POST: 2023-06-30T08:11:44+05:30

அன்புப் பாலம் – மே மாத இதழ் – 2023
பக்கம் எண்கள் : 14,15,16…

தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ்

முத்தமிழ் வித்தகர் சேலம் சங்கர் எம் .ஏ .,

பிறப்பும் வளர்ப்பும்:

பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்கள் 1936 ஆம் ஆண்டு விழுப்புரத்திற்கு அருகேயுள்ள ஒளவைக் குப்பம் என்ற கிராமத்தில் பிறந்தார். வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த செய்யாறு என்ற சிற்றூரில் ஏப்ரல் 24 ஆம் நாளன்று பிறந்தார். பெற்றோர் ஒளவை துரைசாமியும், லோகாம்பாளும் மூக்கும் முழியுமாய் ஸ்பென்சர் கம்பெனி கேக் போன்று பிறந்த தம் குழந்தைக்கு அன்பாய், ஆசையாய் நடராசன் எனப் பெயர்ச் சூட்டினர்.

குடும்பம்:

பேராசிரியர் ஒளவை நடராசனின் மனைவி பெயர் டாக்டர் தாரா. பேராசியர் ஒளவை நடராசன் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகனுக்கு கண்ணன் எனப் பெயரிட்டார். அவர் மருத்துவர். பேராசிரியர் ஒளவை நடராசனின் இரண்டாவது மகன் அருள் எனப் பெயர். தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஒளவை நடராசன் தம் மூன்றாவது மகனுக்கு பரதன் எனப் பெயர்ச் சூட்டினார். அவரும் மருத்துவர்.

பேராசிரியரின் சகோதரர்கள் சகோதரிகள்:

பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்களுடன் உடன் பிறந்த சகோதரர்கள் 4 பேர். சகோதரிகள் 4 பேர். பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்களின் ஒப்பற்ற குடும்பம்… நல்லதோர் பல்கலைக்கழகமாய் மிளிர்ந்தது !

சேலம் சௌடேஸ்வரியம்மன் கூடம்:

சேலம் மாநகரில் தகைசால் குகைப் பகுதியில் சௌடேஸ்வரியம்மன் கூடம் அமைதியான பூங்காவின் நடுவே அமைந்திருந்த மடாலயம் ஆகும்.

நறுமணம் கமழும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி அவ்வட்டாரம் முழுக்க நறுமணத்தை வாரி இறைக்கும் !
அம்மடத்தின் பக்கவாட்டில் உள்ள மற்றொரு குட்டிக் கூடத்தில் ‘ பங்கா ‘ என்றழைக்கப்படும் சாதனம் முன்னும் பின்னும் அசைந்து குளிர்ச்சியான காற்றை வீசும்.

ஆமாம், அந்த சௌடேஸ்வரி அம்மன் மடாலயத்தில் தான் எங்கள் வட்டாரத்தின் ஒப்பற்ற திருக்குறள் சங்கம் இயங்கி வந்தது. திருவாளர் திருக்குறள் இ. ராமசாமி என்பவரின் ஒப்பற்ற தலைமையில் எண்ணற்ற இலக்கிய சொற்பொழிவுகளும், ஆய்வரங்குகளும், பட்டிமன்றங்களும் நடத்தப்பட்டு வந்தன !

தமிழகத்தின் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, உலக ஊழியனார், பேராசிரியை காமாட்சி குமாரசாமி, திருமதி மண்டோதரி கணேஷ், ஒளவை துரைசாமி, தேவநேயப் பாவாணர் போன்ற தமிழகத்தின் தலைச்சிறந்த மொழி வல்லுநர்களும்,சிலம்பொலி செல்லப்பன் போன்ற மாபெரும் சொற்பொழிவாளர்களும்,
பேராசிரியர் ஒளவை நடராசன் போன்றவர்களும், குன்றக்குடி அடிகளார், கிரிதாஸ் பிரசாத்,கிருபானந்த வாரியார் போன்ற மாமேதைகள் எண்ணற்றோர் கூடி உரையாற்றிய ஒப்பற்ற மாமன்றம் தான்…

எங்கள் சௌடேஸ்வரி அம்மன் மடாலயம் !

அன்று, சின்னஞ்சிறு பள்ளிப் பருவத்தில் எனக்கு அறிவமுதம் ஊட்டிய எங்கள் சௌடேஸ்வரி அம்மன் மடாலயம் எனக்கு அறிவுப் பாலூட்டிய ‘ நற்றாய் ஆவாள் ! ‘

ஒப்பற்ற அந்த சௌடேஸ்வரி அம்மன் மடாலயத்தில் என்னுடைய பள்ளிப் பருவத்தில், இளைஞராகத் திகழ்ந்த ஒளவை நடராசன் அவர்களின் பட்டிமன்ற உரையையும் கேட்டு ரசித்திருக்கிறேன். அவருடைய தந்தை ஒளவை துரைசாமி அவர்களின் ஆராய்ச்சி உரையையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

‘ The Fire on Paris ! ‘

ஒளவை துரைசாமி அவர்கள் அவை நடுவே உரையாற்றுவதற்காக அமர்ந்திருக்கும் வேளையில், பள்ளிச் சிறுவனாய் நான் சொற்பொழிவைக் கேட்டு ரசிப்பதற்காக அமர்ந்திருந்தேன். அறிஞர் ஒளவை துரைசாமி அவர்களுடைய கரத்திலிருந்த புத்தகத்தின் மேல் அட்டையில்… ஃபிரான்ஸ் மாநகரம் தீப்பிளம்புகளோடு தகதகவென்று கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது !

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு … நான் என் இளம் வயதில் கண்ட அக்காட்சி… இன்றும் என் விழித்திரையில் தீப்பிளம்பாய் சுடர்விட்டுக்கொண்டே இருக்கிறது ! கள்ளூர் பிரதாப்

அதுமட்டுமன்று ! அப்பேரறிஞர் ஒளவை துரைசாமி மட்டுமன்று, அவரது கட்டிளம் காளையாகத் திகழ்ந்த பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்கள் பட்டிமன்றத்தில் அமர்ந்து எதிரணியினருடன் சண்ட மாருதமாய் விவாதித்துக் கொண்டிருந்தார் !

பேராசிரியர் ஔவை நடராசனின் வாதம்:

சமுதாயத்தையே சீரழிக்கும் புல்லுருவியாகத் திகழும் ஒரு தீயவனால் ஒட்டுமொத்த சமுதாயமே சீரழிகிறது !
என்ற தம் வாதத்தை நிரூபிப்பதற்காக பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்கள் எடுத்துக்காட்டாக, ஹிட்லர், முசோலினியை கூறியதோடு நிற்காமல்… மற்றொரு சான்றாக ஒரு மாபெரும் மாம்பழக் கூடையில் வைக்கப்பட்டுள்ள சேலத்து மல்கோவா மாம்பழங்களுக்கிடையே ஒரேயொரு அழுகிய மாம்பழம் மட்டும் இருந்தால் அது எப்படி ஒட்டுமொத்த மாம்பழங்களையும் அழுகச் செய்து சீரழிக்கும் என அவர் வாதிட்டபோது…

ஒட்டுமொத்த அரங்கமே பயங்கரமாகக் கைத்தட்டி, ஆர்ப்பரித்து பேராசிரியர் ஔவை நடராசன் அணிக்கு வெற்றிவாகைத் தேடித் தந்தது என்பதை என்னுடைய இந்த 84 ஆம் வயதிலும் நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.

தந்தை ஔவை துரைசாமி அவர்கள்: நற்றிணை, சிலப்பதிகாரம், திருவருட்பா உள்ளிட்டபலப்பனுவல்களுக்கு உரை எழுதியதால் ‘ உரை வேந்தர் ‘ என்றழைக்கப்பட்டார். புகழ் பெற்ற டாக்டர் மெய்கண்டான் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது நாடறியும் !

பேராசிரியர் ஔவை நடராசனின் ஆய்வுகள்:

மதுரை தியாகராயர் கல்லூரியில் ஒளவை நடராசன் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சங்க இலக்கியங்களில் பெயரிடும் மரபு என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1958 ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

அதன்பின், சங்க காலப் புலமைச் செல்வியர் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
பேராசிரியர் ஒளவை நடராசன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசும் திறன் பெற்றவர். அவர் மதுரை தியாகராயர் கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராய்ப் பணியாற்றினார்.

அம்மட்டோ ? புது தில்லி அனைத்திந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் மற்றும் அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சென்னை காந்தி இராமலிங்கர் பணி மன்றச் செயலாளராகப் பணிப்புரிந்துள்ளார்.

இவை மட்டுமன்று, திரு. ஒளவை நடராசன் அவர்கள் தமிழ் நாட்டரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராகவும் , 1975 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலாளர்:

1984 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரைப் பணியாற்றினார். இவை அனைத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர் மட்டுமே.

16.12.1992 முதல் 15.12.1995 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் பணியாற்றினார்.
2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவராய் பணிப்புரிந்தார்.
2015 ஆம் ஆண்டில் ஒளவை நடராசன் சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தராய் பணியாற்றத் தொடங்கினார்.

ஔவை நடராசன் எழுதிய நூல்கள்:

ஒளவை நடராசன் ‘ வாழ்விக்க வந்த வள்ளலார் ”, ‘ Art Panorama of Tamils ‘, ‘ கம்பர் விருந்து ’, ‘ கம்பர் மாட்சி ’, ‘ பேரறிஞர் அண்ணா ‘, ‘ திருப்பாவை விளக்கம் ‘, ‘ திருவெம்பாவை விளக்கம் ‘, ‘ சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள் ‘, ‘ அருளுக்கு அன்னை சொன்னது ‘, ‘ Self Confidence ‘, ‘ Saying of Stalwart ‘, ‘ Thirukkovaiyar ‘ எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.

ஔவை நடராசன் பங்கேற்ற விழாக்கள்:

சான்பிரான்சிஸ்கோ அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் ஒளவை நடராசன் பங்கேற்றார்.

மதுரையில் 1981ஆம் ஆண்டு 5 ஆவது உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, அதன் பொதுச்செயலாளராக பேராசிரியர் ஒளவை நடராசன் பொறுப்பேற்றார்.

1989 ஆம் ஆண்டு 7ஆம் உலகத் தமிழ் மாநாடு மொரீசியஸில் நடந்தபோது அதன் உறுப்பினராகத் திகழ்ந்தவர்

ஔவை நடராசன். விருதுகள்:

2009 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒளவை நடராசன் அவர்களுக்கு ‘ கலைமாமணி விருது ‘ வழங்கியது !
2010 ஆம் ஆண்டில் ‘ பேரறிஞர் அண்ணா விருது ‘ வழங்கப்பட்டது !
2011ஆம் ஆண்டு தில்லி மத்திய அரசு ‘ பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி பெருமைப்படுத்தியது !
2012ஆம் ஆண்டு கொழும்பு கம்பன் கழகம் ‘ தன்னேரில்லாத தமிழ் மகன் ‘ விருது வழங்கியது ! 2014 ஆம் ஆண்டு சி.பா.ஆதித்தனாரின் ‘ மூத்த தமிழறிஞர் ‘ விருது வழங்கப்பட்டது !

இவ்வாறு, ஒட்டுமொத்த நாடே ஏற்றிப் போற்றும் பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்களை சென்னை அடையாறில் உள்ள எங்கள் செயிண்ட் லூயிஸ் நிறுவனத்தின் மாணவர் இலக்கிய மன்றம் அன்புடன் வரவேற்று பெருமைப்படுத்தியது !

தமிழ்ப் பேரறிஞர் மறைந்தார்:

பேராசிரியர் ஒளவை நடராசன் அவர்கள் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் இயற்கை எய்திய போது … ஒட்டுமொத்த தமிழர் இனமே கதறி கண்ணீர் விட்டது !

உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் ‘ பாதி அண்ணா ‘ எனப் போற்றப்பட்ட பேராசிரியர் ஒளவை நடராசனின் பூதவுடல் தமிழ்நாட்டுக் காவல் துறையின் அரச மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
செய்யப்பட்டது. •

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *