POST: 2023-04-15T12:10:44+05:30

நீங்கா நூலக நினைவு

ஒரு நாட்டின் நூலக வளர்ச்சி தான் அந்த நாட்டின் அறிவுச் செழுமையை சுட்டிக்காட்டும்

.மாணவர்களுக்கு விருந்தகங்களாக நூலகங்கள் தான் வளர வேண்டும்

எங்கள் குடும்பத்தின் இனிய நண்பராக அண்ணல் பழனி(11.7.1939-14.4.2023) 83 வயது நல்இளைஞராய்த் திகழ்ந்தார் என்பதைப் பெருமிதமாக சொல்ல விழைகிறேன் .

இராயப்பேட்டையில் ஒளவை சண்முகம் சாலைக்கு அருகில் 10 பெசன்ட் சாலையில் எங்கள் பெற்றோர்களுடன் தங்கி இருந்த காலங்களில் ஈஸ்வரி வாடகை நூலகம் தான் எங்கள் குடும்பத்தின் பல்கலைக்கழகமாக உயர்ந்து நின்றது என்று சொன்னால் மிகையாகாது ….

அண்ணல் பழனி தேனீ போன்ற சுறுசுறுப்புக்கும் – அயராத உழைப்புக்கும் – விழிப்பாக கண்காணிக்கும் குணம் கொண்டிருந்தவராகவும்

எந்த நூல்,என்ன வண்ணம், யார் ஆசிரியர், அரிய குறிப்பு எப்பக்கம் வரும் என்பதையெல்லாம் மிக நுட்பமாக எடுத்துச்சொல்லும் திறனை கண்டு எந்தையார் பலமுறை திரு பழனியைப் பாராட்டி உள்ளார்….

பள்ளி நாட்களில் எங்கள் அம்மா எங்கள் மூவரையும் ஈசுவரி நூலகத்துக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்த நூல்கள் தான் சந்தமாமா , அமர் சித்ரா கதைக்கொத்து , ஆஸ்டெரிக்க்ஸ் ,டின்டின் ,
ஆங்கிலப் புதினங்களான
எனிட் ப்ளைட்டன் ,ஹார்டி பாய்ஸ் ,அல்ப்பிரெட் ஹிட்ச்காக், அகதா கிறிஸ்டி ,அலிஸ்டர் மெக்ளீன் ,சிட்னி செல்டன் , ஆர்ச்சி ,ஜெப்ரி ஆச்சர் மற்றும்

தமிழ் வரலாற்றுப் புதினங்களான கல்கியின் பொன்னியின் செல்வன் ,சிவகாமியின் சபதம் ,பார்த்திபன் கனவு , அலை ஓசை ஆகிய புதினங்களை பைண்டு செய்யப்பட்ட கெட்டி அட்டையில் படித்தது பசுமையாக உள்ளது .

இராமாயண ,மகாபாரதக் கதைகளை நெடுநேரம் எங்கள் அம்மா படித்து நாங்கள் கேட்டதும் இன்றும் நினைவில் உள்ளதற்கு மூல காரணம் ஈசுவரி நூலகம் தான் .

அயல் நாடுகளில் பல நூலகங்களில் சென்று பேசிய பொழுதெல்லாம் அப்பா தவறாமல் ஈசுவரி நூலகத்தின் மாட்சியை மறவாமல் குறிப்பிட்டுச் சொல்லுவதோடு ஒரு பாடப் புத்தகத்தை வாசிக்கும் போது ,அதோடு தொடர்புடைய மூன்று நூல்களையாவது நாங்கள் நூலகங்களில் சென்று வாசிக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார் .

அப்பாவும், அம்மாவும் தீநுண்மிக்காலத்திற்கு முன் கலந்து கொண்டு பேசிய கூட்டம் அண்ணா நகரில் எங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசுக் கிளை நூலகமாகும்.

அப்பொழுதும் அப்பா ஈசுவரி வாடகை நூலகத்தின் பெருமையைச் சொன்னார்…

சில ஆண்டுகளுக்கு முன்பு பழனியின் மகன் சரவணன் அண்ணாநகரில் கோபுர பூங்கா அருகிலேயே கே பிளாக்கில் ஈஸ்வரி கிளை நூலகத்தை தொடங்கினார் ….

இராயப்பேட்டைக்கு இருந்த சிறப்பு வேறு எங்கும் கிட்டவில்லை என்பதுதான் உண்மை…

நவில்தொறும் நூல் நயம் போல பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு என்ற திருக்குறள் தான் நம் நினைவாக உள்ளது.

அண்ணல் பழனியின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கு நூலகத்தின் எண்ணற்ற உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

வருத்தத்தோடு
ஒளவை அருள்
15 .4 .2023

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *