அன்புப் பாலம் – மே மாத இதழ்
தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ்
இமயமாய் உயர்ந்தோங்கிய
எங்கள் அப்பா !
எங்களோடு
எந்தக் கவலையும் இல்லாமல் சிந்தையார்
எப்போதும் பரிவின் வடிவமாய் வாழ்ந்தவர் !
தன்னை நினையாமல்,
பிறர் நலம்; பிறர் வளத்தையே நினைத்தவர் என் அப்பா.
ஒருவர் இருவர் இல்லை
ஒரு நாளைக்குப் பலர் எனப் புலவர் கூட்டம் !
விருந்துண்ண எங்கள் தாரகை வீடு,
அருந்தமிழ் உணவின் அகமாகவே அமைந்தது !
அப்பா எங்கள் மூவரையும் (கண்ணன், அருள், பரதன்)
தாம் பெற்ற வரங்கள் என்பார்; மூவேந்தர் என்பார்,
முடிவுரை மூவேந்தர் என்றும் போற்றி பெருமைப்படுத்துவார்.
நாங்கள் எந்த வகுப்புப் படிக்கிறோம் என்று கூட எப்போதும் வினவ மாட்டார். உரிமை தருவதில் அப்பாவுக்கு நிகர் அப்பாவே தான் !
எல்லையில்லாத உரிமை எதிலும் தருவார்.
அப்பாவிடத்தில் எப்போதும் எதைச் சொல்லவும்
நாங்கள் மூவரும் அஞ்சியதில்லை.
அப்பா எங்களுக்குப் புகழ் பெற்றுத் தந்த பொன்னெழுத்து.
எங்களை அவரவர் போக்கில் அவரவர் வளரட்டும்
என்று எப்பொழுதும் மனத்தில் ஒரு சிந்தனைத் தனிமையிலேயே இருந்து மறைந்தவர் எங்கள் அப்பா !
இன்றுவரை ஏன் என்றும் புகழில் நிலைக்கின்றார் !
எல்லாத் துறையிலும் முதலில் நிற்க வேண்டும்;
எவர் துணையும் இல்லாமல் இமயமாய் நிமிரவேண்டும் என்று ஓயாமல் சொல்வார்.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்ற திருக்குறளை எப்போதும் சுட்டிக் காட்டுவார்.
அப்பாவுக்கு எங்களை அயல் நாட்டிற்கு அனுப்பவே ஆசை.
‘ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் ‘ என்று பாரதியார் சொல்வதை நல்வழி என்பார்.
அப்பாவின் பார்வையில் நாங்கள் மூவரும்
மெகஸ்தனிஸ், யுவான் சுவாங், வாஸ்கோடகாமா தான்.
நாங்கள் மூவரும் துறை வேறுபட்டவர்களானோம்.
முறை வேறுபட்டதில்லை !
தாய்-தந்தை எங்களுக்குத் தண்டவாளமாய் அமைந்ததால்
நாங்கள் மூவரும் பாதை மாறாமல் பயணம் செய்கிறோம் !
இரண்டு இமயங்களின் திருவடிகளை எப்போதும் தொட்டபடியே வணங்கிச் செல்கின்றோம்.
உங்களை இரண்டு கண்களாய் இமை கூப்பி வணங்குகிறோம்.
உங்கள் சாதனையை போதனையாய் எண்ணி நாள்தோறும் நடக்கிறோம்.
நாங்கள் உங்களைப் போல் வாழ வேண்டும் புகழோடு !

Add a Comment