தினசெய்தி – 6 3 2023
பக்கம் எண்: 4
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 94
தமிழ்நாட்டின் வால்ட் விட்மன்!
– முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டிருக்கும்.
மொழிக்காதல், மொழி உணர்ச்சி, மொழி மானம் முதலியவற்றின் மொத்த உருவம்தான் புரட்சிக் கவிஞர்.
தமிழுக்கு எங்கே இன்னல் வருமோ? துன்பம் வருமோ? என்ற தாயின் மனத்தோடு துடித்த கவி வரிகள் தான் பாவேந்தரின் தமிழியக்கம் ஆகும்.
பேரறிஞர் அண்ணா பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்றார்.
புது நூல்கள் சிந்தனைக் கருவூலங்கள் அருவியைப் போல் பெருக வேண்டும் என்று பாவேந்தர் அறிவுறுத்தினார்.
பாவேந்தரைக் குறித்து அறுபத்தெட்டாம் ஆண்டு பம்பாய் பாரதி கலை மன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த தேன் கவிதை வரிகள் பின்வருமாறு
கண்ணை இமை காப்பது போல்
என்னை என்றும் காப்பதற்குப் பம்பாயில்
இருக்கின்ற தோழர்களே!
எண்ணெயென இரத்தத்தைப் பெய்து தந்து
தண்ணிலவாம் தமிழன்னை காக்கின்ற தீரர்களே
வெட்டி வா என்றுரைத்தால்
கட்டி வரும் வீரர்களே
பெட்டிக்குள் இருக்கின்ற பணத்தை
ஏழை எடுத்தெடுத்துப் பார்த்து மகிழ்வதுபோல்
எனை அழைத்தழைத்து மகிழ்கின்ற நண்பர்களே!
மலைஎலியாம் மாவீரன் சிவாஜி கண்ட
மராட்டியத்து மண் மீது
நிலைகுலையா நேர்மையுடன் நேசமதை வைத்தவரே!
அலைபாடுங் கடல் மல்லை அங்குண்டு தமிழ்நாட்டில்
கலைபாடுங் காவியங்கள் கவின்பாடும் சிற்பங்கள்
நஞ்சையுண்டு தஞ்சையிலே; அங்கு
நஞ்சையுண்ட சிவனார்க்குக் கோயில் உண்டு
மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த மதுரையுண்டு
அங்கு
மீன் ஆட்சி நடத்தியதால் மீன்பொறித்த கொடியுண்டு
மீனாட்சி அம்மைக்கும் வான்முட்டும் கோயிலுண்டு
நெல்லையுண்டு சேலம் உண்டு குற்றாலம் கோவையுண்டு வாழ்வில்
தொல்லை கண்ட காரணத்தால்
தாராவிதனில் வந்து
பேராவி போக்குகின்றீர் நீர்
மாதுங்கா வாழ்ந்தாலும் மனமெல்லாம் அங்கேதான்; இதைக்
காதுங்காதும் வைத்தாற்போல் சொல்லுகிறேன்
ஒருமைப்பாடு காண இந்தியாவும் நம்
உரிமைப்பாடு காணத் தமிழகமும்
உயர்தனிக் கொள்கையெனக் கொண்டுவிட்டோம்
பயன்பல பெருக்குதற்குத் தொண்டு செய்வோம்!
இந்த
முன்னுரையுடனே
என்னுரை தொடங்குவேன்
வந்திடுக பம்பாய்க்கென்று
வருந்திமிக அழைத்ததாக
நேற்று ரங்கா சொன்னார்
வருந்தியபின் அழைத்தாரோ!
அழைத்த பின்னர் வருந்தினாரோ? அறியோம் யாம்
ஆனாலும் எடுத்தபணி முடிப்பதற்கு ஏறிவிட்டோம் கவியரங்கு
பைந்தமிழால் சுவை கூட்டும்
பம்பாய் வாழ் பெரியோரே
சிங்கக் கவிஞன் பாரதி பேரால்
தங்கத் தமிழ் மன்றம் கண்டவரே!
மன்றேறி மணிக்கவிதை முழக்கவந்த கவிஞர்களே!
குன்றேறி நீர் நிற்க முடியாது!
முடியுமா?
குன்று ஏறி நீர் நிற்க முடியுமா? புகழ்க்
குன்றேறி நீர் நிற்க முடியாதென்று
என்றேனும் சொன்னேனா? இல்லை
இன்றேனும் சொன்னேனா?
மாக்கவியென்று பாரதியைப் போற்றுகின்றார்
நான் ஒப்பவில்லை அரைத்த
மாக்கவியா பாரதியார்? இல்லை; இல்லையா (ப்)
பணியாரக் கவியா?
யாப்பு அணி ஆரக் கவியா?
மாக்கவிதான்… அரி
மாக்கவி
தலைக் கவியவர் புதுமைக்குத்
தலைக் கவியவர் நாட்டு விடு
தலைக்கவியவர்
தலைப்பாகை
முறுக்கிவிட்ட குத்து மீசை
நடுநடுங்கி எதிரிகளை
ஓடவைக்கும் பார்வைப் பகலவனாம் பாரதியார்!
தலை
பா
கை
முறுக்கிவிட்ட குத்துமீசை
கைமுறுக்கி விட்ட குத்து
மீசை நடுநடுங்க எதிரிகளை ஓட வைக்கும்
பார்வைப் பகலவனாம் பாரதியார்!
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் எனப்பாடும்
அவன் சீற்றம் கண்டீரோ!
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே!
அடைவதற்குள் அறுதியிட்டுச் சொன்னவனாம்
அடலேறு மொழி பகரும் மன்னவனாம்
அவனுக்குச் சின்னவனாம்
இளம்மருது போன்றவனாம்
எடுத்தவுடன்
எங்கெங்குக் காணினும் சக்தியடா தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா என்று
பாரதி பாடென்று சொன்னவுடன் பாடிய மறவன்
பார் அதி தீரனென்று பாரதி புகழ்ந்த புலவன்
கனக சுப்பு ரத்தினம் என்று காததூரம் இருந்த பெயரைக்
கவி பாரதிக்குத்தாசனென்று கச்சிதமாய்ச் சூட்டிக் கொண்டான்
களம் சென்று தமிழ்காக்கக் கச்சு இதமாய்க் கட்டிக்கொண்டான்
நிமிர்ந்த நோக்கு
நெரித்த புருவம்
நீர்வீழ்ச்சி ஓசை நெற்
கதிர்க்கட்டு மீசை
பாட்டெழுதும் வித்தையிலே
பாரதி ரசவாதம் கற்றவனாம் இவனைப் பார்
அதி ரசவாதம் கற்றவனாம்
அதிரச வாதம் கற்றவனாம்
அத்துணை இனிப்பு இவன் பாட்டில்!
சஞ்சீவிபர்வதத்தின் சாரலுக்கு நமை இட்டுச் சென்று
சங்கீதப் பேச்சொன்றைக் கேட்கச் சொல்வான்.
காதலி நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன் என்றாள்
காதலன் ஆகையால் ஓர் முத்தம் அச்சாரம் போடென்றான்!
அதிரச வாதமன்றோ அஃது அவனுக்கே பழக்கமன்றோ!
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
வினாக்குறியா? வெடிக்கும் எரிமலையா?
புரட்சிக்கவிஞனெனப் புவியொப்பி மாலைபோடப்
போதாதோ இவ்வரிகள்?
ஒரு மனிதன் தேவைக்கே இந்தத்தேசம் உண்டென்றால்
அத்தேசம் ஒழிதல் நன்றாம்
முழுமனிதன் பாட்டன்றோ இப்பாட்டு; இதுகேட்டு
அழும் மனிதன் அரைமனிதன் குறை மனிதன்
அரைகுறை மனிதன்
இருட்டறையில் உள்ளதடா உலகம்: சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே! எனத் தொடங்கிச்
சுருட்டுகின்றார் (சில பேர்கள்) தம் கையில் கிடைத்தவற்றை என முடிக்கும்
இவனோர்
சுருட்டுக் கவிஞன் புகைச்
சுருட்டுக் கவிஞன் இவன்
புரட்டுக் கவிஞனாவான்!
மூடப்பழக்கமெலாம் தலைகீழ்ப்
புரட்டும் கவிஞனாவான்!
அமளி துமளி ஆர்ப்பாட்டம் அணிவகுப்பு!
அமைதியிலே உலகுவாழப் புதுவைக்குயில் கூவாதோ?
புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
அமைதிக் கவிஞனாக அழைக்கின்றான் உலகத்தை!
சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமய பேதம் வளர்த்தே தளர்வது நன்றா?
காந்தியார் கதறிய கருத்தினைக் கவிஞன்
கனலிடை மெழுகென உருகியே கேட்பான்
பொய்யுரைப்போன் பயங்காளி – பிறர்
பூமி சுரண்டிடுவோன் – பெருச்சாளி
வையக மக்கள் எல்லோரும் – நலம்
வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி
கருத்துக் கவிஞன்; சற்றுக் கருத்த கவிஞன்
காலக் கவிஞன்; முக்காலக் கவிஞன்
அவன்
சுவையாய்த் தமிழுக்கு அருவியின் பாடல்
அமைவாய்க் கண்ட அற்புதம் என்னே!
விருந்து வரக்கண்ட மெல்லி முகம்போல் முல்லை
அரும்பு மலர்ந்ததென்ன வேடிக்கை
தெரிந்தவரைக் கண்டாலும் தெரியாதாரைக் கண்டாலும்
சிரிப்பதுதான் இவன் வாடிக்கை
இன்னொன்று கேளீர்;
விழிக்கு இனியவள் ஒருத்தி ஆடுகின்றாள்
மொழிக்குச் சுவையேற்றித் தாசன் பாடுகின்றார்:
சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும் வானில்
மிதக்கும் அவள் தாமரைக்கை! மேலும் வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு: சாடை புரிகின்ற விரல்
கண்கவரும் செம்பவளக் காம்பு!
மற்றொன்று;
தொண்டையிலே ஒன்றுமே அடைக்கவில்லை
துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்றான்
அண்டையிலே மங்கைபோய் அத்தான் என்றாள்
அத்தானா தூங்கிடுவான்?
(அருகில்) உட்கார்! என்றான்
அவருக்கே உரிய கேலி!
அவர் கவிதைக்கே உரிய சுவை!
உவமைக்கோர் கவிஞன் என்று
உரைக்கின்றார் பெருங்கவிஞர்
ஒன்றிரண்டா எடுத்துச் சொல்ல?
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென்ன
இருள் தன் கட்டுக் குலைந்தது
சோற்றை அள்ளுங்கால் துவள் வாழைத் தண்டில் உறும்
சாற்றைப் போலே வடியத்தக்க வண்ணம்
ஊற்று நெய்யை
புரட்சியா? அமைதியா? பொங்கும் உவமையா?
கருத்தா? தமிழ்ப் போதை தரும் சுவைத்தேனா?
எதனை எது மிஞ்சுமென்று எவர் கூறி வாதிட்டாலும்
ஒப்பமாட்டேன்; ஒன்றையொன்று மிஞ்சுமென்பேன்!
ஏடெத்தனை அவர் தந்தார்!
இருண்ட வீட்டில்
குடும்ப விளக்கேற்றி வைத்தார்
இசையமுது பொழிந்து, அதற்குப்
பாண்டியன் பரிசு பெற்றார் நமக்குக்
குறிஞ்சித்திட்டுமுண்டு குயில் இதழ் நடத்தும்போது
அழகின் சிரிப்பாலே தமிழியக்கம் கவர்ந்துவிட்டார்
அமைதிக்கு நல்ல தீர்ப்பளித்தார் அவர்
காதல் நினைவாலே கவிப்பெண்ணை வாடவிட்டுச் சாவின்
எதிர்பாரா முத்தத்தால் பிரிந்துவிட்டார்….
என் ஆசான் பாரதியைப் பார்ப்பேன் எனப் பறந்துவிட்டார்….
இரு கவியும் இறப்புலகில் சந்தித்து என்ன பேசியிருப்பாரென எண்ணுகின்றீர்?
நாம் தமிழ் நாட்டில் இன்றைக்கு இல்லையென்று
நம் மக்கள் பேசுகின்றார் நம்புவதோ இதனை நாமும்?
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
சிந்தைகவர் இந்தப் பாட்டினையே செயல்படுத்த மிக்கமனம்
நொந்துதான் காத்திருந்தேன்; இன்று
விந்தை கண்டனையோ தம்பீ நம்
தந்தையர் நாட்டுக்குத் தமிழ்நாடெனப் பெயர்
தந்தவர் அண்ணா! நாம் , அங்கு!
மெய்யல்லவோ? என்று
பரவசத்தால் நடமாடும் பாரதிக்கு வணக்கம் சொல்லிப் பாவேந்தன் பகர்வான்
கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்.
பனிமலர் ஏறிய தேனும் காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
என்றெழுதி வந்தேன்…
இன்றெல்லாத் தமிழர்களும் தமிழைத் தம் இன்னுயிராய்க் கொண்டு
சென்றங்கு எட்டுத்திசை பரப்புதற்கு முனைந்தார்
அய்ய! நாம் சாகவில்லை வாழ்கின்றோம் தாயகத்தில்!
உண்மைதான் நீர் உரைத்த தென்றார்.
பாரதியும் தன் தாசனையே தழுவிக்கொண்டு
பாரதிரச் சிரிக்கின்றான்
இருவருமே பாடுகின்றார்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
இணைந்து நாமும் பாடிடுவோம்.
ஏற்றமிகு தமிழகத்தைக் கண்டிடுவோம்
நாற்றமிகு சாதிப்பூசல் களைந்திடுவோம்
ஆற்றல்மிகு பாரதிக்கும் அவர் தாசர்க்கும் விழா எடுப்போம்
விழா எடுக்கும் வேளையிலே அவர்தம்
விழாக்கருத்தைச் செவிமடுப்போம்
முதலில்
உவமை யெனுந் தலைப்பினிலே
ஒருவர் பாட வருகின்றார்
என் நண்பர் தனி அன்பர்
பொன் பூவும் பணமுடைத்து
என்பாராம் தன் கவியால்
பொருநை நதிப் பெருக்கனைய தமிழ் காட்டும்
கருணை ஆனந்தக் கவிஞர் என்
கேலிக்கு நற் கருவி
வேலிக்கு ஓணான் போலச் சாட்சி சொல்வார் எனக்காக
கூலிக்கு மாரடிக்கும் கொள்கையில்லாக் குணக்குன்று
முதன் முதலாய்ப் பம்பாய்க்கு வந்துள்ளார்; நேற்றுத்தான்
முதன் முதலாய் விமானமும் ஏறியுள்ளார்!
சீராக அவர் ஏறியதும் சீட்பெல்ட் டைத்தான் போடுமென்றேன்.
நேராக எனைப்பார்த்துத் தன் இடுப்பு பெல்ட்தனை இறுக்கிக் கொண்டார்!
விமானப் பெண்ணாளும் விலாநோகச் சிரித்துவிட்டு
விடுவிடென மாட்டிவிட்டாள் விமானப் பெல்ட்டு தனை.
பட்டிக்காட்டான் யானை பார்த்தது போல என்பதுதானே பழமொழி!
அதனை மாற்றிக் கொள்வீர் இவரைப் பார்த்து!
பட்டிக்காட்டான் பம்பாய் பார்த்ததுபோல;
வந்திறங்கியவுடன் வாய்பிளந்து
வானளாவிய மாடம் பார்த்தார்
விமானக் கூடம் பார்த்தார்
அதனாலே
கையில் வைத்திருந்த விலை உயர் பொருள் ஒன்றைக்
காணாமற் போக்கி விட்டார்!
இவர்தாம் அக் கவிஞர்
உள்ளங்கவர் பாவேந்தின் உவமை அழகெல்லாம்
கள்ளங் கபடமிலா என் நண்பர் பாடிடுவார்
பள்ளம் போய் வீழ்கின்ற பாய்ச்சல் நீரதுபோல்
வெள்ளம் காண்போம் தமிழ் நடையில்:
தொடர்புக்கு: “thamizhavvai@gmail.com

Add a Comment