POST: 2023-01-30T10:08:12+05:30

தினசெய்தி – 30 1 2023
பக்கம் எண் : 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 89

19 ஆம் நூற்றாண்டு இலண்டன் – பூம்புகார்

– முனைவர் ஔவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்.

பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும், நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் சிறப்பாக இருந்துள்ளது.
.
மாட மாளிகைகள், செந்தமிழ் மன்றங்கள், கோவில்கள், கோட்டங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பெருந்தோட்டங்கள், பூங்பொழில்கள். நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு, எங்கள் புகார் என்ன அழகு! என்ன அழகு! சொல்லிமாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு!

நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழந்து முடிந்த பழமையை நினைக்கும் போது எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது…..

அத்தகைய பூம்புகார் கொற்றப்பந்தரில் 25.4.1975 அன்று மாலை நடைபெற்ற “சிலப்பதிகார விருந்து” என்னும் தலைப்புள்ள கவியரங்கில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிய தலைமைக் கவிதையுரை வருமாறு:

வணக்கம்

வண்ணத் தமிழ் வடிவம் எங்கள் நாவலர்க்கும்

எண்ணக் கருவூலம் இனிய பேராசிரியர்க்கும்

கண்ணொத்த மன்னை, சாதிக் அமைச்சருக்கும்

அண்ணன் வழிவந்த அனைவர்க்கும் வணக்கம்.

சிலம்பொலிக்கும் சிவஞானச் செல்வாக்கும்

செந்தமிழ்ப் பழஞானக் கணேச நல்லார்க்கும்

சிரம் தாழ்ந்த வணக்கம்

சீரழிந்த பூம்புகாரைச்

செம்மையுறச் செய்யும் பணி

ஆர்வமுடன் நடப்பதற்கு

அழைப்பேற்று வந்துள்ள

அன்புள்ளம் அத்தனைக்கும் அடியேனின் வணக்கம்.

சிலப்பதிகார விருந்தொன்றைத் தருவதற்குச்

சீலமிகு தமிழெடுத்து வந்துள்ள

கவிநெஞ்சங்கட்கு – என்

கனிவான வணக்கம்

அருந்தமிழே! அமுதே!

நறுமலர் மணமே! தேனே

அன்னையாய் வந்தென்னை ஆட்கொண்டவளே!

அண்ணனாய் வந்தென்னை ஆளாக்கியவளே!

காஞ்சி அண்ணன் கால்மலர் தொழுது

கவியரங்கம் தொடங்குகின்றேன்

வாழ்த்திடம்மா

தமிழர்கள் வாழ

தமிழ் நிலம் வாழ!

குடகுமலை உச்சியிலே கோலங்காட்டி

அழகுமகள் காவிரியும் ஆடவந்தாள்

ஆடவந்த ஆரணங்கை அடைவதற்கு

ஓடிவந்த கர்நாடகத்தான் ”அணை” என்றான் – அவன்

கையணையைத் தாண்டிக் கல்லணைக்குள் நுழைந்து தன்

கற்புநெறி காப்பதற்குத் தஞ்சைக்குத் தாவி வந்தாள்

பூம்பாவை காவிரியின் புகார் கேட்டுச் சோழ மன்னன்

பூம்புகாரின் கடல் அலையைக் கணவனாய் ஆக்கிக் காத்தான்

பிறந்த வீட்டை மறந்திடாமல் – என்றும்

புகுந்த வீட்டு வளம் பெருக வாழ்வதுதான்

பெண்மணிக்குப் பெருமையென்றால் நம்

கண்மணியாம் காவிரிக்கும் அது பொருத்தம்தானே?

இவ்வாறு,

காவிரி புகுந்த பட்டினம் தான்

காவிரி புகும் பட்டினமாய்த் திரிந்து நின்று

காவிரிப் பூம்பட்டினமாய் மாறிற்றென்பேன்

கரிகாலன் பெருவளத்தான் திருமாவளவன்

கனிவுமிகு நடபுக்கு அவன் உறையும் வாளும்

கயமைமிகு பகைமைக்கோ உறை விட்டெழுந்த வாளாம்

உறையூரைத் தலைநகராய்க் கொண்டு – பின்னும்

ஒரு ஊரை மணந்து கொண்டான் தலைநகராய் அந்த

இரு தார மணத்தானுக்கு வாய்த்த இளையவளே

இனியவளாய் இங்குநமை வரவேற்கும் பூம்புகாராம்.

“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்” என

பட்டினப்பாலை முழங்குகின்ற துறைமுகப்

பட்டினமாய் விளங்கிற்றந்தாள்!

மருவூர்ப்பாக்கமுண்டு ஆங்கு மறங்கெழுவீரருண்டு

மருவு பெண்ணாசையால் மயங்குகிற

மாநகர நம்பியர்கள் நடமாடும் பகுதியுண்டு

நாளங்காடி உண்டு – அங்கு பிற

நாட்டார்கள் நாள்தோறும் வருதல் உண்டு

அரச வீதி ஆடும் கொடித் தேர் வீதி

வணிகர் வீதி வாய்மை நிறை வேளாளர் வாழும் வீதி

மருத்துவர், சோதிடர், மாகதர். கூத்தர்

மண்டிக்கிடக்கும் யானை குதிரை சூழும் வீதி

சித்திரப் பாக்கமெனச் செப்பும் சீர்மலி

பட்டினப் பாக்கமாய்த் திகழ்ந்ததந்நாள்

வடநாட்டுப் படையெடுப்பில் சோழன் பெற்ற

புகழ்நாட்டும் பட்டிமன்றம், முத்துப்பந்தர்,

தோரணவாயில், தொல்புவியில் தமிழன் வெற்றி

நிலைநாட்டும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம்,

கலைநாட்டம் கொண்டோரைக் கவர்ந்திழுக்கும் பாவை மன்றம்,

முருகன் கோட்டம், அதனருகே திருமால் கோட்டம்,

அருகன் கோட்டம், அதனருகே புத்தர் கோட்டம்,

முத்தமிழ் ஒலிக்கும் கோட்டம் நாள்தோறும்

சித்திரைத் திருநாள் கூட்டம்

இதையெல்லாம் சித்தரிக்கும்

இளங்கோவின் குணவாயிற் கோட்டம்

எல்லாமே அழிந்ததம்மா கடலாலும் காலத்தாலும்

என்றாலும்

சேரன் தந்த சிலம்புச் செல்வம்

அழியாத கருவூலம் அணையாத திருவிளக்கு

அந்த,

விளக்கொளியில் விழிப்புற்று

மறக்கவொண்ணா மொழிப்பற்றால்

விளைந்தது தான் புதிய புகார் – வெறும்

வீணர்கள் தினம் எழுப்புகின்ற புகாரல்ல!

வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் மூச்சால்

பொங்கிப் படைத்த புதிய புகார் – பூம்புகார்.

மனை விளக்குக் கண்ணகிக்கும் மாதரசு மாதவிக்கும்

பனைவைர மார்பன் கரிகாற் சோழனுக்கும்

பாவரசு இளங்கோவின் பண்பார்த்த சிலம்புக்கும்

எழிலார்ந்த புத்துருவம் கொடுக்கச் செய்ய

எனைப் பெற்ற தமிழுக்கும் என் தாய் தந்தை

இருவர்க்கும் எவ்வாறு நன்றி சொல்வேன்?

நமக்குச்

சிறப்பதிகாரம் பலவற்றை உரிமையாக்கத் – தன்னாட்சி கோரி

இறப்புவரினும் அதனை உவந்தேற்போம் என்றும் – பதவி

துறப்புவரினும் பொருட்படுத்தோம் என்றும் – இந்தச்

சிலப்பதிகாரமன்றோ உணர்வூட்டல் கண்டோம்!

வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்தார் நம் வரலாற்றை அழித்தார்

இன்று

கொஞ்சுகின்ற சிலம்பன்றோ நம் சரித்திரத்தைக்

கொஞ்சமேனும் காட்டுகின்ற கோபுரத்துத் தீபம்.

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுளென

முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரியதை

அடிகள் நீரே அருளுக என்றிட

எழுந்த காப்பியம் எழுச்சிக் காப்பியம் -அந்த

இலக்கியத்தில் விருந்தொன்றை அளிப்பதற்கு

இணையற்ற கவிஞர் எண்மர் இங்குள்ளார்.

”நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப”

இலக்கணக் கிழவர் இயம்பிய வழியில்

எட்டுச் சுவையை இங்கே படைப்பர்.

நகை அழுகை இழிவு வியப்பு

அச்சம் வீரம் வெகுளி உவகை எனப்

பகை நோக்கமின்றிப் பாடுகின்ற போட்டி,

அழுகையினால் நகை கேட்டு அடையக் கூடும்

அச்சத்தால் அடங்குகிற அத்தானை மணந்துவிட்டால்…!

இழிவு வந்தும் வெகுளாதார் நிலை கண்டு

வீரர்க்கு நெஞ்சில் வியப்புத் தோன்றும்!

உவகையும் அழுகையும் ஒரு தாய் மக்கள்

ஒருவரை ஒருவர் நிழல்போல் தொடர்வர்!

இந்த

எட்டுச்சுவை

பிட்டுத் தமிழ்

கட்டித் தயிர்

வட்டில் நிறை

கொட்டித் தர

பட்டுக் கொடி

கொற்றக் குடை

முத்துச் சர

சோழனூர் வருவீரே!

சுவை விளக்கம் தருவீரே!

என அழைத்தோம்; எண்மர் இதோ வந்துள்ளார்!

எட்டெழுத்துச் ”சிலப்பதிகாரம்” இயற்றியவர் -சுவை

எட்டெடுத்துச் சேர்க்காமல் விடுவாரோ?

”எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும்

பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் – மண்ணின் மேற்

போக்கிய பூம்புகார்ப் பொற்றொடி மாதவி தன்னோடு

அணைவுறு வைகலின் அயர்ந்து மயங்கி

விடுதலரிய விருப்பின னாகிய கோவலன்”

கெடுதலறியாக் கண்ணகியுடன் பகிர்ந்த இன்பம் கணக்கிலதே!

தும்பை மலர்க் கண்ணகியும் கோவலனும்

“தூமப் பணிகளொன்றித் தோய்ந்தாலென வொருவார்

காமர் மனைவியெனக் கை கலந்து நாமந்

தொலையாத இன்பமெலாம் துன்னினார்…. மண்மேல்

நிலையாமை கண்டவர் போல் நின்று”

உவகையில் மட்டுமல்ல;

அழுகையிலும், ஆளன் தாள் பற்றித்

தொழுகையிலும் மாதவி, கண்ணகி பாத்திரங்கள்

போட்டி போடும்

‘காவா நாவிற் கனகனும் விசயனும்

விருந்தின் மன்னர் தம்முடன் கூடி

அருந்தமிழாற்றல் அறிந்திலராகிச்

செப்பிய மொழிகளைச் சேரன் கேட்டுக்

கொட்டுக முரசெனக் கூறிய சொல்லும்

கொடியவர் முடித்தலை ஏறிய கல்லும்

வீரச்சுவை விளக்குகிற காட்சி – தமிழன்

வெற்றிக் கொடி பறக்கவிட்ட மாட்சி!

தித்திக்கும் தேன்பாகைத் தெவிட்டாத தெள்ளமுதக் கோவலனை

எத்திக்கும் புகழ் பாண்டியனோ திருடன்எனக் கொன்றுவிட,

தீச்சுழலாய்ப் பெருகிவந்த கண்ணகியோ

தீர்ப்பளித்த மன்னவனைத் தலைகுனிய வைப்பதற்குச்

சிலம்பெடுத்து உடைத்தபோது – தன்

எலும்பெடுத்து உடைத்ததுபோல்

வியப்புற்றான் மதுரை வேந்தன்

உடன் வீழ்ந்திறந்தான்

‘நீதி வழுவா நெறிமுறைப் பாண்டியன் நான் -அந்த

நெடுஞ்செழிய மன்னவனா நீதி தவறிவிட்டேன்?

என்ற கேள்வியில்தான் எத்துணை வியப்பு?

எத்துணைப் பதைப்பு ?

வியப்புறுதல், நகைத்தல், அழுதல், வெகுளல்,

வீரம், இழிவு, அச்சம், உவகை என்னும்

எட்டுவகைச் சுவையினிலே எதிலும்

ஒட்டுறவு இல்லாத பிறவிகளும் உலகிலுண்டு!

இடி முழக்கம் கேட்பது போல் அரங்கில்

வெடிச் சிரிப்பு நகைச் சுவையைக் கலைவாணர்

படித்தவர்க்கும் பாமரர்க்கும் வழங்கும்போது

இடித்து வைத்த புளிபோல் சிலர்பேர்

இளித்திடவும் விரும்பாமல் இருப்பதுண்டு!

அடுக்கடுக்காய்ச் சிறைவாசம்

அடக்குமுறை வனவாசம் என்றே

அருமைமிகு கொள்கைக்குத் தியாகம் ஏற்ற

பெருமைமிகு தலைவர்களும் மறைந்து விட்டால்

அழுகை நிறை அகத்தினராய்

ஆயிரம் பதினாயிரம் நூறாயிரமென மக்கள் கூட்டம்

இடுகாட்டுப் பொட்டலிலே ஏங்கி நிற்கும்

இறந்தவர்க்கு இறுதி வணக்கம் செய்வதற்கு;

அப்போது கோமாளிக் கூத்தாடும் ஓர் மனிதன் அங்குவந்தால்

ஏமாளிக் கூட்டமொன்று கூச்சல் போடும்!

கைதட்டு ஆரவாரம் – களிப்புக்கூத்து – நம்

காதுகளும் கண்களும் தாமாக மூடிக்கொள்ளும்!

அழுகைக்கும் உவகைக்கும் இடம் பொருள் தெரியாதோர்;

கழுதைக்கும் கீழானோர் எனச் சொல்வேன்!

நூற்றிரண்டு மெய்ப்பாடாம் சுவை பிரித்துப்-பழ

நூற்புலவர் தொல்காப்பியர் கருத்து நெய்தார்.

அவற்றில் தலையான எண்சுவையும் கிளையான பல்சுவையும்

கவிநயத்தில் காட்டுதற்கு இங்கே கவிஞருண்டு

அவிநயத்தில் காட்டுதற்கும் அணங்கு உண்டு

ஆனாலும் சில பெண்கள் ஆட்டம் கண்டால் – நம் வாணாளில்

பெரும்பாவம் செய்தோர் ஆவோம்!

தீப்போலத் தகிக்கின்ற காமத்துக்கும்

தேள்போலக் கொட்டுகின்ற கோபத்துக்கும்

சினங்கொண்ட நாகமெனச் சீறுகின்ற ”பாவ’த்துக்கும்

செம்மாதுளைக் கன்னங்கள் குவிக்கின்ற நாணத்துக்கும்

சிறிதளவு வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் இருப்பதில்லை.

அரிதாரப் பூச்சு முகத் தசையிலோர் அசைவுமில்லை.

அங்கங்களின் சேட்டையன்றித் தங்க மகள் சிலை முகத்தில்

அணுவளவு மாற்றமேனும் அவிநயத்தால் கண்டதுண்டோ?

‘திமி திமி’ என ஆடுகின்றார் – அவை அதிர

‘மிதி மிதி’ எனச் சேறு மிதிக்கின்றார்

அவரெல்லாம் தொடர்ந்து ஆடிவந்தால் – குட்டிச்

சுவராகும் நடனமேடை! கொலையாகும்

-கலை என்பேன்

இறுதியிலே உவகை’ வைத்து எட்டுவகை மெய்ப்பாட்டை

அறுதியிட்டு மாலை செய்தார் காப்பியனார் – இன்றோ

உவகையுடன் தொடங்கிடுவோம் கவியரங்கம்

உறுதிமிகு வீரத்தைக் கடையில் கேட்போம்

கடைச் சரக்கா வீரமெனக்

கண்மணியே கேட்காதே-சில

கட்சித் தலைவர்க்கு விலை கேட்கும்.

பொருளாய்த் தான் போயிற்று வீரம்!

போர் என்றால் நான் முந்தி நீ முந்தி

எனும் கூட்டம் நம் கூட்டம் – அக்கப்

போர் பேர்வழிகள் கூட்டமல்ல! வைக்கம்

போர் வீரர் வழி வந்தவர் நாம்! வைக்கோல்

போர் இந்தத் தீயுடனே விளையாடலாமா?

எதற்காக நல்லரங்கில் பிறர் நினைவு!

உவகையிலே தொடங்கி நம் கவியரங்கு

உலகு புகழ் வீரமுடன் முடியட்டும்.

கடையில் வீரம் கேட்கலாம் என நானிங்கு

கழறியதின் விளக்கம் புரிகிறதா நன்கு?

இடையழகு மணிமேகலையில் காட்டிச், சிலம்பில்

நடையழகு காட்டுகின்ற தமிழணங்கே! இதோ, கவிஞர்

படை வரிசை கிளம்பிற்றம்மா உனக்குப் பா வரிசை வைப்பதற்கு! நடக்கட்டும்

கை வரிசை! நானழைக்கின்றேன் கவிஞர்களை!

கவிஞர்களை அறிமுகம் செய்து தலைவர்:

முதலில்,

வைரமுத்துக் கவிஞர் சிலம்புப்

பரலில் உவகை பற்றிப் பாடிடுவார்.

(கவிஞர் வைரமுத்து ‘உவகை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

அடுத்து,

உவகையைத் தொடர்ந்து அழுகை வரல் காண்பீர்!

உருவிலே பெருந்தேவன் வயதிலே இளந்தேவன்

சிலம்பிலே அழுகை’ எனும் அமுதை

செந்தமிழில் அள்ளி அள்ளித் தருவார்.

(கவிஞர் இளந்தேவன் ‘அழுகை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

அடுத்து

அழுகை கண்டு நகைப்பவரும் உண்டு

அந்தக் கல்நெஞ்சுக் கவி கண்ணப்பன்

நகையோடு வருகின்றார்… கோவலன்போல் வரவில்லை

சிலம்பென்னும் நகையோடும் மதுரைக்கு வரவில்லை,

சிலம்பினிலே செழிக்கின்ற

நகை காட்டப் பூம்புகார்க் கவியரங்கிற்கு வருகின்றார்:

(கவிஞர் கண்ணப்பன் “நகை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

அடுத்து

வீணாக நகைப்பவர் மேல் வெகுளியால்’

பாய்ந்திடுவோர் உண்டு.

சீராகக் கால்லுக்கி ஆடுகின்ற நடராசன் தில்லையிலே

இங்கு,

நேராகக் கவிதூக்கி வருகின்றார் தி.கு.நடராசன்

தமிழ்க் கொல்லையிலே…

வெகுளி பற்றி வெகுளாமல் பாடுமய்யா!

(கவிஞர் தி.கு. நடராசன் ‘வெகுளி’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

அடுத்து

வெகுண்டவரைக் கண்டாலே அச்சம் வரும்

தகுந்தவரைக் கொண்டதனைப் போக்கிடவே

தமிழன்பக் கவிஞரை நாம் அழைத்துள்ளோம்.

அவை அச்சமின்றிச் சொல்லாடும் அருந்தமிழா;

சுவை சொட்டும் மொழியாலே கவிதை பொழி!

(கவிஞர் தமிழன்பன் ‘அச்சம்’ பற்றி பாடி முடிக்கிறார்)

அடுத்து.

அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் எனினும்

வெஞ்சமர் முடுக்கிக் கொள்கையில் வென்றிட

அஞ்சதல் தீதே ! ஆண்மையும் இலதே:

அச்சம் வரின் ‘இழிவு வருமென்று ஆண்ட தமிழ் இனத்துக்கு

அறிவுறுத்த வருகின்றார் அப்துர் ரகுமான்

அவர் பாடுகின்ற சுவை ‘இழிவு’

ஆனால் அது தமிழ்ப் பொழிவு!

(கவிஞர் அப்துர் ரகுமான் ‘இழிவு’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

அடுத்து,

இழிவு வரின் இறப்பதுதான் தமிழர் மாண்பு

இது வந்தும் பலபேர் உயிரோடு இருப்பது பற்றி

வியக்கின்றார் குருவிக்கரம்பையார்

குத்தூசி குருசாமியைப் பெற்றெடுத்த சிற்றூர்

முத்தான சண்முகத்தை நமக்களித்துத்

தமிழகத்தை வியப்பினிலே ஆழ்த்துதம்மா!

(கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் ‘வியப்பு’ பற்றிப் பாடி முடிக்கிறார்)

அடுத்து

வீரம் பற்றிப் பாடுதற்குச் செயலில்

வீரம் காட்டும் கவிஞருண்டு – நெஞ்சில்

ஈரம் என்றும் எனக்குண்டு இந்தப்

பொன்னிப் பயிரை வளர்ப்பதற்கே!

வளவன் வாழ்ந்த மாநகரில் – பொன்னி

வளவன் பாடும் கவி கேட்போம்.

(கவியரசு பொன்னிவளவன் ‘வீரம் பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞரின் முடிவுரை:

காலை முதல் இந்தக் கவியரங்குவரை

கன்னல் நிகர் தமிழோசை கேட்டு

மகரந்தம் உண்டு மகிழ் வண்டாகக் கிடக்கின்றேன்

மனமகிழ்ந்து ஓர்பொழுது நிம்மதியாய் கழிக்கின்றேன்

முடிமன்னர் முதுபுலவர் வளர்த்த தமிழ்த் தேனைப்

படிப்படியாய்க் குடித்த பின்னர்

முடிவுரையும் கூறுதற்கு முடியுமோ என்னால்?

பூம்புகார் வந்தோரே! புத்துணர்ச்சி பெற்றோரே!

சென்று வருக என வாழ்த்துதற்கு முன். . . .

சித்திரை முழுநிலா இன்று கண்டிடுக

முத்திரைப் பொன்னாம் குழந்தைகட்கு

முத்தம் ஈந்திடுக கடற்கரையில்

குழந்தைகட்கு மட்டுந்தானா எனக் கேட்காதீர். . . . அது

மடந்தைக்கும் காளைக்கும் இடையிலுள்ள விவகாரம்!

பூம்புகார் நிலா பார்த்திடுவீர் – தமிழ்ப்

புவியாண்ட சோழ மன்னன் கொற்றக்குடை அதுபோல

இருப்பதையும் எண்ணிடுவீர்! நம்

இலட்சியத்தை எய்திடவே சிலம்பு

இலக்கியத்தைச் சிந்தையிலே பதித்திடுவீர்!

அலைபாயும் கடலோரம் நிற்கும்போது

அண்ணாவழி நடக்கின்ற அரசுக்கும் வாழ்த்துச் சொல்வீர்

வணக்கம் !

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *