தினசெய்தி – 8 1 2023
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் -143
யாண்டு பலவாக
முனைவர் ஔவை அருள்
தவத்திரு. விபுலானந்த அடிகள் வடபால் இமயத்துச் சம்பாவதி நகருக்கடுத்த மாயாவதித் தவப்பள்ளியிலே இருந்தவண்ணம், தீந்தமிழில் ‘ஆங்கிலவாணி’ என்ற தலைப்பில் ஒரு ஒப்பற்ற காவியத்தை வரைந்திருந்தார்.
அக்காவியத்தைக் கற்கண்டுத் தொடராகக் கடந்த சில வாரங்களாக, பாகாக, தேனாக வெளியிட்டு மகிழ்ந்தேன்.
ஆங்கிலவாணியின் நிறைவுப் பகுதியினை, இத்தொடரில் வெளியிடுவதில் அகமகிழ்கிறேன்.
‘சீரற்று அலையும் இவ்வவல இசைகளை மன்னித்தருள்க.
நலமின்றிக் கழிந்த இளமையின் பெறுபேறாக அவை எய்தின.
எவ்வெவ்விடத்தில் அவை உண்மை நெறியிற் பிறழ்கின்றனவோ, அவ்வவ்விடத்தில் அவை தம்மை மன்னித்தருள்க.
ஞானமுடையாய் ! அடியேனுக்கு ஞானத்தைத் தந்தருள்க.
இப்பெருங்கவி இயற்றிய ‘உலீசன்’ என்னும் செய்யுள் சுவை செறிந்தது.
ஹோமர் எனப் பெயரிய யவனபுரத்து மகாகவி இயற்றிய உலீச காவியத்துத் தலைவனாகிய உலீசன் கிரேக்கச் சைனியங்களின் தனபதியாகச் சென்று துரோய நாட்டிலே போர் புரிந்தான்.
இப்போரினது வரலாற்று முறையினை ஒரு சிறிது கூறுவாம்.
துரோயம், ஈலியம், பேர்காமம் எனப் பெயரெய்திய நகரம் ஆசியத் துருக்கி நாட்டின் வடமேற்றிசையிலுள்ளது.
இந் நகரத்தரசன் பெயர் பிரியமன்னன், (Priamus). இவன்தனது பட்டத்தரசியாகிய எக்கூபை (Hekuba) யோடு அரசு புரிகின்ற காலத்திலே, துரோயம் செல்வம் மிகுந்த அழகிய நகராயிருந்தது.
அரசனுக்குப் புதல்வர் ஐம்பதினமர், இவருள் ஏகதன் (Hector) என்பான் சுத்தவீரனாகவும், பரிசன் (Paris) என்பான் காம துரந்தரனாகவும் இருந்தனர்.
ஒருநாட் பரிசன் ஐதாமலையின் சிங்காரத்தினைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வரும்பொழுது மூவர் தேவமகளிரைச் சந்தித்தான்.
அவருள் ஒருத்தி தேவராஜனாகிய யோபிதா(Jupiter)வின் மனைவி யூனோ (June); ஏரை (Hare) என்றும் பெயர்.
மற்றவள் செழுங்கலை நாயகியாகிய மீனோர்வை (Minervā); பாலசி (Pallas) என்றும் பெயர்.
மற்றவள் வேட்கைத் தெய்வமாகிய ஆவிரதை (Aphrodite) வீநசை (Venus) என்றும் பெயர்.
மூவருள் ஒவ்வொருத்தியும் தானே மற்றையிருவரினும் பார்க்க அழகிற் சிறந்தவள் எனக் கூறி வாதிட்டுக்கொண்டு வருமெல்லையிலே, பரிசனைச் சந்தித்துத் தமது வழக்கைத் தீர்க்கும்படி அவனைக் கேட்டனர்.
அழகின் மிக்க ஒரு பெண்ணைக் கூட்டிவைப்பதாக ஆவிரதை கூறிய இரகசிய வார்த்தையில் ஈடுபட்ட பரிசன் அவளே அழகிற் சிறந்தவளெனத் தீர்ப்பிட்டான்.
இதனைக் கேட்ட யூனோ பரிசனை நோக்கிப் ‘பழிக்கஞ் சாது இவ்வாறு கூறினை; என் சமர்த்தையுங் காட்டுகிறேன்’ எனச் சொல்லிப் போய்விட்டாள்.
பின்னர் ஆவிரதை தனது வாக்கின்படி லக்கதமோனிய தேசராஜனாகிய மேனிலாவனுடைய (Mene laus) மனையாட்டியும் அழகிற் சிறந்தவளுமாகிய ஏலேனாவை (Helena)க் கவர்ந்துகொள்ளும்படி பரிசனுக்கு உதவி புரிந்தாள்.
பரிசன் ஏலேனாவைத் தன்னூர்க்குக் கொண்டு சென்று மனைவியாக்கினான்.
இதனையறிந்த மேனிலாவன் கிரேக்கத் தலைவர்களைப் படைத்துணையாகச் சேர்த்துச்சென்று துரோய நகரை முற்றுகை செய்தான்.
இத்தலைவருள் ஒருவன் உலீசன். பத்தாண்டு பெரும்போர் நடந்தது.
ஈற்றிலே கிரேக்கர் வெற்றி பெற்றனர்.
யவனபுரத்துக்குத் திரும்பும் வழியிலே பல துன்பங்களையடைந்து இன்னும் பத்தாண்டு கழித்து உலிசன் தன்னூரையடைந்தான்.
போரின்றி மனையிலே வாழ்வதையவன் விரும்பவில்லை.
அவனது வீரச் சொற்களையமைத்துத் தெனிசன் அழகிய கவிதை யொன்று யாத்தார்.
அதன் மொழிபெயர்ப்பு வருமாறு :
பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே.
வறிதிங் குறையும் மன்னன் யானே;
விளைவு குன்றிய களர்நிலத் துரிமையும்,
குய்ப்புகை யடங்கிய அட்டிலும், மெய்ப்படு
மூப்புவந் தெய்திய இல்லக் கிழத்தியும்,
யாப்புற அமையச் செய்வினை யின்றி;
வறிதிங் குறையும் மன்னன் யானே;
என்னிழல் வாழ்வோர் என்னியல் பறியார்;
உண்பார்; துயில்வார்: ஒண்ணிதி குவிப்பார்;
செம்மை நலமிலாச் சிறியோ ரவர்தமக்கு
நடுநிலை யில்லா நீதி வழங்கி,
வறிதிங் குறைதல் மாண்போ? பிறபுலம்
செல்லா தமையேன்; சேரெப் பொழுதினும்
அன்பர் தம்மொடும், அவரிலா நிலையிலும்,
கரையி னகத்தும், திரையெறிந் தார்க்குங்
குரைகடற் புறத்தும், பெரிதுபெரி தாகிய
இன்பந் துய்த்தேன்; துன்பத் துழன்றேன்;
விழைவுறு மனனோ டலைவுறு நாளில்
அளப்பில கண்டேன்; அறிந்தன பலவே;
எத்தனை நகரம், எத்தனை மக்கள்,
எத்தனை ஒழுக்கம், எத்தனை அவைக்களம்,
எத்தனை அரசியல், எவ்வெவ் விடத்தும்
பெரும்பெயர் நிறுவி அரும்புகழ் படைத்தேன்;
வளமலி துரோய வளிவீசு புலத்தில்,
அடற்போர் மதுவுண் டகங்களி கூர்ந்தேன்;
கண்டன அனைத்தும் என்னகங் கலந்தன;
வாழ்க்கை வட்டத் தெல்லையி னிகந்த
வேற்றுப் புலங்கள் மிகப்பல உள: அவை
செல்வுழிச் செல்வுழிச் சேணிடை அகல்வன;
உறைப்படு வானிற் கறைப்படல் தரியேன்,
வாளா உயிர்த்தல் வாழ்க்கை யாமோ;
அறிவு நிறைதலும் அருஞ்செயல் புரிதலும்
ஓரிரு பிறவியில் ஒழியும் நீர்மையவோ?
வாழ்க்கை மேல்வாழ்க்கை வந்து குவியினும்
வேண்டா என்ன விளம்பலும் ஆமோ?
யாண்டுபல சுழித்தன, ஈண்டிப் பிறவியில்
எஞ்சிய நாளொரு சிலவே; ஆங்கவை
புதுப்பயன் விளைநா ளாகுக; விதிப்பட
மக்கள் யாத்த எல்லையின் இசுந்து,
குணகடற் குளிக்கும் வான்மீன் போல,
அறிவு நிறைசுற்றில் வலைகடல் கடக்க
நரைமுதிர் உள்ளம் நாடிநின் றதுவே.
இவனென் புதல்வன்; என்செங் கோலும்
தரணி காவலும் தாங்குதற் குரியோன்;
முரணுறு மாக்களைச் சிறிதுசிறி தாக
நலனுறத் திருத்தும் நாட்டம் உடையோன்;
ஏதமில் மனத்தன; இல்லுறை தேவரின்
பாதம் பரவும் பான்மையன்; பண்பும்,
சால்பும் உடையோன்; தனக்கென விதித்த
வினைபுரி கின்றான்; என்வினை பிறவே.
ஆங்கது துறைமுகம்: பாங்கிளிற் சுப்பல்,
வளிமுகந் தன்ன பாய்கள்; தெளிவில்
இருள்குவிந் தனையது, நிரைபொரு கருங்கடல்;
வம்மின் நண்பீர்! என்னுடன் உழன்றீர்,
மழையினும் வெயிலினும் வண்மைசால் மனத்தீர்,
யானும் நீவிரும் யாண்டினில் முதிர்ந்தனம்;
மூப்பினும் வினையுள: ஆக்கமும் உளவே;
சாதல் எய்துமுன் மேதக வுடைய
செயல்சில புரிகுவம்; தேவரை மலைந்த
அடல்வலி யுடையோம், அருந்திற லேம்யாம்
பகலொடு சுருங்கும் பாறையில் ஒளிக்கதிர்
மெல்லென எழுந்து விண்ணிடை மதியம்;
பல்குரல் எழீஇயது பரவையும். வம்மின்
நலனுறு புதுப்புவி நாடியாம் செல்குவம்;
கப்பலைத் தள்ளுமின்; கவினுற அமர்மின்:
பாய்களை விரிமின், பல்சுதிர்ப் பரிதி
படியும் குணகடற் படர்வோம். முடிவில்
வான்மீன் குளிக்கும் வரைப்பினை அடைவோம்;
துஞ்சினர் வதியும் தூயதீ வகத்தை
எஞ்சல் இன்றியாம் எய்தலும் ஆகும்;
அருந்திற லாளன் அகிலே சப்பெயர்க்
காவலன் றன்னைக் காணலும் ஆகும்;
இரிந்தன பலவெனின், இருப்பவும் பலவே;
விண்ணும் மண்ணும் அதிர மலைந்த
திண்மையிந் நாளிற் சேர்ந்தில தெனினும்
காலமும் விதியும் மேவலின் உடல்வலி
குன்ற வியன்ற கொள்கையேம் எனினும்,
சித்த வலிமை சிறிதும் குறைவிலம்.
ஒத்த நீர்மைய உரனுடை உள்ளம்:
முயன்று தேடிப் பெறுகுவம் இடர்வரின்
அயர்ந்து முதுகிடா ஆண்மையேம் யாமே.
றபர்ட் பிறௌணிங் என்னும் புலவரும் தெனிசனைப் போன்று சீரிய ஒழுக்கம் வாய்ந்தவர்;
ஆன்றமைந் தடங்கிய கொள்கையர்.
இவரியற்றிய ஆழியும் பனுவலும் என்னும் பெருங்காப்பியம் உயர்ந்த சுருத்து உடையது.
இவர் மனைவியாரும் கவிபுனையும் ஆற்றலுடையார்.
பிறௌணிங் வாழ்க்கையின் நோக்கத்தினை நன்கு தெரிந்து நயம்பட உரைத்துள்ளார்.
ஒரு சில அடிகளின் மொழிபெயர்ப்பு வருமாறு :
என்னோடு:
யாண்டுபல வாக நீவிரும் வாழுமின்;
காண்டகு செம்மை ஈண்டுதற் குரிய;
நாள்பல வாக நலம்பல பெறுகுவீர்;
வாணாள்,
பின்னவைக் காக முன்னவை இயைந்தன;
‘அனைத்தும் ஒருபிழம்பு அதனுள் இளமை
ஒருபாற் பயனை உணர்த்துமற் றெருபால்
அமைதியுங் காண்மின்; அச்சம் அகற்றுமின்;
நாதனை நம்புமின்! எனஅவன் நவின்ற
போதம் உள, நம் வாணாள் அனைத்தும்
அவன்திருக் கரத்தில் அமைந்தன கண்டீர்.
இவர்பின் தோன்றிய புலவரும் பலருளர்.
ஜார்ஜ் பேர்னாட்ஷா என்னும் நாடக ஆசிரியர் எண்பது ஆண்டு நிறைந்தவராயினும்.
இன்றும் சுவை மிகுந்த புது நாடகங்கள் ஆக்கித் தருகின்றார்.
இவர் ஐர்லாந்து தேசத்தவர். அமெரிக்க நாட்டி லுதித்த ஆங்கிலப் புலவரும் பலர்.
நமது பாரத தேசத்திலே தோன்றியவருள்ளும் சரோஜினிதேவி முதலியோர் ஆங்கிலமொழியிலே அழகிய பனுவல்கள் செய்திருக்கின்றனர்.
ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப,
ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கில மொழிக் கவிநயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த பாட்டிடையிட்ட இவ்வுரைத்தொடர் நிலையானது,
வடபால் இமயத்துச் சம்பாவதி நகருக்கடுத்த மாயாவதித் தவப்பள்ளியிலே
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment