POST: 2023-04-01T10:59:00+05:30

தினசெய்தி – 27 3 2023
பக்கம் எண் : 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 97

முத்தமிழறிஞர் கலைஞர் எழுப்பிய புகழ்வாய்ந்த வள்ளுவர் கோட்டம் !

– முனைவர் ஔவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்.

முத்தமிழறிஞர் கலைஞர் வரைந்த நெஞ்சுக்கு நீதியிலிருந்து சில பகுதிகளின் தொடர்ச்சி வருமாறு;

வையம் புகழ் வள்ளுவர் கோட்டம்

1976-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் இந்திய நாட்டு வரலாற்றிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற காலகட்டங்களில் ஒன்றாகும்.

அந்தத் திங்கள் கடைசி நாள் மாலையில் தான் கழக ஆட்சி கலைக்கப்பட்டது என்ற செய்தியை எனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த செய்தி நிறுவனத்தின் இயந்திரம் ஆங்கிலத் தட்டச்சு எழுத்துகளின் மூலம் வழங்கியது.

ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றின் காரணமாக நெருக்கடி நிலையை எதிர்த்தமைக்குத் திராவிட முன்னேற்றக் கழக்கத்திற்கு இந்திராகாந்தி அம்மையாரின் அரசு தந்த தண்டனை அது! ஆனால் கழகமோ அதனைக் களத்தில் பட்ட விழுப்புண்ணாகத்தான் கருதிக்கொண்டது.

கழக வரலாற்றில் ஒரு மாபெரும் சோதனைக் கட்டத்தையும் அடக்குமுறைகளைத் தாங்கும் உச்ச நிலையையும் இழித்தும் பழித்தும் அழித்துவிடத் துணிந்த மத்திய அரசினரின் கொடுமைகளை உறுதியோடு சந்திக்கும் சந்தர்ப்பத்தையும் அந்த ஜனவரி 31- ஆம் நாள் மாலை நேரம்தான் தொடங்கி வைத்தது என்று கூறலாம்.

அந்த வேளை வருவதற்கு முன் அந்த மாதத்தில் உருண்டோடிய நிகழ்ச்சிகள் சிலவற்றை நினைவுகூறுதல் வேண்டாமா ?

கன்னியாகுமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரேயுள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றினை, பத்து இலட்ச ரூபாய் செலவில் வைப்பது எனக் கழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவு ஜனவரி முதல் நாள் ஏடுகள் முலம் அறிவிக்கப்பட்டது.

கழக ஆட்சியின் அந்தத் திட்டம் உடனடியாகச் செயல்படத் தொடங்கியும் கூட இதுவரையில் நிறைவேறவில்லை.

ஆனால், எனது உள்ளத்து உன்னதக் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்த வள்ளுவர் கோட்டத்தின் வேலைகள் அனைத்தும் முற்றுப் பெற்று அதன் திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும், விழா எத்தகைய சிறப்புடன் தமிழ்த் திருவிழாவாக நடைபெற வேண்டுமென்ற திட்டங்களைத் தீட்டவும் ஜனவரி 8-ஆம் நாளன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் நான், நாவலர், பேராசிரியர், ப.உசண்முகம், மாதவன். ராஜாராம், ராமச்சந்திரன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஏ.எல்.சீனுவாசன், எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், நகர ஷெரீப் சரவணன், கே.வி.சீனுவாசன். திரையரங்க உரிமையாளர் சார்பில் ராஜகோபால் செட்டியார் ஆகியோர் கலந்துகொண்டு வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவுக்கான திட்டங்கள் வகுத்தோம்.

பிப்ரவரி திங்கள் 22, 23 ஆகிய நாள்களில் அந்தத் திறப்பு விழாவைக் கழக அரசு முன்னின்று நடத்துவதென நாள் குறிக்கப்பட்டது.

திருக்குறள் சுவடி பொறித்த வண்ணக்கொடியினை ஏந்தி திருக்குறளில் உள்ள 1,330 பாக்களை விளக்கும் வகையில் 1,330 மாணவர்கள் 1,330 மாணவிகள் 1,330 ஆசிரியர்கள், 1,330 ஆசிரியைகள் அந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வார்கள். திருக்குறளின் முப்பாலை எடுத்துக் காட்டும் வகையில் தஞ்சை முத்துப் பல்லக்குகள் மூன்றில் திறக்குறள் சுவடி வைத்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும். ஊர்வலத்தின் முகப்பில் 13 யானைகளும் 133 குறள் அதிகாரங்களை விளக்கும் வகையில் 133 குதிரைகளில் வீரர்களும் அமர்ந்து செல்வார்கள்.

அலங்கார வண்டிகளில் திறக்குறள் சிற்பங்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டுக் கலை நிகழ்ச்சிகள். இசை நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள்.

பொய்க்கால் குதிரை, நாதஸ்வரக் கச்சேரிகள் போன்றவை இடம் பெறும் என்றும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

முன்பு ஜனவரி 31 மாலையிலேயே கலைக்கப்பட்டுவிட்டது. அரசியல் சூழ்நிலையின் காரணமாக எஞ்சியிருந்த ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினைக் கழக அரசு நிறைவேற்றுவதற்கு அதனுடைய அமைப்புப் பணிகளும், அதன் திறப்பு விழா நிகழ்ச்சியும் அறவே நின்றுவிடுமோ என்று தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் கவலைப்பட்டன.

ஆனால் 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் என்ற செய்தி வந்தது.

“கோட்டம் திறக்கப்படுகிறது. குறளோவியம் தீட்டப்படுகிறது” என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரைப் பக்கத்திற்கு வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவான 15-4-76 அன்று நான் “கடிதம்” எழுதியிருந்தேன். “

இன்று எழுதுவது பெரிய கடிதம்” என்று தொடங்கி எழுதப்பட்ட கடிதம் அது! “சில குறிப்புகள் “சுயபுராணம்” போல் தோன்றக்கூடும் இப்போது அந்தக் குறிப்புகள் தேவையோ இல்லையோ எதிர்காலத்துக்கு நிச்சயம் தேவைப்படும். எனவே இந்த மடலில் என்னைப்பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்” என்ற வேண்டுகோளுடன் நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இதோ:

உடன் பிறப்பே,
இன்று சென்னையில் ஒரு விழா !
திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா!

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய் – காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய் – வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய் – மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய் – நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய் எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது.

அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.

மாசறு பொன்னாக, வலம்புரிமுத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால் உலகப்பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சுபுடைத்து நிற்பான்-மகிழ்வான் தகதகவெனக் குதிப்பான் – தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் – தாமரை கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?

ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ் மறைக்கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் நிகழ்கின்றது. இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள்தானே இந்த நாள்!

“கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று இடைக்காடர் கூற, “அல்ல! அல்ல! அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்” என்று ஔவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கு அல்லவா விழா!
கோட்டம் திறக்கப்படுகிறது! குறளோவியம் தீட்டப்படுகிறது.

“தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ்மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். தரணி எங்கும் பரவிட வேண்டும், மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்பட வேண்டும்.

அந்த மறுமலர்ச்சி, தமிழுக்கு ஏற்படத்தான், தி.மு.கழகம் ஆட்சிப் பீடம் ஏறிட விரும்புகிறது” என 1967 விருகம்பாக்கம் மாநாட்டில் அறிஞர் அண்ணா முழங்கியதை அவர் மறைவுக்குப் பிறகும் மறந்தோமில்லை என்பதற்குச் சான்று பகரும் வகையிலேதான் தில்லையாடியில் வள்ளியம்மை நகர் உருவாக்கினோம்.

புதிய பூம்புகார், வாழ்ந்த தமிழகத்தின் வரலாற்றுச் சின்னமாக எழுந்து நிற்கிறது.

அன்னியரை எதிர்த்த அடலேறு கட்டபொம்மனுக்கு நினைவுக் கோட்டை கம்பீரமாகக் காட்சி தருகிறது
காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஓர் ஆலயம். கலனாகிக் கிடந்த மயிலை வள்ளுவர் கோயிலுக்குப் புதிய திருப்பணி. நுங்கம்பாக்கத்தில் உலகோர் கவனத்தைத் திருப்பும் வண்ணம் ஒப்பற்ற வள்ளுவர் கோட்டம்.

உடன்பிறப்பே, இவைகளை எல்லாம் நினைக்கிறேன். நெஞ்சு இனிக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். தேன் பாய்கிறது, ‘இதயமெனும் கழனியிலே! உயிர் தமிழுக்கு எனும் உறுதிப்பயிற் விளைகிறது! களைகளுக்கு இங்கு இடமில்லை என்ற திடமும், தெம்பும் பிறக்கிறது.

ஆகா! அதோ! அதோ! வள்ளுவர் கோட்டத்துத் தேரின் உச்சியிலே நானும் நாவலரும் இணைந்து கலசத்தை ஏற்றி வைக்கும் உணர்ச்சிமிகு காட்சி மனத்திரையில் நிலைத்து நிற்கிறது.

கோட்டம் திறந்திட வருகிறவர் குடியரசுத் தலைவர் நமது அன்புக்குரியவர்! மேன்மை தங்கிய பக்ருதீன் அலி அகமது அவர்கள் வள்ளுவர் கோட்டத்தை அவரது திருக்கரங்களால் திறக்கிறார் என்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி,

குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்றபோது என்னைச் சந்திக்கக் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார். அந்தப் பெருமகனாரின் பாதம்பட்ட என் வீட்டுப் படிக்கட்டுகள் மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன்.

அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோடிப் பங்கு அதிக மகிழ்ச்சியை இன்று நான் அடைகிறேன், அவர் கோட்டம் திறக்க வருவது கண்டு!

திறப்புவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறவர் தமிழ் மக்களிடத்தில் ஐந்தாண்டுக் காலம் இரண்டறக் கலந்து பழகிடும் வாய்ப்பினைப் பெற்ற தமிழக ஆளுநர் கே.கே.ஷா அவர்களாவார்கள்.

அவர்கள் மனந்திறந்து பேசக்கூடிய பண்பாளர். தன் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துகளான “கே.கே என்பதைக்கூட “கலைஞர் கருணாநிதி ஷா” என்றும் இன்பம் பொங்கிடக் குறிப்பிட்டுத் தனது பாச உணர்வை என்மீது பல நேரங்களில் மழையாகப் பொழிந்தவர். “

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற குறள் நெறிக்கேற்ப, ஆளுநர் அவர்கள் தலைமை ஏற்பதும் மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறப்பு விழா நடத்துவதும் சாலப் பொருத்தமுடையதாகும்.

என் இனிய உடன்பிறப்பே! – “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்பது வெறும் சொல்லழகுக் கோவையல்ல. செய்திகள்தாம் வரலாற்று வரிகளாக மாறுகின்றன.

என்றாலும், எல்லாச் செய்திகளும் வரலாறாக ஆகிவிடுவதில்லை. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதால் எல்லாக் குழந்தைகளுமே தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒன்று, குழந்தைகள்தாம் தலைவர்களாகிறார்கள்.

நாட்டு விடுதலைக்காக வனப்புமிகு வாலிபத்தைப் பல ஆண்டுக்காலம் சிறைக்கோட்டங்களில் தியாகத் தீயில் கருக்கிக் கொண்ட மாவீரர் பண்டித நேரு அவர்கள். மண் மீட்கும் போரிலே களத்தில் நின்றபோது மகாத்மாவின் மடியில் தவழ்ந்த இளங்குழந்தை இந்திரா தான் இன்றைய இந்தியத் திருநாட்டின் தலைமை அமைச்சர்!

நமது ஆளுநர் அவர்கள் கல்விக்கூட விழாக்களில் உரையாற்றும்போது உற்சாகம் மேலிடக் குறிப்பிட்டது எனக்கும் உனக்கும் கூட நன்றாக நினைவிருக்கிறது. “

சிறுமிகளே நீங்கள் எல்லாம் இந்திராகாந்தி போல எதிர் காலத்தில் ஆகவேண்டும். சிறுவர்களே.

நீங்கள் எல்லாம் கருணாநிதி போல் காமராசர் போல் ஆகவேண்டும்!” என்று பலத்த கையொலிக்கிடையே கூறுவார்.

என்னைத் தலைவர்கள் வரிசையில் சேர்த்தார் என்பதற்காக இதைக் குறிப்பிடவில்லை.

நான் கிடக்கிறேன் சாதாராணமானவன் என்னை விட்டு விடு! இந்திய நாட்டுப் புகழ்மிக்க பிரதமர் இந்திராகாந்தி போலவும், தியாகச்சுடர் காமராஜர் போலவும் எதிர்காலத்தில் குழந்தைகள் ஒளி விட்டுத் திகழ வேண்டும் என்பது போலத்தான் இன்றைய செய்திகளும் நாளைய வரலாறுகளாக மாறிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.

செய்திகள் குழந்தைகளைப் போல! வரலாறுகள் தலைவர்களைப் போல! ஒரு சாராருக்குக் களி பேருவகை வழங்கும் செய்தி மற்றொரு சாராருக்கு மாறாக மனநோயைத் தரவல்லதாகவும் விளங்கிடக்கூடும்.

இன்று 1976-ஆம் ஆண்டு எப்ரல் திங்கள் 15-ஆம் நாள் வியாழக்கிழமை! இந்த நாளில் சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்படுகிறது. இது செய்தியா? வரலாறா? என்று கேட்டால் அதற்குத் தெளிவாகக் கிடைக்கக்கூடிய பதில் “வரலாற்றுச் செய்தி” என்பதுதான்.

இப்படி ஒரு கோட்டம் அமைத்திடும் எண்ணம் எவ்வாறு எழுந்தது தெரியுமா?

பூம்புகார் உருவாக்கியதும் பாஞ்சாலக்குறிச்சி கண்டதும் புதிய எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதும் உணர்ந்த நல்லோர் சிலர் மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற முறையீடொன்றைத் தந்தனர் என்னிடம்!

மறுநாளே நானும் அறநிலைய அமைச்சர் கண்ணப்பனும் மயிலைக்குச் சென்றோம். கோயிலைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது, அதற்கெனக் கருத்துரை வழங்கிடக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கிடையே அந்தக் கோயிலை அன்னியில் நகரில் நடுப் பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசையும் தோன்றியது. அதுபற்றி விவாதித்தோம். பெரிய அளவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாக அந்தக் கோட்டம் அமைய வேண்டுமென விரும்பினோம்.

பூம்புகார் கலைக்கூடப் பணிகளை முன்னின்று நடத்திய சிற்பி கணபதி ஸ்தபதியாரிடம் கோட்டம் பற்றிய விவாத அரங்குகளைத் தொடர்ந்து நடத்தினோம். கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும், வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான “கோணல்மாணல்” கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன். நான் வரைந்து காட்டிய வள்ளுவர் கோட்ட அமைப்புச் சித்திரம் கோணல் மாணல் கோடுகளாக இருந்தாலும் அடிப்படை எண்ணத்தைப் புரிந்துகொண்டு அதனைத் திருத்தியமைத்துச் சிற்பிகளும், அரசு அதிகாரிகளும் வேலைகளைத் தொடங்கினர். இடையில் பணிகள் விரைவில் முடிவுற வேண்டி ஸ்தபதியார் எஸ். கே. ஆச்சார் அவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அவர்தாம் குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத்தக்கவண்ணம் வடித்துத் தந்தவர்

குமரி முனையில் கோயில் எழுப்பிய சிற்பியும் காவிரி கடலோடு கலக்குமிடத்தில் பூம்புகார் எழுப்பிய சிற்பியும் சேர்ந்து வழங்கும் சிறப்புமிகு கோட்டம்தான் சீர்சால் வள்ளுவர் கோட்டம்.

சிற்பக் கலைக்கு உயிரூட்டும் கழக அரசை அந்த இரு சிற்பிகளுமே பெரிதும் பாராட்டியுள்ளனர்.

“எத்தனையோ அற்புதச் சிற்பங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய கதையையே தொடர்ச்சியாகச் சிற்பங்களில் பூம்புகாரில் வடிக்கச் செய்த அரசு, இந்த அரசுதான்” என்று கழக அரசைக் கணபதி ஸ்தபதி பாராட்டினார்.

“பூம்புகார்ப் பெருந்தச்சன்” என்ற விருதினை மாமல்லபுரத்தில் எனக்குச் சிற்பிகள் வழங்கிய விழாவில் !

“பழைய காலத்தில் எத்தனையோ மன்னர்கள் கலையைப் பேணி வந்திருக்கிறார்கள். கோயில்களையும் மண்டபங்களையும் கட்டும்படி சிற்பிகளை அவர்கள் தூண்டியிருக்கிறார்களே தவிர யாரும் தனது வாழ்நாளில் இப்படி ஒரு கல்தேரைப் பிரம்மாண்டமாக உருவாக்கும்படி கூறியதில்லை” என்று ஸ்தபதி எஸ்.கே ஆச்சார், ஒரு பத்திரிகைப் பேட்டியில் கருத்து வெளியிட்டார்.

நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு அளித்த திட்டங்கள்தாம் இவைகள்.

அதே நேரத்தில் தமிழ்மொழியின் மேன்மையை – கலாச்சார மாண்பை நிலைநிறுத்தும் பணியுமாகும். பாரதியின் பாட்டாக பாரதிதாசனின் கவிதையாக பலவேறு அறிஞர் பெருமக்களின் உரையாக, மொழி பெயர்ப்புகளாக வடிவு கொண்டிருந்த வள்ளுவருக்கு இதோ கோட்டம் அமைந்து விட்டோம்.

வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டுக்கு வரலாற்றுப் புகழ் கொண்ட வள்ளுவர் கோட்டம்!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த எழில்மிகு கோட்டத்தை நானும் நாவலரும் அமைச்சர்கள் சிலரும் சென்று சென்று பார்த்து வந்தோம். கோட்டத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கல்லும் எங்கள் கவனத்திலிருந்து தப்பியதில்லை.

காலம் யாருடைய காலடியிலும் அடிமைப்பட்டுக் கிடந்ததில்லை. அது ஒரு காற்று! பல திசைகளிலும் வீசும் ஆற்றல் பெற்றது! அப்போது புரியும் அவர்களுக்குச் சரித்திரத்தின் வல்லமை.

மீண்டும் நமது ஆளுநர் அவர்களின் சொற்பொழிவுக் குறிப்பு ஒன்றையே நான் நினைவுகூர்ந்திட விரும்புகிறேன். “கருணாறிதி அவர்கள்! தாங்கள் ஒரு உண்மையை உலகிற்கு நீரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள் கீழ்த்தளத்திலிருந்து ஒரு மனிதன், மிக உன்னத நிலைக்கு வரமுடியுமென்று காட்டியதற்காக எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும், அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம். ஆனால் எழுத்தாளராக – மனிதத்தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி, என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார். ”

ஜூலை 31-ஆம் நாள் 1971-ஆம் ஆண்டு நமது தமிழக ஆளுநர் ஆற்றிய உரைதான் இது, அவர் கருணாநிதி என்று என் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும்கூட நான் ஆற்றிய பணி, ஆற்றுகிற பணி எல்லாமே கழகச் சார்பில், கழக அரசின் சாரபில் அண்ணாவின் வழியைப் பின்பற்றி என்கிறபோது. தனிப்பட்ட எனக்கல்ல; நானும் நீயும் மற்றவர்களும் இணைந்துள்ள இந்தக் கழகத்துக்கு, கழக அரசின் நற்சாதனைகளுக்கு தமிழ்ப் பணிக்கு என்றே பொருள் கொண்டிட வேண்டும். சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம் !

அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன்.உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி பேற்றுக்கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த்தந்து, பள்ளிக்கு அனுப்பிப் பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலிகட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனத்தில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும் !

என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியை நான் பெறுகிறேன் இன்று! ஆம்-என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன். ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்.

“நெடுநாள் ஆசை நிறைவேற்றம்
நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்
நீயும் சேர்ந்து பாடுக இந்த மகிழ்ச்சிப் பாடலை ! வாழ்க வள்ளுவர் ! வெல்க குறள் நெறி ”

என்று நான் அந்த வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா அன்று எழுதினேன்.

வள்ளுவர் கோட்டத் திறப்பு ஆளுநர் தலைமையில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சீர்காழி கோவிந்தராஜன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். குடியரசுத் தலைவரின் உரையைத் திரவியம் மொழி பெயர்த்தார். அந்த விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலோ, அந்த வள்ளுவர் கோட்டம் எழும்பிடக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலோகூட நான் அழைக்கப்படவில்லை. அழைக்கப்படாதது மாத்திரமல்ல, வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோது அமைக்கப்பட்ட அந்த ‘கல்’ கூட அங்கே இருந்திடக் கூடாது என்று அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *