தினசெய்தி – 23 1 2023
பக்கம் எண் : 4
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 88
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
– முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
முத்தமிழறிஞர் கலைஞருக்கு தமிழர் திருநாள் என்றால் பொங்கல் பெருநாளைத்தான் சொல்லி மகிழ்வார்.
தமிழுணர்ச்சி-தமிழ் மலர்ச்சி-தமிழ் மணம்-தமிழ்ஒளி-தமிழ்முரசு-தமிழ் கலை-தமிழ் விருந்து-தமிழ் வெள்ளம் என்ற அடைமொழிகளுக்கு ஏற்ப தமிழ்நாடு காட்சித்தர வேண்டும் என்று தம் வாழ்நாள் முழுவதும் சொல்லி சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்.
இன்றும், அதே காட்சியினை அவருடைய திருமகனார் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தெவிட்டாத தமிழ்க் காட்சியை தமிழகமெங்கும் செய்து காட்டி வருகிறார்.
தமிழ்க்குயிலின் பாட்டும் காதில் விழுகிறது.
இந்த காற்று வீச்சில் மாசு நீங்கித் தமிழின் உயிரொளியும் பலபல என்று மின்னித் தோன்றுகிறது.
எல்லாம் தமிழ்! எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! இது நல்லது. இனியது.
காற்று எங்கிருந்தேனும் வீசலாம் . அது தமிழ்த் தென்றலாக முடியுமானால் நமக்கெல்லாம் இன்பம் பயப்பதாகும்.
அறிவு கதிரவன் போல உலகிற்குப் பொது. ஒளி எங்கிருந்தேனும் வரலாம்.
தமிழ்நாட்டில் வரும் போது தமிழொளியாகும்.
எனவே, உலகினையே தமிழாக்கிக் பார்க்கும் உள்ளக்கிளர்ச்சியை தான் தமிழுணர்ச்சி என்று பேரறிஞர்கள் சொல்லி மகிழ்வார்கள்.
தமிழுணர்ச்சியின் தனி சிகரமாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் 14.1.75 அன்று வழங்கிய பொங்கல் கவிதையினை உங்கள் பார்வைக்கு விருந்தாய்ப் படைத்து மகிழ்கிறேன்.
முத்தமிழறிஞர் பொங்கல் கவிதை
வணக்கம்,
பேரன்பு கொண்டோரே, பெரியோரே.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
ஒன்றெனக் கருதும் நல் இளம் செல்வங்காள்!
ஒரு வயிற்றில் பிறப்பதற்கு அவ்வயிற்றில் இடமில்லை அதனாலே
ஒரு கோடித் தாய் வயிற்றில் பிறந்திட்ட உடன் பிறப்புத் தமிழர்களே!
அனைவர்க்கும் வழங்குகிறேன்
பொங்கற் புதுநாள் வாழ்த்துக்கள் ஏற்றிடுவீர்!
வண்ணத் தமிழ் எடுத்துக் கவிதை
எண்ணச் சித்திரங்கள் தீட்டுதற்கு
வந்துள்ள புலவர்களே வணக்கம்!
பொங்கல் எனும் தலைப்பினிலே கவிபாட நீவிர்
பொங்கித் தான் வந்திருப்பீர் நானறிவேன்.
உணவு பொங்கித்தான் வந்திருப்பீர் என்றேனா?
உணர்வு பொங்கித்தான் வந்திருப்பீர் என்கின்றேன் உண்மைதானே!
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
சிலம்பொலி கேட்குது
சிந்தையில் இனிக்குது
ஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்
ஆயிரம் கதிரவர் ஆயிரம் ஆடவர்
ஞாயிறு போற்றினர் ஞாயிறு போற்றினர்
ஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்
பாயிரம் பலப்பல பாடினர் தமிழர்
ஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்
ஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்
மாவிலை தோரணம் மஞ்சள் வாழை
கோயிலின் முரசம் கோலம் கண்டனர்
பெங்கலோ, பொங்கல்
பொங்கலோ, பொங்கல்
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்
பிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்
புரிந்து வாழ்ந்தனர்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றி மூத்தகுடி எனினும்
காடு கொன்று நாடாக்கக்
குளம் தொட்டு வளம் பெருக்கக் கற்றனர் அன்னார்.
வில் தோன்றும், தோள்களிலே அது
வீரம் காட்டும்
நெல் தோன்றும், வயல்களிலே – அது
வேளாண் திறத்தைக் காட்டும்.
சொல்தோன்றும் புதிது புதிதாக அது –
மொழியின் வளத்தைக் காட்டும்.
எழுத்து, சொல், இரண்டேயன்றிப்
பழுத்த நெல் தொல்காப்பியன் – தமிழர்தம்
செழிப்பு மிகு வாழ்வுக்கும்
தொகுத்தளித்தான் இலக்கணநூல்
கொய்யாக்கனித் தமிழால் – குறள்
நெய்தான் உலகுக்கு வள்ளுவனும்
பெய்யாமழை பெய்ததுபோல் மகிழ்ச்சி கொள்வோம் அவன்
பொய்யாமொழிக் கவி கேட்டு!
சிலம்பு வளையும் சீர் மேகலையும்
சிந்தாமணியுடை குண்டலகேசியும்
அன்னைத் தமிழின் அணிகளாய் ஆயின
அந்நாள் புலவர் ஆற்றிய பணிகளால்!
எத்துணை நூல்கள் எத்துணைப் புலவர்
சுற்றுணர் மக்கள் உற்றுணர் பெட்டகம்
பெற்றுநம் தமிழர் வாழ்ந்தனர் அந்நாள்!
பழந்தமிழர் பெரு நூல்கள் நினைத்தவாறு
படுக்கையிலே சாய்ந்திருந்தேன் ஒரு நாள்….
பக்கமது நெருக்கமாகப் படுத்துக் கொண்டு
வெட்கமது ஒரு சிறிதும் இல்லாமல்
ஒருத்தி தழுவிக் கொண்டாள்.
அவளை,
அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும்
தள்ளிவிட மனமில்லை, தழுவட்டும் என்றிருந்தேன்
அதன்பின்னர் மற்றொருத்தி வந்தாள்-அவள்
வானவில் சதிராட்டக்காரி
வானம்பாடியென இசை கூட்டும் மாயக்காரி
என்ன இது? இருமங்கை – ஒரு படுக்கை-
எனக் கேட்பீர்! பொறுத்திடுக
முதலில் வந்தவள் பேர் தூக்கம்;
மற்றொருத்தி கனவுமங்கை.
அந்தக் கனவினிலே நான் கண்ட காட்சியெலாம்
தமிழ்க்காட்சி! தமிழர் மாட்சி!
மன்றமொன்றில் இசைவாணன் கீத மழை பொழிகின்றான்
மக்கள் எல்லாம் மது குடித்த வண்டுபோல மயங்குகின்றார்.
மங்கலமாய் இசை நிகழ்ச்சி முடியும் போழ்து
மக்கள் சிலர் ஆர்வமுடன் மேலும் ‘பத்துப்பாட்டு பாடு என்றார்.
மலைத்துவிட்ட இசைவாணன், கனைத்துக்கொண்டு
‘பாடுகின்றேன்; மேற்கொண்டு
என்ன தொகை தருவீர்” என்றான்.
வெடுக்கென ஓர் புலவன் எழுந்து நின்று விடையிறுத்தான்
“எட்டுத் தொகை” தருவதாக!
இசைவாணன் புரிந்து கொண்டு, இஃதென்ன நியாயம்?
எந்தன் பத்துப்பாட்டுக்கு எட்டுத்தொகையா?
அஃதெனக்குக் ”குறுந்தொகை” என்று சொன்னான்.
ஓகோ! ‘ஜங்குறுநூறு” வேண்டுமோ எனக் கடிந்தார் புலவர்
நூறு வேண்டேன் – அதனைத் தீண்டேன் தீண்டேன்.
நானூறு தருவீரோ புலவரேறே! அதுவும்
அகத்தில் நானூறு – புறத்தில் நானூறு
என்று வளைத்தனன் இசையில் வல்லவன்,
புறத்தில் நானூறு அகத்தில் நானூறு
புரிந்து கொண்டார் புலவர் பெருமகன்.
“புறநானூறு” கையில் நானூறு
‘அகநானூறு’ ‘கறுப்பில் நானூறு
பொல்லாச் செயல் அது! பொல்லார் செயல் அது!
வருமான வரிதனை ஏய்ப்போர் செயல் அது!
காய்த்திருக்கும் கனிமரம் வெட்டும் கோடரிக்
காம்பின் செயல் அது
அதனாலே
பாட்டுக்குத் தொகை கேட்கும் பேச்சுதனை விட்டொழிப்பீர்
பசும்பால் தருவோம் தொண்டைக்கு, தேவையெனில்
முப்பாலே தருவோம் பாடிடுக என்று சொன்னார்.
முப்பால் தருவதாக மொழிந்திட்ட புலவரய்யா!
பொருட்பால் ஒன்றுக்கே இனி என் தொண்டை பேசும்
என்று இசைவாணன் எழுந்துவிட்டான்
நீண்ட துயில் கலைந்தெழுந்தேன்;
“நெடுநல்வாடை” பட்டதாலே!
கனவின் நினைப்பெல்லாம் நெஞ்சில்
கரும்பாக இனித்ததம்மா!
தமிழ் நினைத்து, இதயத்தைத்
தமிழால் நனைத்து
இமிழ் கடலில் ஆதிக்கம் செலுத்தியவர் நம் தமிழர்
உமிழ் நீரை வாயில் தேக்கி
ஊத்தைப் பல் துலக்கிவிட்டு மீண்டும்
உடலுக்குள் கொப்பளித்து விழுங்குதல் போல்
அமிழ்தான இனப்பண்பு. கலை மாண்பு, இலக்கியங்கள்
மாய்ப்பதற்குத்
தமிழர்களே ஒப்பிவிட்டார் – கெட்ட
உமிழ் நீரை உடலுக்குள் துப்பிவிட்டார்.
அழுக்குச் சேர்ந்த குடலை வெளுத்திட வேண்டும்
அதற்கு மருந்தெனும் நல்ல சலவைத் தொழிலாளி வேண்டும்
முழுக்குப் போடுவதால் உடல் புறந்தூய்மை ஆகும்.
உள் தூய்மை ஔடதத்தால்-
உளத் தூய்மை வாய்மையாலே ஆகும்
இந்த வாய்மைக்கு வழி வைத்து
வைதீகக் கோட்டைக்கு வெடி வைத்து
அறுபது ஆண்டுகள் அஞ்சாது போரிட்டார் நம்
அண்ணாவின் தலைவர் பெரியார்!
அவர் போட்ட அடுப்பிலே தான்
இன்று
பொங்கல் பொங்குது
போலிகள் மங்குது
பொய்மைகள் எரியுது
பத்து தலையுடையாள் இருபது கையுடையாள்
கத்து கடல் வாயுடையாள் கண்கள் பல நூறுடையாள்
மாட்டு முகமுடையாள் மனித உடலுடையாள்
மகர சங்கராந்தியெனும் பேருடையாள்
மலைபோல் மூக்குடையாள்
என எழுதி ஏமாற்றப் புனைந்த கதை
இடிமுன்னே பாம்பு போல் மறைந்தொழிந்து
ஈரோட்டு முழக்கத்தால் மாய்ந்ததன்றோ!
அதைத் தொடர்ந்து நம் அண்ணா
இன உணர்வுத் திருநாளாய்ப் பொங்கல் கண்டார்
ஏர் உழவர் பெருநாளாய்ப் பொங்கல் கண்டார்!
தொடர்புக்கு: “thamizhavvai@gmail.com

Add a Comment