POST: 2023-04-17T10:09:54+05:30

தினசெய்தி – 17 4 2023
பக்கம் எண் : 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 100

கலைஞர் குரல் முழங்கு கடல் !

முனைவர் ஔவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்.

பொது வாழ்வு மகிழ்ச்சித் ததும்பும் மலர்த் தோட்டம் அன்று. ”

கொளுத்தும் வெயிலும் குமுறி வீசும் காற்றும் நிரம்பிய பாலைவனம்” என்று தெரிந்திருந்தும்

தொல்லைகளைப் பெரிதெனக் கருதாது சமுதாய முன்னேற்றமே பெரிதென எண்ணி அல்லும் பகலும் அயராது உழைத்து பொது வாழ்வில் வைர எழுத்தாய் மின்னித் திகழ்ந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

தமிழகம் கண்ட முதல்வர்களுள் தனிபெரும் சிறப்புக்குரியவர், எவரும் செய்திராத சாதனையாக 5ஆம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டது அல்லாமல் சட்டமன்றப் பணியில் எவரும் கண்டிராத வகையில் 50 ஆண்டு நிறைவு செய்து பொன்விழா கண்ட பெருமிதத் தலைவர் தான் நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

வள்ளுவப் பெருந்தகைக்குத் தலைநகரில் வள்ளுவர் கோட்டம் அமைத்ததோடு அன்றி குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவர் திருவுருவச் சிலையை எழுப்பி வான் புகழ் வள்ளுவரின் பெருமையை உலகறியப் பறைசாற்றியவர் நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆவார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால், அதற்கு மேலாக நெடிதுயர்ந்த கற்சிலையின் கட்டுமான நுணுக்கங்கள் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

சிற்ப நூல் கணக்குப்படி பீடம் ஒரு பங்கு எனக் கொண்டால் அதன்மேல் வைக்கப்படும் சிலையின் உயரம் 2.5 மடங்காக இருக்க வேண்டும்.

இந்த சிலையின் பீடம் 38 அடி உயரமாகும்.

இதன் 2.5 மடங்கு என்பது 95 அடியாகும்.

அதுதான் திருவள்ளுவரின் சிலையின் உயரமாகும்.

இதில், முகம் உடல், தொடை, கால், ஆகிய உறுப்புகளின் மொத்த உயரம் 80 அடி. உச்சந்தலை, கழுத்து, முட்டி, தாள் ஆகிய இவை நான்கும் சேர்ந்து 10 அடி.

கொண்டை (முடி) 5 அடி ஆகமொத்தம் 95 அடி. 38 அடி பீடத்தின்மேல் 95 அடி வள்ளுவர் சிலை!

தனது வலக் கையில் அறம், பொருள், இன்பம் என முப்பாலை முத்திரையாகப் பிடித்து, இடது கையில் திருக்குறள் ஏட்டினைத் தாங்கிக் கருணை பொழியும் பார்வை உடையதாய் விளக்கமுறுகிறது திருவள்ளுவர் சிலை.

38 அதிகாரங்களைக் கொண்ட அறத்தை அடிப்படையாகக் கொண்டுதான் 95 அதிகாரங்கள் கொண்ட பொருளும் இன்பமும் இயங்குகின்றன.

உலகத்தின் பல நாடுகளில் பல்வகைக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள்.

சிலைகளைச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள் என்றாலும் உலகப் பெருஞ் சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களின் கைவண்ணமும் முத்தமிழறிஞரின் வினை முடிக்கும் ஆற்றலும் இணைந்து தமிழ்நாட்டின் தென் கோடி கடலில் 20ஆம் நூற்றாண்டும் 21ஆம் நூற்றாண்டும் இணையும் 1999 திசம்பர் 31ஆம் நாளும் 2000 சனவரி முதல் நாளும் கூடிவரும் எழுச்சி வேளையில் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை உலகத்திற்குக் காணிக்கையாக்கப்பட்டது.

பெங்களூர் மாநகரத்தில் 18 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் மூடி வைத்திருந்த வள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து இரு மாநில உறவுகளுக்குப் புதிய பாலம் அமைத்தப் பெருமையும், உயர்தனிச் செம்மொழியாம் தமிழை ஒன்றிய அரசினை ஏற்கச் செய்து, செம்மொழித் திட்டம் உருவாக்குவதற்கு உரிய செயல்களை மேற்கொண்டதையும் சாதி, சமயம் பூசல் ஒழிந்து மக்களிடையே சமத்துவ நெறி ஓங்கும் வண்ணம் பெரியார் சமத்துவபுரங்களை நிறுவியதும்ஆகிய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியவர் ஆவார்.

கலைஞர் முத்தமிழ் வித்தகர், இயல் இசை நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் பெரும் சாதனை புரிந்தவர் கால் சட்டைப் பருவத்திலிருந்து கையகலத் தாளேந்தி இலட்சக் கணக்கான பக்கங்களை எழுதி எழுதிக் குவித்தவர்.

அவருடைய சங்கத் தமிழும் குறளோவியமும்,தொல்காப்பிய உரையும் இன்னோரன்ன இனிமைத் தமிழ் நூல்கள் அவருடைய தமிழ் இலக்கியப் புலமைக்குச் சான்று பகர்வன.

கலைஞரின் இலக்கியப் படைப்புகளின் பரப்பு மிக விரிவானது ஆழமானது உயர்வானது என்று சொன்னால் மிகையில்லை.

எந்த நிலை வந்தாலும் 5 முறை முதலமைச்சுப் பொறுப்பு வகித்தாலும் 13 ஆண்டுகள் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கலைஞரின் மக்கள் பணியும் தமிழ்ப் பணியும் தொய்வடைந்ததே இல்லை.

தமிழும் தமிழ் இனமுமே அவரின் சிந்தனையும் செயலுமாக இருந்தன.

எந்நிலை வறுவினும் இன்முகம் கொண்டு ஏற்றுக் கொள்ளும் முத்தமிழறிஞர் கலைஞரை

‘மெய்த்திருப் பதம் மேவு‘ என்றபோதிலும்

‘இத்திருத் துறந்து ஏகு‘ என்ற போதிலும்

சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை

ஒத்திருக்கும் முகம் . . . . .

என்ற கம்பராமாயணச் செய்யுள் தான் நம் நினைவுக்கு வரும்.

முத்தமிழறிஞரின் தொல்காப்பியப் பூங்கா எனும் அறிய இலக்கணத் திறனாய்வு வழியாக அரும்பணியைச் செய்ய முடியும் என்று நிறுவியவர் தமிழவேள் கலைஞர்.

இதனைப் படிப்பார்க்கு இனி இலக்கணம் வேம்பெனக் கசக்காது.

கரும்பு தந்த தீஞ்சாறாய் இனிக்கும்.

இனி எதிர்காலக் கல்வி உலகம் இலக்கணத்தை கலைஞர் போல் எளிமையும் சுவையும் பொருந்த எடுத்துரையுங்கள் என்று கூறும்.

ஆயுதத்தை நிழல் என்று கூறும் நுட்பம்., 30 முதல் எழுத்துகளை நினைவில் கொள்ளும் உத்தியின் அழகு, மெய், உயிரோடு இயங்கும் பற்றிக்கான உவமையின் வளம், தமிழ் எனும் பெயரே இன ஒற்றுமை காட்டுவது என உரைக்கும் நயம் அகத்தெழு வளியிசை பற்றிய கருத்துரைத்தோர் அறிவுசால் தமிழ்ப் பெரியார் எனக் காட்டும் புலமைத் திறம், வாணிகப் பேச்சினர் இடமறிந்து எதிர்பாரா முத்தத்தையும் தமிழச்சியின் கத்தியையும் எடுத்தாள்வது காட்டும் நகைநலம், உவமையின் சிறப்பையும் உள்ளுரையுடன் நுட்பத்தையும் உணர்த்தும் பாங்கு தொல்காப்பியப் பூங்காவில் தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும்.

சங்க இலக்கியம் என்னும் மாணிக்கப் பேழையிலிருந்து ஒளி உமிழும் சில செய்யும் மணிகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய எழிலார்ந்த தமிழ் நடை என்னும் இழையில் கோர்த்துச் சங்கத் தமிழ் எனும் அணிகலனை தமிழ்த்தாய்க்கு அணி செய்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞரைச் சாரும்.

யாதும் ஊரே என்று பாடிய பூங்குன்றனாரையும், விடாது மண்ணின் பற்று, இரைக் கொள்ளும் யானைக்குப் பொருந்தும் இறை கொள்ளும் அரசுக்கும் ஆகும் என்ற புலவரின் இடித்துரை, அணியாக உருக்கொள்ளும் போது அருகருகே இடம்பெறும் மணிகளைப் போன்றோர் சான்றோர் என்று கண்ணகனார் கூறும் கருத்து நலம், வலவன் ஏவிய வானவூர்தி வழக்கில் இருந்ததோ எனக் கேட்டும் வினா, செவிலி மனம் தேற்றிய அறிவுச் செல்வரின் அழகு பொதிந்த உவமை உரை, தகடூரான் தந்த நெல்லிக்கனிக்குத் தமிழ்க் கிழவி தந்த நன்றிக் கணி பற்றிய விளக்கம், தலை கொடுத்தும் சாகாத தமிழக குமணனின் சால்பு,. புன்னை நிழலில் காதல் புரியாதீர், என்ற பூங்கொடியின் நாணம், முதுகிட்டான் களத்தில் மகன் என்று கேட்ட மூதாட்டி உண்மை அறிந்த பின் சொன்னவனின் நாக்கு எங்கே என்று கேட்கும் புலக் குணம் என்று சங்கத் தமிழில் வரும் பகுதிகளிலெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞர் பண்டைத் தண்டமிழ்ப் பனுவல்களின் பெருமையைக் காட்டுவதோடு நில்லாமல் தம் படைப்புத் திறனால் கற்பனை உரம் மிகப் பெரிது.

புதிய எல்லைகளைத் தம் புலமைத் தூரிகையால் தீட்டிக் காட்டியிருப்பதை படிக்கும் தோறும் நம் நெஞ்சம் விம்மும் கற்பனைச் சிறகுகள் விண்ணில் பறக்கும்.

உலகம் வியக்க அறம் வகுத்தவர் திருவள்ளுவர்.

சமய நெறி சாராத பொதுமை நெறி நின்று அற முதலாகிய முப்பொருளின் திறமுரைத்த திருக்குறளுக்குக் காலந்தோறும் உரைகளும், விளக்கங்களும் மொழிபெயர்ப்புகளும் தோன்றின.

மணக்குடவர் முதலாகப் பழைய உரையாசிரியர் பதின்மரும் பிற்காலத்திற் பலரும் உரை கண்டனர்.

இந்நூலுக்கு ஏடாளும் புலமையோடு நாடாளும் தலைமையும் பூண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் உரை தன்னேரில்லா தமிழ் உரையாகும்.

பகுத்தறிவு ஒளி துலங்கப் பன்மாண் மெருகு மிளிரப் படிப்பார் நெஞ்சிற் காட்சிப் படமாக விரியுமாறு சொல்லோவியமாக வரைந்து ‘குறளோவியம்‘ என்னும் தனி விளக்கம் படைத்ததை உலகமே பாராட்டி நெகிழ்ந்தது.

பூம்புகாரைப் புதுக்கியவர் சேரன் தம்பிக்குச் சிலை எடுத்தவர் கடற்கரையில் கண்ணகியை மீண்டும் கொண்டு வந்து நிறுத்தியவர் என்ற பெருமைக்கெல்லாம் உரிமை பூண்ட கலைஞரின் நெஞ்சில் நிலைபெற்றுவிட்ட சிலப்பதிகாரம் அழகிய உரைநடை நாடகமாய் அவரால் ஆக்கப்பெற்றது.

முத்தமிழறிஞர் கலைஞரின் உரைநடையே கவிதைச் சுடர் ஒளிரும் கலை வடிவமாகும்.

திரைப்பட உரையாடல்களிலும் கட்டுரைகளிலும் இந்த துள்ளு தமிழ் கவிதை நடை எதுகை, மோனைத் தொடைகளோடு எண்ணற்ற மக்களின் இதய அரியணையில் என்றென்றும் கொலுவீற்றிருக்கும்.

கவிதையல்ல, ஆக்கிக் கொள்ளலாம்.

என்ற கலை நுணுக்கக் குறிப்போடு அவருடைய தேனலைகள் என்ற உரை வீச்சு கலைஞரின் கவித் திறனுக்குக் கட்டியம் கூறுகின்றது.

கலைஞருக்கு இயல்பாக வரும் சிலேடைகள், அடுக்குச் சொல்லணிகள், யாப்பிலிருந்து முற்றிலும் விலகிவிடாத கட்டமைப்பு இசைப்பாக்களுக்கு உரிய சந்தம் கலந்துவரும் சொற்பின்னல் கேட்பார்க்குக் கிளர்ச்சி தரும் புதிய புதிய உவமைகள், முற்றுருவமாக செய்தியைச் சித்தரிக்கும் படிவப் பாங்கு ஆகியன கலைஞரின் தனிப்பட்ட கவிதைப் பண்புகளாகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த வரலாற்றுப் புதினங்கள், சமூகப் புதினங்கள் யாவும் வரலாற்றையும் சமூகத்தையும் கதைக் களங்களை மட்டுமே கருத்திற் கொண்ட நெடுங்கதைகள் அல்ல சங்க கால அகப்பாடல்களைப் போல ஆழமான உள்ளுறை கொண்டவை ஆகும்.

ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர், பாயும் புலி பண்டாரக வன்னியன் போன்ற வரலாற்று நெடுங்கதைகளை தமிழ்ச் சமுதாயம் மறுமலர்ச்சியும் புத்தெழுச்சியும் பெறவேண்டும் என்பதற்காகவே படைத்திருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் எழுதி, நடிக்கப்பெற்ற முதல் நாடகம் நச்சுக் கோப்பை.

இந் நாடகம் 1943இல் அரங்கேற்றப்பட்டது.

திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவே இந் நாடகம் அமைந்தது.

பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் பேச்சிலும், எழுத்திலும், கவிதைகளிலும் வெளிப்பட்ட சீர்திருத்தக் கருத்துகளுக்கு இந்த நாடகம் கொள்கலனாக அமைந்தது.

சோதிட மறுப்பு, கைமை மணம், சாதிவேறுபாடின்மை, பகுத்தறிவு போன்ற உயர் நெறிகள் இந் நாடகத்தில் அன்றே உரைக்கப்பெற்றன.

நச்சுக் கோப்பை நாடகத்தில் மறக்க இயலாத வசனம் வரும்,

“தருமத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற கேள்வி வரும் பொழுது, திமிரான பேச்சு இது உனது குற்றமல்ல பண்படாத அறிவின் குற்றம்.”

சிந்தனை என்ற வயலுக்கு ஆராய்ச்சி என்ற நீர் பாய்ச்சும். பகுத்தறிவு பறம்படித்து உயர்வு தாழ்வு என்ற மேடு பள்ளங்களைச் சமப்படுத்தி மூடமதி என்ற கலைகளை முற்றிலும் அகற்றும் விவேகம் என்ற விளைவு ஏற்படும். அப்பொழுது தெரியும் தர்மம் எது? அதர்மம் எது? என்று.

கலைஞரின் இதழியல் பணி தமிழ்நாடு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.

நாட்டாட்சிச் சக்கரத்தை சுழற்றுவார் சோர்வின்றி “மாலையில் மக்களரங்கில் மனம் கவர உரையாற்றுவார் தளர்ச்சியின்றி” கட்சிப் பணியும் கவனிப்பார் கருத்தூண்றி

இரவு மணி எத்தனை ஆனாலும் முரசொலிக்குத் தலையங்கம் தீட்டிடுவார் மறுப்பின்றி; இடையே குறளோவியம் படைப்பார் சலிப்பின்றி.

இவற்றையெல்லாம் காணும்போது ஒரு நாளைக்கு இவருக்கு மட்டுமே 48 மணிநேரம் போலும் என நினைக்கத் தோன்றும்.

எவ்வளவு விரைந்து எழுதினாலும் விறுவிறுப்பு குறைவதில்லை.

கொள்கை குழருவதில்லை. தமிழுக்கும் அவருக்கும் உள்ள உறவு இத்தகையது.

கலைஞரை ஒருமுறை தியானப் பயிற்சி செய்ய வற்புறுத்தினாராம் தமிழறிஞர் தெ.பொ.மீ.

பயிற்சியின் போது நாராயண நமஹ என்பது சொல்வது உடலுக்கு நலம் பயக்கும் என்றாராம் பயிற்சி அளித்தவர்.

சொல்லுவரா கலைஞர் வாய் திறந்து உச்சரிக்க வேண்டும் அவ்வளவு தானே! ‘ஞாயிறு போற்றுதும்’ என்ற சிலப்பதிகார வாழ்த்தினைச் சொல்லுகிறேன் என்றாராம்.
அதிலும் தமிழே அவர் நாட்டம்.

இந்தியாவின் பிரதமராக ஈடுஇணையற்றுப் பணியாற்றிய ஜவகர்லால் நேருவின் தன் வரலாற்றுக்கு என்னென்ன சிறப்புகள் உண்டோ, அவை அனைத்தும் முத்தமிழறிஞர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி என்ற தன் வரலாற்று ஏட்டை சொல்லி மகிழலாம்.

நெஞ்சுக்கு நீதி நான்கு பாகங்களைக் கொண்ட பெரும் படைப்பாகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த 1924ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முதற் பாகம் 755 பக்கங்களைக் கொண்டது.

1969 தொடங்கி 1976 வரையிலான நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைக்கும் இரண்டாம் பாகம் 586 பக்கங்களை உடையது.

1976 முதல் 1988 வரை உள்ள செய்திகளைப் புலப்படுத்தும் 3ஆம் பாகம் 612 பக்கங்களைப் பெற்றது.

ஆக 2583 பக்கங்களில் இதுவரை தமிழர் ஒருவரின் தன் வரலாறு வந்ததில்லை என்பது விளங்கும்.

தனித் தமிழ் இயக்க வரலாற்றிலிருந்து மறைமலைடியகளாரைப் பிரிக்க முடியாது.

தொழிற் சங்க வரலாற்றிலிருந்து திரு. வி.க. வை நீக்க முடியாது.

சுயமரியாதை இயக்க வரலாற்றிலிருந்து தந்தை பெரியாரை அகற்ற முடியாது.

திராவிட இயக்க, அரசியல், மொழிப் போராட்ட வரலாற்றிலிருந்து பேரறிஞர் அண்ணாவையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும் அனுவும் அசைக்க எவருக்கும் இயலாது.

வரலாற்றுப் பரிணாமத்தின் வழி நோக்கினால், தியாகராயர், நடேசனார், பனகல் அரசர், உப்பிலி அரசர், டி.எம். நாயர், தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் மொத்த உருவமாகத் திகழ்பவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவரே !

கலைஞர் பெருமானே……

உங்கள் நினைவுகளின் தாலாட்டில் உறங்குகின்றோம்….

உங்கள் தனையனின் தலை நிமிர்வால் வாழுகின்றோம்….

கலைஞர் பெருமானே! நீங்கள் இனம், மொழி,

நாடு காக்க இரவு பகலாய் உழைத்தீர்கள்…

உங்கள் உழைப்பையெல்லாம் உங்கள் தனையன் ஓய்வின்றிச் சுமக்கின்றார்…

இந்நாட்டைக் காக்கவந்த இனமான வரிப் புலியின்

பொன்னேட்டைக் காணாமல் புறப்பட்டுப் போனீரே…

முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் முழங்குகின்ற திராவிடச் சொல்

கத்து கடல் சூழ்ந்து, காணுமிடமெலாம் சூழ்ந்து

மொத்த இமயமலை மூழ்கடிக்கச் செல்லுதய்யா?

கவிதையா, கட்டுரையா, திரைக்கதையா, கனலுரையா,

குறளா, அகம் புறமா, கொட்டிக் குவித்த மடலுரையா?

எல்லாம் குவிகின்ற எல்லையிலாப் பெருங்கடலே…

அன்னைத் தமிழை ஏன் தனிமையிலே தவிக்கவிட்டாய் ?

கடற்கரை ஓரத்தில் கண்ணுறங்கும் இடத்திற்கும் நீயே போராடி

இட ஒதுக்கீடு பெற்றாயே !

என்றும் தமிழினத்தின் நற்றாயே !

வணங்குகிறோம்.

எங்கெங்கே, தமிழ் உணர்வு இருக்கிறதோ, எங்கெங்கே தமிழன் என்ற இன உணர்வு திகழ்கின்றதோ, எங்கே திராவிட இயக்கக் கொள்கை வீறு குடியிருக்கிறதோ, எங்கே தொண்டன், உடன் பிறப்பே ! என்று எதிர்கொள்ளப்படுகின்றானோ, எங்கெங்கே செயல் உண்டோ அங்கெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞர் இருக்கிறார் ! இருக்கிறார் ! இருக்கிறார் !

கடந்த 100 வாரங்களாக நூற்றாண்டு நாயகர், முத்தமிழறிஞர் கலைஞரைக் குறித்து நான் பேசப் பேச பல தருணங்களில் தட்டச்சு செய்த இளவல், திரு. பொன்னேரி பிரதாப் அவர்களை எண்ணி மகிழ்கிறேன்.

பிரதாப்பை எட்டாண்டுகளுக்கு முன்பு கவிப்பேரரசு வைரமுத்து தியாகராய நகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து செயலாகவே இயங்கும் இந்த இளவலை நான் பட்டை தீட்டினேன்.

உங்கள் வசம் ஒப்படைக்கிறேன்.

பொன்னாக அவனை மின்னிக் காட்டுங்கள் என்ற குறிப்புடன் வரப்பெற்ற பிரதாப் குனிந்த தலை நிமிராமல் அதிகச் சொற்கள்

பேசாமல் கருக்கலிலேயே எழுந்து தன் இல்லத்துப் பணிகள் செய்து கொண்டே தந்தைக்கும் தாய்க்கும் பல பணிகளைச் செய்துவிட்டு பொன்னேரியிலிருந்து தொடரியில் என் அலுவலகத்திற்கு நான் வருவதற்கு முன் வரும் தொண்டனாய் மாறி நான் செல்லும் கூட்டங்களிலெல்லாம் நிரல் படுத்தி என் நண்பர்களின் தொலைபேசி எண்களை செவ்வனே பேணிக் காத்து என்னைப் பற்றி வரும் எந்த செய்திக் குறிப்பையும் நறுக்கி வைத்து அண்ணன் அருளிடம் கொடுத்து விடுவேன், அவர் பேணிக் காப்பார் என்று உளமுறுக சொல்லிச் சொல்லி என் னையே வலம் வந்து சில ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் அருளிடம் தொடர்ந்து வலியுறுத்தி தின செய்தி நாளிதழில் செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் என்ற தலைப்பை என்னிடம் வாங்கி முத்தமிழறிஞர் கலைஞருடன் இருந்த நீங்கா நினைவுகளை கட்டுரையாக மாற்றிய பெருமிதப் பாங்கினைக் கண்டு உளம் மகிழ்கிறேன்.

தினசெய்தி இதழில் திங்கள் கிழமை தோறும் என் கட்டுரைகளையும் ஞாயிற்றுக் கிழமையில் அருளின் கட்டுரைகளையும் முழுப் பக்க அளவில் வெளியிட்ட தினசெய்தி நிர்வாகத்தை அந்த பொன்மனத்தையும் பெருமனத்தையும் நான் என்றென்றும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றி எழுதியவனுக்கே இவ்வளவு புகழ் என்றால், வெளியிடும் தின செய்தி புகழ் வாராமலா போகும்.

இந்த கட்டுரைகளை தொடர்ந்து வெளிவர உறுதுணையாக இருந்த ஆசிரியர் குழு, பக்க வடிவமைப்பாளர்களுக்கும், தொழில் நுட்ப பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி.

தொடர்புக்கு: “thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *