செய்தி வெளியீடு எண் : 481
நாள்:07.03.2023
தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி
08.03.2023
ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் அழியாது நிலைத்திருப்பதாகும்.
அகர முதல எழுத்தெல்லாம் என்பது போல ஔவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக ஔவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.
வெண்குடை நிழற்றும் வேந்தர் முதலாய் கல்லாதார் வரையில் ஒத்த நிலையில் நின்று பாடிய அறிவறிந்த மூத்த கவி அரசியராகத் திகழ்பவர் ஔவையாரே ஆவார்.
” ஔவையார் என்ற பெயர் தாய்க்கும், தெலுங்கில் பாட்டிக்கும், கன்னடத்தில் கிழவிக்கும் உரியதென்பர் ”
தகடூர் நாட்டு அதியமான் நெடுமான் அஞ்சியைப் பல பாடல்களால் பாடிப் புகழ்ந்துள்ளார்.
அஞ்சியின் அவைக்களத்திற் திகழ்ந்தாற் போல, அஞ்சியின் மகனான பொகுட்டெழினியின் காலத்தும் உடனிருந்து, அவனுடைய கொடைப் பண்பையும் வீரப் பெருமிதத்தையும் பாடிச் சிறப்பித்துள்ளார்.
அதியமானுக்குக்காக காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் ஔவையார்.
இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற ஒரு பெருமடந்தையாய் உலக வரலாற்றில் இவர் ஒருவரே திகழ்கிறார்.
பெண்ணால் விளைவது போரே என்ற பழமொழியை பிழைமொழியாக மாற்றியவர் ஔவையார்.
அப்புலமைச் செல்வியார் தூது நடந்த திறம் ஒதியின்புறற்பாலது.
சேரமான் மாரிவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்,
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்
ஒருங்கிருப்பக் கண்டு உவந்து’ என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக என அறிவுறுத்திய புலமைச் செல்வியார் ஆவார்.
நெடுமான்
அஞ்சி போர்க்களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, ஔவையார் வருந்திப் பாடிய கையறுநிலைப்பாட்டு மிகவும் உருக்கம் வாய்ந்தது.
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது-” என்று இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும்.
எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியனவாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மூதாட்டி ஔவையாரின் நீதி நூல்களான நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன். சமய நூல்களான விநாயகர் அகவல். ஔவை குறள். சிற்றிலக்கியமான பந்தன் அந்தாதி ஆகிய நூல்களையும்
இயற்றியுள்ளார்.
மகளிர் குலத்திற்குப் பெருமை சேர்த்த ஔவை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2023 ஆம் நாளன்று காலை 9.30 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் ( மெரினா கடற்கரை ) அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், வணக்கத்திற்குரிய மேயர், துணை மேயர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொது மக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
வெளியீடு:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9

Add a Comment