POST: 2023-11-04T09:17:47+05:30

செய்தி வெளியீடு

தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளில் தமிழில் நிறுவுவது தொடர்பான கூட்டம் தலைமைச் செயலகத்தில் 02.11.2023 முற்பகல் 11.30 மணிக்கு ஐந்தாவது தளத்தில் உள்ள நீர் வளத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள்,

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்கள்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்கள்,

தொழிலாளர் ஆணையர் திரு.அதுல் ஆனந்த், இ.ஆ.ப., அவர்கள்,

தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ் நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, (அரசாணை நிலை எண்.1541/தொ.ம.வே. /நாள்.29.07.1982) என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்கள் குறிப்பிடுகையில்,

வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின் போதே பெயர்ப்பலகைகள் தமிழில் முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

பல மாவட்டங்களில் தான் ஆய்வு செய்தபோது, ஆங்கிலப் பெயர்ப்பலகைகள் தான் மிகுதியாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்டதுடன் அந்நிலையை மாற்றி தமிழில் முதன்மையாக அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், இப்பொருண்மை தொடர்பாக குறிப்பிடுகையில்

அண்மையில் 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தில் இப்பொருண்மை தொடர்பாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வாயிலாக தொடக்க அறிவிக்கையொன்று வெளியிடப்பட்டிருப்பதாகவும், அதில் ஏனையவற்றுக்கிடையே, பெயர்ப்பலகைகள் தொடர்பான விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் தண்டத்தொகை ரூ.50/-லிருந்து ரூ.2000/- ஆக உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக எதிர்வரும் திசம்பர் திங்களில் நடத்தப்படும் ஆட்சிமொழிச் சட்ட வார (திசம்பர் 21 முதல் ஏழு நாள்கள்) நிகழ்ச்சியில் ஒரு நாள் நிகழ்ச்சியாக, வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் முதன்மையாக அமைவதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி / விழிப்புணர்வுக் கூட்டங்கள் வணிகர் சங்கங்களுடன் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்திடுமாறு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்ற பாரதியாரின் வரிகளுக்கு மெருகூட்டும் வண்ணம்

, “இனிய தமிழையே எங்கும் காண்போம்” என்ற நிலை ஏற்பட உறுதியேற்று இனிவருங்காலங்களில் அனைத்துப் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் முதன்மையாக இடம்பெற வழிவகை செய்வதற்குத் தமிழ்வளர்ச்சித் துறையுடன் தொழிலாளர் நலத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டுமென்று மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *