கலைமிளிர் காப்பியம் தந்த அடிகள் !

தினமணி – 23 4 2023
பக்கம் எண் : 8

கலைமிளிர் காப்பியம் தந்த அடிகள் !
ஒளவை அருள்

கடுகளவு குறளில் கடலளவு கருத்துகள் மிளிர்கின்றனவோ, அவ்வாறே சித்திரச் சிலப்பதிகாரமும்
சொல்லழகும், பொருளழகும், கற்பனைத் திறனும், காதல் உணர்ச்சியும், கற்பின் வீறும் ஒருங்கே அமைந்து இரத்தினங்களாலிழைத்த விலையுயர்ந்த ஆபரணம் போல மிளிர்கின்றது.

எவ்வாறு ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பலப்பல நுணுக்கங்களை ஆய்ந்து மனக்கிளர்ச்சி அடைகிறேமோ, அவ்வாறே ஆய்ந்து மகிழும்படி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைத்துள்ளார்.

சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் பின்னிப் பிணைந்த முத்தமிழ்க் காப்பியமாகும். ‘

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ‘ என்று மகாகவி பாரதியாரால் போற்றப் பெற்ற இக்காப்பியம், பண்டைத் தமிழகத்தில் மூன்று நாடுகளாகத் திகழ்ந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளையும் அவற்றின் தலைநகர்களான வஞ்சி, புகார், மதுரை ஆகிய மூன்று நகரங்களையும் உலகத்திற்கு இனிது எடுத்துக் காட்டுகின்ற வரலாற்றுக் காப்பியமாகவும் விளங்குகின்றது.

கண்ணகி, மாதவி, கோப்பெருந்தேவி ஆகிய மூவரின் கற்பின் திறத்தை இளங்கோவடிகள் இக் காப்பியத்தில் இனிது இயம்புகிறார்.

முக்காண்டங்களாக அமைந்துள்ள சிலப்பதிகாரம் மாதவி மேற் கொண்ட ஆடல், பாடல், அழகு ஆகிய முக்கலைகளையும் நுணுக்கமாகவும் நயமாகவும் இனிது இயம்புகின்றது.

புகார்க் காண்டத்தில் இன்பச்சுவையும், மதுரைக் காண்டத்தில் அவலச்சுவையும், வஞ்சிக் காண்டத்தில் வீரச்சுவையும் நிறைந்தது சிலப்பதிகாரம்.

திங்கள், ஞாயிறு, மழை முதலிய மூன்று இயற்கைப் பொருளை மங்கல வாழ்த்தாகப் போற்றுகின்றது சிலம்பு.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் , உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் , ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம் என்னும் முக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய
முக்குறிக்கோளுடையது சிலம்புக் காப்பியம்.

கோவலன் கண்ணகி இல்லற வாழ்க்கை நேர்க்கோட்டில் தொடங்கி மாதவியின் நுழைவினால் நேர்க்கோடு முக்கோணமாக மாறியது.

கற்பின் கொழுந்தாகத் திகழ்ந்தவள் கண்ணகி. புகார் நகரத்தில் கண்ணகியின் கற்பு அறக்கற்பாக மதுரை மாநகரத்தில் வீரக்கற்பாக வெளிப்பட்டது.

அரும்பி,உலக இலக்கியங்களில் ஏதாவது ஒன்றில் இவ்வளவு சுவையான பகுதி இருக்குமா என்று ஐயுறும் அளவில் சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரிஅமைந்துள்ளது.

சிலப்பதிகாரத்தில் வழங்கும் பெயர்களில் பெரும்பாலானவை பொதுப்பெயர்களே.

கண்ணகி, கயவாகு, சாத்தனார், வசந்தமாலை, வெற்றிவேற் செழியன் போன்ற ஒரு சில பெயர்கள் மட்டும்தான் இயற்பெயர்கள்; மற்றவை காரணப்பெயராகவோ, மரபு அடிப்படையில் எழுந்த பெயராகவோ, இளங்கோவடிகளார் படைத்த கற்பனைப்பெயர்களாகவோ அமைந்திருக்கின்றன.

‘ கண்ணகி ’ என்னும் பெயர் புறநானூறு போன்ற நூல்களில் காணக்கிடைக்கின்றது. ‘

கயவாகு ’ இலங்கை வரலாற்று நூலான ‘ மகாவம்ச ’த்தால் அறியக் கூடிய பெயர். ‘ வசந்தமாலை, ‘ தேவந்திகை ’ ஆகியவை ‘ வஸந்த மாலை ‘, ‘ தேவந்திகா ‘ என்னும் வடமொழிப் பெயர்களின் தழுவல்கள். ‘ சாத்தனார் ‘ சங்க இலக்கியத்தில் பல புலவர்களுக்குப் பெயராய் வந்திருக்கின்றது. ‘

வெற்றிவேற் செழியன் ‘ என்பதும் தொகைநிலைத் தொடர் மொழியாய் அமைந்த பெயராம்.

சிலப்பதிகார நகராம் பூம்புகார் பதினாறாம் நூற்றாண்டைய இலண்டன் மாநகரத்தைப் போலக் காட்சித்தரும் என்று கல்வெட்டுப் பேராசிரியர் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் தான் முடங்கல் ( கடிதம் ) எழுதும் முறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாதவி, வசந்தமாலை வாயிலாக ஒருமுறையும் கோசிகன் வாயிலாக ஒருமுறையும் கோவலனுக்கு முடங்கல் அனுப்பினாள்.

சேரன் செங்குட்டுவன் எடையளவை ஒருவாறு அறிஞர்மு. இராகவையங்கார் கணக்கிட்டு 300 முதல் 375 பவுண்டு வரை என்று குறித்துள்ளார்.

மகுடம், மார்புக்கவசம், உடைவாள், கால் புதையரணம், இடையில் அணிந்த கச்சு எல்லாம் சேர்த்துத் தான் துலாபாரம் நடந்தது.

துலாபாரம் ஐம்பது பொன் என்று குறித்துள்ளார்.

அரங்கேற்ற நாளில் நாட்டிய ஆசிரியர், இசை ஆசிரியர், தமிழாசிரியர், தண்ணுமை ஆசிரியர், குழல் ஆசிரியர்,யாழ் ஆசிரியர் ஆகிய அனைவரும் ஒருங்கு கூடி சிறப்புற இணைந்தால்தான் நாட்டியம் எடுப்பாக அமையும் என்றும், அரங்கேற்றத்தில் இருந்த இசைக்கருவிகள் அனைத்தும் முழவு, குழல், யாழ் ஆகிய தமிழ் இசைக்கருவிகளே என்றும் உரைக்கிறது சிலம்பு.

மாதவி குளித்தெழுந்த பங்கயத் தடாகத்தில் ஊறி மிதந்த 32 வகை நறுமணப் பொருள்களையும், சேரர் செம்மல் இளங்கோவடிகள் வனப்பு மிகுந்த வரிகளில் பட்டியலிட்டுப் படம் பிடிக்கின் றார்.

மேலும், இருபதுக்கும் மேற்பட்ட பொன்னகைகள் பொலியும் புன்னகை அரசியாக மாதவியை நம்முன் நிறுத்துகிறார்.

சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரை பிரதியொன்று தேரழுந்தூர் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜ கோபாலாசாரியாரிடமிருந்து தமக்குக் கிடைத்தது என்று தமிழ்த்தாத்தா உ.வே. சா. சிலப்பதிகார உரையின் மூன்றாம் பதிப்பின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சிலப்பதிகாரத்தில், 40 அரசர்களின் பெயர்களும், 23 நாடுகளின் பெயர்களும், 36 ஊர்களின் பெயர்களும், 18 மலைகளின் பெயர்களும், 11 ஆறுகளின் பெயர்களும், 5 பொய்கைகளின் பெயர்களும், 22 கோயில் கொண்ட தெய்வங்களின் பெயர்களும், 24 புலவர்களின் பெயர்களும், 120 கதைப் பாத்திரங்களின் பெயர்களும், 15 பெருந்தெய்வங்களின் பெயர்களும், 34 சிறு தெய்வங்களின் பெயர்களும், 8 பூதங்களின் பெயர்களும் அணிசெய்கின்றன.

சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த அடிகள் 5,235 என்றும், மொத்தச் சொற்கள் 26,742 என்றும், ஒரு முறைக்கு மேல் வரும் சொற்களைத் தவிர்த்துவிட்டால், தனிச்சொற்கள் 8,930 என்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேனாள் கணிதவியல் துறைத் தலைவர் ப. பாண்டியராஜா குறிப்பிடுகிறார்.

இளங்கோவடிகள் யாத்த சிலப்பதிகாரத்தைத் ‘ தேனிலே ஊறிய செந்தமிழ் ‘ என்பார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

செந்தமிழர் நலம் பாடும் பைந்தமிழ்க் கருவூலம் தான் சிலப்பதிகாரம்.

தமிழரின் முறையான வரலாற்றுச் செல்வமாய், மூவேந்தர் ஆண்ட முப்பெரும் நாடுகளின் வளங்காட்டும் செழும்படைப்பாய், வாழ்வின் அனைத்து நெறிகளையும் வரையறுத்து உரைத்திடும் நீதி விளக்கமாய், சுற்றுலாப் பெருமையைப் படம் பிடித்துக் காட்டும் சுவைக் காவியமாய் இலங்கிடும் சிலப்பதிகாரம் மக்கள் காப்பியம், மங்கையர் காப்பியம், முடிமன்னர் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் எனலாம்.

சிலப்பதிகாரத்தை நாடெங்கும் பரப்பிய சிலம்புச்செல்வர் ம.பொ.சி., சென்னையில் 1956 ஏப்ரல் 24 அன்று செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாக இளங்கோ அடிகள் விழாவைத் தொடங்கி வைக்கச் செய்தார்.

அந்த வகையிலும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழா நடைபெறும் சித்திரைத் திங்கள் முழுநிலவைக் கருதியும் ஆண்டு தோறும் ஏப்ரல் 24 அன்று தமிழக அரசு சார்பில் இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்யப்படுகிறது.

தினமணி நாளிதழில் 23.5.2023 ( ஞாயிறு ) அன்று ” தமிழ்மணி ” – ( பக்கம் எண் – 8 ) . பகுதியில் வெளியான முனைவர் ஒளவை அருள் எழுதிய ” கலைமிளிர் காப்பியம் தந்த அடிகள் ” குறித்து வெளியான கட்டுரைக்கு வரப்பெற்ற நோக்குரை ….

தினமணி – 30 5 2023

முக்கனிச் சுவை

சிலம்பில் ஒவ்வொன்றை மும்மூன்றாய்ப் பகுத்துணரச் செய்யும் வகையில் கட்டுரை முக்கனிச் சுவையாய் இனித்தது.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. சிலப்பதிகார உரையின் மூன்றாம் பதிப்பின் முகவுரையில் குறித்த குறிப்பு,
மறத்தற்கரிதான ஒன்றாகும்.

– தெ. முருகசாமி,
புதுச்சேரி.

முதல் காப்பியம்

கடந்த வாரம் ( 23.4.2023 ) வெளியான ‘ கலைமிளிர் காப்பியம் தந்த அடிகள் ! ‘ கட்டுரை, ‘ சிலப்பதிகாரத்தின் பெருமைகளை விரித்துரைத்தது.

முக்காலத்துக்கும் உரிய மூன்று கோட்பாடுகளை உள்ளடக்கிய முத்தமிழின் முழுமுதல் காப்பியமாய் சிலம்பு விளங்குகிறது.

– அ. சிவராமசேது,
திருமுதுகுன்றம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *