நம்பிக்கை தொலைக்காட்சியுரை
(25.12.2022)
நம்பிக்கை தொலைக்காட்சிக்காக நத்தார் தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.
நண்பர்களே!
கிறிஸ்மஸ் நன்னாள் என்பது மிகப்பெரிய ஈகை பிறந்தநாள், இரக்கத்தின் திருநாள் என்று தான் நாம் சொல்ல வேண்டும்.
சோதிமணி பெட்டகமே!
அருந்தவப் புதல்வரே!
என்றெல்லாம் அழைக்கப் பெற்ற இயேசு பெருமானுடைய பிறந்த தினமாக உலகெங்கும் உள்ளவர்கள் அனைவரும் இந்நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதை நான் கண்டு மகிழ்ந்துள்ளேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் மாநகரத்தில் நான் இருந்த பொழுது கிறிஸ்மஸ் விழாவை பெருவிழாவாக நடத்திக் காட்டிய அப்பாங்கைக் கண்டு வியந்து நின்றிருக்கின்றேன்.
சென்னை கிருத்துவ மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளியில் படிக்கும் போது காலையில் தேவாலயத்திற்கு சென்று இயேசு பெருமானுடைய புகழைக் குறித்த பொருண்மைகளை கேட்டு கேட்டு பெருமிதம் அடைந்து, கிருத்துவர்களுடைய கல்விப்பணியில் அவர்கள் ஓங்கி நின்றது, மருத்துவப் பணிகளில் அவர்கள் உயர்ந்து நின்றதையும், இன்றைக்கு பலர் சுட்டிக்காட்டி பெருமைப்படுகிறார்கள்.
கிரைஸ்ட் மாஸ் விளக்கம் தான் கிறிஸ்மஸ் என்றெல்லாம் சொல்லிதான் வளர்ந்து இருக்கின்றோம்.
கிருத்துவ பேராசிரியர்களின் தமிழ்த் தொண்டு அளப்பரிய தொண்டாகும்.
இன்றைக்கும் தமிழ்நாடு அரசு
ஜி யு போப் பெயரில் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளருக்கு விருது வழங்கி பெருமை கொள்கிறது.
அதேபோல வீரமாமுனிவருடைய பெயரில் அகராதியியலில் சிறந்தவர்களுக்காக விருது வழங்கிப் பெருமைப்படுகின்றோம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது கிருத்துவ தமிழ்த்துறை என்ற தனிப் பிரிவினைப் பார்த்தும், பேராசிரியர் இன்னாசி அவர்களிடம் பாடம் கேட்டு படித்து பயனடைந்து இருக்கின்றோம்.
எந்தையாருடைய இனிய நண்பர் கவிஞர் அருட்தந்தை வின்சன்ட் செல்லதுரை அவர்கள் இயேசு கிருத்துவைப் பற்றி வனப்பான கவிதையை எழுதிக் காட்டியது என் நெஞ்சில் இனிமையாக நிழலாடுகிறது.
இயேசு கிருத்து 2500 மைல்களுக்கு மேல் நடந்தவர் என்ற ஒரு குறிப்பும்,
ஆதியும் நீ தான்!
தொடக்கமும் நீ தான்!
நாங்கள் புள்ளி வைத்தோம்! பூக்கோலம் போட்டு வைக்கிறாய்
என்று கிருத்து பெருமானுடைய சிறப்புகளை மிக நுணுக்கமாக சொன்னதும், விவிலியத்தில் விவரிக்கப்படுகின்ற ஒவ்வொரு வாசகங்களும் உருக்கமான வரிகளாகும்.
எங்கெங்கு சென்று படித்தாலும் அன்பும் இரக்கமும் பண்பும் தான் பக்கம் தோறும் வழியும்.
இன்றைய மதங்களுக்காகவும், சமயங்களுக்காகவும் போர் செய்து கொண்டும் மக்கள் குருதியில் மடிந்துகொண்டிருப்பதும் உலகெங்கும் இந்த போர் நினைவு காட்சிகளையெல்லாம் உடனே அகன்று போக வேண்டும் என்பதற்காகத்தான் கிறிஸ்து பெருமகனின் ஈகையை நாம் கண்டு வியந்து நிற்க வேண்டும்.
தன் உயிரையே இழந்து இந்த உலகம் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று அன்பு, அறம், பண்பு போன்ற உயரிய பண்புகளை இன்றைக்கு கிருத்து பெருமகனார் வழியாக நாம் எல்லாம் படித்து மகிழ்கிறோம்.
அவர் செய்த ஆணைகளை எல்லாம் கண்டு வியக்கின்றோம்.
இன்றைக்கும் அவர் வழியில் பயணிக்கின்ற பல கிருத்துவர்கள் அந்த அன்பினையும், அறவழியிலும் அவர்கள் அதையே மதித்து அவர் வழியிலேயே செல்வதையும் தேவாலயங்களில் சென்று வணங்குவதையும் காணும் பொழுது எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம்.
உடன்பிறந்த குணத்தினை பேணுகின்ற கிறிஸ்துவ பெருமக்கள் இன்றைக்கு மிக மகிழ்ச்சியாக கிருத்து பெருமகனாருடைய பிறந்த நாளை கொண்டாடுவதும், இன்றைக்கு பெத்தலகேம் என்றாலேயே கிருத்து என்பவருடைய சிறப்பு என்பதும் வத்திக்கான் நகரம் என்று உலகத்தில் இன்றைக்கு போற்றப்படுகின்ற ஒரு தனி நகரமாக இருப்பதையும், கிருத்து பெருமகனாருடைய போதனைகளை அவர்கள் உலகெங்கும் எடுத்துச் செல்லுகின்ற அந்த புனித எண்ணங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டி இருக்கின்றது.
இந்திய நாட்டினுடைய தலைசிறந்த துறவியாக மிளிர்ந்த அன்னை தெரேசாவினுடைய உருக்கத்தையும், இரக்கத்தையும், தொண்டுகளையும் எண்ணிப் பார்த்தாலே நம்மை சிலிர்க்க வைக்கும்.
கவியரசு கண்ணதாசன் இயேசு காவியம் என்ற தன்னுடைய மிகச் சிறந்த கவிதை நூலில் எழுதிக் காட்டிய வரிகள்தான்
“சோதிமணி பெட்டகமே!
சுடர் ஒளியே!
யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே!
தாலேலோ!
மாணிக்க தொட்டிலுக்கு வாய்க்காத பெருமைகள் எல்லாம் ஆனிடைத் தொழுவதற்கே ஆரடித்தார் எங்கோவே!
தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது!
யூத நிலத்தினிலே சத்திய வேதம் நின்று நிலைத்தது!
தாரணி மீதிலே எத்தனை உண்மை வந்து பிறந்தது!
ஏசு பிறந்திடவே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது ஏசுவின் வார்த்தையிலே!
மண்ணிலே ஏசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து தேவை நித்தியமே!
வின்னர சபையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே! ஏசுவையே நம்புவோம்!
என்று நான் இளங்கலை தமிழ் இலக்கியம் மாநிலக் கல்லூரியில் பயிலும்பொழுது இயேசு காவிய வரிகளை மனப்பாடமாக மீண்டும் சொல்வதற்கு வாய்ப்பளித்த நம்பிக்கைத் தொலைக்காட்சிக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியும் கிறிஸ்மஸ் நத்தார்தின நல்வாழ்த்துகள்.
வணக்கம்.

Add a Comment