ஒளவை அருள் எழுதிய கட்டுரை
கலைமகள் –
தீபாவளி மலர் 2023
பக்கம் – 23
தமிழ் மாமலை
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலமைச் செல்வர்களில் முடிமணியாகச் சிறந்து விளங்கியவர் தவத்திரு மறைமலை அடிகள்.
அவர்களுடைய தமிழ்ப் புலமைப் பெரும்பணிகளை வியந்து பாராட்டி மகிழாதவர்கள் கற்றவர் கூட்டத்தில் ஒருவரும் இரார்.
ஒரு நாள் மாலைப் பொழுதில் உலாவி வரும் பொழுது சொற்பொழிவாளர்களிடத்தே அமைய வேண்டிய பண்புகள் சிலவற்றை உடனிருந்த இளம் புலவர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
அவற்றுள் மூன்று குறிப்புகள் என் நினைவில் இருக்கின்றன என்று என் பாட்டனார் உரை வேந்தர் ஔவை துரைசாமி குறித்து எழுதியன,
“முதலாவது
சொற்பொழிவு செய்யும் அறிஞர்கள் உள்ளத்தே எழுகின்ற கருத்துகளே அவையின்கண் சொல்லும்போது அவற்றைத் தங்குதடையின்றி இனிய சொற்களால் எடுத்துச் சொல்லும் சொற்செல்வம் உடையவராக இருக்க வேண்டும்.”
“அச்சொற்பெருக்குக் கேட்போர் உள்ளத்தில் நன்மதிப்பையுண்டாக்கும்.”
“இரண்டாவது
சொற்பொழிவாளர் தாம் மேடையேறிச் சொற்பொழிவு செய்வதற்கு எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி நன்கு சிந்தித்து உரைக்கக் கருதும் கருத்துகளைக் காரண காரிய முறையில் வரிசைப் படுத்தி ஒன்றன்கீழ் ஒன்றாக எடுத்துரைக்க வேண்டும்.
காரண காரிய முறையமைப்பு கூறக் கருதும் பொருள்களே மறவாமல், இடையறவு படாமல் எடுத்துரைக்கும் திறத்தை உண்டு பண்ணும்.”
“மூன்றாவது
சொற்பொழிவின்கண் தாம் சொல்லக் கருதிய கருத்துகளே அவையிலுள்ள பெருமக்கள் உள்ளங் கொள்ளும் நெறியறிந்து அந்நெறிப்படி சொற்பொழிவாற்ற வேண்டும்.”
ஆற்றுமிடத்து எடுத்துரைக்கும் ஏதுகளிலும், எடுத்துக்காட்டுகளிலும் பல்வகைச் சுவைகள் ததும்ப உரைப்பது சிறப்பாகும்.
இம் மூன்று நெறிகளையும் பொதுவாக இளைஞர்களுக்கு உரைத்தாராயினும்,
சொல்லியது போலவே அடிகளாரும் தம்முடைய சொற்பொழிவுகளைத் தாம் உரைத்த நெறி பிறழாமல் சொற்பொழிவு செய்வதை இயல்பாக மேற்கொண்டிருந்தார்.
24.05.1994-ஆம் ஆண்டில் மதுரை தமிழ்ச்சங்க விழாவில் அவரைக் காட்சிப்படுத்தும் போது பொன்மேனியராகவும்
ஒளி வீசும் தாமரையன்ன திருமுகமும்
நேர்க்கோடு எடுத்துச் சீவி முடிக்கப்பட்டுப் பின்கொண்டைக்கொண்ட தலைமீது உள்ள சரிகைத் தலைப்பாகையும்
நெற்றியில் வெண்ணீறும், குங்குமத்தை இடையிற் கொண்ட சந்தனப்பொட்டும்
கழுத்துப்பட்டை பட்டையிடப்பட்ட சரிகை மேலாடையும் காற்சட்டையும்
பீடு நடையும்
எடுப்பான – மிடுக்கான நாகரிகப் பெரும்புலவராக மறைமலையடிகளார் காட்சியளித்தார் என்ற குறிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
“வடமொழி, ஆங்கிலம், தீந்தமிழ் மூன்றும் நிறை திருவாளர் மறைமலையடிகள்” என்று கரந்தைத் தமிழ்ச் சங்கம் பாராட்டியது இன்றும் ஒளி குன்றாமல் நிலவிக் கொண்டிருக்கிறது.
தனிமனித நிலையில் தொடங்கிய இவர்தம் வாழ்வு, தமிழின் தனித்தகைமை வாய்ந்ததாகச் சிறந்தமைக்கு,
இவர்தம் அயராத உழைப்பும், ஓய்வு காணாப் பெருமுயற்சியும், தன்னிலை குன்றாத கொள்கைப்பிடிப்பும் உறுதுணையாகின.
தன் வாழ்வைத் தவவாழ்வாக்கித் தவ வாழ்வைத் தமிழ்வாழ்வாக்கி, தமிழ்வாழ்வுக்காகத் தனிப்பெரும் இயக்கமாக, தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழறிஞர் மறைமலையடிகள் ஆவார்.
ஓய்வறியா உழைப்பில் உருப்பெற்ற மறைமலையடிகளின் வாழ்வு, மாண்பு மிக்கது; மனிதம் பொதுள்வது; தன்னிலை இழவாது, தமிழர்தம் தகுநிலை உயரப் பொதுநிலை வாழ்வாகத் துலக்கமாவது.
இவரால்தான்,
அக்கிராசனர் தலைவர் ஆனார்; காரியதரிசி செயலாளர் ஆனார்; வியாபாரம் வணிகம் ஆயிற்று; விஞ்ஞானம் அறிவியல் ஆயிற்று; சேவை தொண்டாயிற்று;
தேகம் யாக்கையாறிற்று; ஞானசாகரம் அறிவுக்கடலாக மாறியது;
உயில் இறுதி முறியானது;
சமரச சன்மார்க்கம் நிலையம் பொதுநிலைக் கழகமானது; சகளோபாசனை
உருவ வழிபாடானது.
தனித்தமிழ் குறித்த இவரது சொற்பொழிவுகள், தமிழகத்தில் பல தூயதமிழ்ப் பேச்சாளர்களை உருவாக்கியது; தனித்தமிழ் எழுத்தோ, பல தூயதமிழ்ப் படைப்பாளிகளைத் தோற்றுவித்தது.
இதனால், ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று மறைமலையடிகள் குறித்து தமிழ்த்தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.
1916ஆம் ஆண்டு தனிச்சிறப்புக்குரிய ஆண்டுமாகும்.
அவ்வாண்டுதான் அடிகளாரைத் ‘தனித் தமிழ்த்தந்தை’ என்று சிறப்பித்துப் பாராட்டும் சீர்மையை வழங்கிய ஆண்டாகும்.
தமிழ் கற்பிக்கும் வேட்கையால் அதற்கான தேர்வுகளை எழுதித் தேர்ச்சியுற்று, 1898-இல் கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்த மறைமலையடிகளை நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்வி –
“குற்றியல் உகரத்துக்கும் முற்றியல் உகரத்துக்கும் உதாரணம் கூறுக”
பதில் ‘
எனக்குத் தெரியாது.’
பரிதிமாற் கலைஞர் மறைமலையடிகளிடம் “நாளைக்கே பணியில் சேர்ந்து விடுக” என்றாராம்.
காரணம்,
எனக்கு என்பது குற்றியல் உகரம். தெரியாது என்பது
முற்றியல் உகரம்.
செறிவும் நுட்பமும் சிறந்து விளங்க, மாணாக்கர்க்குத் தமிழ் கற்பித்த அடிகள்,
காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மஞ்சரி, பாஸ்கர ஞானோதயம் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து வெளிவந்த நாகை நீலலோசனி ஆகிய கிழமைத்தாள்களுக்குப் பல கட்டுரைகளை எழுதினார்.
1903-ஆம் ஆண்டு மாணாக்கர்தம் வேண்டுகோளை ஏற்று, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய நூல்களுக்கு ஆராய்ச்சியுரை எழுதி வெளியிட்டார்.
இன்றளவும் தமிழ் பயில்வோர்க்கு இனிய நூல்களாக அவை திகழ்கின்றன.
அச்சுப் பணிகளுக்காகத் திருமுருகன் அச்சுக்கூடத்தை நிறுவிப் பல்வேறு நூல்களை வெளிக்கொணர்ந்த மறைமலையடிகள், ‘மணிமொழி நூல்நிலையம்’ எனும் பெயரில் நான்காயிரம் நூல்கள் கொண்ட அரிய நூல்நிலையத்தையும் உருவாக்கினார்.
வங்காள மொழிப்பாடலான வந்தே மாதரத்தை தமிழில் மொழி பெயர்த்தார் (25.6.1908).
ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டு தன் வாழ்க்கையுடன் பெரிதும் ஒத்துப் போவதாகவும் குறித்துள்ளார் (30.11.1911).
உலகெலாம் என்னும் பெரிய புராணப் பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் (5.4.1913).
பொன்னும் மெய்ப்பொருளும் என்ற சுந்தரர் தேவாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் (1.1.1931).
தமிழில் வரலாறு, ஆராய்ச்சி என்னும் சொற்களை பெரிதும் வழக்கிற்கு கொணர்ந்த பெருமையும் அடிகளாரைச் சாரும்.
பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, சிவஞானபோத ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி
மற்றும்.
சாகுந்தல நாடக ஆராய்ச்சி,
மாணிக்கவாசகர் வரலாறு முதலியன அடிகளாரின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டும்.
காஞ்சிப் பெரியவர் சாகுந்தல நாடக ஆராய்ச்சியின் பெருமையைப் பெரிதும் பாராட்டி அதனைப் பாடநூலாக்க வேண்டுமென்றும் கூறினார்.
ஒழுங்கு, கட்டுப்பாடு, உறுதி, செம்மை, நேர்மை, திருத்தம் என்பனவற்றை அடிகளின் ஒவ்வொரு சிறு செயலிலும் காணலாம்.
அவர்தம் கையெழுத்து அச்செழுத்து போன்று மிகத் திருத்தமாக இருக்கும்.
எப்பொருள் எவ்விடத்தில் எவ்வகையில் இருக்க வேண்டுமோ, அவ்வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவர் அடிகள்.
திரிக்கருக்குத் துடைத்தல், விளக்குக்குக் கண்ணாடி துடைத்தல் என்பவற்றையும் தாமே தூயதாகச் செய்தவர் அடிகள்.
நூலகத்துப் பேழைகளைத் தூசி படாமல் துடைத்து வைப்பதுடன், நூல்களுக்கு அட்டையிட்டுத் தூசிதட்டி வைப்பதை நாட்கடன் போல ஒழுகியவர் அடிகள்.
தோட்டமும், உறைவிடச் சூழலும் கவர்ச்சியும், தூய்மையும் உடையவையாக இருப்பதைக் கண்காணிக்கத் தவறாதவர் அடிகள்.
இவ்வாறு புலமையும், பழக்க வழக்கங்களும் ஆகிய எல்லாம் தூய்மையாகத் திகழ வேண்டும் என்று கொண்டிருந்த உட்பதிவே, மொழித் தூய்மை பேணுதலிலும் முன்னின்றது என்பதை அவர் வாழ்வு நிலையை முழுதும் கற்பதால் அறிய முடிகிறது.
அடிகளார் புத்தகத்தை எடுக்கும் முறை, படிக்கும் முறை, கிழியாமலும் அழுக்குப்படாமலும் கிறுக்காமலும் பாதுகாக்கும் முறை, ஆகிய பல செய்திகளைப் பற்றி நயமாக தன் மாணவர்களிடம் விவரித்து உரைத்தார்.
நாலடியாரில் வரும்
“புத்தகமே சாலத்தொகுத்துப் பொருள் தெரியார் உய்த்தகமெல்லாம் நிறைப்பினும், புத்தகத்தைப் போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு”
என்னும் பாடலின் பொருள் விளக்கங்களை நூலடுக்கும் பொழுதே சொல்லிக் காட்டுவார்.
தமிழராண்டுக் கணக்கீட்டைக் கி.பி, கி.மு என்று கொள்ளாது திருவள்ளுவருக்குப்பின் திருவள்ளுவருக்கு முன் என்றும் குறிப்பிட வேண்டும் எனக் கூறியதோடு திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தமிழர் ஆண்டாகக் கணக்கிட வேண்டும் என்று முடிவு செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பெருமை அடிகளாரைச் சாரும்.
தமிழ்மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும்
தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்ற அவரின் நீங்கா நினைவுகள்…
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மலர்ந்ததற்கு அவர் வித்திட்ட சுவடுகளாகும்.
சிவஞானபோதம்
பன்னிரண்டு(12) நூற்பாக்கள், நாற்பத்தொரு (41)வரிகள்,
216 சொற்கள்,
624 எழுத்துகள் என எண்ணிப் பார்த்துக் குறிப்பிட்டவர் அடிகளே.
திருவாசகம் முழுவதும் சொற்களை எண்ணிப் பார்த்து 2210 சொற்கள் என்றார்.
இவற்றில் 373 சொற்கள்
வட சொற்கள் என்றார்.
இவற்றை வகுத்துப் பார்த்தால் 100க்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வட சொற்கள் விரவலாயின என்று தெளிவாகச் சொன்னார்.
“யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும். சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும், எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள் என்றும் யான் 50 ஆண்டுகட்கு மேலாக ஏராளமான நூல்களை ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன்,
பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநின்று ஆராய்ந்திருக்கின்றேன்.
ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறிய முடியாத உண்மைகளையெல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன்.
எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளையெல்லாம் பிழி சாறாக யான் வடித்துள்ளேன்.
என் நூல்களைப் படித்தாற் போதும். அதனால் தமிழ் முழுதுங் கற்றப் பயனை அடையலாம்” என்று அடிகளார் கூறும் உரை அவர்தம் தெளிவையும், உறுதியையும் வெளிக்காட்டுகிறது.
அடிகளார் தன் வாழ்நாளில் கண்ட கடைசி நாடகம்
டி.கே.எஸ். சகோதரர்களின்
சேரன் செங்குட்டுவன் நாடகமாகும்.
நாடகத்தைக் கண்ட பிறகு அவர் எழுதிய நாட்குறிப்பு வரி கண்ணகி வரலாற்றின் இறுதிப்பகுதி நாடகப்பகுதியில் சேர்க்கப்படவில்லை.
ஆதலால் நாடகம் சுவையாக அமையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாகப் பார்த்த திரைப்படம் சென்னையில் உள்ள கெய்ட்டி திரையரங்கில்
‘பொன்முடி’ திரைப்படமாகும்.
அடிகளார் 15.09.1950ஆம் நாள் உலக வாழ்வை நீத்தபொழுது அவருடைய நாட்குறிப்பேட்டில் இறுதியாக எழுதிய பதிவு
04.08.1950 இல்
பெரியார் ஈ.வே.இராமசாமி நாயக்கர், ஆடலரசுவுடன் என்னைக் காண வந்தார். ஒரு மணிநேரம் உரையாடினோம்.
மறைமலையடிகள் நூல் நிலையம், மறைமலையடிகள் கலைமன்றம், மறைமலையடிகள் பாலம், மறைமலை நகர்,
அடிகளார் பெயர் தாங்கும் தெருக்கள், நூலகங்கள், படிப்பகங்கள், பள்ளிகள், திருவுருவச் சிலைகள் அடிகளார் திருப்பெயர் தாங்கிய நன்மக்களும் பலர்
அவ்வண்ணமே, தமிழ்நாடு அரசால் அடிகளார் பெயரில் விருது என்று வாழ்த்தாத நாளில்லை.
வையகத்தில் மறைமலையடிகள் மறையாத திருப்பெயராகும்.

Add a Comment