகங்களால் நடப்பது.
திருத்தக்க தேவரது காப்பியத் தலைவனாகிய சீவகனைப் போலப் பைரனது காப்பியத் தலைவனாகிய டன்ஜுவானும் காமதுரந்தரன்.
பல மகளிராற் காதலிக்கப்படும் ஆடவனுக்கு அப்பெயர் சூட்டுதல் ஆங்கில மொழி வழக்காக வந்துவிட்டது.
சீவகன் கன்னியரையே காதலித்தான்; இது தமிழ் மரபு.
டன்ஜுவானோவென்றால் பிறர் மனைவியர் காதல் வலையிலுஞ் சிக்குண்டான்.
இக்காப்பியத்திலே பல விடங்களிலே கவி தமது சொந்த அநுபவத்தைக் கூறக்காணலாம்.
பதினெட்டாம் ஆண்டுப் பருவத்திலே பிறன் மனைவியிடத்து வைத்த பொருந்தாக்காதல் காரணமாகத் தாயினாலே பிற நாட்டு யாத்திரைக்கு அனுப்பப்பட்ட டன்ஜுவான் கப்பலுடைந்து தன்னந்தனியனாய் ஒரு தீவுக்கரையை அடைகிறான்.
கரையிலே உணர்விழந்து கிடந்தோனை யவனபுரத்து இளநங்கையொருத்தியும் அவளது உயிர்ப்பாங்கியும் கண்டு எடுத்து உபசரிக்கின்றனர்.
பின்பு இவன் அந்நங்கையை மணக்கின்றான்.
அவள் தந்தை வெகுண்டு இவனை அடிமையாக விற்று விடத் துருக்கி தேசத்தையடைகிறான்.
அரமனைமாதொருத்தி இவனை விலைகொடுத்து வாங்கிப் பெண்ணுடை தரிப்பித்து அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று தன்கருத்துக் கிசையும்படி கேட்க இவன் மறுக்கிறான்.
அங்கிருந்துந் துரத்துண்டு துருக்கிக்கும் ரூஷியாவுக்குமிடையே நடந்த யுத்தத்திலே கலந்து ரூஷிய ராணியின் முன்னிலையை அடைகிறான்.
ராணி இவனைக் காதலிக்கிறாள்.
அவளது அன்புக்குரியவனாகி, அரசியல் விஷயமாக இங்கிலாந்து தேசத்தை யடைகிறான்.
அங்கும் பல மகளிர் இவனைக்கண்டு தமது நிறையழிகின்றனர்.
சரித்திரம் ஒழுக்கத்தினிழிந்ததாயினும், பைரனியற்றிய காப்பியம்
சீவக சிந்தாமணியிலும் கவிச்சுவைமிக்கது.
யவனநாட்டின் மீது இக்கவிக்குள்ள பேரன்பு காப்பியத்தின் பல விடங்களிலே காணப்படுகிறது.
சைல்ட் ஹறால்ட் யாத்திரை என்னும் பெருங்காப்பியம் தேசாபிமானச் சுவைமிக்கது.
வானகமும் மண்ணகமும், சார்தானாப்பபாலஸ், காயின், உவேர்ணர், அங்கஹீனன், அங்கம் நிமிர்ந்தது எனப் பெயரிய நாடகங்கள் இலக்கணமும் கலையும் நிரம்பியவை.
இவரியற்றிய சிறு காப்பியங்களும் பல. கடலை வருணிப்பதில் இவருக்கு இணையாயினர் யாருமில்லையென்றே கூறலாம்.
விக்டோரியா ராணியினது சமஸ்தானப் புலவராகப் பெரும் பெயர் பெற்றவரும். ஒழுக்கமே யுருவெடுத்தாற்போன்ற வருமாகிய தெனிசன் என்னும் பெருங்கவியைப்பற்றி ஒரு சில கூறுவாம்.
இவரும் லார்ட் பட்டம் வகித்தவர்.
இவருக்கு அப்பட்டம் ராணியாரால் வழங்கப்பட்டது.
இவர் மகா கவியாயிருந்ததோடு, ஞானவானாகவும் விளங்கினார்.
இவரது சகோதரியாருக்கு மணமகனாக வருவதற்கிருந்த நண்பரொருவர், இவர்மேற் பேரன்பு பூண்டோர். இளவயதிலே இறந்துபோக, அத்துயரினை ஒருவாறு ஆற்றிக்கொள்ளும் வண்ணம் இவர்பாடிய கையறு நிலைச்செய்யுள் ஒரு வேதாந்த நூல்போல் அமைந்தது.
மக்கள் வாழ்க்கையின் நிலையாமையும், ஆண்டவனே நமக்கு ‘எய்ப்பில்வைப்பு’ ஆவான் என்பதும், ஒழுக்கத்தினாலெய்திய புகழ் அழியா நீர்மையதெனபதும் பிறவும் நாலடிச் செய்யுளிலே அழகாகப் பாடப்பட்டிருக்கின்றன.
முதற் பத்துச் செய்யுட்களின் மொழிபெயர்ப்பு வருமாறு:
‘ஆண்டவனது திருமகனே!
அருந்திறலுடையாய்!
அழியா அன்பின் நிலைக்களமே!
நினது திருமுகத்தை நேரிற் கண்டிலமெனினும், உள்ளத் துணர்ச்சியே (நம்பிக்கையே) துணையாக நின்னை நம்பி. நின்னருளிற் கலந்து நிற்கின்றோம்.’
‘பகற்பொழுதினை விளக்கும் செஞ்ஞாயிறும், இரவுப் பொழுதினை விளக்கும் வெண்டிங்களும் நினக்கு உரியவை. மனிதவுயிர்க்கும் விலங்குயிர்க்கும் வாழ்வினை ஈந்தனை; சாவினையும் நீயே படைத்தனை.
நினது திருவடி நீ செய்த மனித கபாலத்தின்மீது பொருந்தி நிற்கிறது.’
‘மண்ணிற் புழுதியிற் கிடக்கும் வண்ணம் எம்மைப் புறக்கணிப்பாயல்லை;
மனிதனைப் படைத்தனை, எற்றுக்குப் படைத்தனையென அவன் அறியான்.
வாளா இறந்து ஒழிந்துபோம் வண்ணம் படைக்கப்படவில்லையென அவனது உள்ளம் நினைக்கின்றது.
அவன் நினது திருக்கரத்தினால் உருவாக்கப்பட்டான்.
நீ அறத்தின் முதல்வன்.’
‘மக்களது நீர்மையும் தெய்வத் தன்மையும் நின்பாற் காணப்படுகின்றன.
அதியுயர்ந்த, அதிதூய்மையாகிய ஆண்டகைமை நினக்கு உரியது. எமது சித்தம் எமக்குரியன.
அவ்வுரிமை எவ்வாறு எய்தியதென யாம் அறியோம்.
எமது சித்தம் எமக்கு உரியவாயின.
அவை தம்மை நினக்கு உரியவாக்குதற் பொருட்டாகவோ?’
‘யாம் வகுக்கும் முறைகள் சில நாள் நின்று ஒழிந்து போகும் தகைமைய அவை நினது அருளொளியினின்று சிதறிய கதிர்கள்.
என் ஆண்டவனே!
நீ அவற்றிலும் மிக்காய்.’
‘எமது உள்ளத்தில் நம்பிக்கையுளது; அறியும் அறிவு இல்லை.
அறிவு காட்சிப் பொருள்கள் மேற்செல்வது.
(நீ காட்சிக்கு எட்டாப் பொருள்) ஆயினும் யாம் நின்னை நம்புகிறோம்.
அந்நம்பிக்கை நின்னிடமிருந்து வந்தது. பேரிருளிலே அஃது ஓர் ஒளிக்கிரணம்; அது வளர்வதாக.’
அறிவு மேன்மேலும் பெருகுக.
அறிவினும் பார்க்க வழிபாடு எம் உள்ளத்தில் உறுவதாக.
முன்னிருந்தது போல உள்ளமும் உயிரும் ஒன்றுபட்டு இசை பரப்புக’
‘அவ்விசை பெருக்கம் உறுக.
யாம் பேதைமையுடையேம்:
அற்ப மதியுடையேம்.
அச்சம் நீங்கிய வேளைகளில் நின்னை அவமதிக்கின்றேம்.
பேதையேமாகிய எமக்குப் பொறையினைத் தந்து உதவுவாயாக.
நினது அருளொளியைத் தாங்கும் வலிமையினை நீ படைத்த அற்ப மதியினராகிய உலகினராமெமக்குத்தந்து உதவி புரிவாயாக.’
ஏழையேனிடத்துக் காணப்படும் பாவங்களை மன்னித்தருள்வாயாக; (உயிர் வாழத்) தொடங்கியது முதல் எனது தகவுஎனயான் கொண்ட எண்ணத்தினை மன்னித்தருள்வாயாக.
மதிப்பு எனப்படுவது மனிதனிடத்துத் தோன்றி மனிதனை நாடுகிறது.
அது மனிதனிடத்துத் தோன்றி ஆண்டவனாகிய நின்னை அடைவதில்லை.’
நின்னாற் படைக்கப்பட்டவன். செம்மை நலம் உடையோனென ஏழையேனால் மதிக்கப்பட்டவன்.
அவனது பிரிவினாலே என்னுள்ளத்தில் எழுந்த துயரினை மன்னித்தருள்க.
அவன் நினது (திருவடி) நிழலிலே வாழுகிறான் என அடியேன் நம்புகிறேன்.
ஆதலினாலே, அவன் முன்னையிலும் பார்க்க எனது அன்புக்குப் பாத்திரவான் ஆயினான் என நான் காண்கின்றேன்.
———————–
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்,
‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில்
இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய
உரைக் குறிப்பு
பகுதி – 5
ஒரு புலவரின் சிறப்பைப் பற்றி விளக்கும்போது, பிற மொழிப் புலவருடன் ஒப்பிட்டுக் காட்டி விளக்கும் ஆய்வு நலமும் ஒளவையிடம் காணப்படுகிறது.
“தன் உள்ளக் காட்சியிற் புலப்படும் கருத்துக்களை உள்ளவாறே விளக்கவுரைப்பதால் மட்டும் ஒரு புலவனது புலமை ஏற்றமெய்தாது;
தான் உணர்த்தக் கருதுவனவற்றை நன்கு ஆராய்ந்து பல நெறிப்படப் பகுத்தும் தொகுத்தும் செம்மை செய்து இலக்கண வரம்பு கடவாதுரைக்கும் மாண்பே புலவனது புலமை நலத்துக்குச் சீரிய குறியாகும் என அறிஞர் கூறுவர்.
அது நம் (இளங்கோ) அடிகள் பால் மிகச் சிறந்து நிற்கிறது” என்கிறார் ஒளவை.
மேலும் அவர், “இது மில்டன் பற்றி மெக்காலே உரைத்த கருத்து (Macaulay on Milton)” என்று (ஆய்வு நேர்மையுடன்) அடிக்குறிப்பாகத் தருகிறார்.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும், கதையின் அத்தியாயங்களைக் குறிப்பிடுவதற்குக் ‘காதை’ என்ற சொல்லாட்சி எடுத்தாளப்பட்டுள்ளது.
இது பற்றி ஒளவை விரிவாக எழுதியிருக்கிறார். ”
டாக்டர் உ.வே.சாமிநாதைய்யரவர்கள், காதையென்பதை, இசையோடு பாடப்படுவதாகிய செய்யுள் என்று பொருள்படுகிற ‘காதா’ என்னும் வடமொழிச் சிதைவென்று கொண்டால் யாதோர் இழுக்குமின்று என்று வடமொழியாளர் கூறுவர் என்று கூறுகின்றார்.
இசையுள் நாடகவுறுப்பும் விரவிவரும் பகுதிகளைக் ‘காதை’ என்று குறியாது, பிறவற்றையே அக்’காதை’யென்னும் சொல்லால் அடிகள் குறித்திருத்தலின், அவ்’வடமொழியாளர்’ கூறுவது, நூலாசிரியர் கருத்துக்கு முற்றும் மாறாக இருத்தலின், அது பெரியதோர் இழுக்காம் என்று தெளியத் தோன்றுகிறது.
இது குறித்தே திரு. ஐயரவர்களும், இதனாலேயே இந்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர் பெற்றன போலும் என நெகிழ்ந்தோதிச் சென்றனர்” என்கிறார் ஒளவை.
மேலும், “வேற்றிசை விரவாத தனிப்பாட்டைக் காதை என்று வழங்குவதே முறை” என்றுமெழுதுகிறார்.
எனினும், அவருடன் தாம் முற்றிலும் மாறுபடுமிடத்தும், உ.வே.சா.விடம் தாம் கொண்ட தனி மதிப்பு வெளிப்படும்வண்ணமே ஒளவை எழுதிச் செல்வதும் இங்கறியத்தக்கதாகும்.
தம் கருத்துக்குத் தாமே மாறுபாடு எழுப்பிக்கொண்டு, அதற்குப் பதிலளிப்பதும் ஒளவையின் தனிப் பாணியாகும். ”
வாழ்த்துக் காதையுள், பல்வகை இசையும் கூத்தும் விரவிய பாட்டுக்கள் வந்திருத்தலால், காதையென்னும் சொல் இசையோடு விரவிய பாட்டுக்கும் உரித்தாம் என்பது அடிகள் கருத்தாமன்றோ எனின், வாழ்த்துக் காதைக்கு அது பெயரன்றாதல், அடிகட்கு அது கருத்தன்மை இனிது துணியப்படும்.
வாழ்த்துக் காதைக்கு “வாழ்த்து” என்பதே பெயரெனப் பதிகம் கூறுகின்றது” எனத் தடை – விடை பகர்கிறார் ஒளவை.
இதேபோல், ‘காண்டம்’ பற்றிய ஔவையின் கருத்தும் சிந்திக்கத்தக்கதாகும். ”
இவர் (இளங்கோவடிகள்) கூறியதுபோலப் புகார்க் காண்டமென்னாது, கொலைவினைக் காண்டமென்றோ கோவலற் காண்டமென்றோ பிறிதென்றோ வகுத்துந் பெயர் கூறலுறின் அமங்கலத் தலைப்பு, குறையுறக் குறியிடல் முதலிய பல குற்றம் நிகழக் காண்கின்றோம்”
என்று இளங்கோவடிகள் கருத்துக்கு அரண் செய்கின்றார் ஒளவை.
‘சிலப்பதிகாரச் சுருக்கத்தில்’,
பல இடங்களில், ஔவையின் நுண்மாண் நுழைபுலம் புலப்படக் காண்கிறோம்.
“இடையிடையே அடிகள் தொடுத்திருக்கும் உரைநடைகள் மிக்க அழகு வாய்ந்தவை.
ஆயினும் அவை, இக்காலத்து நாம் எழுதும் உரைநடை போலாது பாட்டுத் தன்மை விரவியுள்ளன.
இது கருதியே இவற்றை “உரைப்பாட்டு” என்று கூறுகின்றனர்.
(இதனை டிரைடன் (Dryden) என்பாரும், இவ்வாறே Poetic Prose என்று கூறுவர்).
இவ்வுரைப்பாட்டுக்களைச் சில இடங்களில் உரைப்பாட்டு என்றும், சில இடங்களில் கட்டுரையென்றும் இந்நூல் வழங்குகின்றது.
இராமாயணம் முதலியவற்றுள் உத்தரகாண்டமென்பது நின்று எஞ்சிய பகுதிகளை உரைப்பதுபோல………. உரைபெறு கட்டுரையென்னும் பகுதி உரைக்கின்றது.
இதுவும் மேலே கூறிய உரைப் பாட்டு வகையைச் சேர்ந்ததேயாகும்” என்கிறார் ஒளவை.
கண்ணகி பற்றியும், மாதவி பற்றியும் எழுதும்போதும், வெறும் கதைச்சுருக்கம் கூறும் நோக்கம் மட்டுமின்றி, ஒளவையிடம் கூரிய ஆய்வு மனமே வெளிப்படக் காண்கிறோம்.
“இச்சிலம்பை முதலாகக் கொண்டு மதுரைக்குச் சென்று பொருளீட்டக் கருதித் தன்னுடன் வருமாறு (கண்ணகியைக் கோவலன்) அழைக்கின்றான்.
இவ்வாறு தன் மனைவியையும் உடனழைத்தது இவன் வரலாற்றில்தான் புதுமையாய்க் காணப்படுகிறது.
அக்கண்ணகியாரும் அவன் சொற்படியே புறப்பட்டுவிடுகின்றார்” எனச் சிலப்பதிகாரத்தின் புதுமை தோன்றுமாறு ஆய்வுக் குறிப்பெழுதுகிறார் ஒளவை.
இவ்வாறே மாதவியைப் பற்றியும் ஒளவை, நவீனப் பார்வையுடன் போற்றியே எழுதக் காண்கிறோம்.
“திருந்திய அறிவும்
பொருந்திய கல்வியும்
விரிந்த மனமும் உடையவள் (மாதவி)……… இதனையறியாது, இக்கால நாடக மாக்கள், மாதவியை வன்கண்மையும் பொருள் வேட்கையும் பொய்யன்புமுடைய ‘மாதகி’யாக்கி நடித்துத் திரிகின்றனர்” என மாதவியைப் புரிந்துகொள்ளாத மாக்களைக் கடுமையாக விமர்சிக்கிறார் ஒளவை.
சிலப்பதிகார ஆய்வுக் குறிப்புகளில், ஒளவையின் பெரும் புலமை வெளிப்படும் முறைமைக்குப் பின்வரும் சான்றுகளைக் காட்டலாம்.
“மண் தேய்த்த புகழ் –
மண்ணுலகம் சிறுத்துத் தனக்குள் அடங்கும்படி விரிந்த புகழ்;
பண் தேய்த்த மொழி –
இனிமையால் பண்ணின் இசையும் கேட்க உவர்க்கும்படியான சொல்; முழுநெறிக் குவளை – இதழ் ஒடியாத குவளைப்பூ; நகர நம்பியர் – நகரத்துச் செல்வ இளைஞர்; அறுகால் குறும்பு – ஆறு கால்களையுடைய வண்டு (தென்றலால் தளிர்த்துப் பூத்த பூக்களின் தேனை வண்டு புகுந்து உண்பதால், அந்த வண்டு ‘குறும்பு’ எனப்பட்டது.
குறும்பு செய்தல் – பிறர்க்குரியதைத் தான் அக்கிரமமாகப் புகுந்து கவர்ந்து கொள்ளுதல்); பிறர் எவ்வம் பார்த்தல்
பீடு – பிறருக்கு உண்டாகும்
துன்பத்தைப் பார்த்து இரங்குவது உனக்குப் பெருமை;
நீ அதனைப் பார்ப்பாயாக; தீர்ந்தாய்போல் தீர்ந்திலை – உறவுபோல் இருந்து உறவாய் இல்லை;
காரியத்தில் வேறுபடுகின்றாய்; துயரெஞ்சு கிளவி – நல்ல வார்த்தை; மாயப் பொய் – வியக்கத் தகுந்த பொய்; செவ்வியன் அல்லன் – நேர்மையின்றி உடலாலும் கோணியிருப்பவன் (அதனால் இன்பம் செய்யான்);
உறுகணாளர் – துன்பமுறும் பாவிகள்; மொழிப்பொருள் தெய்வம் – உபதேச மந்திரம்; சிந்தை விளக்கு – அவதி ஞானம்; திரிகால உணர்வு (சமணக் கருத்து); நோற்றுணல் – விரத நாட்களில் பட்டினி கிடந்து உண்பது; உய்திக் காலம் – சாபம் நீங்கும் காலம்; சாப விடை – சாப விடுதலை; திங்கள் மூன்று அடுக்கிய திருமுக்குடை – மூன்று முழு மதியை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கினால் ஒத்த சிறந்த மூன்று கூடை – அவை சந்திராதித்தம், நித்திய வினோதம், சகல பாசனம் என்பன இவ்வாறு சமயச் சொற்களைத் தெளிவாக விளக்கியெழுதுதல் ஒளவையின் உரை மாண்பாகும்) எனச் சிலப்பதிகார சொற்றொடர்கள் பலவற்றுக்கும் அரிய ஆய்வுக் குறிப்பெழுதியுள்ளார் ஒளவை.
“இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி, ஓர் செம்மையில் நிற்பதும்” என்ற மாடல மறையோனின் கூற்றுக்கு, “செம்மையில் நிற்பது – “அந்தமில் இன்பத்து அழிவில் வீடு” என்ற நம்மாழ்வாரின் பாசுரத் தொடரை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
“மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும், பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும், பிணியெனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும், கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்” எனச் சிலப்பதிகாரத்தில் வரும் வனசாரிணியின் கூற்றுக்கு, “மேலோர் – முனிவர்; நூலோர் – கற்றோர்; பால்வகை தெரிந்த பகுதியோர் – நூல்களைக் கல்லாது இயல்பாகவே நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பகுத்தறிந்து ஓழுகும் மதிநுட்பமுடையவர்” எனத் தெளிவாக ஔவை விளக்கமெழுதியுள்ளார்.
வனசாரிணி – வனத்தில் திரியும் இயக்கி. தவத்தினும் கற்பு சிறந்தது: அதனால் கண்ணகியை முற்கூறிப் புண்ணிய முதல்வியைப் பின்னர்க் கூறினார் எனத் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பொருந்த விளக்கமளிப்பதில் ஒளவை சிறந்துள்ளார் எனலாம்.
முழங்குவாய்ச் சாலினி – கொக்கரிக்கும் வாயையுடைய சாலினி; பூசாரிச்சி என்றெழுதுகிறார்.
“நயனில் மொழி” (வேட்டுவ வரி) என்பதற்கு, “ஈரமில்லாத சொல்” எனப் பொருளுரைக்கிறார். ”
அடி தொடு படு கடன்” என்பதற்குத் “திருவடியைத் தொட்டுச் சூள் செய்த கடன்” என்றும், “ஒய்யா வினை பயன்” என்பதற்குப் “போக முடியாத தீவினைப் பயனான துன்பம்” என்றும், “ஏமம் சாரா இடும்பை” என்பதற்கு, “கரை காணப்படாத நோய்” என்றும், “காவலில் சிறந்த அடல் வாள் யவனர்க்கு”
(ஊர்காண் காதை) என்பதற்கு, “இளங்கோவடிகள் காலத்தும் அவருக்கு முன்னும் இவ்விடத்தே காவல் தொழிற்கு யவனவர்களே பெரிதும் ஆளப்பட்டனர் என்பது தமிழ்நாட்டு வரலாற்று முடிவு.
அதனால் அவர் பயிற்சி மிகவுடையராய்ச் சிறந்திருந்தனர் என்றறற்குக் காத்தல் தொழிலில் மேம்பட்ட யவனர் என்றார்” எனப் பல நயங்களும் புலப்பட எழுதும் திறனில் ஒளவை நிகரற்றவராயிருந்தார்.
எனவே தான், “உரைவேந்தர்” என நம் ஒளவை கொண்டாடப்படுகிறார் எனலாம்.
வளரும் . . . .
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment