POST: 2024-01-07T10:18:22+05:30

தினசெய்தி – 7 1 2024
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 195

சேக்ஸ்பியர் படைப்புகள்
நினைவலைகளில் நீச்சலடிப்பவை

முனைவர் ஔவை அருள்

சரியாக நானூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1564ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 அல்லது 23ஆம் நாள் ஜான் சேக்ஸ்பியருடைய மனைவி மேரி அவர்கள் இருவருக்குமான முதலாவது மகனை ஈன்றெடுத்தாள்.

சிறிது காலத்திற்குப் பின்னர் அவனை உள்ளூர் தேவாலயத்திற்குக் கொண்டு சென்று வில்லியம் என்கிற கிறித்தவப் பெயர் சூட்டப் பெற்றனர்.

சேக்ஸ்பியருடைய இல்லம் ஸ்ட்ரேட்ஃபோர்டு – மேலே – அவோன் என்றழைக்கப்பட்டது.

வார்விக்சைர் அவர்களுடைய தாயகம்.

ஸ்ட்ரேட்ஃபோர்டினுடைய தலையாயக் குடிமகனாக ஜான் கருதப்பட்டார்.

வில்லியம் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது அவர் நகராண்மைக் கழகத்தின் தலைவரானார்.

உண்மை தான்! ஆனால், உடனேயே அவர் தனது செல்வத்தை இழக்கத் தொடங்கினார்.

மாட்சிமைக்குரிய நகராண்மைக் கழகத் தலைவர் பதவிநிலை அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

கடன் தொல்லைகளால் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சினார்.

அதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்.

ஆனாலும் ஸ்ட்ரேட்ஃபோர்டு மக்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.

பிற்காலத்தில் அவர் ‘குதூகலம் குடிகொண்டிருக்கும் வயசாளி’ என அழைக்கப்பட்டார்.

தன்னுடைய பெருமைக்குரிய மகன் வில்லியம் மிகச் சிறந்த நேர்மையாளன் என்றும் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளை அவனிடம் வெடிப்பதற்கு ஒருபோதும் தான் அஞ்சியதில்லை என்றும் அவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

நமது மாபெரும் ஆங்கிலக் கவிஞரும் நாடகாசிரியருமானவருடைய தோற்றுவாய் அத்தகையது.

இங்கே எனது உறுதிமிக்க கருத்து ஒன்றினைப் பதிவு செய்ய விழைகிறேன்.

வில்லியம் சேக்ஸ்பிருடைய ஆக்கங்களாக நிலவுகின்ற கவிதைகளும், நாடகங்களும் உண்மையாகவே ஜான் சேக்ஸ்பியருடைய மகனால் படைக்கப்பட்டவை.

ஏன் அவற்றையெல்லாம் இயற்றியவர் அவரில்லை என்று கருதக் கூடாது என்கிற கூற்றினை நிறுவுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லை.

மற்றொரு கவிஞராலோ, பல கவிஞர்களாலோ படைக்கப்பட்டனவாக இருக்கக் கூடும் என்கிற கருத்தியலை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் திறனாய்வுத் தளத்திலும் வரலாற்றுப் புலத்திலும் இறுதியில் சொல்லொணா இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தோல்வியுற்றன.

ஸ்ட்ரேட்ஃபோர்டு ஈன்றெடுத்த நாடகாசிரியராலேயே படைக்கப்பட்டவை என்று நேரடியாக ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது என முடிவு கட்டப்பட்டது.

ஸ்ட்ரேட்ஃபோர்டு தேவாலயத்தில் ஞான நீராட்டு நிகழ்த்தப் பெற்றதற்கான பதிவேட்டுக் குறிப்பின் அச்சு நகல்
சேக்ஸ்பியரைப் பற்றி இவ்வளவு குறைவான செய்திகளை மட்டிலுமே நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது எனும் நிலைமை ஏமாற்றமளிப்பதென்னவோ உண்மை தான்.

அவருடைய சமகால நாடகாசிரியர்களைப் பற்றி இதைவிடக் குறைவாகவே அறிந்துள்ளோம்.

ஆனால், இது தொடர்பாக தற்காலத் திறனாய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் விரிவாகவே அறிந்து கொண்டுள்ளோம்.

அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் பண்பு நலன்களைப் பற்றியும் நாம் அறிந்துள்ளவை அனைத்தையும் ஓர் அஞ்சலட்டைக்குள் அடக்கிவிடலாம் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால், அவ்வாறு செய்வதற்கு அஞ்சலட்டையும் மிகப் பெரியதாக இருக்க வேண்டும், அதனை எழுதுவோர் நுண்ணோக்கியைக் கொண்டு படிக்கும் வகையில் ஆகச் சிறிய எழுத்து வடிவத்தைக் கையாள வேண்டும் என்று மட்டுமே நம் பதிலிருக்கக் கூடும்.

பொது வாழ்க்கையில் அவர் ஆற்றிய பணிகள் பற்றியும், அவருடைய தொழிலியல் வாழ்க்கை குறித்தும், நாடக ஆசிரியராகவும், நாடக நிறுவன உரிமையாளராகவும் வெற்றி பெற்ற அவர் தான் ஆக்கிய செல்வத்தை முதலீடு செய்த உடைமைகள் குறித்தும், தனது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர் வாழ்ந்த இடங்கள் குறித்தும் பெருமளவில் தெரிந்து கொள்கிறோம்.

அவருடைய தனிப்பட்ட பண்பு நலன்கள் குறித்தும், பெருகி வந்த இலக்கியப் புகழ் குறித்தும் அறிந்திருந்த பலரும் அளித்துள்ள எண்ணற்றக் குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன.

அவருடைய வாழ்நாளில், இலண்டனிலும் ஸ்ட்ரேட்ஃபோர்டிலும் வாழ்ந்த வில்லியம் சேக்ஸ்பியர், இறுதியில் முதல் தொகுப்பு (First Folio) எனும் பெயரில் திரட்டப்பட்ட நாடகக் களஞ்சியத்தின் ஆசிரியர் அல்ல என்று ஐயுறும் விதத்திலோ, ஐயுறுவதற்கான அணுவளவு ஆதாரத்தை அளிக்கும் விதத்திலோ எவரொருவரும் குறிப்பிட்டதில்லை.

அவருடைய இளமைப் பருவம் அறியப்படாததாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அவர் கல்வி பயின்ற இடத்தைப் பற்றி உறுதிபடக் கூறுவதற்கில்லை.

ஸ்ட்ரேட்ஃபோர்டு நகராண்மைக் கழகத்தின் தலைவருடைய அரும்பெறல் என்கிற முறையில் அவர் உள்ளூர் இலக்கணப் பள்ளியில் பயின்றிருக்கக் கூடும்;

கட்டணமில்லாக் கல்வி பெற்றிருக்கக்கூடும்;

ஸ்ட்ரேட்ஃபோர்டு இலக்கணப் பள்ளி, எலிசபத் பேரரசி காலத்திய அதே போன்ற ஏனைய நிறுவனங்களைப் போலவே கிரேக்க மொழி என்றில்லாவிட்டாலும்
இலத்தீன் மொழியினையும், இலக்கண நுணுக்கங்களையும், தருக்கவியலையும், பேச்சாற்றல் போன்ற நுண்கலைகளையும், எண்ணியல், வடிவியல், வானியல், இசை நுட்பங்கள் போன்றவற்றையும் சமச்சீராக அமையும் விதத்தில் வளமான பயிற்சி அளித்திருக்கக் கூடும் என்று மட்டுமே நம்மால் கூற முடிகிறது.

நாடகங்களின் ஆசிரியரான அவர் செவ்வியல் இலக்கிய மேதை அல்ல, அதனை அவர் தன்னுடைய போட்டியாளரான பென் ஜான்சனுக்கு விட்டு விட்டார்.

ஆனால், நன்கு கல்வி பயின்றவர் என்பது மட்டும் தெளிவு; அவருடைய வாழ்நாளின் ஒரு கட்டத்தில் அவர் சட்டம் பயின்றுள்ளார் என்பது வெள்ளிடைமலை.

அதனால் தான் அவர் வளர்ந்த பின்னர், ஒரு வழக்கறிஞரிடம் பணியாற்றி வாழ்ந்தார் என்கிற கதை நமக்குக் கிடைத்துள்ளது.

அதே சமையத்தில் அவர் கிராமப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார் என்று கருதுவதற்கும் இடமுண்டு.

ஊகத்தின் அடிப்படையில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன.

இருப்பினும், 1582ஆம் ஆண்டு இறுதியில், அவர் ஸ்ட்ரேட்ஃபோர்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, அவசரக் கோலத்தில் ஒருவகையில் மதிப்பற்றதொரு மணப் பிணைப்பில் ஈடுபட்டார் அல்லது ஈடுபடுமாறு வலியுறுத்தப்பட்டார் என்பதை நாமறிவோம்.

அவருடைய மனைவி அன்னே ஆத்தவே அவரைக் காட்டிலும் எட்டு வயது மூத்தவர்; திருமணத்தின் பொழுது அவர் கர்ப்பமுற்றிருந்தார்.

1583ஆம் ஆண்டு மே மாதத்தில் அவள் தன்னுடைய முதல் குழந்தை சுசன்னவை ஈன்றெடுத்தாள்.

பதிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவு கால இடைவெளியைக் காட்டுகின்றன.

1585ஆம் ஆண்டு சனவரித் திங்களில் வில்லியமிற்கும் அன்னே சேக்ஸ்பியருக்கும் ஹேம்னெட், ஜூடித் என்கிற பெயர்கள் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

பயன் குறைந்தது என்ற போதிலும் கதையொன்று நன்கு அறியப்பட்ட கதை ஒன்று நிலவுகிறது.

அண்மையிலிருந்த பூங்காவிற்குள் வரம்பு மீறி நுழைந்து அங்கிருந்த மான்களோடும் முயல்களோடும் அவர் போட்ட ஆட்டத்தால் களவுக் குற்றம் சுமத்தப்பட்டு ஸ்ட்ரேட்போர்டையும் மனைவி மக்களையும் பிரிந்து இலண்டனில் தஞ்சம் புக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

சேக்ஸ்பியருடைய வாழ்க்கை குறித்து நாமறிந்துள்ள மெய்யான தகவல்கள் 1592ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தே துவங்குகின்றன.

அந்தக் காலக்கட்டத்திற்குள் அவர் இலண்டனில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

நடிகராகவும்,
நாடக ஆசிரியராகவும் பயிற்சி பெற்றார்.

பரவலான புகழ் பெற்ற வரலாற்று நாடகம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றார்.

ஆறாம் ஹென்றி மன்னரின் அழிவு விளைத்த ஆட்சியை அந்நாடகம் தொகுத்தளித்தது.

அந்நாடகத்தில் அவருடைய முயற்சிகள் சமகாலத்திய கவிஞருடைய மன வருத்தத்தையும் கடும் சினத்தையும் தூண்டுமளவிற்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

இராபர்ட் கிரீன் என்கிற அக்கவிஞர் நோய்வாய்ப்பட்டிருந்த வயசாளி; மிகுந்த வெறுப்படைந்தார்.

தனது இறப்பிற்குப் பின் அவர் விட்டுச் சென்றிருந்த துண்டறிக்கையில், நாடக மேடைகளுடைய தீங்குகளைப் பற்றியும் அவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தோருக்கு அவற்றுள் பொதிந்திருந்த புதைகுழிகளைப் பற்றியும் எச்சரித்ததுடன், தனியொருவரைச் சுட்டிக் காட்டி ஆர்வக் கோளாறு மிக்கவனும் பழியஞ்சாதவனுமான அந்த இளைஞன் பிறருடைய கவிதைகளைக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார்:

நம்முடைய இறகுகளைக் கொண்டு தன்னுடைய சிறகுகளை அழகுப்படுத்திக் கொண்ட காக்கை….

எளிய கவிதை ஒன்றை உங்களுடைய மிகச் சிறந்த படைப்பாக மேம்படுத்திக் காட்டும் திறம் படைத்தவனாகத் தோன்றுகிறான்.

தன்னை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு மக்களுக்குக் காட்சிப் படுத்தத் தெரிந்த இந்நாட்டின் ஒரே ஏமாற்றுக்காரன்…’’

அந்தத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

அது வெளிக் கொணர்ந்த எதிர்வினை அதனைக் காட்டிலும் பெரிதும் முகாமை பெற்றது.

கவிஞர் கீரீனுடைய வசைமாரியை அவருடைய இறப்பிற்குப் பின் வெளியிடும் பொறுப்பேற்ற ஹென்றி செட்டில் ‘கருணை உள்ளத்தின் கனவு’
(Kind hearts Dream) எனும் தலைப்பில் மற்றொரு துண்டறிக்கையையும் வெளியிட்டார்.

அதில் வசைமாரிக்குத் தேவையான திருத்தங்களைப் புகுத்துவதற்குத் தன்னால் ஆனதைச் செய்தார்.

அவர் (சேக்ஸ்பியர்) வாழும் கவிஞர் ஒருவரை மன வருத்தமடையச் செய்தமைக்காக வருத்தம் தெரிவித்தார் என்று குறிப்பிட்டதுடன்,

‘‘ஏனெனில், அவர் தன்னுடைய தொழிலில் கைக்கொள்கின்ற அதே நேர்த்தியான கண்ணியத்தையும் பண்பு நலன்களையும் அவருடைய நடவடிக்கைகளிலும் நேரில் நான் கண்ணுற்றேன்.

மேலும், ஒருவரைப் போற்றுவதில் மனிதர்களிடையே உள்ள வேறுபாடு காரணமாக, அவர் தான் அறிந்த செய்திகளை வளைந்து கொடுக்காத தன்மையுடன் கையாண்டுள்ளார்,

அதில் அவருடைய கபடமற்ற நேர்மையும் அவருடைய கலைக்கு உரித்தான நையாண்டியின் நளினமும் மிளிர்கிறது.”

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *