மக்கள் குரல் – 21 8 2023
பக்கம் எண் : 7
மது சுரக்கும் தமிழ்ப்பேச்சு
மணி தெறிக்கும் உரை வீச்சு !
ஒருமுறை கேட்டால் …..
20 நூல்களை புரட்டிப்படித்த புல்லரிப்பை உண்டாக்கும் ‘ ஒளவை ‘
ஒலிவாங்கி முன் ஓய்யாரத் தோற்றத்தில் ஒளவை. நடராசன் நிற்பது அழகு:
நிறுத்தி, நிதானமாக, ஏற்ற இறக்கத்தோடு, தெளிவான உச்சரிப்பில் உதடுகள் பேசுவதும் அழகு:
விரித்து சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களை சிதறுகாயாய் தெறிக்கவிட்டு நயம்பட உரைப்பதும் அழகு-
அரங்கில் ஔவையின் மீது பார்வை இருக்கும். ஆனால் செவிமடல்களோ – விரிந்து – அவரின் இன்தமிழ் கேட்டு மகிழ்ந்திருக்கும்.
“ கவிஞர்கள் எல்லாம் சரஸ்வதி மைந்தர்கள் என்பதில், அவர்கள் சொல்வது, எழுதுவது பலிக்கும், நடைமுறை சாத்தியம் ஆகும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவன் நான்.
அதுவேதான் நடந்துவிட்டிருக்கிறது.
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் ( 2005 ல் மறைந்தவர் ) சொன்னபடி. எட்டு ஆண்டுகள் இடைவெளியில்.
” டாக்டர் ஒளவை நடராசன் ஒரு மேடை மின்னல், கண்ணை கூச வைக்கிற கருத்தொளி அவருக்குச் சொந்தம்.
அவரது. நா – நாட்டியம் வெறும் சொல் கோலம் அல்ல, வெற்றி பெறப் போகிற தமிழ் வரலாறு.
அவர் பேசுகிறவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவரை ஒரு முறை கேட்டால்… 20 நூல்களை புரட்டிப் படித்த புல்வரிப்பு உண்டாகும்…”
பொது மேடையில், உள்ளத்தை பட்டவர்த்தனமாய் வெளிச்சம் போட்டவர்.
அன்று அவர் சொன்னது இன்று சாத்தியமாகி இருக்கிறது .
ஆற்றல் மிகு அருந்தவப் புதல்வன் முனைவர் ஒளவை. அருளின் ( தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ) முயற்சியால் ஒளவை சொல் கேளீர்….. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராசன், அவரின் உரைகளை நூல் வடிவாக்கி பதிப்பாக
( ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ) வெளியிட்டு தானும் மகிழ்ந்திருக்கிறார்
.அரசியல்-கலை – இலக்கிய – ஆண்மீக படைப்பாளிகளை , பார்வையாளர்களை நேயர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார் .
தானும் மகிழ்ந்திருக்கிறார் அருள் .
இரும்புத் துண்டு – காந்தத் துகள்கள்
பூமிப்பத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம், அவர்களை எல்லாம் காந்தத் துகள்களை இழுக்கும் இரும்புத் துண்டாய் தன்பால் ஈர்த்த சொல் ஆற்றலுக்கு சொந்தக்காரர்.
தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல உலக இலக்கியங்களிலும் ஆழங்கால் பட்ட அரும் புலமையும் மிக்கவர் ஒளவை நடராசன், பல்வேறு நிகழ்வுகளில் அன்னார் ஆற்றிய தமிழ் மொழிவுகளைத் தகுந்த முறையில் தொகுத்து நூலாக்கி வாசகர் கரங்களில் தவழ விட்டிருக்கிறார்.
(பாரதியாரின் 124 வது பிறந்த நாள் விழா 06.02.2006 – ல் துவங்கி 41 தமிழ் மேடைகள், வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா பேருரை உட்பட 5 ஆங்கில மேடைகள்.)
ஔவையின் மயங்காதவர் யார் ? “எம் தமிழுக்குமேடையாயினும், எக்கருத்தாயினும் கேட்டார் பிணிக்கும் சொல்லை வேட்டுவராய் சுழன்று சுழன்று மேடை தமிழ் வளர்த்த பெருமை அவரையேச் சாரும்…” என்று தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குனர் கூ.வ.எழிலரசு முன்மொழிந்தால்… அது- அப்படியே…” என்று வழிமொழிய ஆயிரமாயிரம் பல்லாயிரம் பல நூறு ஆயிரம் தமிழ் சான்றோர்கள், சாமானியர்களைத் தக்க வைத்திருப்பது ஔவைக்கு தமிழ்த் தாய் தந்திருக்கும் வரம்…!
ஒளவை. உரையில் தெறித்த முத்துக்கள் :
மாமன்னராகத் திகழ்ந்த பாரதி
மகாகவி பாரதி – யுகப் புருஷன் என்றெல்லாம் ஊரும் உலகமும் கொண்டாடி வரும் மகாபாரதி, ஔவையின் உரையில் எப்படி?
*ஆங்கிலக் கவிஞன் பைரன் இங்கிலாந்து நாட்டில் பாராளுமன்றத்துக்கு நின்றார் என்று ஒரு கருத்து உண்டு.
பாரதியார் நேர்தலில் நிற்கவில்லையே தவிர நாட்டை ஆளுகிற பொறுப்புடையவரைப் போல தம் பாட்டுத் திறத்தால் இந்த வையத்தை பாலித்திட வேண்டும் என்று ஒரு மாமன்னராகத் திகழ்ந்தார். – இது அவரின் அங்கீகாரம்.
உயர்திணை எது – அஃறிணை எது ? சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் புத்திசாலித்தனம், அவரின் உரையில்:
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட யானை காட்டில் தான் இருக்கிறது.
அவை நாட்டுக்கு வருவதில்லை.
சிங்கங்கள் காட்டில் தான் முழங்குகின்றன.
ஆனால் காடுகளில் மக்களும் ஒரு நாள் வாழ்ந்தார்கள்.
அவர்கள் காட்டை விட்டு நாட்டுக்கு வந்தார்கள், நகரத்துக்கு வந்தார்கள். நாகரீகம் கற்றுக் கொண்டார்கள்.
அறிவு கொண்டு நாளும் நாளும் உயர்ந்து வருகிறார்கள்.
விலங்குகள் இருக்குமே தவிர மாறாது.
இதனால்தான் ஒன்று உயர்திணை.
இன்னொன்று அஃறிணை.
விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் விஸ்வரூப வளர்ச்சியை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஆனாய் அரசியலில் ஆரம்ப காலக்கட்டத்தில்… ஜி.விசுவாதன்… கண் எதிரில் பார்த்ததை சொல்வதில் தனிப் பெருமை, அவருக்கு.
எப்போதும் எதையும் எண்ணிப் பேசுவது, சிந்தித்துப் பேசுவது, அரசியல் நுணுக்கத்தோடு பேசுவது என்பதை வி ஐ டி வேந்தர் ஜி. விஸ்வநாதன் பெற்றிருந்தது என்பதை அறிந்து தான் அறிஞர் அண்ணா அழைத்தார், நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பைத் தந்தார்,
அரசுப் பணியில் இருந்த காலத்தில் கருணாநிதி – எம்ஜி.ஆர் – ஜெயலலிதா ஆகிய முதல்வர்களிடமும் பணியாற்றி, நல்ல பேரெடுத்த பண்பாளர்.
ஒளவையின் பார்வையில் பொன்மனச்செம்மல் முத்தமிழ் அறிஞர், புரட்சித்தலைவி ஊர். அறிந்த உண்மையை உரக்கவே சொல்கிறார்.
கலைஞர் அறியாத தமிழ் இல்லை
” கலைஞர் அறியாத தமிழ் இல்லை, அவருக்குத் தெரியாத சங்கப் பாடல் இல்லை, இலக்கியமும் இல்லை, எழுதாத உரையும் விளக்கமும் இல்லை. தீட்டாத உரையாடல்கள் இல்லை. அரசு ஆட்சித் திறனிலும், கோப்புகளைக் கூர்ந்து கவனிப்பதிலும் அவருக்கு நிகர் அவரே தான்…”
ஒரு திட்டம் குறித்த கோப்பில், ” விதி இதற்கு இடம் தரவில்லை ” என்று நான் எழுதி அனுப்பி இருந்தேன்.
அடுத்த தாள் அந்தக் கோப்பை நான் பார்த்தேன்.
அதில் கலைஞர் ” விதியை மதியால் வெல்லலாம் தெரியாதா…? என்று எழுதி இருந்தார். அவர்தான் கலைஞர் ”
” எந்தத் துறையிலும் எந்த குறிப்பையும் உடனே அதைக் கண்டு தெளிவு செய்கிற திறமை கலைஞருக்கு இருந்தது.
இருந்ததைப் போலவே அவரிடம் கண்டிப்பும் இருந்தது.
கலைஞருக்கு அரசியல் தெரியும், இலக்கியம் தெரியும், கலை தெரியும், சிந்தனைப் புதுமை தெரியும், அவர் சிந்திய எழுத்துனுடைய துளி தான் என்னைப் போன்றவர்களை துணை வேந்தர் ஆக்கியது .
இறுக்கமான ஜெயலலிதா
தலைமைச் செயலகத்தில் எப்போதும் இறுக்கமாகவே இருப்பார் ஜெயலலிதா, என்னிடம் எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்.”
“தேம்ஸ் நதி தீரத்தில் மிதக்கும் வாத்துக்கள் அன்னங்கள்.
என்று அவற்றைச் சொல்லலாம்.
அத்தனையும் அவை இங்கிலாந்து அரசியாரின் தனிப்பட்ட அசையும்
சொத்தாகும் கண்காணிக்க ஒரு வாரியமே இருக்கிறது “.
எந்தச் சமயவாதியும் பூண்டிடாத கோலத்தில் வள்ளலார் இருந்தார்.
முடியை நீளமாக வளர்த்திருந்தார்.
வெள்ளை உடையால் மூடி முக்காடு அணிந்திருந்தார்.
உடம்பை முழுவதுமாக மூடி இருந்தார், உடம்பு சூட்டை எப்போதும் கதகதப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது அவரது கூற்று “,
இதய தெய்வம் எம்ஜிஆர்
“கலை உலகத்தின் ஒப்பற்ற காவலர், மனித நேயத்தின் மாட்சிமைப்பட்ட மாமனிதர்.
கொடுத்து கரம் சிவந்த கொடைவள்ளல்.
ஆட்சித் திறமையில் அனைவரின் நெஞ்சம் கவர்ந்த இதய தெய்வம்.
பல் வகைப்பட்ட தன் ஒப்பற்ற திறமையால் இல்லங்களிலும் – உள்ளங்களிலும் கோவில் கொண்ட ஈடு இணையற்ற தலைவர்.” –
இலக்கியம் போதித்தார்
” ஏறிய மேடைகளில் எல்லாம் தமிழ் மணக்க மணக்க அறிவியல் பேசினார், ஆன்மீகம் உரைத்தார். இலக்கியம் போதித்தார், உலகறிவை ஊட்டினார், அனுபவம் எடுத்துரைத்தார்.
இன்னும் இன்னும் பேசமாட்டாரா… காலம் குறுக்கிடுகிறதே… பேச்சை சுருக்கும் நிர்பந்தம் எழுகிறதே என்று ஏக்கத்தோடு பார்வையாளர்களின் ஆதங்கத்தை முகத்துக்கு நேராக அவரிடமே சொன்ன அறிவார்ந்த நண்பர்கள் அநேகம்.
ஒவ்வொரு நிகழ்விலும் எடுத்த படங்கள் புகைப்பட நிபுணர் கலைமாமணி யோகாவின் கைவண்ணம்.
முகப்பு அட்டை. பக்கங்கள் 285.
விலை: என்னவென்று சொல்ல ?
தமிழ் ஆர்வலர்களுக்கு பயனுள்ள நூலாக வேண்டும் என்ற நோக்கில் இலவச வினியோகம்.
வேலூர் சந்திரசேகர்,
ஒளவை நடராசனின் செயலர் பொன்னேரி பிரதாப் துணை நிற்க தந்தையின் முழக்கத்தை நூலாய்ப் பிடித்திருக்கிறார் அரு ( ள் ) ந்தவப் புதல்வன்
( என்ன தவம் ஒளவை செய்தனை…? ! )
மேடைப் பேச்சாளர்களுக்கு நடைவண்டியாய் துணை நிற்கும் – ஒளவை சொல் கேளீர்.
வி. ராம்ஜி

Add a Comment