POST: 2023-07-21T10:59:13+05:30

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை ( 19.7.2023 ) தலைமைச் செயலகத்தில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை அவர்கள் சந்தித்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப.,
செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு. த. மோகன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

செய்தி வெளியீடு எண் :1436
நாள் : 19.07.2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடன் ஹுஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை அவர்கள் சந்திப்பு

தமிழ்நாடு அரசு, அயல்நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதன் மூலம் அயல்நாடுகளில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு சங்கத்தமிழ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம். பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களைப் படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்திடவும் ஏராளமான நாடுகளில் தமிழ் இருக்கை அமைத்திட தாராளமான நிதியுதவியினை வழங்கி வருகிறது.

இதற்குச் சான்றாக

மொரீசியஸ், மகாத்மா காந்தி நிறுவனத்திற்கு ரூ.1,00,00,000/-யும்.

அமெரிக்கா, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு
ரூ.10,00,00,000/-யும்

கனடா, டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு ,
ரூ.1,00,00,000/-யும்

ஜெர்மன், கொலோன்
பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.25.00.000/-யும் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம். பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஒரு தமிழ் இருக்கையை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3.44.41.750/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியுள்ளது.

50 ஆண்டு காலமாக தமிழர்கள் வாழும் அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நகரான ஹுஸ்டன் மாநகரில் அமைந்துள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் 2023 செப்டர்பர் முதல் வாரத்தில் தமிழ் இருக்கையின் தொடக்க விழா நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹுஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் (Houston Tamil Studies Chair.Inc) செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, தமிழ் இருக்கை தொடக்க விழாவில் கலந்துகொள்ள அழைக்கும் பொருட்டு (19.07.2023- புதன்கிழமை) முற்பகல் தலைமைச்செயலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது தமிழ்நாடு அரசு இதுவரை வழங்கிய தொகைக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெளியீடு :
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை – 600 009

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *